If you wish to be happy the first thing you need is not effort or even goodwill or good desires but a clear understanding of how exactly you have been programmed.
– (Anthony De Mello)
அத்தையின் அமைதிக்கு எதிர்மாறாக தந்தையின் முகம் மாறிய விதத்தை ஆர்த்தி கவனித்தாள். ஒரு மழை நாள் நிகழ்ச்சிகள் என்று பொதுவாகப் பாட்டி சொன்னதைக் கேட்டு அது என்ன என்று மேற்கொண்டு ஆர்வமாக சிவகாமி கேட்காதது இயல்பான ஒன்றாக ஆர்த்திக்குத் தோன்றவில்லை.
சிவகாமி பார்வதியிடம் கேட்டாள். "டாக்டர் கிட்ட காமிச்சீங்களா?"
பார்வதி பேத்தியைத் தயக்கத்துடன் பார்த்து விட்டு தலை குனிந்து கொண்டு சொன்னாள். "இவர் கூட்டிகிட்டு போய் காமிச்சார். ஹிப்னாடிசம் செஞ்சு ஆழ்மனசுல பதிஞ்சுருக்கறத வெளியே கொண்டு வந்தாத் தான் குணப்படுத்த முடியும்னும் அது ஒரே சிட்டிங்க்ல முடியாதுன்னும் பல தடவை முயற்சி செஞ்சு கொஞ்சம் கொஞ்சமா தான் வெளியே கொண்டு வர முடியும்னும் சொன்னார். அப்ப இவ ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தாள். இவருக்கு அதுல உடன்பாடு இருக்கல. இவளை அடிக்கடி அந்த டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு போனா இவளுக்குப் பைத்தியம்னு பார்க்கிற ஜனங்க நினைச்சிடுவாங்கன்னு பயப்பட்டார்….."
ஆர்த்திக்கு மறுபடியும் கண்களில் நீர் திரண்டது.
சிவகாமி இதமான குரலில் அழுத்தமாக சொன்னாள். "ஆர்த்தி நீ முதல்ல ஒவ்வொண்ணுக்கும் அழறத நிறுத்தணும்…"
ஆர்த்தி பரிதாபமாகத் தலையசைத்தாள்.
"இந்த அழுகை, சுய பச்சாதாபம் எல்லாம் யாருக்கும் எப்பவும் பயன் தந்ததில்லை. நீ அதை நல்லா புரிஞ்சுக்கணும். எதையுமே நாம தைரியமா சந்திக்கறப்ப தான் அதை ஜெயிக்க முடியுது. ஓடி ஒளியறதுனாலயோ வருத்தப்படறதாலயோ ஜெயிக்க முடியாது…. ஒரு பிரச்சினை வருதுன்னு வச்சுக்கோ. எப்பவுமே அந்தப் பிரச்சினையை விட நாம் உயர்ந்தவங்கங்கற கோணத்துல இருந்து தான் அதைப் பார்க்கணும். பிரச்சினைன்னு ஒண்ணு இருந்தா தீர்வுன்னும் ஒண்ணு இருந்து தான் ஆகணும்கிற நம்பிக்கையோட தான் அதை அணுகணும். அப்பத் தான் எல்லாம் சுமுகமாய் முடியும்…."
"உன் ஆழ்மனசுல சின்ன வயசுல உன்னால தாங்கவோ ஜீரணிக்கவோ முடியாதது ஏதோ பதிஞ்சுருக்கு, அது தான் கனவாய் வந்து உன்னைப் பாதிக்குதுன்னா அது என்னன்னு ஆராய்ச்சி செஞ்சு சரி செய்யறது ஒண்ணும் இந்தக் காலத்துல பெரிய விஷயம் இல்லை. சைக்காலஜி படிச்ச உனக்கே தெரியும். நல்ல டாக்டராய் பார்த்து என்ன செய்யணுமோ அதை செய்யலாம்."
சிவகாமி பார்வதி பக்கம் திரும்பினாள். "சைக்கியாடிரிஸ்டுகள் கிட்ட போறவங்க எல்லாம் பைத்தியம்னு அர்த்தம் இல்ல அத்தை. உடம்புல பிரச்சினைன்னா அது சம்பந்தமான டாக்டரைப் பார்க்கிறோம். மனசு சம்பந்தமான பிரச்சினைன்னா அது சம்பந்தமான டாக்டரைப் பார்க்கிறோம். அவ்வளவு தான்…. ஆனா ஒண்ணு. இந்தக் கனவு சம்பந்தமா யாரு என்ன கேட்டாலும் நீங்க எதுவும் சொல்லப் போகாதீங்க. மாமா கிட்டயும் சொல்லி வைங்க. ஆர்த்தி நீயும் தான்…. வற்புறுத்திக் கேட்டா நான் டாக்டர் கிட்ட போன்ல இது பத்தி பேசி அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்கேன்னும் அவர் ட்ரீட்மெண்ட் முடியற வரைக்கும் அது பத்தி வெளியே பேச வேண்டாம்னு அட்வைஸ் செஞ்சிருக்கிறார்னும் சொல்லுங்க…"
பார்வதியும் ஆர்த்தியும் தலையாட்டினார்கள். அந்த அறைக்கு வந்த கணம் முதல் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து சிவகாமி நிலைமையைக் கையாண்ட விதம் இருவரையும் பிரமிக்க வைத்தது. எதிலும் குழப்பமோ, உணர்ச்சிவசப்படுதலோ இல்லாமல் அவள் தெளிவாக செயல்பட்ட விதத்தை அவர்களால் உள்ளூர பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வேலைக்காரர்களை பார்வையால் அனுப்பியதில் இருந்து இனி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிய இந்தக் கணம் வரை எல்லாமே நேர்த்தியாகத் தான் இருந்தன.
"ஆர்த்தி அந்தக் கனவு பத்தின விவரங்கள் எதையும் என் கிட்டயோ, உங்கப்பா கிட்டயோ கூட சொல்ல வேண்டாம். ஒண்ணை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ. நாங்க எல்லாம் உன் கூட பக்கபலமாய் இருக்கோம். பயப்பட இனி ஒண்ணும் இல்லை….."
சிவகாமி எழுந்தாள். "சரி ஆர்த்தி நீ தூங்கு. அத்தை நீங்களும் போய்த் தூங்குங்க."
"அவளுக்கு துணைக்கு யாராவது…." சந்திரசேகர் மெல்ல இழுத்தார்.
சிவகாமி அவரைப் பார்த்த பார்வையில் அனல் பறந்தது. மருமகள் பக்கம் திரும்பினாள். "எப்பவாவது அந்தக் கனவு ஒரே நாள்ல ரெண்டு தடவை வந்திருக்கா ஆர்த்தி"
ஆர்த்தி இல்லையென்று தலையசைத்தாள். சிவகாமி தம்பி பக்கம் திரும்பினாள். "இல்லையாம். அதனால பயப்பட ஒண்ணுமில்லை. போகலாம்."
பார்வதி பேத்தியைப் பார்த்தாள். ஆர்த்தி போகச் சொல்லி தலையசைத்தாள். மூவரும் வெளியே வந்த பிறகு சிவகாமி திரும்பி ஆர்த்தியிடம் சொன்னாள். "கதவைத் தாள் போட்டுக்கோ. அநாவசியமா யார் கதவைத் தட்டினாலும் திறக்காதே. எதுவானாலும் பகல்ல பேசிக்கலாம்னு சொல்லிடு"
வெளியே வந்த போது பார்வதியின் மனதில் இருந்து மிகப் பெரிய பாரம் இறங்கி இருந்தது. இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது, தானாக வெளிப்பட்டாலும் சிவகாமி எப்படி எடுத்துக் கொள்வாள் என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது தேவையில்லாத ஒன்றாய் போய் விட்டது. சிவகாமி அநாவசிய கேள்விகளால் துளைத்து எடுக்காமல், மற்றவர்களுக்கு அநாவசியமாய் பதில் சொல்லும் நிர்ப்பந்தங்களையும் விலக்கி விட்டு, சிகிச்சை செய்ய ஏற்பாடும் செய்வதாய் சொல்லியது பெருத்த நிம்மதியை தந்தது.
ஆனால் சிவகாமியும் பார்வதியும் போன பிறகு தனதறைக்குள் நுழைந்த சந்திரசேகர் மனதிலோ இமயமே ஏறி நின்றிருந்தது. தன் மகள் பட்ட அவஸ்தையை எண்ணிய போது இதயத்தில் இரத்தம் கசிந்தது. "என் குழந்தை எத்தனை கஷ்டங்களை சின்ன வயதிலிருந்து அனுபவித்திருக்கிறாள்".
அத்தனைக்கும் காரணம் பல வருடங்களுக்கு முன்னால் ஒரு மழை நாளில் நடந்த நிகழ்ச்சி என்று பார்வதி பொதுவாகச் சுட்டிக் காட்டியதும், அந்தக் கனவைப் பற்றி "என்னிடமோ உங்கப்பாவிடமோ கூட சொல்ல வேண்டாம்" என்று சிவகாமி ஆர்த்தியிடம் சொன்னதும் அவரது காதுகளில் திரும்பத் திரும்ப எதிரொலித்தன.
சந்திரசேகர் அதற்கு மேல் தாங்க முடியாமல் அழ ஆரம்பித்தார். அழுவது பிடிக்காத அக்கா அருகில் இல்லாததால் அவரால் வாய் விட்டு அழ முடிந்தது. அப்படி அவர் அழுது பார்த்திராத பவானி அவரிடம் ஏன் என்று கேட்கவோ சமாதானப்படுத்தவோ தைரியம் இல்லாமல் கைகளைப் பிசைந்தபடி அமர்ந்திருந்தாள்.
(தொடரும்)