மனிதரில் எத்தனை நிறங்கள்! (89)

They say dreams are the windows of the soul–take a peek and you can see the inner workings, the nuts and bolts.
– Henry Bromel, Northern Exposure

"இது என்னடா?" பஞ்சவர்ணம் அந்த ஜெராக்ஸ் நகல்களைக் காட்டிக் கேட்டாள்.

"இது அந்த டாக்டர் கையால் எழுதின நோட்ஸ்" மூர்த்தி சொன்னான்.

"என்ன எழுதியிருக்கான். படிச்சு சொல்லு"

ப்ரசன்னாவின் கையெழுத்து மிக மோசமாய் இருந்தது. மூர்த்தி கஷ்டப்பட்டு படித்து ஆங்கிலத்தில் ப்ரசன்னா எழுதியிருந்ததைத் தமிழில் மொழி பெயர்த்தான். "அந்த போன் சமாச்சாரம் பல நாட்கள் நடந்திருக்கிறது… அந்த சிரிக்கும் பெண் அந்த முக்கிய சம்பவம் நடந்த அன்று வீட்டுக்குள்ளே வந்திருக்கிறாள்…. அந்த மழை நாள் பற்றிய பேச்சு ஆர்த்தியை நிறையவே பாதிக்கிறது. அவள் கண்டிருந்த காட்சி அவளை நிறையவே பயமுறுத்தி இருக்கிறது ஊர்ஜிதமாகிறது. அடுத்த முறை அவள் மனதை நிறையவே தைரியப்படுத்தினால் ஒழிய அந்த நாள் பற்றிய ஹிப்னாடிசம் வெற்றி பெறும் என்று தோன்றவில்லை…."

******

ஆர்த்தியிடம் பேசி விட்டு வெளியே வந்த போது லிஸா பார்த்திபன் காரை விட்டு இறங்குவதைப் பார்த்தாள். "என்ன பார்த்தி, உன்னைப் பார்க்கறதே குதிரைக் கொம்பாயிருக்கு"

பார்த்தி தன் தோழியைப் பார்த்து புன்னகைத்தான். "வேலை ஜாஸ்தி லிஸா. அதுவும் பெரியம்மா கிட்ட வேலை பார்க்கறது அவ்வளவு சுலபமில்லை"

லிஸா சிரித்தாள். "ஆண்ட்டி பர்ஃபெக்ஷன் எதிர்பார்க்கறவங்க. அவங்களைத் திருப்திப்படுத்தறது கொஞ்சம் கஷ்டம் தான்"

"கொஞ்சமா…" என்ற பார்த்திபன் சுற்றியும் முற்றியும் பார்த்து யாருமில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு சொன்னான். "எனக்கு பேசாம வேற எங்கயாவது வேலைக்குப் போயிடலாமான்னு தோணுது. அம்மா கிட்ட சொன்னா ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. உன் கிட்ட சொல்றதுக்கென்ன லிஸா. பெரியம்மா ஆகாஷையும் என்னையும் ஒரே மாதிரி நடத்தறதில்லை. எப்ப பாரு என் மேல் குற்றம் கண்டு புடிச்சுட்டே இருக்கறாங்க…."

லிஸா ஒன்றும் சொல்லவில்லை. பார்த்திபன் மிக நல்லவன். கலகலப்பானவன். இருந்தாலும் தன்னை யாரும் சரியாக மதிப்பதில்லை, அங்கீகரிப்பதில்லை என்கிற புலம்பல் அவனிடம் சிறு வயதிலிருந்தே உண்டு. சிவகாமியின் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம் என்பதால் இப்போதைய புலம்பல் அவளுக்கு ஆச்சரியம் தரவில்லை.

பார்த்திபன் மேற்கொண்டு புலம்பாமல் அவளிடம் கேட்டான். "ஆர்த்தி கிட்ட பேசிட்டு வர்றியா?"

"ஆமா"

"அவள் என்னைப் பத்தி என்ன சொல்றா?" ஆர்வமாக அவன் கேட்டான்.

லிஸாவுக்கு அவனைப் படிக்க முடிந்தது. சிறு வயதில் இருந்தே அவள் நண்பர்களாக இருந்த ஆகாஷையும், இவனையும் அவளால் என்றுமே படிக்க முடியும்…..

"உன்னை அவளுக்கு நிறைய பிடிச்சிருக்கு. உன் கலகலப்பான பேச்சு அவளுக்கு நிறையவே பிடிச்சிருக்கு. ஆனா உன்னை அதிகம் பார்க்க முடியறதில்லைன்னு சொன்னா"

"என்னை அவளுக்கு நிறைய பிடிச்சுடுமோன்னு பயந்துட்டு தான் பெரியம்மா என்னை வீட்டுக்கு சீக்கிரமே வர விடறதில்லைன்னு தோணுது லிஸா…." அவன் குரலில் கோபம் இருந்தது.

‘அப்படியெல்லாம் இருக்காது’ என்று சொல்ல நினைத்த லிஸா அதைச் சொல்லி அவனை வெறுப்பேற்ற வேண்டாம் என அமைதியாக இருந்தாள்.

"ஆகாஷுக்கும் ஆர்த்திக்கும் இடையே ஏதோ பிரச்சினைன்னு நினைக்கிறேன். அவன் என்னவோ அவள் கிட்ட சரியா பேசறதில்லை. அவள் அதை எப்படி எடுத்துக்கிறான்னு தெரியலை" என்று சொல்லி பார்த்திபன் லிஸா என்ன சொல்கிறாள் என்று ஆவலாகப் பார்த்தான்.

"ஆனா அவங்க ரெண்டு பேரும் ஒர்த்தரை ஒருத்தர் காதலிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்"

அவள் கருத்தை அவன் ரசிக்கவில்லை போல தெரிந்தது. "அவன் அவ்வளவு அலட்சியம் செஞ்ச பிறகும் அவள் அவனைக் காதலிக்கிறாளா லிஸா"

"சில சமயம் மனசுல ஒருத்தர் நுழைஞ்சவுடனே மனசு தானா பூட்டிக்கும். உள்ள இருக்கிறவங்களை வெளியவும் விடாது. வேற யாரையும் உள்ளயும் விடாது." சொன்ன போது லிஸாவின் குரல் கரகரத்தது.

அவள் சொன்ன விதம் அழகாயிருந்தது. ஆனால் ஆர்த்தி விஷயத்தில் அவள் சொன்னது உண்மையாக இருக்கும் என்று அவன் நம்பவில்லை. ஏனென்றால் அவனுக்கு நம்பப் பிடிக்கவில்லை.

அதைப் புரிந்து கொண்ட லிஸா பெருமூச்சு விட்டாள். காதலித்து காயப்பட வேண்டும் என்று தலையெழுத்து இருந்தால் யார் தான் என்ன செய்ய முடியும்? மறுநாள் தான் ஈரோடு செல்வதாகச் சொல்லி அவனிடம் விடைபெற்றாள்.

*****

மறுநாள் மூர்த்தி பரபரப்புடன் பாட்டியின் அறைக்குள் நுழைந்தான். "பாட்டி இன்னைக்கு ரெண்டு பெரிய தலைப்புச் செய்திகள்…."

"என்னடா?"

"முதல் செய்தி, உங்க மகள் சென்னைக்குப் போறாங்க?"

"எதுக்கு?"

"யாரோ அவங்க தோழியோட கணவர் உடம்பு சரியில்லாம சீரியஸா இருக்காராம். அவரைப் பார்க்க உங்க மகள் போறாங்க"

பஞ்சவர்ணம் அதை சுத்தமாக நம்பவில்லை. "என்னடா உளர்றாய்?"

"உளர்றது உங்க மகள் தான். அவங்க தன் வீட்டுக்காரர் கிட்ட அதைச் சொல்லி தான் சென்னை போக பர்மிஷன் வாங்கினாங்க. நான் இந்தக் காதால் கேட்டேன்"

பஞ்சவர்ணம் ஆழ்ந்து யோசித்தபடி சொன்னாள். "அவள் ரூம்ல பேயறைஞ்ச மாதிரி இருந்தாள், பிறகு அழுதாள்னு எல்லாம் சொன்னாயே. அதோட தொடர்ச்சி தான் இதுன்னு தோணுதுடா மூர்த்தி….."

சொல்லி விட்டு எழுந்து குறுக்கும் நெடுக்குமாக தன் அறையில் நடக்க ஆரம்பித்தாள். அவள் பாதையை மறிக்காமல் ஒதுக்குப்புறமாக நின்றான் மூர்த்தி.

"எப்படா போறா?"

"நாளைக்கு"

"சரி ஒரு வேலை செய். அந்த அசோக்குக்கு இப்பவே போன் போட்டுப் பேசு. பவானி மெட்ராஸ்ல எங்கே போறா, யாரைப் பார்க்கிறாள்னு பின் தொடர்ந்து போய் பார்க்கச் சொல்லு. அதற்காக என்ன கேட்கிறானோ அதைத் தர சம்மதிச்சுடு"

"பாட்டி இது அவ்வளவு முக்கியம்னு நினைக்கிறீங்களா?"

"ஆர்த்தியோட ஹிப்னாடிசம் மாதிரி இதுவும் நாம தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயம்னு என் மனசு சொல்லுதுடா. அவள் அதை என் கிட்ட இது வரைக்கும் சொல்லலைங்கிறதே அவள் எதையோ மறைக்க நினைக்கிறாங்கிறதுக்கு ஆதாரம்டா"

"சரி சொல்றேன் பாட்டி"

ஆனால் அப்போது பவானி தன் தாயிடம் சென்னை போகும் விஷயத்தைச் சொல்ல வந்து கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. தாய் கேட்கக்கூடிய பல கேள்விகளுக்கு பதில்களைத் தயாரித்துக் கொண்டு வந்தவள் தாயின் அறையை நெருங்கிய போது தான் அடுத்த கேள்வியை பஞ்சவர்ணம் பேரனிடம் கேட்டாள். "அடுத்தது என்னடா?"

"சிவகாமி நாலு நாள் கழிச்சு மும்பை போறா. ஒரு வாரம் கழிச்சு தான் வருவாளாம்"

பவானி உள்ளே நுழையாமல் மறைந்து நின்றாள்.

பஞ்சவர்ணம் சிறிது நேர மௌனத்திற்குப் பின் பேரனிடம் சொன்னாள். "அந்த சண்டாளி இல்லாத நேரம் நமக்கு விலை மதிக்க முடியாததுடா மூர்த்தி. அதை நாம் நல்லா பயன்படுத்திக்கணும். எனக்கென்னவோ நாம காத்திருந்ததுக்கெல்லாம் முடிவு நெருங்கிட்ட மாதிரி தோணுது. ஆர்த்தியோட ஆழ்மனசுல இருந்ததைக் கண்டுபிடிச்சதுக்கப்புறம் நாம் இந்த வீட்டுல இருக்க முடியறது கஷ்டம். நான் சந்தேகப்படற மாதிரி அந்த அகங்காரி ஒரு டூப்ளிகேட் ஆர்த்தியை எங்கேயாவது ரெடி செஞ்சு வச்சிருந்தா அவளை இந்த ஹிப்னாடிச வேலைகள் முடிஞ்சவுடனே தான் இங்கே கொண்டு வருவான்னு தோணுது. அதனால அது எல்லாம் நடக்கறதுக்கு முன்னால நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கு.. இப்பருந்தே நாம கவனமாவும், வேகமாயும் செயல்படணும்டா"

“சரி பாட்டி”

பவானிக்கு டூப்ளிகேட் ஆர்த்தியை சிவகாமி தயார் செய்து வைத்திருப்பதாக பஞ்சவர்ணம் சந்தேகப்படுவதைக் கேட்டு பகீர் என்றது. பஞ்சவர்ணம் முட்டாள் அல்ல. அதனால் அவள் காரணமில்லாமல் சந்தேகப்பட மாட்டாள். அதே நேரத்தில் இந்தக் கற்பனையே முழுக்க சினிமாத்தனமாகவும் அவளுக்குத் தோன்றியது.

"ஆர்த்தியாவே முன் வந்து உன்னைக் கட்டிக்க வாய்ப்பு இருக்கற மாதிரி எனக்குத் தோணலை. ஆனா சொத்து நம் கைக்கு வரணும்னா ஆர்த்தி உன்னைக் கல்யாணம் செய்துக்கணும். அதற்கு அவள் மனசு மாறணும். அதுக்கு ஒரு வழி இருக்குதுடா மூர்த்தி…."

"என்ன பாட்டி" மூர்த்தி ஆர்வமாய் கேட்டான்.

பஞ்சவர்ணம் நேரடியாகப் பதில் சொல்லவில்லை. "எனக்குத் தெரிஞ்ச ஒரு கோடீசுவரப் பொண்ணு ஒருத்தனை உயிருக்கு உயிரா காதலிச்சுகிட்டிருந்தா. அவங்க வீட்டுலயும் அதுக்கு எதிர்ப்பு இருக்கலை. ஆனா அவளைக் கட்டிக்க அவளோட சொந்தக்காரப் பையன் ஒருத்தன் முயற்சி செய்துகிட்டிருந்தான். அவனுக்கு அந்தப் பொண்ணோட குடும்பத்தோட சப்போர்ட் கிடைக்கலை. அவன் புத்திசாலி. நேர் வழியா கிடைக்காததைக் குறுக்கு வழியா அடையத் திட்டம் போட்டான்."

"ஒரு சந்தர்ப்பத்துல அவனும் அந்தப் பொண்ணும் தனியா ஒரு இடத்துக்குப் போறப்ப ரெண்டு மூணு தடியன்கள் அவங்களை வழி மறிச்சுட்டாங்க. அந்தப் பொண்ணுக்கு மயக்க மருந்து தந்து மயக்கமடைய வச்சுட்டாங்க. அந்த தடியன்களுக்கு பேசுன காசைக் குடுத்து அனுப்பிச்சுட்டு அவன் அந்தப் பொண்ணைக் கெடுத்துட்டான். அப்புறமா தானே தன்னைக் காயப்படுத்திட்டு ரத்தம் வரவழைச்சுகிட்டான். அவ மயக்கம் தெளிஞ்சு எழுந்தவுடனே அவளை அந்த தடியன்கள் கெடுத்துட்டதாகவும் அதைத் தடுக்க ஆன வரைக்கும் தான் போராடுனதாகவும் அழுதுகிட்டே சொன்னான். அந்த விஷயம் தெரிஞ்சு அந்தக் காதலன் பிரிஞ்சுட்டான். இவன் அவளுக்கு வாழ்வு தரத் தயார்னு சொல்லி கடைசியில் அவளைக் கல்யாணம் செஞ்சுகிட்டான். யாராலோ கெடுக்கப்பட்ட தன்னைக் கல்யாணம் செய்துகிட்டு வாழ்வு கொடுத்த தியாகின்னு அந்தப் பொண்ணு நினைச்சுகிட்டு அவன் கிழிச்ச கோட்டைத் தாண்டாத பொண்டாட்டியா கடைசி வரைக்கும் இருந்தா"

கதையைச் சொல்லி விட்டு பஞ்சவர்ணம் அபூர்வமாகப் பேரனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த பவானி தன் தலையில் இடி விழுந்ததைப் போல் உணர்ந்தாள்.

(தொடரும்)

About The Author

3 Comments

  1. Bushra

    மிகவும் சுவாரஸ்யமான கதை. எப்ப திங்கக்கிழமை வரும் என்பதை எதிர்பார்த்துக்கிட்டே இருப்பேன்.
    நன்றி கணேசன் ஐயா.. இப்படியான ஒரு தொடரை பிரசுரம் செய்ததற்கு……….

  2. uma

    கதை விருவிருப்பா இருக்கு ஆனா இன்னும் முக்கியமான கதைக்கே வரலியே . சச்பென்ச் தாங்க முடியல.

    but its very interesting and thrilling story.,

Comments are closed.