மனிதரில் எத்தனை நிறங்கள்! (88)

வாசகர்களுக்கு ஆசிரியர் மடல்…

வாசகர்களின் ஆலோசனைக்கு ஏற்ப இந்த வாரம் முதல் அத்தியாயத்தின் நீளமும், சம்பவங்கள் நகரும் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முடிவை நோக்கி வேகமாக நடரும் இந்தத் தொடரின் விறுவிறுப்பு இனி குறையாது. தங்கள் பொறுமைக்கு நன்றி.

– என்.கணேசன்

****

False face must hide what the false heart doth know.
– William Shakespeare

ஆர்த்தி சிறிது தயங்கி விட்டு ஆரம்பத்தில் இருந்து லிஸாவிடம் சொன்னாள். சிறு வயதில் இருந்து தனக்கு வந்த கனவுகள், தந்தை உயிருடன் இருக்கிறார் என்றே அறியாமல் வளர்ந்த விதம், கல்லூரி ஆண்டுவிழாவில் சிவகாமி வந்தது, சிவகாமியின் கம்பீரத்தால் தான் கவரப்பட்டது, அன்று தன்னையே கூர்ந்து பார்த்து அமர்ந்திருந்தும் தன்னைத் தெரிந்தவளாக சிவகாமி காட்டிக் கொள்ளாதது, பின் பாட்டி மூலம் தெரிந்த உண்மைகள், தாத்தாவின் சந்தேகம், அவருடைய மாரடைப்பு, ஆகாஷ் அங்கு வந்து உதவியது, அவள் மனதில் அவன் இடம் பிடித்த விதம், இங்கு வந்த பின் பஞ்சவர்ணம் அழைத்து சொன்ன சந்தேகங்கள், மூர்த்தி ஆகாஷிடம் தாங்க முடியாமல் சொன்னது, ஆகாஷ் தன்னை வந்து "என் தாயைச் சந்தேகிக்கிறாயா?" என்று கேட்டது, கோபப்பட்டுப் பிரிந்தது என எல்லாவற்றையும் ஒளிக்காமல் சொன்னாள். தாயின் காணாமல் போன இரண்டு வருட டைரிகள், கிடைத்ததில் தாயின் டைரியில் காணாமல் போன பக்கங்கள், வக்கீல் தேசிகாச்சாரி வந்து தன்னிடம் சொல்லிய விஷயங்கள் பற்றியும் சொன்னாள். அவளிடம் தன் மனதில் இருந்ததை எல்லாம் இறக்கி வைத்த பின் அவள் மனம் லேசாகியது.

லிஸா ஒரு சுவாரசியமான கதையைக் கேட்பது போல் எல்லாவற்றையும் கேட்டாள். ஆர்த்தி சொல்லி முடித்த பின்னும் சில நிமிடங்கள் அவள் ஒன்றும் பேசவில்லை. பின் தனக்குத் தோன்றியதைச் சொன்னாள்.

"ஆர்த்தி, சிவகாமி ஆன்ட்டி உன்னை காலேஜ் டேயில் பார்த்துட்டு ஏன் அப்பவே உன்னை கூட்டிகிட்டு வரலைங்கறது எனக்குப் புரியலை. ஒரு வேளை உன்னை ஒதுக்கறது தான் அவங்களோட எண்ணம்னா, நீ போன் செய்தப்ப உன்னை யாருன்னே தெரியாதுன்னோ, நீ அவங்க மருமகள்னு நம்பலைன்னோ கூட சொல்லி இருக்கலாம். ஆனா உடனடியா ஆகாஷை அங்கே அனுப்பினது, உன்னையும் உங்க பாட்டி தாத்தாவையும் இங்கே வரவழைச்சது எல்லாம் பார்த்தா அவங்க எண்ணம் உன்னை ஒதுக்கணும்கற மாதிரி தெரியலை…."

"அதே தான் என்னையும் குழப்புது லிஸா"

"ஆர்த்தி அவங்க மனசுல என்ன ஓடுதுன்னு யாராலயும் புரிஞ்சுக்க முடியாது. அவங்க எப்பவுமே ஒரு புதிர் தான். ஆனாலும் அவங்க ஒரு கொலை செய்வாங்கன்னு எனக்குத் தோணல ஆர்த்தி. அவங்க உங்கம்மா பிணத்தை உங்க தாத்தா பாட்டிக்குக் காண்பிக்காம எரிச்சுட்டாங்கன்னா நிஜமாவே அந்தப் பிணம் அழுகினது தான் காரணமாயிருக்கலாம். இல்லைன்னா…ஒருவேளை…." என்று யோசித்தவள் பின் தனக்குத் தோன்றியதைச் சொல்லாமல் தயக்கத்துடன் ஆர்த்தியைப் பார்த்தாள்.

"சொல்லு லிஸா"

"ஒருவேளை அவங்களுக்கு ரொம்ப வேண்டியவங்க யாராவது உங்கம்மாவைக் கொன்னுருந்தா கொன்னவங்களைக் காட்டிக் கொடுக்க அவங்க விரும்பாம இருக்கலாம். அவங்க எப்பவுமே தன் குடும்பத்தவங்க, தன்னை நம்பி இருக்கிறவங்களக் காப்பாத்த என்ன வேணும்னா செய்யக் கூடிய ரகம் தான்…. ஆனது ஆயிடுச்சு. காட்டிக் கொடுத்து தண்டனை வாங்கிக் கொடுக்கறதால போனவங்க உயிர் திரும்ப வருமான்னு கூட நினைச்சிருக்கலாம்"

ஆர்த்தி அவளிடம் அவங்களுக்கு ரொம்ப வேண்டியவங்கன்னா யாருன்னு கேட்க நினைத்தாலும் கேட்கவில்லை. அப்பாவைச் சொல்லி விடுவாளோ என்ற சந்தேகம் வர அமைதியாக இருந்தாள்.

லிஸாவும் அவள் அப்படிக் கேட்டு விடுவாளோ என்று பயந்தது போல அவசரமாகப் பேச்சை மாற்றினாள். "ஆர்த்தி அந்த சூனியக்கிழவி சொன்னதை எல்லாம் நம்பாதே. அவள் நல்லவள் இல்லை. சிவகாமி ஆன்ட்டி இருக்கிறதால் தான் அவள் அடங்கிக் கிடக்கிறா…. அந்த மூர்த்தியும் யதார்த்தமாய் தான் ஆகாஷ் கிட்ட சொன்னான்னு நினைக்காதே. அந்தக் கிழவி கையில வளர்ந்தவன் அவன். அவனுக்கும் உடம்பெல்லாம் விஷம்….."

ஆர்த்திக்கு ஏனோ மூர்த்தியைப் பற்றி அவள் சொன்னதை மட்டும் நம்ப முடியவில்லை. அவன் அனாதை, அவர்களுடன் அந்தக் காம்ப்ளக்ஸில் சேர்ந்து பழகாததால் அப்படித் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தாள். தன்னைப் போலவே அவனும் தாய் தந்தை பாசம் கிடைக்காமல் வளர்ந்தவன் என்கிற உண்மை அவன் மேல் அவளுக்கு ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்தி இருந்தது.

"சரி லிஸா. அந்தக் காணாமல் போன டைரிகள் பத்தி என்ன நினைக்கிறாய்?"

லிஸா சிறிது யோசித்து விட்டு சொன்னாள். "அந்த டைரிகள் உண்மையாகவே இருந்து காணாமல் போயிருந்தா அது சிவகாமி ஆன்ட்டியோட வேலையாய் தான் இருக்கணும். அந்த பீரோ சாவி அவங்க கிட்ட தான் இருந்ததுங்கறதால் வேற யாரும் அதைச் செஞ்சிருக்க முடியாது…ஆனா அவங்க ஏன் அப்படி செஞ்சிருக்கணும், அந்த டைரிகள்ல என்ன இருந்ததுன்னு தெரியலையே ஆர்த்தி"

*****

அந்த நள்ளிரவில் டாக்டர் ப்ரசன்னாவின் க்ளினிக்கினுள் பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே செல்வது அசோக் என்றழைக்கப்பட்ட அந்த மனிதனுக்குப் பெரிய கஷ்டமாயிருக்கவில்லை. விலை உயர்ந்த பொருள்களும், பணமும் பாதுகாக்கப்படுவது போல் வேறு எதுவும் பாதுகாக்கப்படுவதில்லை என்பதால் இரண்டு சாதாரண பூட்டுகளைத் திறந்து கொண்டு சுலபாக உள்ளே நுழைந்தான். கவனமாக கதவைச் சாத்தியவன் அமைதியாகக் கையில் இருந்த டார்ச் விளக்கைப் போட்டு உள்ளே உள்ளவைகளை ஆராய்ந்தான். ஒவ்வொன்றும் எங்கே எப்படி இருந்ததோ அப்படியே விட்டு விட்டுப் போனால் ஒருவன் வந்து போன சுவடே தெரியாது. அசோக் எப்போதும் எங்கும் வந்து போன சுவட்டை விட்டு விட்டுப் போவதில்லை.

பிறகு தன் வேலையைத் தொடங்கினான்.

அவன் வெளியே வந்த போது ஆர்த்தியின் ஹிப்னாடிச செஷனைக் காபி செய்த சிடி அவனிடமிருந்தது. அந்தக் கேஸ் குறித்து ப்ரசன்னா தன் கைப்பட எழுதியிருந்த நோட்ஸை விலையுயர்ந்த நுண்ணிய கேமிராவில் போட்டோவும் எடுத்திருந்தான். அவசரமில்லாமல் வெளியே வந்து அந்தப் பூட்டுகளை போலி சாவிகள் மூலம் பூட்டி விட்டு அமைதியாக அங்கிருந்து நடந்து சென்றான். நடக்கையில் சுற்றி, முற்றிப் பார்த்தான். தூரத்தில் படுத்திருந்த ஒரு தெரு நாயைத் தவிர யாருமே இருக்கவில்லை.

*****

மூர்த்தி வீட்டுக்கு வந்த போது பஞ்சவர்ணம் பொறுமையை இழந்து விட்டிருந்தாள். சிறிது காலமாகவே அவளுக்குக் காத்திருப்பது பாகற்காயாகக் கசக்கிறது. பிடித்து வைத்திருந்த மணல் கையிடுக்கில் கீழே விழுவது போல காலம் சிறிது சிறிதாக கழிந்து வருவதை நினைக்கையில் லேசாக ஒரு பயமும் அவளுக்கு அடிக்கடி வருகிறது. "ஏண்டா லேட்… அவன் கொடுத்தானா?"

"கொடுத்தான். பணத்தை வாங்கிகிட்டு ஒரு வார்த்தை அதிகம் பேசலை. அடுத்தது செவ்வாய்க் கிழமை எந்த இடத்துக்கு வரணும்னு போன் செய்யறேன்னான்"

"அவன் பேசலைன்னு நீ ஏண்டா வருத்தப்படறாய். அவன் கிட்ட நீ என்ன சம்பந்தம் பேசவா போனாய். சரி என்ன கொடுத்தான்"

"ஒரு சிடி. சில ஜெராக்ஸ் பேப்பர்ஸ்…..பாட்டி எனக்கென்னவோ அவன் இதில் எல்லாம் ஒவ்வொரு காப்பி வச்சிருப்பான்னு தோணுது"

"வச்சிட்டுப் போறான், நமக்கென்ன? நீ முதல்ல சிடி ப்ளேயரை எடுத்துட்டு வா."

சிறிது நேரத்தில் பாட்டியும் பேரனும் அறைக்கதவை சாத்திக் கொண்டு அந்த ஹிப்னாடிஸ செஷனைக் கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய ஆர்வக் கோளாறில் வழக்கமான ஜாக்கிரதை உணர்வு காணாமல் போய் இருந்தது. இல்லையென்றால் பவானி கதவருகே நின்று கேட்பதை மூர்த்தி கண்டிப்பாக மோப்பம் பிடித்திருப்பான். தாயின் படபடப்பும், மூர்த்தி ஏதோ கொண்டு வந்து தாயிடம் பேசியதையும், பின் சிடி ப்ளேயரை எடுத்துக் கொண்டு அவசரமாகப் போவதையும் பார்த்த பவானிக்கு இங்கு என்னவோ நடக்கிறது என்று உள்ளே ஒரு எச்சரிக்கை மணி அடித்தது. அதனால் தான் அவர்கள் கதவை சாத்திய பின் அங்கு வந்து நின்றாள்.

ப்ரசன்னாவின் பேச்சுக்குப் பின் ஆர்த்தி குரல் மாறிய விதம் அவர்கள் மூவரையும் திகைக்க வைத்தது. "அம்மா நல்லா பாடுவாங்க. "நீல வண்ணக் கண்ணா வாடா, நீ ஒரு முத்தம் தாடா….." என்று மழலைக்குரலில் உற்சாகமாக அவள் பாடிய போது மூர்த்தி வாயைப் பிளந்தான். அது பற்றி பாட்டியிடம் தன் கருத்தைச் சொல்ல அவன் முனைந்த போது பஞ்சவர்ணம் பார்வையால் அனலைக் கக்கி அவனை அப்படியே ஊமையாக்கினாள்.

"அம்மா பாடிட்டே கன்னம் காமிப்பாங்க. நான் கிஸ்ச் குடுப்பேன்…."

அந்தப் பேச்சு உண்மையில் ஒரு மழலையின் பேச்சாய் இருந்தது. வார்த்தைகளை விட அதிகமாக தொனி முழுவதுமாக மழலையினுடையதாக இருந்தது. பின் ஆர்த்தி அந்தச் சிரிப்புச் சத்தம் பற்றிச் சொல்ல உள்ளே பஞ்சவர்ணமும், வெளியே பவானியும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார்கள். மூர்த்திக்கு அந்தப் புதிய தகவல் அதிசயமாக இருக்க பாட்டியைக் கேள்விக்குறியுடன் பார்த்தான். பஞ்சவர்ணம் பேரனின் பார்வையைத் தவிர்த்தாள்.

ப்ரசன்னாவின் கேள்வி ஒலித்த போது அங்கு ஒருவித டென்ஷன் நிலவியது.

"அந்த சிரிப்பை அடிக்கடி போன்ல நீ கேட்டு இருக்கிறாய்… அப்படித்தானே"

"ஆமா"

"அப்புறம்…?"

"போன்ல மட்டும் இல்ல…."

"அந்தச் சிரிப்பை நேர்லயும் கேட்டிருக்கியா?"

"ஆமா".

பவானி தலைசுற்றி விழாமல் இருக்க சுவரில் சத்தமில்லாமல் சாய்ந்தாள்.

பார்க்கில் தான் கண்டதை ஆர்த்தி விவரித்த பின் ப்ரசன்னா கேட்ட கேள்வியில் பவானியின் இதயத்துடிப்பு ஒருகணம் நின்று போனது.

"அந்த பேட் கர்ள நீ மறுபடி எப்பவாவது பாத்தியா?"

ஆர்த்தியிடமிருந்து பதில் உடனே வராததும் பின் "ம்…." என்றதும் "எங்கே" என்று ப்ரசன்னா கேட்டதற்கு அவள் பலமாக மூச்சு விட ஆரம்பித்ததும் பஞ்சவர்ணமே நாற்காலி நுனிக்கு வந்தாள். கடைசியில் ப்ரசன்னாவின் குரலே ஒலிக்க ஆரம்பித்து கடைசியில் ஒலிபரப்பு நிற்க இரண்டு நிமிடங்கள் ஒருவரும் வாய் திறக்கவில்லை. மூர்த்தி தான் கடைசியில் பேசினான்.

"ஆர்த்தி சொல்றதைக் கேட்டா அந்த சிரிப்பே வினோதமா இருக்கும் போலத் தெரியறது. அப்படி சிரிக்கறது எதனால பாட்டி"

பஞ்சவர்ணம் தற்காலிகமாய் செவிடானாள். பவானியின் இதயத்துடிப்பு சம்மட்டி அடிகளாய் சத்தம் போட அவள் தளர்ச்சியுடன் அந்த இடத்தைக் காலி செய்தாள்.

(தொடரும்)

About The Author

4 Comments

  1. Sivagami

    Thanks for considering the readers request. Can u increase the chapter content a bit more?

  2. vasnthi

    Tகன்க்ச் Gஅனெசன் சிர் , இ அம் இன்டெர்ச்டிங் இன் ச்டொர்ய்

  3. suja

    very nice episode. I am a big fan of your prev thodar -Nee Naan.. Thamirabarani” as well. Keep up your viru virupaana writing style”

Comments are closed.