“Expectation sends an exciting message to our neural system. While it lasts we are alert and most likely to be rewarded.” –Max Gunther, The Luck Factor.
பஞ்சவர்ணம் பேரன் வரும் வரை தூங்காமல் காத்திருந்தாள். மூர்த்தி வரும் போது மணி மூன்றாகி இருந்தது. அவன் மாடிப்படி ஏறியவுடன் வராந்தாவில் நின்று கொண்டு இருந்த பாட்டியைப் பார்த்தான். பாட்டியின் முகத்தில் பிரச்சினை என்ற சொல்லைப் படித்தான்.
அவனைப் பார்த்து தனதறைக்கு வர சைகை செய்த பஞ்சவர்ணம் அமைதியாக அறைக்குள் போனாள். அவன் அவள் அறைக்குள் நுழைந்தவுடன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். குடிபோதையில் இருந்த மூர்த்திக்கு அடுத்த கணம் போதை எல்லாம் பறந்து போனது. கன்னம் சிவந்து வீங்கியதைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. சிறு வயது முதல் ஒரு முறை கூட அவனை அடித்திராத பாட்டிக்கு இன்று என்ன ஆயிற்று என்றெண்ணி திகைத்தபடி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நின்றான்.
பஞ்சவர்ணம் பல்லைக் கடித்துக் கொண்டு கடுங்கோபத்துடன் சொன்னாள். "சின்ன வயசுல இருந்து உன்னை நான் அடிச்சதில்லை. நீ சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சப்ப, குடிக்க ஆரம்பிச்சப்ப, பொண்ணுகளோட ஜாலி செஞ்சுட்டு வந்தப்ப, இன்னும் என்னென்னவோ கண்றாவிப் பழக்கம் பழகிட்டு வந்தப்ப எல்லாம் நான் கண்டும் காணாமலும் இருந்தேன். ஏன் தெரியுமா மூர்த்தி. என் அகராதியில் அது எதுவும் தப்பில்லை. என் அகராதியில் தப்புங்கறது ஒண்ணே ஒண்ணு தான். அது என்ன தெரியுமா? முட்டாள்தனம். நீ இன்னைக்கு அது செஞ்சிட்டு வந்திருக்கே…."
மூர்த்தி ஒன்றும் பேசாமல் நின்றான். பாட்டியை இந்த அளவு கோபத்தில் அவன் பார்த்ததில்லை.
"நடந்ததை எல்லாம் நான் உன் கிட்ட சொல்லியாச்சு. ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கோம். ஆர்த்தியைக் கல்யாணம் செய்துக்க என்னென்ன செய்யணுமோ அதைச் செய்யின்னு அடிச்சு அடிச்சு சொல்லியிருக்கேன். அத்தனையும் கேட்டுட்டு பொறுப்பில்லாம வேற எவள் கிட்டயோ போயிட்டு இப்படி வர்றியே இதுக்குப் பேர் என்ன தெரியுமா வடி கட்டின முட்டாள்தனம்…."
மூர்த்தி தலையைக் குனிந்து கொண்டு சொன்னான். "எல்லாரும் தூங்கியாச்சு பாட்டி; யாரும் பார்க்கலை"
"அந்தக் கூர்க்கா தூங்கிட்டானாடா, முட்டாள். அவன் நீ போன நேரத்தையும் வந்த நேரத்தையும் நோட் பண்ணியிருக்க மாட்டான்?"
மூர்த்தி ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்தபடியே நின்றான். பஞ்சவர்ணம் கோபம் குறையாமல் சொன்னாள். "முட்டாளே முதல்லயே எதுவும் நமக்கு சாதகமாயில்லை. ஆர்த்தி சம்பந்தப்பட்ட யாருமே அவளை உனக்குக் கல்யாணம் செய்து குடுக்கத் தயாராய் காத்துகிட்டு இல்லை. சிவகாமி நமக்கு முதல் எதிரி. சந்திரசேகர் ஆகாஷ் இல்லாட்டி பார்த்திபனுக்காவது அவளை கட்டிக் கொடுப்பான், உனக்குத் தரத் தயங்குவான். அந்தப் பாண்டிச்சேரிக் கிழவி உன்னை சந்தேகக்கண்ணோட தான் பார்க்கறா. ஆர்த்திக்கு உன் மேல் பெரிய அபிப்பிராயம் இல்லை. இப்படி இருக்கறப்ப, வேற குறுக்கு வழி எதிலாவது போய் தான் நம்ம காரியத்தை சாதிக்கணும். உனக்கு இப்படி பல தொடர்பு வெளிய இருக்குன்னு தெரிஞ்சா எல்லாமே கை விட்டுப் போயிடும். சீரியசா சொல்றேன். உனக்கு கொஞ்ச நாளாவது கட்டுப்பாடா இருக்க முடியலைன்னா பரவாயில்லை. கொஞ்சம் விஷம் வாங்கி எனக்குக் குடு. குடிச்சுட்டு நான் போய் சேர்ந்துடறேன்….."
"சாரி பாட்டி இனிமேல் இந்தத் தப்பு செய்ய மாட்டேன். ப்ராமிஸ்"
பஞ்சவர்ணம் அவன் குரலில் இருந்த உறுதியால் சிறிது சமாதானம் ஆனாள். குரல் தணிய சொன்னாள். "ஆர்த்தி கழுத்தில் தாலி கட்டிட்டா பின்ன எங்கே வேணும்னாலும் போ, என்ன வேணும்னாலும் செய். நான் எதுவும் சொல்ல மாட்டேண்டா மூர்த்தி. காரியம் முடியற வரைக்கும் நம்ம கவனம் எங்கயும் சிதறக்கூடாதுடா….."
மறுநாள் காலை சிவகாமி ஆர்த்தி அறைக்குள் நுழைந்த போது ஆர்த்தி ஆகாஷ் கொண்டு வந்து வைத்த செடிகளைத் தடவியபடி நின்றிருந்தாள். அந்தச் செடிகள் ஆகாஷுடன் நட்புடன் இருந்த நாட்களின் அடையாளமாக இருந்ததால் அடிக்கடி அவற்றைத் தடவியபடி பழைய நினைவுகளில் ஆழ்வது அவளுக்கு சுகமாக இருந்தது.
ஒரு கணம் சிவகாமிக்கு ஆனந்தியே அங்கு நிற்பது போலிருந்தது. பழைய நினைவுகள் ஒரு சேர வந்து தாக்க சிவகாமி உடனடியாக அவற்றை மனதிலிருந்து அப்புறப்படுத்தினாள். "ஆர்த்தி"
ஆர்த்தி தன் பெரியத்தையின் வரவால் ஆச்சரியமடைந்தாள். "வாங்கத்தை"
சிவகாமி ஆர்த்தி தடவிக் கொண்டு இருந்த செடிகளைப் பார்த்தாள். அந்தச் செடிகளை ஆகாஷ் அறையில் முன்பு கண்டிருந்ததாக நினைவு.
"ஆர்த்தி, டாக்டர் கிட்ட அப்பாயின்மெண்ட் அடுத்த வாரத்துக்கு வாங்கியாச்சு. டாக்டர் ஆகாஷோட க்ளோஸ் ஃப்ரண்ட். பேர் ப்ரசன்னா. கோயமுத்தூர்ல இருக்கான். ரொம்ப திறமைசாலி"
ஆர்த்தி தலையசைத்தாள்.
"நிறைய தடவை போக வேண்டியிருக்கலாம். ஆகாஷையே உன்னைக் கூட்டிகிட்டு போகச் சொல்லி இருக்கேன்"
தன்னைப் பார்க்கக் கூட மனமில்லாத ஆகாஷ் தன்னை பல முறை அழைத்துப் போவதை விரும்புவான் என்று ஆர்த்திக்குத் தோன்றவில்லை. "அவருக்குக் கஷ்டமாய் இருக்காதா?"
"என்ன கஷ்டம்?"
ஆர்த்திக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிவகாமி அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். ஆர்த்தி மெல்ல சொன்னாள். "இல்லை அவருக்கு வேலை நிறைய இருக்கும்…"
"அதெல்லாம் பெரிய விஷயமில்லை. உனக்கு அவன் கூடப் போக ஒரு மாதிரியா இருந்தா வேறு யாரையாவது ஏற்பாடு செய்யறேன்…"
"ஐயோ அப்படியெல்லாம் இல்லை…." என்று ஆர்த்தி அவசரமாக மறுத்தாள்.
அந்த விஷயம் அத்தோடு முடிந்தது என்பது போல் சிவகாமி லேசாக தலையசைத்து விட்டு ஒரு சாவிக் கொத்தை நீட்டினாள். "இது தான் உங்கம்மாவோட பீரோ சாவிகள். அதில் இருக்கிற பொருள்கள்ல யூஸ் செய்யப் போறத மட்டும் வச்சுட்டு மத்ததை எல்லாம் தனியா எடுத்து ஒதுக்கி வச்சுடு. அப்புறம் பார்க்கலாம்."
ஆர்த்தி தலையசைத்தாள்.
அங்கிருந்து கிளம்ப யத்தனித்த சிவகாமி ஒரு கணம் நின்று சொன்னாள். "உங்கம்மா தன்னோட ஒவ்வொரு பொருள்லயும் ரொம்பவும் பொசசிவா இருந்தா. தன்னோட எதையும் அவள் அவ்வளவு சுலபமா அடுத்தவங்களோட பகிர்ந்துக்கற ரகம் அல்ல. பீரோல இருக்கற எதையும் அடுத்தவங்களுக்கு காமிக்கறதுக்கு முன்னால் அதை நீ ஞாபகம் வச்சுக்கோ…."
சிவகாமி போய் விட்டாள். சாவிக் கொத்தைக் கையில் வைத்திருக்கையில் மனம் சிவகாமி சொன்னதை அசை போட்டது. அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை ஆர்த்தியால் ஊகிக்க முடியவில்லை. ஒருவித பரபரப்புடன் முதல் பீரோவைத் திறந்தாள்.
(தொடரும்)
Hello Kannan,
Your story is very nice. Pl try to give more. Thanks!
கதை மிக அருமை…..