There is no end. There is no beginning. There is only the infinite passion of life.
-Federico Fellini
டாக்டர் டேவிடிற்குப் பேசாமல் இருப்பது தான் கஷ்டமான செயல் என்று ஆர்த்திக்குத் தோன்றியது. மனிதர் வந்ததில் இருந்து பேச்சை நிறுத்தவில்லை. அவரது நண்பர் சந்திரசேகர் வீட்டில் இல்லாதது அவருக்குப் பேச்சைக் குறைக்க காரணமாகத் தோன்றவில்லை. அமிர்தத்திடமும் ஆர்த்தியிடமும் பார்வதியிடமும் நீலகண்டனிடமும் மாறி மாறி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். நீலகண்டனிடம் மாரடைப்பைப் பற்றிப் பேச ஆரம்பித்தவர் பாண்டிச்சேரி அரவிந்தாஸ்ரமம், ஊட்டி எல்க்ஹில் முருகன் கோயில் பற்றி பார்வதியிடம் சொல்லி, அமிர்தத்திடம் உள்ளூர் சமாச்சாரங்களை அலசி, ஆர்த்தியிடம் எழுத்தாளர் சுஜாதா மரணம் பற்றிப் பேசி அவரது கதைகள் சிலவற்றை விமரிசித்து சிறிது மூச்சு வாங்கிய போது அமிர்தம் கேட்டாள். "ஏன் மேரியை கூட்டிகிட்டு வரலை?"
"ஐயோ சின்னக்கா நான் வந்த வேலையையே மறந்துட்டேன் பார்த்தீங்களா? மேரி ஆர்த்தியை வீட்டுக்குக் கூட்டிகிட்டு வரச் சொன்னாள். அது தான் இந்த மத்தியான வேளையில் வந்திருக்கேன். பேச்சுல மறந்தே போயிட்டேன்"
ஆர்த்திக்கும் மேரியிடம் கேட்க நிறைய இருந்ததால் போக ஆவலாக இருந்தது. அமிர்தத்தை என்ன செய்வது என்பது போலப் பார்த்தாள். தந்தையும், பெரியத்தையும் இல்லாததால் சின்னத்தையின் அனுமதியை எதிர்பார்த்தாள்.
அமிர்தம் தலையசைத்து விட்டுச் சொன்னாள். "போயிட்டு வா ஆர்த்தி. டேவிட் நீ சாயங்காலத்துக்குள்ள கூட்டிகிட்டு வந்துடு. அவங்கப்பா சாயங்காலம் பொண்ணைக் கூட்டிகிட்டு ஷாப்பிங் போகணும்னு பவானி கிட்ட சொல்லிகிட்டிருந்தது காதுல விழுந்துச்சு. அதுக்குள்ள வந்துடு"
"நான் கிளினிக் போறதுக்கு முன்னால் இங்க ஆர்த்தியை கூட்டிகிட்டு வந்துடறேன்." என்றவர் நீலகண்டன் தம்பதியரைப் பார்த்து சொன்னார். "நீங்களும் வாங்களேன்"
"இன்னொரு நாள் வர்றோம்…." என்று பார்வதி சொல்ல டேவிட் ஆர்த்தியை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
போகும் டேவிடைப் பார்த்துப் புன்னகைத்தபடி அமிர்தம் பார்வதியிடம் சொன்னாள். "….எனக்கு தலைவலியே வந்துடுச்சு. இப்படித்தான் பேசினா நிறுத்த மாட்டான். சின்னதுல இருந்தே பழக்கம். அதனால வீட்டாள் மாதிரி தான். அக்கா ஒருத்தியால தான் அந்தப் பேச்சை நிறுத்த முடியும்…. ஆனா ரொம்பவும் நல்ல டைப்….."
காரில் போகும் போதும் டேவிட் பேசிக் கொண்டே தான் காரை ஓட்டினார். "…… உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எங்கப்பா உன் தாத்தாவோட எஸ்டேட்டுல மேனேஜரா இருந்தார். அப்படி நானும் இங்க வர போக உங்கப்பாவும் நானும் ஃப்ரண்ட்ஸ் ஆயிட்டோம். சின்னதுல நானும் உங்கப்பனும் அடிக்காத லூட்டி இல்லை. அப்ப எல்லாம் ஊட்டில சாயங்காலம் அஞ்சு மணிக்கே ரோட்டுல ஆள் நடமாட்டம் அதிகம் இருக்காது. நாங்க ரெண்டு பேரும் ராத்திரி எட்டு மணி வரைக்கும் பேய் மாதிரி உலாவிக்கிட்டு இருப்போம்……."
தந்தையின் இளமைப் பருவ வாழ்க்கையை நினைத்து ஆர்த்தி புன்னகைத்தாள்.
"…. அப்ப எல்லாம் எதிர்காலம் என்னங்கற யோசனை செய்யற அளவுக்குக் கூட புத்தி இல்லை. எசஸெல்சில நல்ல மார்க் வாங்கிட்டு வந்தப்ப எங்கப்பா சொல்லிட்டார். "படிச்சது போதும். மேல படிக்க வைக்க என் கிட்ட காசு இல்ல. எங்கேயாவது வேலை பாரு"ன்னுட்டார். அப்ப தான் யதார்த்தம் தலையில் ஆணி மாதிரி அடிச்சது….." சொல்லி விட்டு டேவிட் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அந்த நாள் நினைவு அவரை ஆட்கொண்டது போல இருந்தது.
ஆர்த்தி ஆர்வத்துடன் கேட்டாள். "அங்கிள், அப்புறம் எப்படி டாக்டர் ஆனீங்க?"
டேவிட் குரல் கரகரக்கச் சொன்னார். "எல்லாம் உன் பெரியத்தையோட தயவு தான். அப்ப உங்க தாத்தாவோட அவங்களும் பிசினஸ் பார்த்துகிட்டு இருந்தாங்க. உன் தாத்தான்னா எல்லாருக்கும் பயம். உங்கப்பா, சின்னத்தை கூட அவர் கிட்ட தைரியமா பேச மாட்டாங்க…நானும் வேலை கேட்க சிவகாமி அக்கா கிட்ட தான் போனேன். ‘என்னடா படிக்கறத விட்டுட்டு வேலை கேட்டுட்டு வந்திருக்கே. அதுவும் இவ்வளவு நல்ல மார்க் வாங்கிட்டு’ன்னு கேட்டாங்க"
‘அப்பா இதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னாட்டாங்கக்கா’
‘அப்ப உனக்கு படிக்க ஆசை இருக்கு’
‘ஆசை இருந்து என்னக்கா செய்யறது. அம்சம் இல்லை’ன்னேன்.
‘என்ன படிக்க ஆசை?’
‘டாக்டருக்குப் படிக்க ஆசை… அதை சொல்லி என்னக்கா பிரயோஜனம்?’
‘கொஞ்சம் இரு’ன்னுட்டு உங்க தாத்தா கிட்ட போய் பேசினாங்க. நான் அவர் ரூம் வாசல் பக்கத்துலயே நின்னுட்டு இருந்தேன். உள்ளே பேசினது கேட்டுச்சு. என்னோட படிப்பு செலவ ஏத்துக்க சொல்லி உங்க தாத்தா கிட்ட சொன்னாங்க. அவர் பணம் என்ன மரத்துலயா காய்க்குதுன்னு கத்துனார். மனுஷன் அந்தக் காலத்துலேயே எக்கச்சக்கமா பணமும் சொத்தும் சேர்த்து வச்சிருந்தாலும் எச்சில் கையில காக்கா ஓட்ட மாட்டார். உங்கத்தை விடலை. "அவன் யாரு, நமக்கென்ன உறவு. அவனுக்காக நீயேன் என் கிட்ட வந்து கேட்கிறாய்?"ன்னு உன் தாத்தா கேட்டார். இப்பவும் உங்கத்தை சொன்னதை என்னால் மறக்க முடியாது ஆர்த்தி. "சந்துருவோட ஓடியாடி விளையாடுன பையன். எனக்கு அவனும் சந்துரு மாதிரி தான்"னாங்க……’
டேவிட் குரல் உடைந்து ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். பிறகு தொடர்ந்தார். "அது மட்டுமில்ல. உங்களுக்காகவும் தான் கேட்கறேன்னு அக்கா சொன்னாங்க. உன் தாத்தா "எனக்காகவா? என்ன சொல்ற?’ன்னு கேட்டாரு. "ஒரு நாள் நீங்க மேல போய் சேர்றப்ப எமதர்மன் ‘ஏதாவது தர்மம் செஞ்சிருக்கியா?ன்னு கேட்டா ஒரு ஏழைப் பையன் படிக்க நான் உதவியிருக்கேன்னு சொல்லலாமே"ன்னு அக்கா சொன்னாங்க. அப்ப உன் தாத்தா சிரிச்ச சிரிப்பு மாதிரி நான் அது வரைக்கும் கேட்டதில்லை. கடைசில சொன்னாரு "சரி தர்றேன். ஆனா எமதர்மன் கேப்பான்னு இல்ல. நீ கேக்கறேன்னு தான். ஆனா இனிமே கண்டவங்களுக்காக என் கிட்ட வந்து கேட்டுடாதே. நான் கண்டிப்பா செய்ய மாட்டேன். அப்புறம் கேட்டேன், அப்பா மறுத்துட்டாருன்னு சொல்ல வேண்டாம்"
"சிவகாமியக்கா பெருசா கனிவா பேசற ரகம் அல்ல. என் கிட்ட கூட ஒரு தடவை கூட அப்படி பேசுனதோ பழகுனதோ இல்லை. அப்படியிருக்கையில எனக்காக அவங்க செஞ்ச உதவிய நான் எதிர்பாக்கல. ஒவ்வொரு வருஷமும் மார்க் ஷீட்ட அவங்க கிட்ட கொண்டு போய் காமிப்பேன். மார்க் குறைஞ்சிருந்தா நல்லாவே திட்டுவாங்க…. அதுல எல்லாம் தாட்சண்யமே இருக்காது. நான் நல்லா படிக்க அதுவும் ஒரு காரணமாச்சு…..கடைசில நான் அவங்க தயவுல டாக்டராயிட்டேன்" சொல்லச் சொல்ல டேவிட் நாக்கு தழுதழுத்தது.
ஆர்த்திக்கும் மனம் நெகிழ்ந்தது. சிவகாமியின் பெருந்தன்மை அவளை வியக்க வைத்தது.
டேவிட் தொடர்ந்து சொன்னார். "உன் தாத்தா இறந்த பிறகு அக்கா அவர் பேருலயே ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு நிறைய ஏழைக் குழந்தைங்க படிக்க ஏற்பாடு செஞ்சாங்க…."
அப்படிப்பட்ட ஒருத்தி கொலை செய்ததாய் சந்தேகப்பட்டால் அவள் மகனுக்கு கோபம் வராமல் என்ன செய்யும் என்று ஆர்த்தி தனக்குள் கேட்டுக் கொண்டாள். ஆகாஷின் வெறுப்பை நினைக்கையில் அவள் மனம் வாடியது. அதனை அப்போதைக்கு மறக்க வேண்டி டேவிட்டை ஆர்த்தி கேட்டாள். "அங்கிள், எங்கம்மா எந்த மாதிரி டைப்?"
டேவிட் ஒரு கணம் தாமதித்து சொன்னார். "உங்கம்மா ஒரு உற்சாகமான டைப். எல்லாத்தையும் ஒரு துடிப்போட செஞ்சாங்க; வாழ்ந்தாங்க. அவங்க டல்லா இருந்து பார்க்கறது அபூர்வம்….."
"அவங்க இறந்த விதம் என்னவோ யதார்த்தமில்லாத மாதிரி தோணலையா அங்கிள்?"
டேவிட் தன்னை அறியாமல் காருக்குப் ப்ரேக் போட்டு நிறுத்தினார்.
(தொடரும்)
“