மனிதரில் எத்தனை நிறங்கள்!-91

False face must hide what the false heart doth know.
– William Shakespeare

பஞ்சவர்ணம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போய் தன் சென்னைப் பயணத்தைப் பற்றி மேற்கொண்டு கேள்வி கேட்காமல் விட்டது பவானிக்கு நிம்மதியைக் கொடுத்தது. பஞ்சவர்ணம் சிந்தனையை வெளியே இருந்து வந்த கார் சத்தம் கலைத்தது. கண்களை சுருக்கிக் கொண்டு ஜன்னல் வழியே பார்த்தாள்.

காரிலிருந்து ஒரு அழகான வாலிபன் இறங்கினான்.

"கார் இந்த வீட்டுக்கார் தான். ஆனா இறங்கற ஆள் சினிமாக்காரன் மாதிரி தெரியறான். யார்டீ அது"

பவானியும் எட்டிப் பார்த்தாள். அவள் அவனை இதற்கு முன் பார்த்ததில்லை. ஆனால் பார்க்க பஞ்சவர்ணம் சொன்னது போல் அழகாகத் தான் இருந்தான். "தெரியலை".

சந்திரசேகர் சத்தமாக அவனை அழைத்துக் கொண்டே வந்தார். "ஹாய் அர்ஜுன். ஆள் அடையாளமே தெரியாத மாதிரி மாறிட்டாய்". எப்போதுமே சற்று தொலைவிலேயே அவனை நிறுத்தும் சந்திரசேகர் அன்று அவனைக் கட்டிக் கொண்டார். "க்ரேட் ஜாப்". ஆகாஷ¤ம் வந்து ஆனந்தத்தோடு அவனைக் கட்டிக் கொண்டான். "எவ்வளவு அழகா வந்திருக்கே அர்ஜுன்"

"யார்டீ அது அந்த நேபாளத் தடியனா?" பஞ்சவர்ணம் ஆச்சரியத்தோடு மகளைக் கேட்டாள்.

"அப்படித் தான் தெரியுது"

"ஏண்டீ அந்தத் தடியன் இருபது வர்ஷத்துக்கும் மேல தன்னோட அசிங்கமான மூஞ்சியக் காட்டிகிட்டு இந்த வட்டாரத்தையே கதி கலங்க வச்சுகிட்டிருந்தான். அவனை பார்த்துட்டு பயந்த எத்தனையோ குழந்தைகளுக்கு மந்திரிக்க வேண்டியதா போச்சு. இத்தனை வர்ஷம் கழிச்சுட்டு அந்தக் கொலைகாரி ப்ளாஸ்டிக் சர்ஜரி செஞ்சுருக்கான்னா உனக்கு சந்தேகம் வருதா இல்லையா?"

வீட்டினுள் அர்ஜுன் நுழைவதையே பார்த்துக் கொண்டிருந்த பவானிக்கு இதில் சந்தேகப்பட என்ன இருக்கிறது என்று தோன்றியது. தாயை கேள்விக்குறியுடன் பார்த்தாள்.

பஞ்சவர்ணம் சொன்னாள். "இது ஒரு ஒத்திகை மாதிரி தோணலையாடி. முகத்தை எப்படி மாத்த முடியுதுன்னு பார்த்துருக்கா"

"எதுக்கு?"

"ஒரு டூப்ளிகேட் ஆர்த்தியை அந்த சதிகாரி தயார் செய்துட்டு இருக்காடி. நீ இப்ப சென்னை போயிட்டு வர்றப்ப இந்த ஆர்த்தி இருப்பாளோ அந்த ஆர்த்தி இருப்பாளோன்னு தெரியாது. நீ நேத்து அமிர்தாஞ்சனம் பூசினதை ஞாபகம் வச்சுட்டு இன்னொரு தடவை பூசச்சொன்னா அவள் அந்த பாட்டிலை உன் மேலயே தூக்கி எறிஞ்சாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை"

நேற்றும் இதையே தான் மூர்த்தியிடம் அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘இதென்ன பைத்தியக்காரத்தனம்’ என்று பவானிக்குத் தோன்றியது.

பஞ்சவர்ணம் மகளைப் படித்தாலும் ஆர்த்தியின் பிறந்த நாள் வீடியோ பற்றி அவளிடம் விளக்கப் போகவில்லை. ‘இந்த மந்த புத்திக்காரிக்கு சொல்லி விளங்க வைக்க முடியாது. அவளும் நம்ம கிட்ட எத்தனையோ மறைக்கிறப்ப நாம மட்டும் ஏன் சொல்லி விளக்கணும்’ என்று நினைத்தவள் மகளிடம் சொன்னாள். "உனக்கு சொன்னாப் புரியாது. ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ. அந்த சதிகாரி எதையோ பெருசா திட்டம் போட்டுகிட்டிருக்கா. ஜாக்கிரதையாயிரு"

தலை சுற்ற அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று பவானி கிளம்பினாள்.

+++++++++

அர்ஜுனிற்கு எல்லாம் நாடகம் போலத் தெரிந்தது. ஆரம்பத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்கையில் தெரிந்த பிம்பம் யாரோ ஒரு அன்னியனுடையதைப் போல இருந்தது. டாக்டர் சில நாட்களுக்கு அப்படித் தோன்றுவது சகஜம் என்று சொல்லியிருந்தார். சென்னையில் இருந்து கிளம்பிய அந்தக் கணம் முதல் அவனைப் பலரும் பார்த்த பார்வைகள் அவன் இது வரை கண்டறியாதது. அருவருப்பும், முகச்சுளிப்பும் மட்டுமே கண்டவனுக்கு தன் மீது விழுந்த பார்வைகள் தங்கிப் போவது அதிசயமாகத் தோன்றியது. ஓரிரு பெண்கள் அவனைப் பார்த்துப் புன்னகைக்கவும் செய்தார்கள். முதல் முறையாக உலகம் வேறு மாதிரியாகத் தெரிந்தது.

முன்பெல்லாம் அடுத்தவர் பார்த்து அருவருப்படைவதைக் காண்பதற்கு முன் அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும் என்று அவன் நடையில் வேகம் அதிகம் இருக்கும். இப்போது அவசரம் போய் நிதானம் வந்தது. ஆனாலும் ஏனோ அவனால் சந்தோஷப்பட முடியவில்லை. சந்தோஷம், துக்கம் என்ற இரண்டையும் இழந்து விட்டவனாக இருந்தான்.

இங்கு வந்ததும் சந்திரசேகரின் நட்பான தழுவலும் அவனை ஆச்சரியப்படுத்திய வரிசையில் சேர்ந்தது. ஆகாஷ் என்றுமே தன் அருவருப்பைக் காட்டியதில்லை என்றாலும் நேராக அவனைப் பார்ப்பதை மற்றவர்கள் போலவே தவிர்த்து வந்தான். ஆகாஷ் இப்போது காட்டிய ஆனந்தம் இயல்பாக இருந்தது. அவர்களை எல்லாம் தாண்டி அவன் தன் தெய்வத்தைக் காண சென்று கொண்டிருந்தான். இத்தனை பேர் கருத்தும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. அவள் என்ன சொல்கிறாள் என்பது தான் மிக முக்கியம்.

தன் அறையில் கம்ப்யூட்டரில் மூழ்கி இருந்த சிவகாமி சத்தம் கேட்டு திரும்பினாள். ஒரு கணம் யார் என்பது போல் பார்த்தவள் மறு கணம் முகமலர்ந்தாள். "அழகாய் தெரிகிறாய் அர்ஜுன்"

"இந்த அழகு என்னோடதில்லை மேடம்." அவன் தனக்குத் தோன்றிய உண்மையை வாய் விட்டுச் சொன்னான்.

"இந்த அழகு உன்னோடது தான் அர்ஜுன். ஒரு புது சட்டையை வாங்கிப் போட்டுக்கறாய்னு வச்சுக்கோ. அது உன்னோடது தானே. இதுவும் அப்படித் தான். புது முகத்தை வாங்கியிருக்கிறாய். இனி உன்னுடையது தான்…. வா. உட்கார்"

அவளுடைய சித்தாந்தம் அவனுக்குப் புதுமையாக இருந்தது. எதுவுமே அவள் வாயில் இருந்து வரும் போது சத்தியமாகவே தோன்றுகிறது. அவள் எதிரில் உட்கார்ந்தான். அவள் சிறிது நேரம் அவன் முகத்தை ஆராய்ந்தாள். அவள் முகமலர்ச்சி அதிகரித்தது. "நான் டாக்டர் கிட்ட நேத்தும் பேசினேன். தான் செஞ்ச சர்ஜரிகளிலேயே இது அவருக்கு ரொம்ப திருப்தியாய் இருந்ததுன்னு சொன்னார்."

அவர் மேற்கொண்டு சொன்னதை சிவகாமி அவனிடம் சொல்லவில்லை. "மத்த கேஸ்ல எல்லாம் அது வழக்கமான வேலை மாதிரி இருந்தது. ஆனா இவர் கேஸ்ல அந்த முகத்தை மாத்தற வரைக்கும் எனக்கே அதைப் பார்க்க சங்கடமாயிருந்துச்சு. ஆனா நீங்க க்ரேட் மேடம்"

"எதுக்கு?"

"ஒரு வேலைக்காரனுக்கு இவ்வளவு செலவு செஞ்சுருக்கீங்க…."

"நான் என்னைக்குமே அவனை வேலைக்காரனா நினைச்சதில்லை டாக்டர்" சிவகாமி போனை வைத்து விட்டாள்.

சிவகாமிக்கு அர்ஜுனிடம் இப்போதும் கூட சந்தோஷம் இல்லாததைக் கண்டு ஒரு கணம் மனம் கனத்தது. தெய்வமே இவன் இன்னும் மனதிலிருந்த அத்தனை சுமைகளையும் ஏன் இறக்கி வைக்க மாட்டேன்கிறான்.

"அர்ஜுன். இந்த சர்ஜரி உன் வாழ்க்கைல ஒரு திருப்பு முனை. பழையதெல்லாத்தையும் நீ அந்த பழைய முகத்தோட தூங்கி எறிஞ்சிருக்கணும். உங்கம்மாவை, உன்னைக் காயப்படுத்துனவங்களை, எல்லாரோட நினைவுகளையும்…."

அவன் அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

அவள் தொடர்ந்து சொன்னாள். "சில நினைவுகள் எப்பவுமே சுமை தான். அது சில சமயம் இறக்கி வைக்க முடியாதது மாதிரி தோணும். ஆனா புதுசா நல்ல நினைவுகளை மனசில் வச்சுக்கிட்டோம்னா அந்த பழைய மோசமான நினைவுகள் தானா மறைஞ்சுடும். நான் இன்னைக்கே போய் அந்த வசந்தியோட அப்பாவைப் பார்த்துட்டு பேசப் போறேன். நான் மும்பைக்கு போறதுக்கு முன்னால் உன் கல்யாணத்தை முடிச்சுடலாம்னு இருக்கிறேன்"

அவன் இப்போது அவளைத் திகைப்போடு பார்த்தான். "எனக்குக் கல்யாணம் எதுக்கு மேடம்?"

"இது என்ன கேள்வி? நல்ல வேளை. வாழ்றது எதுக்குன்னு கேட்காம விட்டாயே"

"கல்யாணத்துக்கு அவங்க சம்மதிக்கணுமே…."

"அதை நான் பார்த்துக்கறேன். கல்யாணம் முடிஞ்சு நீ ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கணும். நேபாளத்துல நடந்தது, இந்த வீட்டுல பல வருஷங்களுக்கு முன்னால நடந்தது, எல்லாத்தையும் மறக்கணும்…."

அர்ஜுன் அவளையே பார்க்க அவள் தலையசைத்தாள். பழைய நினைவுகள் அவளையும் சிறிது அலைக்கழித்தது போல் தெரிந்தது. ஆனால் வேகமாகவே மீண்டு ஓரிரு நிமிடங்கள் கழித்து சொன்னாள். "நாம் எல்லாருமே பல நேரங்கள்ல விதியோட கைப்பாவை தான் அர்ஜுன். நாம் கருவி மாத்திரம். செய்ய வைக்கிறது விதி தான்….."

அவன் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தான்.

அடுத்ததாக அவனுக்காகக் காத்திருந்த வேலைகளைச் சொல்ல ஆரம்பித்தாள்.

சிவகாமியின் அறையிலிருந்து வெளியே போகும் அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷிற்குத் தன் தாயை நினைத்துப் பார்க்கையில் பெருமையாக இருந்தது. எப்படி இருந்த ஒருவனை அவள் இப்படி மாற்றி இருக்கிறாளே! இப்படிப்பட்டவள் ஏன் ஆர்த்தியின் அம்மா விஷயத்தில் மட்டும் ஏன் தேவையில்லாமல் சந்தேகத்தைக் கிளப்ப வேண்டும் என்று நினைக்கையில் அவனுக்குத் தாயின் மீது சிறிது கோபமும் வந்தது. என்ன தான் தம்பி மேல் பாசம் இருக்கட்டும் அதற்கென்று தம்பியின் கள்ளக்காதலையுமா கண்டு கொள்ளாமல் இருப்பது.

ஆனால் இன்னொரு மனம் அவள் அப்படி கண்டு கொள்ளாமல் இருந்திருப்பாள் என்பதையும் ஒத்துக் கொள்ள மறுத்தது. தவறு என்று தோன்றியதை யார் செய்தாலும் அவள் அதை விமரிசிக்கும் விதம் சவுக்கடியாக இருக்கும். அதில் அவன், பார்த்திபன், அவள் தம்பி யாரும் விதி விலக்கல்ல. பல முறை சந்திரசேகரை மகா கேவலமாகத் திட்டி இருக்கிறாள். அவரது சோம்பேறித்தனமும், எதையுமே சீரியஸாக நினைக்காத பொறுப்பில்லாத்தனமும் தான் பெரும்பாலும் அவள் திட்டக் கிடைக்கும் விஷயங்கள். அவர் வாயே திறக்க மாட்டார். அப்படித் திட்டுபவள் அதை எப்படிப் பொறுத்திருப்பாள்?

ஆனால் ஆர்த்தியை அம்மா பாண்டிச்சேரியில் போன வருடமே பார்த்தாள் என்று ஆர்த்தியே சொன்னதாக லிஸா சொல்கிறாள். ஆர்த்தியிடம் பொய் என்பது பெயருக்குக் கூட இல்லை என்று அவன் உள்மனம் சொன்னது.

இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள தூரம் நேர் கோடு தான் என்று அம்மா என்றுமே சொல்வாள். இந்த விஷயத்தை அவளிடம் நேரடியாகவே கேட்டு விடுவது என்று தீர்மானித்துத் தாயின் அறைக்குள் நுழைந்தான்.

"வாடா. அர்ஜுனைப் பார்த்தாயா? எப்படியிருக்கான்?" மகனைப் பார்த்தவுடன் சிவகாமி கேட்டாள்.

"எனக்கு என் கண்ணையே நம்ப முடியலை. ரியலி ஹேண்ட்ஸம்" என்றவன் தன் தாயிடம் உடனடியாக வந்த விஷயத்தைக் கேட்டு விட நினைத்தான். அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அதையே காரணமாக வைத்து "எனக்கு வேலை நிறைய இருக்கு" என்று சொல்லித் துரத்தினாலும் துரத்துவாள்.

"அம்மா நான் உன் கிட்ட முக்கியமாய் ஒரு விஷயம் கேட்கணும்னு வந்தேன்"

"கேள்"

"போன வருஷம் நீ ஆர்த்தியை பாண்டிச்சேரியில் அவங்க காலேஜ் டேயில் பார்த்தாயா?"

(தொடரும்)

About The Author

8 Comments

  1. Angel

    disappointed. i was waiting to read this story for almost 2 hrs.. i kept checking this page and I am really disappointed. very bad chapter

  2. Rave Kris

    வேதாளம் திருப்ப முருங்கை மரம் ஏறிட்டு. வேறு என்ன. கதையை தான் சொல்றன். சம்பவங்கள் ரிப்பீட்டீங். அறுவை அன்ட் இழுவை. ச்ச….. 91வது எபிசோட். கொடுமைடா சாமி

  3. Mini

    Yeah what angel says is correct, We are waiting for a week for the episode. The content is very less and that is also not good. Me too got disappointed.

  4. Madhu

    There is just 1 line… Arjun has come back and his marriage is going to be fixed. What for… this episode is one of the worst… 🙁 Whats wrong with the author and nilacharal team?? this is how you treat your Readers???

  5. ranji

    getting too bored like a mega-serial.Author has eaten a chewing gum.Does the author wants this to go for 200 more episodes?

  6. N.Ganeshan

    நிலாச்சாரலில் வரும் மற்றெல்லாப் படைப்புகளுக்கும் முன்னதாக நன்றாக உள்ளதென்றோ, இந்த அத்தியாயம் போர் என்றோ முதலில் விமரிசனம் வருவது இந்தத் தொடருக்கு என்கிற போதே வாசகர்கள் இதற்கு எந்த அளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை என்னால் கணிக்க முடிகிறது. விமரிசனம் (மோசம் என்று குறிப்பிட்டாலும் கூட) எழுதும் ஒவ்வொரு வாசகருக்கும் என் உளமார்ந்த நன்றி. இப்போது வரும் நிகழ்ச்சிகள் கதையின் முழுமைக்கு மிக முக்கியமானவை. அதை விட்டு விட்டால் அது குறைப்பிரசவமாகவே இருக்கும். இன்னும் சுமார் 12 அத்தியாயங்களில் முடிவடைய உள்ள இத்தொடரின் முடிவில் உங்களுக்கு இது கண்டிப்பாக விளங்கும். தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். கண்டிப்பாக நீங்கள் நினைப்பதை ஒவ்வொரு வாரமும் சொல்லுங்கள். நன்றி.

  7. Rave Kris

    We like the story. its just not moving fast as ur other stories. we r ur great fan. tats y we fight wit u 🙂

  8. Leela Ramnathan

    i also am an ardent reader of this story. but i feel the comments r a bit too harsh. agreed the pace is slow, but then one cannot expect to know the end before time in a suspence story, have patience, my dears………!
    RL

Comments are closed.