True eloquence consists of saying all that should be, not all that could be, said.
– La Rochefoucauld
ஆர்த்தியின் அலறல் கேட்டு, ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அந்தப் பங்களாவில் இருந்த அத்தனை பேரும் விழித்தார்கள். முதலில் அவள் அறைக்கு ஓடி வந்தது ஆகாஷ் தான். பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்தவன் கண்ட காட்சி அவன் இரத்தத்தை உறைய வைத்தது. முகமெல்லாம் வெளுத்து, உடலெல்லாம் வியர்த்து கூனிக் குறுகி காலை மடித்து கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆர்த்தி நடுங்கியபடி கட்டிலின் மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தான்.
ஓடிப் போய் அவளை அணைத்து தைரியப்படுத்த ஓரடி வைத்தவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான். மனம் இரண்டாகி நின்றது. ஒன்று அவளிடம் போகச் சொன்னது. இன்னொன்று ‘அவள் அம்மா மீது கொலைக் குற்றம் சாட்டியவள்’ என்றது. ஆர்த்தியின் அந்தப் பரிதாப நிலையில் கூட அவனுக்கு அவள் மேல் இருந்த கோபம் குறையவில்லை.
அதற்குள் பலர் ஓடிவரும் காலடிச் சத்தம் கேட்டது. மூர்த்தி, சந்திரசேகர், பவானி, பஞ்சவர்ணம், நீலகண்டன், பார்வதி, அமிர்தம், பார்த்திபன், அர்ஜுன், சங்கரன், வேலைக்காரர்கள் என வரிசையாக ஓடி உள்ளே நுழைந்தனர். ஆர்த்தியைக் கண்ட அத்தனை பேரும் திகைத்துப் போனார்கள். பார்வதி தான் ஓடிப் போய் பேத்தியை அணைத்துக் கொண்டு சமாதானப்படுத்தினாள். வழக்கத்தை விட அதிகமாய் ஆர்த்தி பாதிக்கப்பட்டிருந்ததாக பார்வதிக்குத் தோன்றியது. ஆர்த்தி அவ்வளவு சீக்கிரம் சகஜ நிலைக்கு வரவில்லை.
பவானிக்கு அந்த சூழ்நிலையிலும், தாயின் வரவு ஆச்சரியப்பட வைத்தது. பஞ்சவர்ணம் மற்றவர்கள் அறைக்குள் நுழைந்து பல வருடங்களாகிறது. பவானியின் அறைக்குக் கூட வருவதில்லை. என்ன வேண்டுமென்றாலும் மூர்த்தியிடம் சொல்லி அனுப்புவாளே ஒழிய அவளாக நேரில் வருவதில்லை என்ற கொள்கையுடன் இருந்தாள். அப்படிப்பட்டவளே வந்திருக்கிறாள் என்பது ஆச்சரியப்படுத்தியது என்றால் சிவகாமி வராதது இன்னும் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சந்திரசேகர் மகளைப் பார்த்து அதிர்ந்து நின்றவர் அதிர்ச்சியில் இருந்து சற்று மீண்டவுடன் சுற்றிலும் பார்த்து விட்டு "அக்காவைக் கூப்புடுங்க" என்றார்.
அர்ஜுன் கிளம்பத் தயாரான போது சிவகாமி உள்ளே நுழைந்தாள். மற்றவர்களின் திகைப்போ, படபடப்போ அவளிடம் காணப்படாவிட்டாலும் அவள் கூட ஆர்த்தியின் இந்தக் கோலத்தை எதிர்பார்க்கவில்லை என்று அவள் முகபாவனை சொன்னது. அடுத்த கணம் அங்கு கூடி நின்ற நான்கு வேலைக்காரர்களைப் பார்த்தாள். அவள் பார்வையிலேயே அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்தார்கள்.
சிவகாமியைப் பார்த்தவுடன் பார்வதி துக்கத்துடன் சொன்னாள். "இப்படித்தான் இந்தக் கனவு வந்து இவளைப் பாடாய்ப் படுத்துது…."
அடுத்த வார்த்தை பேச சிவகாமி அவளை அனுமதிக்கவில்லை. சைகையால் பார்வதியை மௌனமாக்கினாள். ஆர்த்தியின் அருகில் வந்து "ஆர்த்தி" என்று சத்தமாக அழைத்தாள். அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்று ஆர்த்தியை மெள்ள சகஜ நிலைக்கு அழைத்து வந்தது.
அப்போது தான் தன் அறையில் எல்லோரும் நின்று கொண்டு இருப்பதை ஆர்த்தி கவனித்தாள். கனவின் பயம் போய் நனவின் அவமான உணர்ச்சி அவளை ஆட்கொண்டது. எல்லோரையும், தூரத்தில் தள்ளி நின்றிருந்த ஆகாஷையும் பார்த்த போது அவமான உணர்ச்சியோடு, துக்கமும், இயலாமையும் சேர்ந்து அவளை விம்மி அழ வைத்தது. சென்ற முறை அவன் அருகில் அணைத்தபடி சமாதானப்படுத்தி அமர்ந்திருந்தான். இப்போதோ அந்நியனாய் தூரத்தில் நிற்கிறான்…..
"முதல்ல அழறதை நிறுத்து ஆர்த்தி" சிவகாமியின் குரல் கண்டிப்புடன் ஒலித்தது. சந்திரசேகருக்கு மகளிடம் அக்கா கொஞ்சம் இதமாகப் பேசினால் தேவலை என்று தோன்றினாலும் அதைத் தெரிவிக்க தைரியம் வரவில்லை.
"கனவு தான் முடிஞ்சுடுச்சே. அப்புறம் என்ன?"
ஆர்த்தி கஷ்டப்பட்டு தன் அழுகையை நிறுத்தினாள். சிவகாமி மற்றவர்களைப் பார்த்து சொன்னாள். "ஏதோ கனவுல பயந்திருக்கிறா. வேறொன்னுமில்லை. நீங்கெல்லாம் போய்த் தூங்குங்க"
"கனவா! நான் என்னவோன்னு பயந்துட்டேன்…"என்று சொல்லிய சங்கரன் நிம்மதியடைந்தவராக அங்கிருந்து முதலில் கிளம்பினார். மற்றவர்கள் அவ்வளவு சீக்கிரமாக அந்த விளக்கத்தில் திருப்தி அடையாவிட்டாலும் சிவகாமி சொன்னதற்குப் பிறகு அங்கு நிற்க முடியாததால் கிளம்பினார்கள். அந்த வகையில் அமிர்தம், பவானி, பஞ்சவர்ணம், மூர்த்தி, பார்த்திபன், ஆகாஷ் ஆகியோர் இருந்தனர்.
பஞ்சவர்ணம் போகும் போது மனம் புழுங்கினாள். சிவகாமி இடத்தில் தான் இருந்திருந்து இப்படி எல்லோரும் தான் சொன்னபடி கேட்டு நடக்கும் நிலை இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கணம் மனம் எண்ணிப் பார்த்து அதற்கு நேர்மாறாக அவள் சொல்லி தான் கேட்க வேண்டியதாகி விட்டதே என்று நினைத்த போது மனமெல்லாம் கசந்தது.
‘அந்தக் கிழவி ஏதோ சொல்ல வந்தாள். இந்தக் கிராதகி தான் சொல்ல விடாமல் தடுத்துட்டாள். இவள் கண்ணுல படாமல் இருக்கணும்னு தான் நான் இத்தனை நாள் என் ரூமை விட்டு அதிகம் வெளிய வராம இருந்தேன். இப்ப வந்ததுக்கு எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்…’
போகும் போது மூர்த்தியைப் பார்த்து லேசாகத் தலையசைத்து விட்டுப் போனாள். மூர்த்தியும் தலையாட்டியபடி தன் அறைக்குப் போனான்.
நகராமல் நின்ற நீலகண்டனைப் பார்த்து சிவகாமி சொன்னாள். "நீங்க போய்த் தூங்குங்க மாமா. அத்தை இப்ப வந்துடுவாங்க…"
நீலகண்டன் பேத்தியை வேதனையுடன் பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். ‘அடுத்தவர் வீட்டில் இருக்கும் போது அவர்கள் சொன்னபடி கேட்டுத்தானே ஆக வேண்டும்’.
அர்ஜுனைப் பார்த்து சிவகாமி தலையசைத்தாள். அதில் வேறு ஏதோ ஒரு அர்த்தமோ, கட்டளையோ இருந்ததாக ஆர்த்திக்குத் தோன்றியது. அவன் அங்கிருந்து வெளியேறினான். வெளியேறியவன் உடனடியாகப் படியிறங்காமல் நேராக மூர்த்தியின் அறையை நோக்கிப் போனான். மூர்த்தி தூரத்தில் இருந்தே அவன் வருவதைப் பார்த்து உள்ளே போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டான். அமைதியாக அவன் அறையை நெருங்கிய அர்ஜுன் அவன் கதவை வெளியே இருந்து தாளிட்டு விட்டு அதே அமைதியுடன் அங்கிருந்து நகர்ந்தான்.
உள்ளே இருந்த மூர்த்திக்கு கோபத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. கை கால்கள் எல்லாம் லேசாக நடுங்கின. கதவைத் தட்டி யாரையாவது அழைத்து தாளை நீக்கச் சொல்லலாம் என்று நினைத்தாலும் அது பலருடைய கவனத்தை ஈர்க்கவே செய்யும் என்ற எண்ணத்தால் அவமானத்துடன் அமைதியாக இருந்தான். அர்ஜுன் கதவை வெளியே இருந்து தாளிட்டிருக்காவிட்டால் வராந்தாவில் ஆள் நடமாட்டம் இல்லாத போது ஆர்த்தியின் அறை வாசலில் ஒதுங்கி உள்ளே நடப்பதை வேவு பார்த்திருப்பான்.
ஏதோ ஒரு குறும்புக்கார சிறுவனை அறையில் இட்டுப் பூட்டுவது போல தன்னை உள்ளே விட்டு வெளியே அர்ஜுன் தாளிட்டதை நினைக்க நினைக்க மூர்த்திக்கு மனம் கொதித்தது. அதுவும் ஒரு வேலைக்காரன் இப்படி செய்ய, எதிர்த்து தன்னால் செயல்பட முடியவில்லையே என்று எண்ணுகையில் மனக்கொதிப்பு உச்ச நிலையை அடைந்தது.
இப்போது ஆர்த்தியின் அறையில் அவளுடன் சிவகாமி, பார்வதி, சந்திரசேகர் மட்டுமே இருந்தார்கள். சிவகாமி பார்வதியைப் பார்த்தாள்.
பார்வதி தாளாத துக்கத்துடன் சொன்னாள். "இவளுக்கு சின்னதில் இருந்தே ஏதோ ஒரு கனவு அடிக்கடி வருதும்மா. அது முடியறப்ப இப்படித்தான் அலறிட்டு முழிச்சுக்கறா……"
கனவு என்ன என்று பார்வதி விரிவாகச் சொல்லாமல் இருந்தாலும் ஆர்த்தியின் சிறு வயதில் நடந்த ஏதோ ஒரு மழை நாள் இரவு நிகழ்ச்சிகள் தான் அவள் கனவில் திரும்பத் திரும்ப வருகின்றன என்பதை மட்டும் சுருக்கமாகச் சொன்னாள்.
கேட்டு விட்டு சிவகாமி எந்த உணர்ச்சியும் காண்பிக்காமல் உட்கார்ந்திருந்தாள் என்றாலும் கேட்டுக் கொண்டிருந்த சந்திரசேகர் முகம் பேயறைந்தது போல மாறியது.
(தொடரும்)“