மனிதரில் எத்தனை நிறங்கள்! (35)

It was a dream of perfect bliss
Too beautiful to last.
-T.S.Baylay

சந்திரசேகர் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சலித்து விட்டார். மகள் முகம் வாடி இருப்பதற்கான காரணம் தெரியாவிட்டால் தலை வெடித்து விடும் போல இருந்தது. எத்தனை சொத்து இருந்து என்ன பயன் என்று தோன்றியது. ஒரே மகளை வளர்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. பல வருடங்கள் கழித்து அவள் திரும்பவும் கிடைத்த பின்னும் அவளை சந்தோஷமாக வைத்திருக்கும் பாக்கியமும் இல்லை என்று எண்ணுகையில் ஆத்திரமாக வந்தது. ஜன்னல் வழியே தோட்டத்தைப் பார்த்தார். புல்லாங்குழல் இசையை ரசித்தபடி அமைதியாக அமர்ந்திருக்கும் தமக்கையையும், அத்தானையும் பார்க்க ஒரு கணம் பொறாமையாக இருந்தது. சற்று நேரம் முன்பு ஆகாஷும் அவர்களுடன் அமர்ந்திருந்தான். பெரியக்கா வாழ்க்கை என்றுமே நிறைவாகவே இருந்திருக்கிறது. இந்த உலகத்தில் தனக்கு வேண்டியதை எல்லாம் மிக சுவாதீனமாக எடுத்துக் கொள்ளும் அபூர்வ சக்தி அவளிடம் இருக்கிறதோ என்று அவர் எண்ணியதுண்டு…..

ஒரு காலத்தில் அக்காவைப் போலவே ஒரு மகள் பிறக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதுண்டு. அவளைப் போல் தைரியமும், அழகும், திறமையும், அதிர்ஷ்டமும் கொண்ட ஒரு மகள்…. ஒருவேளை இங்கேயே ஆர்த்தியை வளர்க்க முடிந்திருந்தால் அக்கா அவளை அப்படியே ஆக்கி இருப்பாள் என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை. விதி விளையாடி எல்லாவற்றையும் மாற்றி விட்டது…..

மகளிடம் பேசி அவள் மனதில் என்ன உள்ளது என்று தெரிந்து கொள்ள நினைத்தார். ஆனால் அவளுடைய அறைக்குச் செல்ல அவருக்கு மனம் வரவில்லை. அந்த அறை நிறைய வேண்டாத நினைவுகளை ஏற்படுத்துகிறது. அவளின்னும் தன்னுடைய இந்த அறைக்கு வரவில்லை என்பதும் நினைவுக்கு வந்தவுடன் "பவானி" என்றழைத்தார்.

"என்னங்க"

"ஆர்த்தி தூங்கியிருக்கலைன்னா அவளைக் கூட்டிகிட்டு வா. எனக்கு அவள் கிட்ட கொஞ்சம் பேசணும்"

பவானிக்கும் அந்த அறைக்குப் போவதற்கு விருப்பமில்லை. ஆனால் சந்திரசேகர் இப்போது தன் மகள் விஷயத்தில் பெரிய அக்கறை காட்டுகிறாரே தவிர, மற்றபடி தன் பெரிய தமக்கை ஒருத்தியைத் தவிர யாருடைய விருப்பு வெறுப்பைப் பற்றியும் கவலைப்படுபவரல்ல. எல்லோரும் தான் சொன்னதைச் செய்ய வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்ப்பார். பவானி தயக்கத்துடன் கிளம்பினாள்.

ஆர்த்தியின் அறையில் அவளுடன் பேசிக் கொண்டிருந்த மூர்த்தி தன் பேச்சை நிறுத்தி காதுகளைக் கூர்மையாக்கினான். "ஆர்த்தி உன் சித்தி வர்றாங்கன்னு நினைக்கிறேன்".

அவன் சொன்னது போல பவானி தன் அறைக்குள் நுழைந்த போது ஆர்த்திக்கு வியப்பு தாங்கவில்லை. "நீங்க எப்படி இவ்வளவு கரெக்டா கண்டுபிடிக்கிறீங்க?". அவன் பதில் ஒன்றும் சொல்லாமல் புன்னகை செய்தான். சிறு வயதில் இருந்தே அவன் மற்றவர்களது காலடி ஓசைகளை அறிந்து வைத்திருந்தான். காது கூர்மையும் இயல்பாகவே அவனுக்கு அமைந்திருந்ததால் தூரத்தில் அவனுக்குத் தெரிந்தவர்கள் வரும் போதே அவன் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவான்.

பவானி மூர்த்தியை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவளுடைய திகைப்பில் இருந்தே தெரிந்தது. தன் மருமகனை கேள்விக்குறியோடு பார்த்த பவானி பின் ஆர்த்தியைப் பார்த்து புன்னகைத்தாள். "உங்கப்பா உன் கிட்ட பேசணுமாம். கூட்டிகிட்டு வரச் சொன்னார்"

ஆர்த்தி சித்தியுடன் கிளம்ப வேறு வழியில்லாமல் மூர்த்தியும் இடத்தைக் காலி செய்தான். அவன் போவதையே ஒரு கணம் வெறித்துப் பார்த்த பவானி ஆர்த்தியுடன் தங்கள் அறையை நோக்கி நடந்தாள்.

"ஆர்த்தி உங்கப்பாவுக்கு நீ வாட்டமாய் இருக்கிற மாதிரியும், எதுக்கோ பயப்படற மாதிரியும் தோணுது. அதைப் பத்திக் கேட்கத்தான் உன்னைக் கூப்பிடுகிறார்னு நினைக்கிறேன்"

ஆர்த்தி புன்னகைக்க முயன்றாள். அவள் மீது பவானிக்கு பச்சாதாபம் தோன்றியது. பின்னால் திரும்பி மூர்த்தி தென்படுகிறானா என்று பார்த்து விட்டு மெல்ல ஆர்த்தியிடம் சொன்னாள். "ஆர்த்தி, உங்கப்பா என்ன கேட்டாலும் சரி உன் பெரியத்தையைப் பத்தி மட்டும் அவர் கிட்ட தப்பா பேசிடாதே. நீ பிறகு பழைய அப்பாவை அவர் கிட்ட பார்க்க முடியாது".

இப்படி சொன்னது பஞ்சவர்ணத்திற்குத் தெரிந்தால் அவள் தன்னை என்ன செய்வாள் என்று பவானிக்கு எண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த வெகுளிப் பெண்ணிடம் அதைச் சொல்லாமல் இருக்க அவளால் முடியவில்லை.

ஆர்த்தி தன் சித்தியைப் பார்த்து சோகமாகப் புன்னகைத்தாள். "ஒருத்தர் கிட்ட அவங்களை சந்தேகப்படறதா சொல்லி இப்ப நான் எதிரியாவே ஆயிட்டேன். இன்னொரு எதிரியை நான் சம்பாதிச்சுக்க விரும்பலை. சொன்னதுக்கு தேங்க்ஸ் சித்தி"

தந்தையின் அறையில் இருந்த எல்லாமே விலை உயர்ந்த பொருள்களாகவும், கலை நுணுக்கத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் இருக்கக் கண்ட ஆர்த்தி எல்லாவற்றையும் மலைத்துப் போய் பார்த்தாள். மகள் அப்படிப் பார்த்ததே சந்திரசேகருக்கு இதயத்தில் ரத்தம் கசிய வைத்தது. இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று நினைக்க வேண்டிய தன் வாரிசை இப்படிப் பார்த்து வியக்கிற அளவுக்கு இறக்கி எல்லோருமாகச் சேர்ந்து இது வரை வாழ வைத்து விட்டார்களே என்று மனம் புழுங்கினார்.

"என்ன ஆர்த்தி இன்னைக்கு ரொம்பவே டல்லா இருக்கேன்னு கேட்கத் தான் கூட்டிகிட்டு வரச் சொன்னேன்" என்று மகளிடம் நேரடியாக சந்திரசேகர் கேட்டார். ஆகாஷ் அவளிடம் ஏனோ கோபமாக இருப்பதால் தான் மகள் வருத்தமாக இருக்கிறாள் என்று கணித்திருந்தாலும், இவளைப் போன்ற ஒரு சாதுப் பெண்ணிடம் கோபப்பட ஆகாஷுக்கு என்ன இருக்கிறது என்று அவருக்குப் புரியவில்லை.

மகள் வரும் வரை கிட்டத்தட்ட அந்த இடத்தில் வைத்து தான் ஆகாஷை அவர் நேசித்து வந்தார். நல்ல குணங்கள், கூர்மையான அறிவு, எந்த இடத்தையும் ஒளிமயமாக்கும் சுட்டித்தனம் நிறைந்த பேச்சுத் திறமை உள்ள அந்த மருமகன் அவர் இதயத்தில் என்றுமே ஒரு தனி இடத்தைப் பெற்றிருந்தான். அவன் யாரிடமும் அப்படி அலட்சியமாகவோ கடுமையாகவோ நடந்து கொண்டு அவர் இது வரை பார்த்ததில்லை. சிவகாமி இது போன்ற விஷயங்களில் மிகக் கண்டிப்பானவள் என்பதால் அவனை நல்ல முறையில் தான் வளர்த்திருந்தாள். அதனால் இன்றைய அவனது நடவடிக்கை அவரைக் குழப்பியது. மகளது வருத்தத்தைப் பார்க்கையில் அவருக்கு அவன் மேல் மீண்டும் கோபம் வந்தது.

"ஒண்ணுமில்லைப்பா. எனக்கு லேசாய் தலைவலி. அது தான் டல்லாய் தெரியறேன். அவ்வளவு தான்"

சந்திரசேகர் மகளைத் தன் அருகில் உட்கார வைத்து மிகவும் வாஞ்சையுடன் அவளைப் பார்த்தார். "ஆர்த்தி, அப்பாவுக்கு நீ எப்பவுமே சந்தோஷமாய் இருக்கணும்கிறது தான் ஆசை. உனக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் என்ன கவலை இருந்தாலும் என் கிட்ட சொல்லு. அதைச் சரி செய்யறது அப்பாவோட பொறுப்பு"

ஆர்த்திக்கு அப்பா தன்னிடம் வைத்துள்ள பாசத்தை அவர் வார்த்தைகளை விட அவர் முகபாவனை மூலம் அதிகமாக உணர முடிந்தது. அந்த அளவு கடந்த பாசம் அவள் மனதை நெகிழ வைத்தது.

அவளுக்கு இப்போது பெரிதாகத் தோன்றிய பிரச்சினையும் கவலையும் ஆகாஷின் விலகல் தான். ஆனால் அதை சரி செய்யும் சக்தி தன் தந்தையிடம் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. அவன் அன்பை மறுபடியும் மீட்க முடியும் என்றும் அவளுக்கு நம்பிக்கை இல்லை. சில நாட்களே ஆனாலும் அவனிடம் பழகிய அந்த இனிமையை நினைக்கையில் எல்லாம் கனவு போல இருந்தது. துரதிர்ஷ்டம் என்னவென்றால் எல்லாக் கனவுகளையும் போல அந்த இனிமையான கனவும் முடிவுக்கு வந்து விட்டது ….

"நீங்க இருக்கிறப்ப எனக்கு என்ன பிரச்சினைப்பா இருக்க முடியும். நான் முதல்லயே சொன்னேனே. லேசான தலைவலி தான். தூங்கி எழுந்தா சரியாயிடும் …."

அவர் அவள் வார்த்தைகளில் நெகிழ்ந்தார். இப்போதைக்கு அவள் எதையும் சொல்லப் போவதில்லை என்று தோன்றியது. பெருமூச்சு விட்டபடி சொன்னார். "அப்படின்னா நீ போய் தூங்கும்மா. நாளைக்கு பார்க்கலாம்"

அவள் கிளம்பும் முன் தந்தையின் அறையை மீண்டும் ஒரு முறை முழுவதும் நோட்டமிட்டாள். அவர் அறையில் பலருடைய புகைப்படங்கள் இருந்தாலும் அவள் தாயின் புகைப்படம் ஒன்று கூட இருக்கவில்லை.

(தொடரும்)

About The Author