மனிதரில் எத்தனை நிறங்கள்! (102)

Keep violence in the mind
Where it belongs.

– Brian Aldiss ‘Barefoot in the Head’

மூர்த்தி சென்னைக்கு வந்தது பஞ்சவர்ணத்திற்குத் தெரியாது. ஆபிஸ் வேலையாக வெளியூர் போவதாகச் சொல்லி விட்டு வந்திருக்கிறான். இங்கு சில மணி நேரங்களுக்கு மேல் அவன் இருக்கப் போவதில்லை. ஒரு நபரிடம் அவனுக்கு சிறிது பேச வேண்டியிருக்கிறது. அவ்வளவு தான்.

காலிங் பெல் அடித்து பொறுமையில்லாமல் காத்திருந்தான். கதவைத் திறந்த நபரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். "நான் உங்க மகன். பேர் மூர்த்தி"

இளங்கோ ஓங்கி அடித்தது போல் நிலை குலைந்து போனது தெரிந்தது. சுதாரித்துக் கொண்டு உள்ளே வரச் சொன்னான்.

வீட்டில் மனைவியும், மகளும் இருக்கவில்லை. உள்ளே சென்ற மூர்த்தி அமரும் முன் அலமாரியைப் பார்த்தான். பவானி சொன்னது போல் அவன் சிறிய வயதுப் புகைப்படம் இருந்தது.

"சொல்லு…" பலவீனமாக இளங்கோவின் குரல் வந்தது.

"நான் நீங்க ஏதாவது சொல்லுவீங்க, கேட்டுட்டு போகலாம்னு வந்தேன். சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லையா?"

"எல்லாத்தையும் பவானி சொல்லியிருப்பாள்னு நினைக்கிறேன்"

"அது பொது விஷயம். நான் கேட்டது நம்ம விஷயத்தைப் பற்றி. ஒரு அஞ்சு வயசு மகனை விட்டுட்டு வந்துட்டு அவன் ஞாபகார்த்தமாய் ஒரு போட்டோ போதும்னு அதை மட்டும் வச்சுட்டு இங்கே இருந்துட்டீங்களே அதைப் பற்றி"

இளங்கோ முகத்தில் குற்ற உணர்வு படர்ந்தது. "சொன்னா உனக்கு எந்த அளவுக்குப் புரியும்னு தெரியல"

"தமிழ், இங்கிலீஷ் ரெண்டுமே நல்லாவே புரியும். நீங்க வேற பாஷையில பேசப்போறதில்லையே"

இளங்கோ எச்சிலை மென்று விழுங்கினான். "மூர்த்தி நான் செய்தது நியாயம்னு சொல்லலை. உன் நிலைமையில நானிருந்தாலும் கோபம் தான் படுவேன். அன்னைக்கு ராத்திரி எனக்கு வேறொன்னும் தோணலை. எல்லாத்தையும் உதறிட்டு ஓடிப் போகணும்கிற ஒரு உணர்வு மட்டும் தானிருந்தது. எல்லாத்தையுமே தீர்மானிக்கிற அம்மாவை விட்டு, நினைவுகள் எதுவுமே நல்லதில்லாத சூழ்நிலைகளையும் இடத்தையும் விட்டு…. வேற எதையும் நான் யோசிக்கலை."

"ஓடி வந்தப்ப யோசிக்கலை சரி. ஆனா வந்ததுக்கப்புறம் இத்தனை நாள்கள்?"

மூர்த்தியின் கேள்விக்கு இளங்கோ என்ன பதில் சொல்வது என்று சொல்லத் தெரியாமல் திணறினான். ஆனால் மூர்த்தியால் அவன் மௌனத்தில் இருந்து ஒரு மிகப் பெரிய உண்மையைப் பதிலாகப் படிக்க முடிந்தது. இளங்கோவைப் பொறுத்தவரை மூர்த்தி கடந்த காலத்தின் ஒரு பகுதி. கடந்த காலத்தை முற்றிலும் மறக்க நினைத்த போது எல்லாவற்றோடும் சேர்ந்து மறக்கப்பட்டவன். புரிந்த போது மனதில் ஆழமாக வலித்தது.

"நினைச்சுப் பார்க்காத நாளில்லை மூர்த்தி. ஒரு நாள் உன்னைப் பார்க்கணும், உன் கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நான் நினைக்காத நாளில்லை…. என் அம்மா மாதிரி ஒருத்தி கிட்ட உன்னை விட்டுட்டு வந்தது என்னை எவ்வளவு உறுத்தியிருக்குன்னு நான் வார்த்தையால் சொல்ல முடியாது மூர்த்தி…." இளங்கோவின் வார்த்தைகள் அவன் காதில் வெறுமையாய் ஒலித்தன.

பவானி வேண்டுமானால் எல்லாவற்றையும் மறந்து அண்ணன் என்று பாசத்துடன் மறுபடி ஒட்டிக் கொள்ளலாம். மூர்த்தியால் முடியாது. அவனால் இது வரை சிவகாமியை விட அதிகமாய் ஒரு நபரை வெறுக்க முடியும் என்று தோன்றியதில்லை. ஆனால் இன்று அப்படியொரு நபரை நேரில் பார்க்கிறான்.

ஒன்றும் சொல்லாமல் மூர்த்தி கிளம்பினான்.

"மூர்த்தி. இரு ஏதாவது சாப்பிட்டுட்டு போ….."

மூர்த்தி கதவைத் திறந்து வெளியே வந்த போது அந்தக் கல்லூரி மாணவி வந்து கொண்டிருந்தாள். அவன் தங்கை. அழகான பெண்கள் யாரைப் பார்த்தாலும் காமத்துடன் மேயும் அவனுடைய கண்கள் தானாக அவளிடம் இருந்து விலகின. அவனுக்கே நாலு அடி அவளைக் கடந்த பிறகு தான் அந்த உண்மை உறைத்தது. ஒரு வினாடி ஒரு எண்ணம் அவனிடம் வந்து போனது. ‘ஒரு வேளை இந்த ஆள் என்னை சிறுவயதிலேயே கூட்டிக் கொண்டு வந்திருந்தால் நான் வேறு மனிதனாக வளர்ந்திருப்பேனோ".

*****

பஞ்சவர்ணம் தன் முன் ஈரமான கண்களுடன் நிற்கும் மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"நானும் மூர்த்தியும் நாளைக்குப் போகலாம்னு இருக்கோம். மார்க்கெட்டுக்குப் பக்கத்துல வீடு பார்த்துருக்கானாம். வீடு சின்னது தான். எங்க ரெண்டு பேருக்கு எவ்வளவு இடம் வேணும். …சிவகாமி சொல்லாட்டியும் நான் திரும்ப இந்த வீட்டுல காலடி எடுத்து வைக்கிறதா இல்லை. அப்பப்ப வந்து பார்த்துகிட்டு இரு…"

பவானி தலையாட்டினாள். மகளைப் பார்க்க பஞ்சவர்ணத்திற்கு ஒரு புறம் பாவமாக இருந்தது. ஆனால் அவள் முகத்தில் தெரிந்த பச்சாதாபத்தைப் பார்க்கையில் இன்னொரு புறம் கோபமாக வந்தது. அவள் யாரிடத்திலும் பார்க்க சகிக்காதது பச்சாதாபம் தான். ஆனால் வீட்டை விட்டுப் போகையில் மகளை சொல்லம்புகளால் அடிக்க அவளுக்கு மனம் வரவில்லை. போகச் சொல்லி சைகை காட்டி விட்டு கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரத்தில் சோகமயமாக நீலகண்டன் வந்தார். அவரைப் பார்த்தவுடன் அவளுக்கு எரிச்சல் வந்தது. அன்று ஒரு முறை அவளிடம் பேசி விட்டுப் போனவர் பார்வதியின் திட்டுக்குப் பயந்து பிறகு வந்து பார்க்கவில்லை. தன் எண்ணங்களை மறைத்துக் கொண்டு "வாங்க" என்று வரவேற்று அவரை அமரச் சொன்னாள்.

"நீங்க நாளைக்குப் போறீங்கன்னு கேள்விப்பட்டேன்…"

"ஆமா. எப்பவோ போக வேண்டியது. இப்ப தான் நேரம் வந்திருக்கு. உங்க பேத்திக்கு கல்யாணம் முடிவாயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்"

"ஆமா…" நீலகண்டன் குரல் தாழ்ந்திருந்தது.

"சிவகாமி கெட்டிக்காரி. எப்படி எதை நடக்க வைக்கணும்னு நல்லா அவளுக்குத் தெரியும். பார்த்தா நடக்கறதுக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி காமிச்சுக்குவாள்… அவளை அடக்கத் தான் ஆள் இல்லை. எப்பப் பார்த்தாலும் ஸ்கூல் பையன் மாதிரி அந்த ஜட்ஜ் புஸ்தகத்தைப் படிக்கறதை விட்டுட்டு பொண்டாட்டிய அடக்கி வைக்கலாம். நீங்க அவர் கிட்ட அடிக்கடி பேசறீங்களே. சொல்ல வேண்டியது தானே"

"அதை நான் சொன்னா நல்லாயிருக்குமா? நானே சமயத்துல பார்வதி வாயை மூட வைக்க முடியாமல் அவஸ்தைப் படறேன்"

பஞ்சவர்ணம் அந்த மனிதரின் யதார்த்தத்தை ரசிக்கவில்லை. "நீங்க எங்க வீட்டுக்கு ஒரு தடவை வாங்க. இல்லாட்டி வேண்டாம். அது அந்த ராட்சஸிக்குப் பிடிக்காம உங்களையும் வெளிய போகச் சொல்லிட்டா நீங்க எங்க போவீங்க பாவம். எனக்காவது மூர்த்தி இருக்கான். உங்களுக்கு யாரிருக்கிறா?"

நீலகண்டனுக்கு அவள் சொன்னதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. பார்வதியிடம் வந்து சொல்லி அவளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

"வெளிய போறப்பவும் விஷத்தைக் கக்கிட்டு போறா பார்த்தீங்களா? உங்களை யார் அவகிட்ட போய் பேசச் சொன்னது?"

"சம்பந்தியம்மா போறாங்களேன்னு ஒரு மரியாதைக்கு……"

"யாருக்கு சம்பந்தி? உங்களுக்கா? நமக்கு யாரிருக்கான்னு கேட்கறா. நீங்க சொல்ல வேண்டியது தானே. வெளியே போனாலும் எங்களுக்கு யாரும் தேவையில்லை. நான் டியூஷன் சொல்லிக் கொடுப்பேன். என் பொண்டாட்டி வீட்டு வேலைக்குப் போவா. இந்த காலத்துல அது ரெண்டுக்கும் தான் டிமேண்ட் ஜாஸ்தி. நல்லாவே பொழச்சுக்குவோம். இங்க வர்ற வரைக்கும் கூட யார் காசுலயும் உக்காந்து சாப்பிடலைன்னு சொல்லி இருக்கணும்"

‘இவளுக்கு மட்டும் டக் டக் என்று பாயிண்டுகள் எங்கிருந்து தான் கிடைக்குதோ’ என்று நீலகண்டன் வருத்தத்துடன் ஆச்சரியப்பட்டார்.

*****

தேனிலவில் இருந்து திரும்பி வந்த அர்ஜுன் முகத்தில் இறுக்கம் நிறையவே குறைந்திருந்தது. முகத்தில் ஒரு மென்மை தெரிய ஆரம்பித்திருந்தது. சிவகாமிக்கு அவனைப் பார்க்கவே நிறைவாய் இருந்தது.

கணவனிடம் சொன்னாள். "மனசுக்குப் புடிச்ச ஒரு பெண் ஒரு ஆண் கிட்ட ஏற்படுத்தற மாறுதலை உலகத்தில் வேற எதுவும் செய்ய முடியறதில்லை. பார்த்தீங்களா?"

சங்கரன் ஆமென்று தலையசைத்தார். "இன்னும் கொஞ்ச நாள் போய் ஒரு குழந்தையும் பிறந்துடுச்சுன்னா அவன் ஒரு சந்தோஷமான குடும்பஸ்தன் ஆயிடுவான் சிவகாமி"

உண்மையில் அர்ஜுன் இந்த ஒரு வாரத்தில் மிகவும் மாறித்தான் போயிருந்தான். தேனிலவின் இனிய நாட்களில் அவனும் அவன் மனைவியும் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் நிறையவே இணைந்திருந்தார்கள். ஒரு நாள் அவன் தன் இளமையில் பட்ட கஷ்டங்களையும், தன் தாய் விட்டு விட்டுப் போன பின் அனுபவித்த துக்கங்களையும் சொன்ன போது நடுநிசியாகி இருந்தது. கேட்டு விட்டு வசந்தி கண்கலங்கினாள். அவன் பிறகு தூங்கி விட்டான். ஆனால் வசந்தியால் அதிகாலை வரை தூங்க முடியவில்லை.

அவன் விழித்த போது அவள் ஈரமான கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் குரல் கரகரக்கச் சொன்னான். "எனக்காக அழுத முதல் ஆள் நீ தான் வசந்தி"

"நீங்க சிவகாமியம்மாவை மறந்துட்டீங்க"

"இல்லை வசந்தி. அவங்க எப்பவுமே அழுததில்லை. எனக்காகவும், யாருக்காகவும். அழுகிறதால் எதுவும் நடந்துடாதுன்னு அடிக்கடி சொல்லுவாங்க…. தெய்வம் அழாது வசந்தி."

நிறைய நேரம் மௌனமாக இருந்த வசந்திக்கு குற்றவுணர்ச்சி மனதில் எழுந்தது. இவ்வளவு நல்ல மனிதனை மணந்து கொள்ள லஞ்சமாய் ஒரு தொகையை அப்பா வாங்கி விட்டாரே.

ஊட்டி வந்து சேர்ந்த நாள் அன்றே அர்ஜுன் இல்லாத சமயமாகப் பார்த்து வசந்தி அந்தப் பணத்திற்கான செக்கை சிவகாமியிடம் திருப்பிக் கொடுத்தாள். "இந்தப் பணம் வேண்டாம் மேடம். என் தம்பி படிப்பை அவர் பார்த்துக்குவார்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு"

அந்தச் செக்கைக் கொடுத்த பிறகு தான் வசந்தியின் மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கியது.

*****

வெளியூரிலிருந்து வந்த மூர்த்தி மிகவும் களைப்பாகவும், அமைதியிழந்தும் இருந்ததைக் கண்ட பஞ்சவர்ணம் சந்தேகத்துடன் பேரனைக் கேட்டாள். "நீ போனது சென்னைக்கா?"

மூர்த்தி ஆமென்று தலையாட்டினான். இனி மறைப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ‘உங்களுக்கும் உங்க மகனைப் பார்க்க ஆசையா இருக்கா பாட்டி"

"என் மகன் செத்து பதினெட்டு வருஷத்துக்கு மேல் ஆயிடுச்சு" பஞ்சவர்ணம் அமைதியாகச் சொன்னாள். அவளைப் போலவே தானும் இருந்திருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. சென்னைக்குச் சென்று இளங்கோவைப் பார்த்தது அவன் மனதை ரணமாக்கி இருந்தது. சொல்லத் தெரியாத எதையோ எதிர்பார்த்துப் போனவனுக்கு மிஞ்சியது ஏமாற்றமும், வேதனையும் தான்.

எதையும் துருவித் துருவி கேட்கும் பஞ்சவர்ணம் அபூர்வமாக அமைதி காத்தாள். பேரனின் மனநிலையே எல்லாத் தகவல்களையும் அவளுக்குத் தெரிவித்திருந்தது.

"நீ வர லேட்டானதும் நான் பயந்துட்டேன். அந்த அசோக்கைப் பார்க்கப் போகிற நேரம் ஆயிடுச்சு. சீக்கிரம் கிளம்பு. அந்தப் பணத்தையும் எடுத்துக்கோ"

"நீங்க வழக்கம் போல அத்தை கிட்ட கேட்காம ஏன் நீங்க கொஞ்சம் கொஞ்சமா சேர்த்திருந்த பணத்தை பேங்கில் இருந்து எடுக்கச் சொன்னீங்க"

"பவானி அழுதழுது தர்ற பணம் ராசியில்லாதது மாதிரி தோணிச்சு. அப்புறம் என் சொந்தப் பணத்தை எடுத்துக் கொடுக்கறப்ப தான் ஜெயிக்கணும்கிற வெறி அதிகமா இருக்கும். அந்த வெறிய இழந்துட நான் விரும்பலைடா மூர்த்தி"

அசோக் அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சிடியை முதலில் தந்தான். பின் தன் திட்டம் பற்றி குறித்துக் கொண்டு வந்திருந்த காகிதங்களை வெளியே எடுத்தான்.

"பொதுவா தேவையில்லாத எதையும் கேட்கிற பழக்கம் எனக்குக் கிடையாது. ஆனா உங்க கிட்ட ஒரு கேள்வியை எனக்குத் தேவையில்லாட்டியும் கேட்கிறேன். உங்களுக்கு யாரையாவது கொன்னு பழக்கம் இருக்கா?"

மூர்த்தி சொன்னான். "இல்லை. ஆனா துப்பாக்கி குறி பார்த்து சுடறதுல நான் நிறைய பரிசு வாங்கி இருக்கேன்"

அதை அசோக் முதலிலேயே அறிந்து வைத்திருந்தான் என்றாலும் அது நிஜக் கொலைக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதை அசோக்கால் கணிக்க முடியவில்லை.

அவன் முகத்தில் உணர்ச்சிகள் எதுவும் தென்படாவிட்டாலும் எந்தக் கேள்வி அவன் மனதில் எழுந்திருக்க முடியும் என்பதை ஊகிக்க முடிந்திருந்த பஞ்சவர்ணம் சொன்னாள். "வெறுப்புக்கு பெரிய சக்தி இருக்கு தம்பி. அதனால எங்களால முடியுமான்னு சந்தேகப்படாதே. முதல்ல திட்டத்தைச் சொல்லு"

முதலில் துப்பாக்கி ஒன்றை எடுத்து மூர்த்தியிடம் அசோக் தந்தான். அது ஒரு நவீன கள்ளத் துப்பாக்கி. "இது பவர் ஃபுல்லான துப்பாக்கி. ஷார்ட் ரேஞ்சில் கொல்றதுக்கு இது பெஸ்ட்….."

மூர்த்தி அதை வாங்கி கையால் தடவிப்பார்த்தான். சிவகாமி, அர்ஜுன் இருவரின் எமனாக இந்தத் துப்பாக்கி இருக்கப் போகிறது என்பதில் அவனுக்கும், பஞ்சவர்ணத்திற்கும் சந்தேகம் இருக்கவில்லை.

ஒரு வரைபடத்தை எடுத்து விரித்தான். "இது தான் நீங்க கொலை செய்யப் போகிற பில்டிங். இதோட ஓனர் கனடாவில் இருக்கான். இந்த வீட்டுக்கு ரெண்டு ஃபர்லாங்க் தூரத்துல எந்த வீடும் கிடையாது. அவன் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை தான் வருவான். வந்து இருவது நாள் இருந்துட்டுப் போவான். இந்த வீட்டை பார்த்துக்கறதுக்கு ஒரு வாட்ச்மேனும், அவன் மனைவியும் இருக்காங்க. நீங்க கொலை செய்யப் போகிற தினத்தில் அவங்க ரெண்டு பேரும் இருக்க மாட்டாங்க. அந்த வாட்ச்மேனோட மகனுக்கு அன்னைக்கு ஒரு சின்ன விபத்து ஏற்படப் போகுது. கால் எலும்பு முறியப் போகுது. அவங்க ஆஸ்பத்திரியில் நாலு நாள் தங்க வேண்டி இருக்கும். ஆஸ்பத்திரிக்கும் இந்த வீட்டுக்கும் இடையே ரொம்பவே தூரமானதால வர மாட்டாங்க. அந்த ஆஸ்பத்திரி பக்கத்துலயே வாட்ச்மேன் மனைவியோட அக்கா வீடு இருக்கு. எதுவானாலும் அங்கே போயிக்குவாங்க. இது வீட்டோட டூப்ளிகேட் சாவி…"

பஞ்சவர்ணம் அவனை மரியாதையுடன் பார்த்தாள்.

அசோக் அதைக் கவனித்த மாதிரி தெரியவில்லை. அடுத்த விஷயத்திற்கு நகர்ந்தான். "ஆர்த்தியைக் கடத்தறது என்னோட பொறுப்பு. கடத்தினது பணத்துக்காகத் தானுங்கிற மாதிரி அந்தம்மாவை நம்ப வைக்கிறதும் என்னோட பொறுப்பு. பத்து லட்ச ரூபாய் மட்டும் கேட்கப் போறேன். அந்தம்மாவுக்கு அது ஒரு பிச்சைக்காசு. கொண்டு வர வேண்டியது அந்தம்மாவும், அந்த அர்ஜுனும் தான்னு சொல்லப் போறேன். எனக்குத் தெரிஞ்சு அந்தம்மா குணத்துக்கு இதை விட ரெட்டிப்பா கேட்டாலும் கொண்டு வருவாங்க, போலிசுக்குப் போக மாட்டாங்கன்னு நம்பறேன். அந்தம்மாவை இந்த வீட்டுக்கு வரச் சொல்லப் போறேன். நீங்க ரெண்டு பேரும் முதல்லயே அங்க போய் இருக்கப் போகிறீங்க. அந்தம்மாவும், அர்ஜுனும் பணத்தோட வரப் போறாங்க. நீங்க அவங்களைக் கொன்னுடப் போறீங்க. அந்தம்மா வர்றதுக்கு முன்னால் நீங்க ரெண்டு பேரும் இதில் இருக்கீங்கன்னு தெரியாது. வந்த பிறகு தான் தெரிஞ்சுக்கப் போறாங்க. ஆனா தெரிஞ்சுகிட்டவங்க திரும்ப உயிரோட திரும்பப் போகிறதில்லைங்கறதால உங்களுக்கு பிற்பாடும் ஆபத்தில்லை…. நீங்க கொன்னதுக்கப்புறம் அந்தப் பிணங்களை எங்க ஆளுங்க டிஸ்போஸ் பண்ணிடுவாங்க"

பஞ்சவர்ணம் திருப்தியுடன் தலையசைத்தாள் என்றாலும் ஒரு விஷயத்தை அவனுக்கு நினைவுபடுத்த முயன்றாள். "ரெண்டு பேர் பிணமும் யார் கைக்கும் எப்பவும் கிடைக்கக் கூடாதுன்னு சொல்லியிருந்தேன். அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு அத்தனை பேரும் குழம்பணும். தேடணும்…தேடிகிட்டே இருக்கணும்"

"நூறு கிலோமீட்டர் தூரத்துல ஒரு மிருகக்காட்சிசாலை இருக்கு. அதை பத்து நாளுக்கு மூடப் போகிறாங்க. ஏன்னா அங்க கட்டிட வேலை, ரிப்பேர் வேலை எல்லாம் நடக்கப் போகுது. அங்கே சனிக்கிழமை சாயங்காலம் வேலை முடிஞ்சுதுன்னா மறுபடி வேலைக்கு திங்கள்கிழமை தான் ஆட்கள் வேலைக்கு வருவாங்க. மூணே மூணு மிருகக் காட்சி ஊழியர்கள் தான் அந்த இடைப்பட்ட நேரத்துல இருப்பாங்க. அவங்க நம்ம ஆளுங்க. பிணத்தை சனிக்கிழமை சாயங்காலத்துக்கு மேல் போய் அங்க போட்டா சிங்கம், புலி, கரடிக்கெல்லாம் பிணங்க சாப்பாடாயிடும். எதுவும் மிஞ்சாது. அப்படி மிஞ்சறதையும் வழக்கமா மிஞ்சறதைப் போடற மாமிசக்குழியில போட்டுருவாங்க. யாருக்கும் எந்த சந்தேகமும் எப்பவும் வராது…"

(தொடரும்)

About The Author