மனிதரில் எத்தனை நிறங்கள்! (38)

Where is there dignity unless there is honesty?
– Cicero

மல்லிகைப் பூக்களைத் தொடுத்துக் கொண்டே அமிர்தம் ஆர்த்தியிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள். "….எனக்கு சின்னதில் இருந்தே பூக்கள்னா உயிர். அவர் போற வரைக்கும் என் தலை நிறைய பூ இருக்கும். அது கடவுளுக்குப் பொறுக்கலை. அவரை சீக்கிரமே கூப்பிட்டுகிட்டான்…."

புடவைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக் கொண்ட அமிர்தத்தை அனுதாபத்தோடு ஆர்த்தி பார்த்தாள்.

"…. எனக்கு வச்சுக்க முடியாட்டியும் தொடுத்து அக்காவுக்கும், பவானிக்கும் தருவேன். இங்க வேற யாரு இருந்தா. இப்பவாவது நீயும் உங்க பாட்டியும் வந்துட்டீங்க. பூ வச்சுக்க நாலு பேராவது இருக்கீங்க…."

"அத்தை எங்கம்மா நிறைய பூ வச்சுக்குவாங்களா?"

"ஆரம்பத்துல வச்சுகிட்டிருந்தா. பிரசவமாகி உன்னை எடுத்துட்டு இங்க வந்ததுக்கப்புறம் குறைஞ்சுடுச்சு. நான் ஒவ்வொரு சம்மர்லயும் சேலத்துல இருந்து இங்க வந்து ரெண்டு மாசம் இருந்துட்டு தான் போவேன். அப்ப எல்லாம் அவளோட ஈடுபாடு குறைஞ்சுடுச்சு. ஏன்னு தெரியலை…."
ஆர்த்தி தனிமையில் அவளுடன் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தன் தாயைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவளாகக் கேட்டாள். "எங்கம்மா எந்த மாதிரி அத்தை?…."

அமிர்தம் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் பூத்தொடுத்தபடி இருந்து விட்டு பின் சொன்னாள். "உங்கம்மா ரொம்ப நேர்மையானவள். அதே மாதிரி எல்லாரும் தன்கிட்ட நடந்துக்கணும்னு நினைப்பாள்… நல்ல சுறுசுறுப்பு…. நல்லா வாதம் பண்ணுவாள்…. கோபம் வந்துடுச்சுன்னா அப்புறம் முன்ன பின்ன யோசிக்காம பேசிடுவா… ஆனா உபகாரி…. தன்னால முடிஞ்ச உபகாரம் செய்யக்கூடியவள்….ரொம்ப விஷயத்துல அக்காவும் உங்கம்மாவும் ஒரே மாதிரி. அதனாலேயே ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா இருந்தாங்க. அவங்களுக்கிடையே பெரிய வித்தியாசம் என்னன்னா அக்கா உணர்ச்சிவசப்படற ரகம் அல்ல. எப்பவுமே நிதானம் இழக்க மாட்டாள். ஆனா உங்கம்மா அதற்கு நேர் எதிர்…."

தன் தாயும் சிவகாமியும் மிக நெருக்கமாக இருந்தார்கள் என்கிற செய்தியையும் பின் அவர்களுக்கிடையே இருந்த வித்தியாசத்தை அமிர்தம் சொன்ன விதத்தையும் பற்றி யோசித்த ஆர்த்திக்கு இன்னொரு உண்மையும் உறைக்காமல் இருக்கவில்லை. ‘மிக நெருக்கமாக இருந்தவர்கள் பின் எதிரிகளாக மாறினால் அந்தப் பகையும் அதே ஆழத்தில் தான் இருக்கும்’.

அதே நேரத்தில், ஆகாஷ் சொன்ன தன் தாய் இறந்த சமயத்தில் இரண்டு மாதமாக சிவகாமி நாட்டிலேயே இல்லை என்ற தகவலும் சிவகாமி மேல் இருந்த சந்தேகத்தை மிக வலுவிழக்கச் செய்தது. மேலும் தன் தாயைப் பற்றிக் கேட்க எண்ணிய ஆர்த்தி உடனடியாகத் தன் மனதை மாற்றிக் கொண்டாள். சிவகாமிக்கு எதிரான தகவல் ஏதாவது இருந்தால் அதைக் கண்டிப்பாக அமிர்தம் சொல்வாள் என்று ஆர்த்திக்குத் தோன்றவில்லை. தன் தந்தையின் அறையில் தன் தாயின் புகைப்படம் ஒன்று கூட இல்லாததும், அவர் அவளது அறையில் இருக்கும் போது ஆனந்தியை நினைவுபடுத்தும் பொருள்களைப் பார்த்து நிலைகொள்ளாமல் தவித்ததும் நினைவுக்கு வந்த போது தன் பெற்றோர் உறவில் கூட விரிசல் இருந்திருக்கும் என்ற சந்தேகம் வந்தது. அதைப் பற்றியும் அமிர்தத்திடம் கேட்கவோ, உண்மையான பதில் பெறவோ முடியாது என்று தோன்றியது.

இதையெல்லாம் மேரியிடம் கேட்டால் தக்க பதில் கிடைக்கும் என்று ஆர்த்தி நினைத்தாள். தன்னைப் பார்த்தவுடன் டேவிட்-மேரி தம்பதிகள் நெகிழ்ந்த விதம், மேரி அவளைப் பார்த்துப் பேசிய விதம் எல்லாம் அவள் தன் தோழியின் மகளிடம் தனக்குத் தெரிந்த உண்மைகளைக் கண்டிப்பாக மறைக்காமல் சொல்வாள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

மூர்த்தி தனதறைக்கு வந்ததைப் பார்த்த பவானி தன் தாய் தான் அழைக்கின்றாள் என்று நினைத்தாள். மூர்த்தி பெரும்பாலும் அந்தச் செய்தியைச் சொல்லத்தான் அவள் அறைக்கு வருவான். அவள் புறப்பட எழுந்ததைப் பார்த்த மூர்த்தி சொன்னான். "பாட்டி கூப்பிடலை. நான் உங்க கிட்ட பேசத் தான் வந்தேன்"

எழுந்தவள் அப்படியே உட்கார்ந்தாள். "என்ன?"

"எங்கப்பா அம்மாவையும் சிவகாமி தான் கொன்னுருப்பான்னு நீங்களும் நம்பறீங்களா அத்தை?"

பவானிக்கு ஒரு கணம் மூச்சு விட முடியவில்லை. திகைப்போடு மருமகனைப் பார்த்தாள். "நீ என்ன சொல்றே?"

அவளுடைய திகைப்பு நடிப்பல்ல என்பதை மூர்த்தி நம்பினான். அப்படியானால் தன் சந்தேகத்தை பாட்டி தன் மகளிடம் கூட சொல்லவில்லை என்பது உறுதி. ஏன் என்ற கேள்வி அவன் மனதில் விசுவரூபம் எடுத்து நின்றது. மெல்ல சொன்னான். "பாட்டி அப்படி சந்தேகப்படறாங்க"

பவானி திகைப்பில் இருந்து மீளவில்லை. முகம் வெளுக்க பிரமை பிடித்தபடி மூர்த்தியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

"அப்படி அவங்க சந்தேகப்பட காரணம் என்ன இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?"

பவானி தெரியவில்லை என்று தலையசைத்தாள்.

மூர்த்தி அவளை விடுவதாக இல்லை. "இப்ப தான் அமிர்தம் ஆர்த்தி கிட்ட சொல்லிகிட்டிருந்ததைக் கேட்டேன். ஆர்த்தியோட அம்மாவும், சிவகாமியும் ரொம்பவும் நெருக்கமாய் இருந்தாங்கன்னு சொன்னா. அப்படின்னா சிவகாமி எதுக்கு ஆர்த்தியோட அம்மாவைக் கொல்லணும்?"

பவானி குரல் கிணற்றுக்குள் இருந்து வந்தது. "எனக்கென்ன தெரியும்?"

"ஆர்த்தியோட அம்மாவுக்கும் எங்கப்பா அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்?"

பவானி உடனடியாக பதில் சொல்லவில்லை. அவளுடைய அண்ணன் நினைவு வர கண்களில் நீரும் தழும்பியது. அவள் வாழ்க்கையில் அவளை நேசித்த ஒரே மனிதன் அவன் தான். கடைசியில் அவன் பிணம் கூட கண்ணில் காணக் கிடைக்கவில்லை என்பதை எண்ணி எத்தனை முறை அவள் உருகி இருக்கிறாள். இப்போது பஞ்சவர்ணம் சந்தேகப்படுகிறாள் அவனையும் அவன் மனைவியையும் சிவகாமி கொன்றிருக்கலாம் என்று. ஏன், எதனால் என்று கேட்டுக் கொண்டு அவன் மகன் அவள் எதிரில் நிற்கிறான். அவள் எதைச் சொல்வாள், எப்படிச் சொல்வாள்.

மூர்த்திக்கு அத்தை இந்த உலகில் தான் இருக்கிறாளா என்று சந்தேகம் வந்தது. அவனையும் தாண்டி ஏதோ வெற்றிடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அவளை இரண்டு நிமிடங்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு மறுபடி கேட்டான். "ஆர்த்தியோட அம்மாவுக்கும் எங்கப்பா அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டேன்"

"சம்பந்தம் …. இல்லை"

"அப்படின்னா சிவகாமிக்கும் எங்கப்பா அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் பாட்டிக்கு சிவகாமி மேல சந்தேகம் வருது"

பவானி சகல பலத்தையும் தன்னுள் ஒன்று சேர்த்து பேச்சில் வரவழைத்தாள். "அதை நீ சந்தேகப்பட்ட பாட்டி கிட்ட தான் கேக்கணும். எனக்கு எதுவும் தெரியாது"

மூர்த்தி பவானியைக் கூர்ந்து பார்த்தபடி சிறிது நேரம் நின்று விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான். அவன் மேலும் குடைந்து கேட்காதது அவளுக்கு பெருத்த ஆசுவாசத்தைக் கொடுத்தாலும் பஞ்சவர்ணம் பேரனிடம் தெரிவித்த சந்தேகம் அவள் மனதில் பெரிய புயலைக் கிளப்பியது. பஞ்சவர்ணம் காரணமில்லாமல் சந்தேகப்படும் நபர் அல்ல. அதுவும் அதை மூர்த்தியிடம் சொல்கிறாள் என்றால் ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். என்ன அது?

யோசிக்க யோசிக்க பவானிக்கு மண்டை வெடித்து விடும் போல இருந்தது.

(தொடரும்)

About The Author