மனிதரில் எத்தனை நிறங்கள்!- 96

"Be like a postage stamp—stick to one thing until you get there."
– Margaret Carty

சிவகாமியுடன் சேர்ந்து சந்திரசேகரும் மும்பை போக பஞ்சவர்ணம் மனம் மகிழ்ந்தாள். பேரனைத் தனியாக அழைத்து ரகசியமாகச் சொன்னாள்.

"இப்படி ஒரு கச்சிதமான சந்தர்ப்பம் நமக்கு இனியொரு தடவை கிடைக்காதுடா. அந்த நேபாளத் தடியனும் இல்லை. இந்த சனியன்களும் இல்லை. நீ நான் சொன்ன மாதிரி ஆள்களை தயார் செய்துட்டியா?"

"செய்துட்டேன் பாட்டி. ப்ளானும் ரெடி." என்றவன் தன் திட்டத்தைப் பாட்டியிடம் விவரித்தான். "பெரிய ப்ளஸ் பாயிண்ட் என்ன தெரியுமா பாட்டி. அங்க செல் போனுக்கு டவர் கூட கிடைக்காது."

பஞ்சவர்ணம் முகத்தில் பரம திருப்தி தெரிந்தது.

ஆனால் மூர்த்தி தன் சந்தேகத்தைச் சொன்னான். "ஆனா ஆர்த்தி கூட வரணுமே"

"காதலிக்கிற பொண்ணுங்க மனசு எனக்குத் தெரியும்டா. ஆகாஷ் சினிமா பார்த்துகிட்டிருக்கிற நேரத்துல நானும் சும்மாயில்லைன்னு காண்பிக்க ஆர்த்தி கண்டிப்பா விரும்புவாடா. நீ அவளை மட்டும் கூப்பிடாதே. ஆகாஷ் கோயமுத்தூர்ல சினிமாக்குப் போகிறது உனக்குத் தெரிஞ்ச மாதிரி காமிச்சுக்காதே. ஒரு அழகான பிக்னிக் ஸ்பாட் இருக்கு. கூட்டிகிட்டு போகிற இடத்துல நிறைய நடக்கணும். அதனால பாட்டி, தாத்தா மாதிரி வயசானவங்களால அங்கே போக முடியாது. நீயும், ஆகாஷ¤ம், பார்த்திபனும் வாங்க போகலாம்னு சொல்லு. ஆகாஷ் தான் வரப் போறதில்லையே. அந்த பார்த்தி ஒரு நோஞ்சான். அவன் வந்தா பரவாயில்லை. அந்த ஊமைக்கோட்டானும் (அமிர்தம்) தன் பையன் கூட வர்றதுன்னா வாயைத் திறக்காது. பார்த்தி கூட ஆர்த்தி கூப்பிட்டா எங்கேயும் வருவான். ஒருத்தருக்கு ரெண்டு பேரா நீங்க இருக்கிறதால் அந்த கிழங்களும் ஒன்னும் சொல்லாதுக"

பஞ்சவர்ணம் கணித்தது பலித்தது.

மூர்த்தி மிகவும் தயக்கத்துடன் மிக அழகான ஒரு பிக்னிக் ஸ்பாட் ஒன்று உள்ளது என்று ஆரம்பித்து பஞ்சவர்ணம் சொன்னது போல் சொல்லி விட்டு "எனக்கு உன்னைக் கூட்டிகிட்டு போய் காமிக்கணும்னு ஆசை. நாம தனியா போறது நல்லா இருக்காது. பார்த்தியும், ஆகாஷ¤ம் கூட வரட்டும். நான் கூப்பிட்டா வர மட்டாங்க. நீ கூப்பிட்டா வருவாங்க. போலாமா" என்று கெஞ்சும் தொனியில் கேட்டான்.

எப்போதும் தனிமையிலேயே இருப்பவன் முதல் தடவையாக ஆசைப்பட்டுக் கேட்கிறான் என்பதால் ஆர்த்திக்கு சம்மதிக்கத் தோன்றியது. ஆர்த்திக்கு ஆகாஷ் மேலிருந்த கோபமும் மூர்த்திக்கு சாதகமாக வேலை செய்தது. "ஆகாஷ¤க்கு வேற ஏதோ ப்ரோகிராம் இருக்கு. பார்த்தியை நான் கேட்டுப் பார்க்கிறேன்" என்றாள்.

பார்த்திபனுக்கு மூர்த்தி கூட வருவது அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றாலும் ஆர்த்திக்காக சம்மதித்தான். பார்வதிக்குத் தான் இந்தப் பயணத்தில் அவ்வளவாக திருப்தியிருக்கவில்லை. ஆனால் நீலகண்டன் மனைவியைத் திட்டினார். "ஆகாஷ் ஒருத்தன் கூட அனுப்பறதுல உனக்குத் தயக்கமே இல்லை. மூர்த்தி பாவப்பட்டவன், அதுவும் தனியா கூப்பிடலை, பார்த்தி ஆகாஷையும் சேர்த்துக் கூப்பிடறான். உனக்கு மனசில்லை….." கடைசியில் பார்த்தி கூட இருக்கிறான் என்ற தைரியத்தில் அவள் தலையாட்டினாள்.

ஆகாஷ¤க்கு சுத்தமாக ஆர்த்தி அவர்களுடன் போவது பிடிக்கவில்லை. ஆனால் வாயைத் திறந்து மறுப்பு சொல்ல முடியாத நிலையில் இருந்தான். அவனுக்கும் பார்த்திபன் கூடப் போவது ஒரு தைரியமாக இருந்தது. அமிர்தமும் மூர்த்தி கூட இல்லாமல் பார்த்திபனும் ஆர்த்தியும் மட்டும் போனால் நன்றாக இருக்கும் என்று உள்ளூர நினைத்தாலும் ஆகாஷ் இல்லாமல் பார்த்தி ஆர்த்தி கூட இருப்பது நல்லது என்று ஆறுதலடைந்தாள்.

பஞ்சவர்ணமும், மூர்த்தியும் சேர்ந்து போட்ட தற்போதைய திட்டத்தின் முழு விவரம் தெரியாவிட்டாலும் பவானிக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு கதையுடன் பஞ்சவர்ணம் மூர்த்திக்கு சொன்ன திட்டம் உறுத்தியது. அன்று சொன்ன திட்டத்தில் பார்த்திபனைப் போன்ற கூடுதல் நபர் இல்லை. ஆனாலும் பார்த்திபனையும் அடித்து வீழ்த்த மூர்த்திக்குப் பெரிய கஷ்டம் இல்லை என்று தோன்றியது. வாய் விட்டு ஆர்த்தியிடம் வேண்டாம் என்று சொல்லலாம் என்றாலோ ஒரு காரணத்தை அவளுக்கு சொல்ல வேண்டும். எதைச் சொல்வாள்? தன் தாயையும், மருமகனையும் அவளால் காட்டிக் கொடுக்க முடியுமா?

அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஆர்த்தி அவளிடம் போகும் முன் சொல்லிக் கொள்ள வந்தாள். "உங்களையாவது கூட்டிகிட்டு போகலாம்னு நினைச்சேன் சித்தி. மூர்த்தி உங்களுக்குக் கூட நடக்கக் கஷ்டம்னு சொல்றார். ஆனா அவ்வளவு அழகான இடம் இந்த நீலகிரி ஏரியாவிலேயே இல்லைங்கறார். கோத்தகிரிக்குப் பக்கத்துல இருக்காம் அந்த இடம். போயிட்டு வர்றோம் சித்தி"

பவானி தலையசைத்தாலும் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தாள். ஆர்த்தி, மூர்த்தி, பார்த்திபன் மூவரும் காரில் கிளம்பிப் போய் விட்டார்கள்.

*****

மூன்று நாள் மன உளைச்சலுக்குப் பின் இப்போது தான் மூர்த்தி மகிழ்ச்சியாக இருந்தான். அப்பா உயிரோடு இருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும், அம்மா உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று தெரியாததால் ஏற்பட்ட குழப்பமும் அவனை நிறையவே முதலில் அலைக்கழித்தன. பஞ்சவர்ணமும் அவன் கேட்ட கேள்விகளுக்கு மௌனமே சாதித்தாள். அவன் விடவில்லை. தொடர்ந்து கேட்டு அவன் நச்சரித்த போது பஞ்சவர்ணம் "முதல்ல ஆர்த்தியோட ஹிப்னாடிஸ ரெண்டாவது சிடி கிடைக்கட்டும். அப்பத் தான் எதாவது சொல்ல முடியும்" என்று சொல்லி பேரன் வாயை அப்போதைக்கு அடைத்தாள்.

மூர்த்திக்கு அசோக் சிடி தருவதாகச் சொல்லியிருந்த நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன் அசோக்கிடம் இருந்து போன் வந்தது. "எனக்கு அவசரமா வெளியூர் போகற வேலை இருக்கிறது. அதனால் திங்கள் கிழமை சாயங்காலம் நான் முதல்ல சொன்ன அதே இடத்துக்கு அதே நேரத்தில் வந்தால் போதும்" அதற்கு மேல் அவன் ஒன்றும் சொல்லவில்லை. மூர்த்திக்கு வந்த கோபத்திற்கு எல்லையே இல்லை. அவன் இப்போதைய சிடியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள பேராவலுடன் இருந்தான். திங்கள் வரை காத்திருக்கும் பொறுமை அவனுக்கு இல்லை. பஞ்சவர்ணத்திடம் சொன்ன போது அவளுக்கும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அர்ஜுன், சந்திரசேகர் இருவரும் கூட ஊட்டியில் இருந்து போகிறார்கள் என்று தெரிந்த போது தங்கள் அடுத்த திட்டத்தை செயல்படுத்த அருமையான சந்தர்ப்பம் வாய்த்தது என பாட்டியும் பேரனும் ஓரளவு உற்சாகத்திற்கு மாறினார்கள்.

என்ன தான் திட்டம் வெற்றி பெறும் என்று பஞ்சவர்ணம் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும் மூர்த்திக்கு ஆர்த்தி கிளம்பும் வரை நம்பிக்கை வரவில்லை. ஆர்த்தி, பார்த்திபனுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த இந்த சமயத்தில் தான் பழைய மன உளைச்சல் போய் மகிழ்ச்சி பிறந்திருந்தது. ஆர்த்தியும், பார்த்திபனும் பார்க்காத போதெல்லாம் அவன் ஆர்த்தியை காமத்துடன் பார்த்தான். இன்றிரவு வரை பொறுத்திரு என்று தன் மனதிற்கு சொல்லிக் கொண்டவன் ஆர்த்தியோ, பார்த்திபனோ பார்க்கையில் கண்ணியத்தின் உறைவிடமாக நடந்து கொண்டான்.

முதலில் இயற்கையழகு மிக்க ஓரு சில இடங்களுக்கு அவர்களை அழைத்துப் போனான். அதில் இரண்டு இடங்கள் பார்த்திபனே இது வரை பார்க்காத இடங்கள்.

"நான் கூட்டிகிட்டு போகிற இடங்க எல்லாமே இன்னும் டூரிஸ்ட் கண்களுக்குப் படாத இடங்கள் ஆர்த்தி. கூட்டம் இருக்காது. அசுத்தம் இருக்காது. இயற்கையை இயற்கையாவே நீ பார்க்கலாம். நான் உனக்காகவே பார்த்து வைத்திருக்கிற இடங்கள்" என்று சொன்னது போலவே அவன் அழைத்துப் போன இடங்கள் ஆட்கள் அதிகமில்லாத, இயற்கையழகு அதிகமிருந்த இடங்களாகவே இருந்தன. ஆர்த்தி அந்த இடங்களின் அழகில் தன்னை மறந்து போனாள் என்றே சொல்ல வேண்டும். பார்த்திபனும் கிட்டத்தட்ட அவள் போலவே ரசித்தான். அந்த அழகைப் பற்றி அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட போது மூர்த்தி சற்று ஒதுங்கியே இருந்தான்.

அவனுடைய வழக்கத்திற்கு மாறான கண்ணியமான நடத்தை பார்த்திபனைக் கூட ஏமாற்றி விட்டது. "நிஜமாவே திருந்திட்டான் போல இருக்கு" என்று அவன் நினைத்துக் கொண்டான்.

ஆர்த்தி மூர்த்தியையும் வலிய தங்கள் பேச்சில் இழுத்தாள். தேவையான அளவு மட்டும் கலந்து கொண்ட மூர்த்தி அவள் ரசனையே தனக்கு பரம திருப்தி என்பது போல் காட்டிக் கொண்டான்.

மதியம் ஒரு முறை பவானியின் போன் ஆர்த்திக்கு வந்தது. "சித்தி. நீங்கள் வந்திருந்தா ரொம்பவே ரசிச்சிருப்பீங்க. மூர்த்திக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியலை. மெயின் ஸ்பாட் சாயங்காலம் காண்பிக்கிறாராம். சூரியாஸ்தமனம் அழகாய் இருக்குமாம்….." என்ற ஆர்த்தி தாங்கள் இது வரை பார்த்த இடங்களை எல்லாம் வர்ணித்தாள்.

மூர்த்தி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அவனுடைய இப்போதைய திட்டம் அப்பழுக்கில்லாதது. அவன் கடைசியாக சூரியாஸ்தமனத்தைக் காண்பிக்கப் போகும் இடம் உண்மையிலேயே மிக ரம்மியமானது. ஆனால் அந்த இயற்கையழகுடன் மூர்த்திக்கு சாதகமான அம்சங்கள் நிறைய இருந்தன. ஒன்று அங்கு செல் போனிற்கு டவர் கிடைப்பதில்லை. அந்த இடத்தில் அந்த நேரத்தில் சுத்தமாக ஆள் நடமாட்டம் இருக்காது. அது வேறெங்கும் போவதற்கான வழியுமில்லை என்பதால் வாகனங்களும் அங்கு அந்த நேரத்தில் வருவதில்லை. அவர்கள் வந்த காரும் அங்கே ரிப்பேராகப் போகிறது. அவன் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் சரியாக ஏழரை மணிக்கு வரப் போகிறார்கள்……

அவர்கள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்த போது மணி ஐந்து. மூவரும் இறங்கி ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.

"ச்சே" என்றான் மூர்த்தி.

"என்னாச்சு" ஆர்த்தி கேட்டாள்.

"தண்ணி பாட்டில் எடுத்துட்டு வர மறந்துட்டேன். நீங்க மெள்ள இந்தப் பாதையிலேயே நடந்துகிட்டே இருங்க. நான் வந்து ஜாயின் செய்துக்கறேன்" என்ற மூர்த்தி ஓட்டமும் நடையுமாக காரை நோக்கி திரும்பி வந்தான். காரை ரிப்பேர் செய்யும் வேலை இரண்டு நிமிடங்களில் முடிந்தது. இனி அவனே நினைத்தாலும் காரை மெக்கானிக் உதவியில்லாமல் கிளப்ப முடியாது. தன் வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் அவர்களுடன் போய் சேர்ந்து கொண்டான். உண்மையிலேயே இன்றைய சூர்யாஸ்தமனம் அவனைப் பொருத்த வரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போகிறது….

+++++++++++++++++++

ஆகாஷிற்குத் தன் மேலேயே கோபம் வந்தது. ஏதோ ஒரு வேகத்தில் நளினியுடன் படம் பார்க்க ஒப்புக் கொண்டவனுக்கு அவள் இப்போது நட்புடன் தன் கையை அவன் கையுடன் கோர்த்துக் கொண்டு தியேட்டரில் நுழைந்த போது அதை ரசிக்க முடியவில்லை. அவளோ ஒரு சில பெண்கள் பார்த்த போது அவன் கைகளை மேலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அவள் சொன்னது போல ஞாயிற்றுக் கிழமையானாலும் தியேட்டரில் பெரிய கூட்டமில்லை. ஒரு பாதுகாப்புக்கென்று ஆட்கள் இருக்கும் பகுதியிலேயே அவளை அழைத்துப் போய் உட்கார்ந்தான்.

படம் ஆரம்பித்தவுடன் நளினி படத்தில் மூழ்க அவன் மனது ஆர்த்தியையே எண்ணிக் கொண்டிருந்தது. மூர்த்தியுடன் போயிருக்கிறாள் என்பதே அவனுக்குக் கசந்தது. பார்த்திபனும் கூட இருப்பது ஒரு பாதுகாப்பு என்று தோன்றினாலும் மனதில் ஏனோ அவனுக்கு அமைதியில்லை. காரணம் தெரியாத ஒரு சஞ்சலம் அவனைப் படம் பார்க்க விடவில்லை.

+++++++++++++++++++

அரை மணி நேரமாக பவானி ஆர்த்தியின் செல்லில் தொடர்பு கொள்ள முயன்று கொண்டே இருந்தாள். ‘Not Reachable’ என்றே அறிவிப்பு வந்து கொண்டிருந்தது. நிமிடங்கள் செல்லச் செல்ல பவானியின் பயம் ஊர்ஜிதமாக ஆரம்பித்தது.

ஆர்த்தியின் வாழ்வில் வந்த பல துக்கங்களுக்கு ஒரு விதத்தில் தானும் காரணம் என்ற உறுத்தல் அண்ணனைச் சந்தித்து வந்த பிறகு பவானிக்கு ஏற்பட்டிருந்தது. பஞ்சவர்ணம் அன்று சொன்ன திட்டம் வெறுமனே சொன்னது என்று அவளுக்குத் தோன்றவில்லை. அவர்களுடைய திட்டம் இன்று தான் அரங்கேறப் போகிறதா, இல்லை இந்த நாளில் அப்படி ஏதும் நடக்கப் போவதில்லையா என்றும் அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அப்படியொரு திட்டம் உண்மையாகவே இருந்தால் அதை நிறைவேற்ற சிவகாமி இல்லாத ஒரு சூழ்நிலை தான் அவர்களுக்கு சாதகமானது என்பதில் சந்தேகம் இல்லை.

பவானிக்கு என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியவில்லை. பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. ஆர்த்தி அவளிடம் அன்பு காட்டிய தருணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மனத்திரையில் வந்து போக அவளுக்கு மனம் பாறையாக கனக்க ஆரம்பித்தது. ஏதாவது ஒன்றைச் சொல்லி ஆர்த்தியைப் போகாமல் தடுத்திருக்க வேண்டும் என்று மனம் சொன்னது.

கடைசியாக ஒரு முறை ஆர்த்தியின் செல்லுக்கு பேச முயற்சி செய்தாள். அதே அறிவிப்பு. மூர்த்தியின் காமத்துக்கு ஆர்த்தி இரையாக வாய்ப்பிருப்பதை அவளால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அவளுள் ஒரு பச்சாதாபம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. ஆர்த்திக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தைத் தடுத்து நிறுத்த சிவகாமி ஒருத்தியால் தான் முடியும் என்றாலும் அவளும் இப்போது இங்கு இல்லை. ஆனால் எங்கிருந்தாலும் அவளால் ஏதாவது செய்ய முடியலாம். இன்றும் தான் மௌனமாக இருந்து விட்டால் என்றென்றைக்கும் மனசாட்சியின் உறுத்தலில் நிம்மதியாக இருக்க முடியாது என்று தோன்றியது.

சிவகாமியின் செல்லிற்குப் பவானி போன் செய்தாள். இது தான் அவள் சிவகாமிக்கு இத்தனை வருடங்களில் செய்யும் முதல் போன்…

"ஹலோ.." சிவகாமியின் குரல் கேட்டது.

"அக்கா நான் பவானி பேசறேன்:"

"நான் ஒரு மீட்டிங்கிற்குக் கிளம்பிட்டு இருக்கேன். என்ன விஷயம் பவானி?"

"அக்கா…. அக்கா" பவானிக்கு பேச வரவில்லை. அழுகை தான் வந்தது.

"சொல்லு. யாருக்கு என்னாச்சு"

சிவகாமிக்கு சுற்றி வளைப்பது எப்போதுமே பிடிக்காது என்பதால் தன்னை சுதாரித்துக் கொண்ட பவானி அவசர அவசரமாகச் சொன்னாள். "….ஒண்ணும் ஆகல…ஆர்த்தி, மூர்த்தி, பார்த்திபன் ஒரு பிக்னிக் போனாங்க. இப்ப செல்ல பேச டிரை செய்தா நாட் ரீச்சபிள்னே அரை மணிநேரமா வந்துகிட்டிருக்கு"

"பிக்னிக்கா? மூர்த்தி கூடவா?"

"ஆமாக்கா" பவானியின் குரல் பலவீனமானது.

"பவானி. செல் போன் நாட் ரீச்சபிள்னு வர்றது பெரிய விஷயமில்லை. கூட பார்த்திபனும் போயிருக்கான்கிறாய். அப்புறம் என்ன?"

பவானிக்கு தொண்டையை அடைத்தது.

சிவகாமி சரியாக இருபது வினாடிகள் மௌனமாக இருந்தாள். பின் கேட்டாள். "அப்படின்னா இன்னும் ஏதோ இருக்கு. இல்லையா?"

பவானி வாய் விட்டு அழ ஆரம்பித்தாள். சிவகாமி உடனடியாக அழுகையை நிறுத்தச் சொன்னாள். "பார் பவானி. உண்மையாவே ஆர்த்திக்கு ஆபத்து இருந்து அவளை நான் காப்பாத்தணும்னா எனக்கு முழு விவரமும் தெரிஞ்சாகணும். நீ ஏன் பயப்படறேன்னு சொல்லு"

பவானி அன்று தான் ஒட்டுக் கேட்ட விவரத்தை அழுகையினூடே சொன்னாள். கடைசியில் "இப்ப நடக்கறதுக்கும் அன்னிக்கு நான் கேட்டதுக்கும் சம்பந்தம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனா எனக்கென்னவோ பயம்மா இருக்குக்கா…."

"சரி கடைசியா ஆர்த்தி எப்ப போன் பண்ணினா? என்ன சொன்னா? எங்கேயெல்லாம் போறதா அவங்க கிளம்பறதுக்கு முன்னால் சொன்னாங்க"

பவானி எல்லாவற்றையும் சொன்னாள்.

"சரி. இன்னும் இதை யார் கிட்டயும் நீ சொல்லாதே" சிவகாமி போன் இணைப்பைத் துண்டித்தாள்.

பவானியைப் போல் சிவகாமிக்கு சந்தேகம் இருக்கவில்லை. பஞ்சவர்ணத்தின் திட்டம் தான் இந்த பிக்னிக் என்பதை உறுதியாக நம்பினாள். அர்ஜுன் அங்கே இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தவள் இனி என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அப்போது தான் அவளுடைய ஓட்டலறைக்குள் நுழைந்த சந்திரசேகர் "என்னக்கா? இன்னும் கிளம்பாமல் என்ன யோசிச்சுகிட்டு இருக்காய்" என்று கேட்டார்.

"ஒண்ணுமில்லை" என்றாள் சிவகாமி.

(தொடரும்)

About The Author