மனிதரில் எத்தனை நிறங்கள்! (48)

"If you cannot forgive because of hurt inflicted by others, you will be unwilling to be vulnerable for fear of being hurt again. Because people are sinners, you cannot love and you cannot minister without getting hurt." – Walter A. Henrichsen

சந்திரசேகர் சிவகாமியும் சங்கரனும் வாக்கிங் போய் விட்டு வரும் வரை தன் அறையில் இருப்பு கொள்ளாமல் காத்திருந்தார். அக்காவிடம் இனி என்ன செய்வது என்று கேட்டு அதைச் செய்யத் துவங்கும் வரை மனம் சமாதானம் ஆகாது என்று அவருக்குத் தோன்றியது. அதிகாலையிலேயே எழுந்து காத்திருந்த அவர் வழக்கம் போல சங்கரன் வாக்கிங் போய் வந்து தோட்டத்தில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து நியூஸ்பேப்பரில் மூழ்க ஆரம்பித்த பிறகு சிவகாமியின் அறைக்குப் போனார்.

"என்னடா?"

"ஆர்த்தி கிட்ட நல்ல டாக்டராய் பார்த்து சிகிச்சை செய்யலாம்னு சொன்னாயே. டாக்டரை செலக்ட் செஞ்சாச்சா?"

"ஏண்டா ராத்திரி ஒரு மணிக்கு சொன்னதை வச்சு காலைல ஏழு மணிக்கே வந்து கேட்கறியே, உன் மனசுல என்னை என்னன்னு நினைச்சுகிட்டு இருக்கே."

"உனக்கு ஆறு மணி நேரமே அதிகம். நீ இதுக்குள்ள ஏதாவது யோசிச்சு வச்சிருப்பேன்னு தெரியும்" சொல்லியபடி தமக்கையின் அருகில் சந்திரசேகர் அமர்ந்தார்.

தம்பியைக் கூர்ந்து பார்த்த சிவகாமி கேட்டாள். "ராத்திரி எல்லாம் தூங்கலையா?"

சந்திரசேகர் கண்களில் நீர் திரண்டது. "தூங்க முடியலை"

சிவகாமி ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. சந்திரசேகர் மறுபடி அக்காவைக் கேட்டார். "எந்த டாக்டர்?"

"கொஞ்சம் இரு. ஆகாஷைக் கூப்பிடறேன். ஒரு விஷயத்தை ரெண்டு தடவை சொல்ல எனக்கு நேரமில்லை" என்ற சிவகாமி ஆகாஷின் செல்லுக்கு ஃபோன் போட்டு "வா" என்றாள்.

ஆகாஷ் வரும் வரை இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். ஆகாஷ் வந்தவுடன் அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான். "என்னம்மா?"

"ஆர்த்திக்கு ஒரே விதமான கனவு வந்து தான் தொல்லை தருதுன்னு அவளோட பாட்டி சொல்றாங்க. ஒரு நல்ல டாக்டரா பார்த்து சிகிச்சை செய்யலாம்னு நினைக்கறேன். அப்ப தான் உன் ஃப்ரண்ட் ஒருத்தன், கோயமுத்தூர்ல பிரபலமாய் இருக்கானே, அவன் ஞாபகம் வந்தது. அவன் பேர் என்ன?"

"ப்ரசன்னா" என்றான் ஆகாஷ்.

ப்ரசன்னாவும் அவனும் மிக நெருங்கிய பள்ளிக்கூட நண்பர்கள். பிறகு வேறு வேறு கல்லூரிகளுக்குப் போனாலும் அந்த நட்பு தொடர்ந்தது. மனோதத்துவ டாக்டராக ஆகி மிகக்குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாகவும் ஆக அவனது கூர்மையான அறிவும், விஷய ஞானமும் மூலகாரணமாக இருந்தது. சர்வதேச பத்திரிக்கைகளில் பலர் பாராட்டும்படி நிறைய கட்டுரைகளும் எழுதி புகழ் பெற்றிருந்த ப்ரசன்னாவை ஆகாஷ் வெகு அபூர்வமாக தான் இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது. இருவருமே மிகவும் பிசியாக இருப்பது தான் காரணம். அதுவும் ப்ரசன்னாவிடம் சிகிச்சைக்கு ஒரு அப்பாயின்மென்ட் வாங்க மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் காத்திருக்கும் அளவு பிசியாக இருப்பதால் அடிக்கடி போனில் மட்டுமே ஆகாஷ் பேசிக் கொண்டிருந்தான்.

"ஆ… ப்ரசன்னா தான். அவன் கிட்ட ஆர்த்திக்கு ஒரு அப்பாயின்மென்ட் வாங்கு"

"நோ ப்ராப்ளம். அது வாங்கிரலாம். ஆமா.. அது என்ன மாதிரியான கனவு…."

சந்திரசேகர் கைகள் சோபாவின் கைப்பிடியை இறுக்கிப் பிடித்தன. ஆனால் சிவகாமி கண் இமைக்காமல் சொன்னாள். "தெரியலை. நான் கேட்கப் போகலை. டாக்டர் கிட்ட சொன்னாப் போதும். மத்தவங்க கிட்ட சொல்லி தேவையில்லாத விமரிசனத்தை வரவழைக்க வேண்டாம்னு நான் ஆர்த்தி கிட்ட சொல்லிட்டேன். நீ என்ன சொல்றே"

ஆகாஷ் ஒரு சிறு மௌனத்திற்குப் பின் சொன்னான். "சரி தான். அந்தக் கனவு ஏன் வருதாம்?"

மருமகன் சலிக்காமல் வேறு விதமாக அதே கேள்வியைக் கேட்பதைக் கண்ட சந்திரசேகர் அக்காவைப் பார்த்தார். சிவகாமி இயல்பாக சொன்னாள். "சின்னதுல ஏதோ பார்த்து பயந்திருக்கிறாள் போல இருக்கு"

"ஊட்டியிலயா பாண்டிச்சேரியிலயா?"

சிவகாமி கண் இமைக்காமல் சொன்னாள். "யாருக்குத் தெரியும்? நீயே இத்தனை கேள்வி கேட்கிறாய். மத்தவங்களும் கேட்காம இருப்பாங்களா. அதனால் அவ கிட்ட கனவு பத்தி யார்கிட்டயும் பேசாதேன்னுட்டேன். இதைப் பத்தி ஆர்த்தி கிட்டயோ அவங்க பாட்டி தாத்தா கிட்டயோ ஒண்ணும் கேட்காதே… நான் உன்னைக் கூப்பிட்டது என்னை இண்டர்வ்யூ செய்ய இல்லை. ப்ரசன்னா கிட்ட பேசி அப்பாயின்மென்ட் வாங்க…"

சந்திரசேகரால் அக்காவை மெச்சாமல் இருக்க முடியவில்லை. மற்ற யாராக இருந்தாலும் இந்நேரம் தடுமாறி இருப்பார்கள்.

"சரி வாங்கிடறேன்."

"அப்புறம் இன்னொரு விஷயம். இது மாதிரி விஷயங்களுக்கு பல சிட்டிங் தேவைப்படும் போல தெரியுது. அவளை நீயே கூட்டிகிட்டு போறது நல்லதுன்னு நினைக்கிறேன்."

ஆகாஷ் முகம் இறுகியது. "அப்பாயின்மென்ட் வாங்கித் தர்றேன். ஆனா மாமா கூட்டிகிட்டு போகட்டும்"

"இவன் வேண்டாம். இவன் மகளை நேத்து பார்த்துட்டே ராத்திரியெல்லாம் தூங்கலை. இந்த மாதிரி ஆளுங்க கூடப் போனா கடைசில இவனுக்கும் சிகிச்சை ஆரம்பிக்க வேண்டி வந்துடும்"

ஆகாஷ் மாமாவைப் பார்த்தான். உண்மை தான். அவர் முகத்தில் தூங்கின அறிகுறியே தென்படவில்லை. தாயிடமே கூட்டிக்கொண்டு போகச் சொல்லியிருப்பான். ஆனால் ஆர்த்தி தன் தாயையே சந்தேகப்படுவதால் அவள் அழைத்துச் செல்வது சரியாக இருக்காது. அதே காரணம் தனக்கும் பொருந்தும் என்று தோன்றியது. மேலும் அவனுக்கு ஆர்த்தியுடன் ஒரு நிமிடம் சேர்ந்து இருக்கக்கூடப் பிடிக்கவில்லை.

"அப்படின்னா அவளை வேற யாராவது கூட்டிகிட்டுப் போகட்டும். அவங்க பாட்டி தாத்தாவே போகட்டுமே. கார் குடுத்து அனுப்பிச்சுட்டா சரி"

"அந்த வயசானவங்கள அவ கூட அனுப்பறது சரியா தோணலை. இப்ப அவளுக்கு அண்ணன் யாராவது இருந்திருந்தா கூட்டிகிட்டுப் போயிருப்பான். நீ தான் அண்ணன் ஸ்தானத்தில போகணும்"

ஆர்த்திக்கு அண்ணன் ஸ்தானம் என்று சொன்னவுடன் அவன் தாயிடம் எரிந்து விழுந்தான். "நான் ஒண்ணும் அவளுக்கு அண்ணன் இல்லை"

அவன் கோபம் சந்திரசேகர் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. அதைக் கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டார். "நிஜமாவே என் பொண்ணை இவன் காதலிக்கிறான். அதனால தான் அண்ணன்னவுடனே எரிஞ்சு விழறான். பின்ன ஏன் அவ மேல கோபமாய் இருக்கான்?" என்று தனக்குள் கேட்டுக் கொண்டார்.

"ஒரு உதாரணத்துக்கு சொன்னேன். அவ்வளவு தான். நீ தான் போகணும். உனக்கு அவ கிட்ட சண்டை ஒண்ணும் இல்லையே"

ஆகாஷுக்கு தர்மசங்கடத்தில் தன்னை வீழ்த்தும் தாய் மேல் கோபம் வந்தது. சண்டை என்றால் ஏன் என்ற கேள்வி அடுத்ததாக வரும். என்னவென்று சொல்வான். பார்வதிக்கு வாக்கு கொடுத்திருக்கிறானே. அப்படி இல்லை என்றாலும் அதை தற்போது தாயிடம் தன்னால் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.

"ஏன் பார்த்தியை அனுப்புங்களேன்…."

"அவனுக்குக் கொஞ்சம் ஓட்டை வாய். யாராவது கேட்டா உளறிடுவான். அதனால தான் யோசிச்சு உன்னை அனுப்ப முடிவு செஞ்சேன். இன்னும் சும்மா ஒவ்வொரு பேரா சொல்லாதே" சிவகாமி பேச்சு முடிந்தது என்பது போல எழுந்தாள்.

ஆகாஷ் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு தலையை மட்டும் ஆட்டி விட்டு கிளம்பினான்.

அவன் போனவுடனேயே சந்திரசேகர் அக்காவைக் கேட்டார். "அந்த டாக்டர் எப்படி ட்ரீட் செய்வான்னு நினைக்கிறாய்க்கா"

"எனக்கு என் வேலையைப் பத்தி நினைக்கவே நேரம் போதலை. அந்த டாக்டர் செய்யப் போற வேலையை நினைக்க எங்கே நேரம் இருக்கு"

அக்காவின் பதில் சந்திரசேகருக்கு திருப்தி அளிக்கவில்லை. ‘அக்காவுக்கு எதிலும் ஒரு ஐடியா இல்லாமல் இருக்காது. ஆனால் சில சமயங்கள்ல வாயே திறக்க மாட்டா….’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவர் வாய் விட்டு சொன்னார். "உன்னை புரிஞ்சுக்கவே முடியலைக்கா"

"என்னைப் புரிஞ்சுகிட்டு என்ன செய்யப் போறே. உன்னைப் புரிஞ்சுக்கோ. உருப்படலாம்"

"என்ன நாக்குடா சாமி" என்று முணுமுணுத்துக் கொண்டு சந்திரசேகர் எழுந்தார்.

"என்ன சொன்னே"

"ஆகாஷ் கூடவே கிளம்பியிருக்கணும்னேன்" என்று சொன்ன சந்திரசேகர் உடனடியாக இடத்தைக் காலி செய்தார்.

(தொடரும்)

 

About The Author