Great doubts, deep wisdom. Small doubts,
little wisdom.
— Chinese proverb
"ஹலோ சித்தி"
தனதறைக்குள் நுழைந்த ஆர்த்தியைக் கண்டவுடன் பவானியின் கண்கள் நிறைந்தன. ஓடிப் போய் அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள். "ஆர்த்தி…. ஆர்த்தி"
"என்ன சித்தி குழந்தை மாதிரி அழறீங்க. எனக்கு ஒண்ணும் ஆகலை. அதுவும் தனியாவா போயிருக்கேன். மூர்த்தியும், பார்த்தியும் கூட என்னோட இருந்தாங்க தானே" என்ற ஆர்த்தி நடந்ததை எல்லாம் உற்சாகத்துடன் பவானிக்குச் சொல்ல ஆரம்பித்தாள்.
பவானிக்கு சினிமா பார்ப்பது போல் இருந்தது. நேற்று சிவகாமிக்குப் போன் செய்து சொன்னாலும் அவள் அந்தக் கடைசி தருணத்தில் என்ன செய்ய முடியும் என்ற சந்தேகம் பவானிக்கு இல்லாமல் இல்லை. நந்தினியை சிவகாமி தான் அனுப்பி இருப்பாள் என்று புரிந்தாலும் எப்படி அந்த இடத்தையும் கண்டுபிடித்து சிவகாமி அத்தனை வேகமாக அங்கே அவளை அனுப்பினாள் என்பது மலைப்பாகத் தான் இருந்தது.
அதே நேரத்தில் பஞ்சவர்ணம் பேரனைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
"யாருடா அவ?"
"நந்தினின்னு பேரு பாட்டி. சமூக சேவகி"
"அவ எப்படிடா அங்கே வந்தா?"
"அது தான் எனக்கும் தெரியலை பாட்டி"
பஞ்சவர்ணம் ஒன்றும் சொல்லாமல் பேரனையே சிறிது நேரம் பார்த்தாள். சரியான சமயத்தில் நந்தினி அந்த இடத்திற்குச் சென்றதும், அவர்களை அழைத்துச் சென்றதும், இரவில் மூர்த்தி இருந்த அறையைப் பூட்டியதும் தற்செயலாக நடந்த விஷயங்களாக அவளுக்குத் தோன்றவில்லை.
மூர்த்தி அவளுடைய எண்ணங்களைப் புரிந்து கொண்டு சொன்னான். "எனக்கும் அந்த நந்தினி மேல் சந்தேகமா தான் இருக்கு பாட்டி. அவ தனித் தனியா என்னையும் ஆர்த்தியையும் ஆழமா பார்த்தா பாட்டி. காலைல அங்கே காபி சாப்பிட்டு கிளம்பறப்ப கூட என்னை ஆராய்ச்சியோட பார்த்தா. முன்பின் தெரியாதவங்களை யாரும் அந்த அளவு உற்றுப் பார்க்க மாட்டாங்க பாட்டி"
"ஏண்டா அவள் நீ பழக்கம் வச்சுகிட்டிருந்த பொண்ணுகளோட அக்காவோ அம்மாவோ இல்லையே?"
"அப்படியெல்லாம் இல்லை பாட்டி. அவளுக்குக் குடும்பம் எல்லாம் இருக்கற மாதிரி தெரியலை."
"டேய் அவள் சமூக சேவகி தான்னு உனக்கு உறுதியா தெரியுமா?"
"தெரியும் பாட்டி. போன வாரம் ஆனந்த விகடன்ல கூட அவளோட ஒரு பேட்டி வந்திருக்கு"
பஞ்சவர்ணத்தின் சந்தேகம் அப்போதும் தீர்கிற மாதிரி இல்லை. "நீ எனக்கு அந்த ஆனந்த விகடனை எடுத்துக் கொடு"
அவன் உடனே தன்னறைக்குப் போய் அந்த ஆனந்த விகடன் இதழைக் கொண்டு வந்து தந்தான். பஞ்சவர்ணம் அதை வாங்கிப் பார்த்தாள். ஆனந்த விகடனில் அரைப் பக்கத்திற்கு அவளுடைய புகைப்படம், மூன்றரைப் பக்கத்திற்குப் பேட்டி இருந்தது. படத்தைக் கூர்ந்து பார்த்தாள் பஞ்சவர்ணம். அந்த முகம் அவளுக்குப் பரிச்சயமான முகம் இல்லை. ஒரு முறை பார்த்த முகத்தை பஞ்சவர்ணம் என்றும் மறந்ததில்லை. இவளை இதற்கு முன் பார்த்ததில்லை. பேட்டியிலும் கோத்தகிரியில் வசிக்கிறாள் என்பதைத் தவிர அவளைப் பற்றிய தகவல்கள் இல்லை. ஆதரவற்ற அபலைப் பெண்களுக்கு அவள் செய்து வரும் சேவைகள் பற்றியும், இந்த நாட்டில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றியும் தான் பேட்டியில் இருந்தது.
"இவள் சிவகாமியோட பினாமியா இருக்கலாம்னு நினைக்கிறேன்…." என்று பஞ்சவர்ணம் யோசனையுடன் சொன்னாள்.
"ஆனா அவ எப்படி பாட்டி சரியா அந்த நேரத்துக்கு வந்தா?"
பஞ்சவர்ணத்தையும் அந்தக் கேள்வி தான் நிறையவே குழப்பியது. "நீ என் கிட்ட அந்தத் திட்டத்தைச் சொன்னப்ப யாராவது ஒட்டுக் கேட்டுருக்க முடியுமா?"
"இல்லை பாட்டி. அதுக்கு சான்ஸே இல்லை. ஆர்த்தி, அத்தை ரெண்டு பேரும் வெளியே தோட்டத்தில் இருந்ததை நான் என் கண்ணால் பார்த்தேன். மத்தவங்களும் மாடியில இல்லை. அதுவும் நான் பேசினது மெல்ல தான். வெளியே நின்னுருந்தா கூட கேட்டிருக்க முடியாது"
"அப்படின்னா நீ ஏற்பாடு செஞ்சிருந்த ஆள்கள்ல எவனோ பணத்துக்கு ஆசைப்பட்டு சிவகாமிக்கு சொல்லியிருக்கலாம்"
"சேச்சே. அவனுங்க கிட்ட ஒரு பொண்ணோட வர்றேன்னு சொன்னேனே ஒழிய அது யாருன்னு சொல்லலை. எத்தனையோ தடவை எனக்கு வேலை செஞ்சவனுங்க. உடல் பலம் இருக்கிற அளவுக்கு அறிவு கிடையாதுங்கறதால அவனுக ஊகிக்கவும் சான்ஸ் இல்லை"
யோசித்தபடியே பஞ்சவர்ணம் சொன்னாள். "இங்க இருந்து நீங்க கிளம்புனதுக்கப்பறம் தான் சிவகாமிக்கோ அந்த நந்தினிக்கோ தெரிஞ்சிருக்கணும். முதல்லயே தெரிஞ்சிருந்தா கண்டிப்பா வீட்டை விட்டு வெளியே போகவே சிவகாமி விட்டுருக்க மாட்டா… நீங்க கிளம்புனதுக்கப்பறம் எப்படி தெரிஞ்சிருக்க முடியும்?"
மிகுந்த ஆர்வத்துடன் நந்தினியைப் பற்றி சொன்னதை நீலகண்டனும், பார்வதியும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் முதலாய் சிவகாமியைக் கல்லூரியில் பார்த்து விட்டு வந்த பின்னும் இப்படித் தான் ஒரு பரவசத்துடன் ஆர்த்தி அவளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
நீலகண்டன் சுருக்கமாய் சொன்னார். "எல்லாம் அந்த அன்னையோட அருள். அவங்க தான் அந்த டிரைவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி அந்தப் பக்கம் அந்த நந்தினி காரை அனுப்பிச்சிருக்காங்க. எனக்கு இதுல சந்தேகமே இல்லை"
பார்வதிக்கு மூர்த்தியின் திட்டம் தெரியாவிட்டாலும் தன் பேத்தி இரு வாலிபர்களுடன் அந்தக் காட்டில் இரவு நேரத்தில் இருப்பது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதுவும் காட்டு விலங்கு ஏதாவது வந்திருந்தால்? என்று நினைத்து லேசாக நடுங்கினாள்.
ஆனால் ஆர்த்திக்கு அந்தப் பயத்திற்கான காரணமே இப்போதும் புரியவில்லை நந்தினியைப் பற்றி மேலும் சொன்னாள். "பாட்டி அவங்க குரல் எனக்கு நிறையவே பரிச்சயமான குரல் மாதிரி தோணிச்சு…. அப்புறம் எனக்கு அவங்க வீட்டுல தூங்கினப்பவும் ஒரு கனவு….பயப்படாதீங்க பாட்டி. அந்தக் கனவில்லை….இது வேற. நான் எங்கேயோ போய்கிட்டு இருக்கேன்… என்னை யாரோ தூரத்துல இருந்துட்டு பார்த்துகிட்டே இருக்காங்க…திடீர்னு முழிச்சுகிட்டு பார்த்தா விடிஞ்சுருந்தது… அந்த நந்தினி மேடம் தான் என்னைப் பார்த்துட்டு இருந்தாங்க… கேட்டதுக்கு நான் ஒரு குழந்தை மாதிரி தூங்கிகிட்டு இருந்ததை ரசிச்சதா சொன்னாங்க……."
மூர்த்தி அசோக்கிடம் சிடியை வாங்கி வந்து கொண்டிருந்த போது தான் அவன் செல் அடித்தது.
"தம்பி. நான் பொன்னாத்தா பேசறேன்….அன்னைக்கு அந்த விஜயா வந்தா போன் செஞ்சு சொல்லச் சொல்லியிருந்தீய… அதான் போன் செய்யறேன். அவ அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கா… சொன்னா தாராளமா பணம் தர்றதா சொல்லியிருந்தீய… குடுக்க மறந்துட மாட்டீயளே….."
நேற்றைய தினம் எல்லாமே சிக்கலாக நடந்தாலும் இன்றைய தினம் நல்ல விதமாகப் போவது போல மூர்த்திக்குத் தோன்றியது. பைக்கை வேறுபக்கம் திருப்பினான்.
வெளியே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த பொன்னாத்தா கையில் இரண்டு நூறு ரூபாய்களை வீசி விட்டுச் சென்று தெருவோரமாய் நடந்து கொண்டு இருந்த விஜயாவை இடைமறித்தான்.
விஜயா பயத்தில் அப்படியே உறைந்தாள். "யார் நீங்க?…. என்ன வேணும்?…."
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மூர்த்தி அவளைக் கூர்மையாகப் பார்த்தான். அவள் முகத்திலிருந்த பயம் வடிந்தது. திடீரென்று வியர்த்திருந்ததைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு சொன்னாள். "ஓ நீ தானா? ஒரு நிமிசம் என்னைப் பயமுறுத்திட்டியே"
தன்னை அந்த வேலைக்காரி ஒருமையில் அழைத்ததை மூர்த்தி ரசிக்கவில்லை. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கேட்டான். "யாருன்னு நினைச்சு பயந்துட்டே?"
விஜயா அந்தக் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. எதிர்க் கேள்வி கேட்டாள் "அன்னைக்கு வந்ததும் நீ தான்னு அண்ணன் சொன்னாரு. ஆமா நீ என்னை எதுக்கு தேடறே"
"என் பாட்டி உன்னைப் பார்க்கணும்னாங்க"
"உன் பாட்டி இன்னும் சாகலையா?" என்று ஆச்சரியத்துடன் விஜயா கேட்டது அபசகுனமாக மூர்த்திக்குப் பட்டது.
"என் பாட்டி நல்லாத்தான் இருக்காங்க"
"இருக்கும்.. இருக்கும்… நான் பாத்ததுல அந்த மாதிரி ஆளுங்க அவ்வளவு சீக்கிரமா போகாதுக…." என்று விஜயா ஒருவித நட்புணர்வுடன் பஞ்சவர்ணத்தை எண்ணிப் புன்னகைத்தாள். "உன் பாட்டி என்னை ஏன் பாக்கணும்னு சொல்லிச்சு?"
அவள் பேசிய தோரணை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. "அன்னைக்கு என்ன நடந்துதுன்னு தெரிஞ்சுக்கத்தான்…."
விஜயா பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாப்பில் போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சைக் காண்பித்து "வா அப்படியே உக்காந்து பேசுவோம்…" என்றாள். அங்கே யாருமில்லாததால் மூர்த்தி சிறிது தயங்கி விட்டுப் போய் அவளுடன் அங்கு உட்கார்ந்தான்.
"சொல்றேன். எனக்கு எவ்வளவு தருவே?"
மூர்த்தி சில நூறு ரூபாய் நோட்டுகளைக் காண்பித்தான். விஜயா அதில் திருப்தியடையவில்லை. "அன்னிக்கு நூறு ரூபா கட்டையே தர்றதா சொன்னேன்னு எங்கண்ணன் சொல்லுச்சு….."
வேறு வழியில்லாமல் தந்தான். விஜயா அந்த நோட்டுக் கட்டை தன் கைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டு சொல்லத் தொடங்கினாள். முழுவதும் கேட்டுக் கொண்டவன் கடைசியில் தன் சந்தேகத்தைக் கேட்டான். "அந்த சிரிப்பு பத்தி வேற ஒருத்தர் சொல்லியும் கேட்டிருக்கேன்….ஏன் அப்படி சிரிக்கறாங்க?"
"அது லூசுப்பா. வினோதமா சிரிக்கும்….திடீர்னு அழும்…. முத முதல்ல பாக்கறவங்க பயந்துக்குவாங்க…. ஏன் உன் பாட்டி சொல்லலையாக்கும்"
மூர்த்தி பதில் சொல்லாமல் கேட்டான். "நீ ஏன் ஓடினாய்?’
"எனக்கு மட்டும் உயிர் மேல ஆசையில்லையா? அந்த நேபாளம் கையில அன்னிக்கு கிடைச்சுருந்தா என் பொணமும் அன்னிக்கே விழுந்துருக்கும். அந்த சைத்தான் எப்படி இருக்கான்?"
"அவனுக்கென்ன கல்யாணமாயி ஜம்முன்னு இருக்கான்"
"கல்யாணமா? அந்த மூஞ்சியை யாரு கட்டிகிட்டாங்க"
அவன் முகத்தை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ததையும், சில நாட்களுக்கு முன் கல்யாணம் ஆனதையும் மூர்த்தி சொன்னான்.
"ஐயோ அப்ப இன்னொரு தடவ அவனை நேர்ல பாத்தா எனக்கு அவனை அடையாளம் தெரியாது… ஆனா அவனுக்கு என்னை நல்லா அடையாளம் தெரியுமே"
"பயப்படாதே. அவன் தேனிலவுக்குப் போயிருக்கான். அந்த ராட்சஸியும் பாம்பே போயிருக்கா. இன்னும் நாலு நாள் கழிச்சு தான் ரெண்டு பேரும் வருவாங்க. சரி அந்த சம்பவத்தன்னைக்கு என் பாட்டியை வந்து பார்க்கிறேன்னு சொன்னாயாமா. அப்புறம் ஏன் நீ வரலை"
"அந்தப் பெரியம்மா (சிவகாமி) நாட்டில இல்லைன்னு நினைச்சு தான் வர்றேன்னு சொன்னேன். அது வந்துடுச்சுன்னு ஆனதுக்கப்புறம் என்னை நான் காப்பாத்திக்க வேணாமா? இப்பவும் சொல்றேன் பாரு. அந்தம்மா நாளைக்கே ஊட்டிக்கு வந்து நின்னாலும் நிக்கும். முதல்ல நான் ஊருக்குக் கிளம்பறது தான் நல்லதுன்னு தோணுது….."
விஜயா எழுந்தாள்.
பஞ்சவர்ணம் விஜயா சொன்னதையெல்லாம் பேரன் சொல்ல இடைமறிக்காமல் கேட்டுக் கொண்டாள். பின் ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடி சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். எப்போதும் ஆயிரம் கேள்விகள் தொடர்ந்து கேட்பவள் அதிசயமாக பேரனிடம் ஒன்றும் கேட்காமல் சொன்னாள்.
"சரி அந்த சிடியைப் போடு."
மூர்த்தி வராந்தாவை ஒரு நிமிடம் எட்டிப்பார்த்து யாருமில்லை என்று உறுதி செய்து கொண்டு கதவை மறுபடி சாத்தி சிடியை போட்டான். மௌனமாக ஆர்த்தியின் ஆழ்மனப்பதிவுகளை இருவரும் கேட்டார்கள்.
……..
"அப்படி சொன்னது யார் ஆர்த்தி. உனக்கு அந்தக் குரல் யாரோடதுன்னு தெரியுமா?"
"ம்"
"யாரோடது"
"அக்காவோடது"
"அக்காவா? எந்த அக்கா"
"அப்பா அம்மாவோட அக்கா"
ஆர்த்தியின் மூச்சுக் காற்று லேசாகக் கேட்க ஆரம்பித்தது. டாக்டர் ப்ரசன்னா அவளை ஆழ்மன உறக்கத்திலிருந்து வெளிக் கொண்டு வரப் பேச ஆரம்பித்தான்..
எல்லாம் முடிந்த பின் மூர்த்தி கேட்டான். "ஆர்த்தி கேட்ட அந்தக் குரல் சிவகாமியோடது தானே பாட்டி."
ஆமென்று தலையை ஆட்டிய பஞ்சவர்ணம் எழுந்து கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தாள். இளங்கோ, ஆர்த்தி, விஜயா எல்லோர் சொன்னதையும் ஒட்டு மொத்தமாக பார்க்கையில் என்ன நடந்திருக்கும் என்பதைத் தெளிவாக அவளால் ஊகிக்க முடிந்தது. கடைசியில் பேரனிடம் சொன்னாள். "அப்படின்னா அந்த நாள் ராத்திரி நடந்தது ஒரு கொலை இல்லை மூர்த்தி. ரெண்டு கொலை."
இசைத்த செல் போனை எடுத்த ஆகாஷ் காதில் விழுந்த முதல் வார்த்தை "முட்டாள்"
லிஸாவின் குரலைக் கேட்ட ஆகாஷ் புன்னகையுடன் சொன்னான். "அறிமுகப்படுத்திகிட்டது போதும். விஷயத்தை சொல்லு"
"பேசறப்ப வக்கனையா பேசு. முக்கியமான இடத்துல கோட்டை விட்டுடு. உனக்கு சேர்ந்து டைட்டானிக் பார்க்க வேற ஆளே கிடைக்கலையா."
ஆகாஷ் சொன்னான். "அந்த நளினி நல்ல கம்பெனி"
"முட்டாளே… அவள் கூட படம் பார்க்கறப்ப நீ ஆர்த்தியைத் தான் நினைச்சுகிட்டிருந்திருப்பேங்கறதை மை வச்சுப் பார்க்கத் தேவையில்லை. ஆனா அந்த மூர்த்தி கூட ஆர்த்தியை எந்த தைரியத்துல நீ அனுப்பிச்சே"
"ஏய்.. கூட பார்த்திபன் போயிருக்கான்"
"ஆமா அவன் ஜாக்கி சான். ஆர்த்திக்குப் பெரிய பாதுகாப்பு. அந்த நந்தினி மட்டும் அங்கே போகாம இருந்திருந்தாங்கன்னா என்ன நடந்துருக்கும்னு உனக்கு ஐடியாவாது இருக்கா?"
ஆகாஷ் தர்மசங்கடத்துடன் நெளிந்தான். நடந்ததை பார்த்திபன் வாயில் இருந்து கேள்விப்பட்டதில் இருந்து அவனுக்கும் அது உறுத்தாமல் இல்லை.
"சரி. எல்லாம் பிரச்சினையில்லாமல் முடிஞ்சிடுச்சே. என்னை என்ன செய்யணும்கிறே"
"போய் ஆர்த்தி கிட்ட ஐ லவ் யூ சொல்லு. இனிமே கண்ணாமூச்சு ஆடி ரிஸ்க் எடுத்துக்காதே."
சிவகாமி, தம்பியுடன் செவ்வாய்கிழமை காலையே ஊட்டி வந்து சேர்ந்தாள். அவள் முன்பு திட்டமிடிருந்ததற்கு மூன்று நாட்கள் முன்பே வந்து சேர்ந்தது மூர்த்தியை ஆச்சரியப்படுத்தியது. நேற்று தான் பழைய வேலைக்காரி விஜயா "அந்தம்மா நாளைக்கே வந்து நின்னாலும் நிக்கும்’ என்று சந்தேகத்துடன் சொன்னாள். இன்று அப்படியே சிவகாமி வந்து சேர்ந்து விட்டாளே என்று நினைத்துக் கொண்டிருக்கையில் வேலைக்காரன் ஒருவன் வந்து சொன்னான். "பெரியம்மா உங்களைக் கூப்பிடறாங்க"
இத்தனை வருடங்களில் அவனை சிவகாமி ஒரு முறை கூட கூப்பிட்டனுப்பியதில்லை. பேசியதில்லை. ஆனால் முதல் முறையாக இப்போது கூப்பிடுவது அவனுள் பயத்தைக் கிளப்பியது. சிவகாமியைப் பார்ப்பதற்கு முன் பாட்டியிடம் சென்று விஷயத்தைச் சொன்னான்.
பஞ்சவர்ணமும் இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகபாவனையில் இருந்து தெரிந்தது. "அவள் ஞாயித்துக் கிழமை பிக்னிக் பத்திக் கேட்டாலும் கேப்பா. பயப்படாதே. நீயா ஒத்துக்கற வரைக்கும் அவளால் எதையும் நிரூபிக்க முடியாது. நடக்காத ஒண்ணுக்கு நிரூபணம் எப்படி இருக்க முடியும். போயிட்டு சீக்கிரம் என் கிட்ட வந்து என்ன சொன்னாள்னு சொல்லு"
மூர்த்தி சிவகாமியின் அறையில் நுழைந்த போது சிவகாமி சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
பஞ்சவர்ணம் எதிர்பார்த்தது போல அவள் அவர்களுடைய பிக்னிக் பற்றி கேட்கவில்லை. அமைதியாக அவனைப் பார்த்து சொன்னாள். "நீயும் உன் பாட்டியும் மூணு நாளுக்குள்ளே இந்த வீட்டை விட்டு வெளியே போகணும். இப்ப மணி ஒன்பது. வெள்ளிக்கிழமை காலை மணி ஒன்பதுக்குள்ளே வெளியே போகலைன்னா ஒன்பது ஒன்றுக்கு உங்களை ஆள்களை விட்டு நான் பலவந்தமாய் வெளியேற்ற வேண்டி இருக்கும். வீடு கிடைக்கலை அப்படி இப்படிங்கற காரணங்கள் சொல்லி ஒரு நிமிஷம் நீங்க இங்க அதிகம் தங்கறதை நான் விரும்பலை."
மூர்த்தி முகத்தில் இரத்தம் வடிந்து முகம் வெளுத்தது. ஏன் என்று அவளைக் கேட்க அவன் துணியவில்லை. அவளும் தன் காரணங்களைச் சொல்லவில்லை.
"அது மட்டுமல்ல, இனி எந்தக் காலத்திலேயும் நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்டுக்குள்ளே வர்றதை நான் விரும்பலை. உங்களுக்கு எப்பவாவது பவானியைப் பார்க்கணும்னு தோணிச்சுன்னா அவளுக்குப் போன் செஞ்சு நீங்க இருக்கிற இடத்துக்குக் கூப்பிட்டு பார்த்துக்கலாம், பேசிக்கலாம். அவளைக் காரணம் காட்டி இந்த வீட்டுக்குள்ளே நுழையறதை நான் அனுமதிக்க மாட்டேன். புரியுதா?"
மூர்த்தி அவளை அடக்க முடியாத வெறுப்புடன் பார்த்தபடி தலையசைத்தான்.
"நீ போகலாம்" என்ற சிவகாமி தன் அருகே இருந்த அப்பாயின்மென்ட் புத்தகத்தை எடுத்துப் பிரித்தாள்.
மூர்த்தி கொதிக்கும் மனதுடன் வெளியேறினான். பஞ்சவர்ணத்திடம் சென்று சொன்ன போது அவள் முகமும் உடனடியாக வெளுத்தது. அவளும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.
"அவள் சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே சொல்லு"
சிவகாமி சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை மூர்த்தி மறுபடியும் சொன்னான்.
"உன்னை அவள் எதுவும் கேட்கலையா?"
"வாய் திறக்க விடலை"
பஞ்சவர்ணம் கண்களை மூடிக் கொண்டு சொன்னாள். "என்னைக் கொஞ்சம் யோசிக்க விடு மூர்த்தி. சாயங்காலம் வா போதும்…"
"அப்படின்னா உடனடியா வீடு பார்க்க ப்ரோக்கர் கிட்ட சொல்லட்டா?"
"ம்"
(தொடரும்)
“
எத் தொடருக்கும் உன்டம் முடிவு
இல்லை முடிவு இத்தொடர்கு
சீக்கிரம் முடியுங்கள்
ரசித்து சிரிக்க வைத்த குறள். பாராட்டுக்கள். இந்தத் தொடர் 105வது அத்தியாயத்துடன் முடிவடையும்.
என்.கணேசன்
Story is very nice nowadays and it is moving fast.. Ganesan Sir, Pl write more stories. You are writing in a very good manner. Writing style , theme, maintaining suspense and everything is nice. It was slow before,But now it is really very good. I am waiting so eagerly everyweek for the next chapter.
இந்த எபிசோட் நன்னா இருந்தது. ஆனாலும் சிவகாமி மூர்த்தியின் உரையாடல் கொஞ்சம் சப்பென்று இருக்கிறது. இன்னும் நன்கு எழுதியிருக்கலாம்.
பை த பை அருமையான குறள்.