Rumour is a pipe
Blown by surmises, jealousies, conjectures.
-Shakespeare
பஞ்சவர்ணம் தோட்டத்தில் பேசிக்கொண்டே உலாவிய ஆர்த்தியையும் லிஸாவையும் தன்னறை ஜன்னல் வழியாக கவனித்துக் கொண்டு இருந்தாள். லிஸா மூர்த்தியைப் பற்றி மோசமாகத் தான் ஆர்த்தியிடம் சொல்வாள் என்பதில் அவளுக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் மூர்த்தி முன்பே லிஸாவையும், ஆகாஷையும் பற்றி சொல்லி வைத்திருப்பதால் அப்படியே ஆர்த்தி லிஸா சொல்வதை நம்ப மாட்டாள் என்பது பஞ்சவர்ணத்தின் கருத்தாக இருந்தது. ஆனாலும் நடப்பதெல்லாம் தனக்கு சாதகமாக இல்லை என்று பஞ்சவர்ணம் ஆத்திரப்பட்டாள்.
நீலகண்டன் தன் மனைவியின் வாயிற்கு பயந்து இப்போதெல்லாம் பஞ்சவர்ணத்தைப் பார்க்க வருவதில்லை. அவருடைய நேரம் எல்லாம் சங்கரனுடன் தோட்டத்தில் அமர்ந்து தேவனுடைய கதைகளைப் பற்றி பேசுவதில் தான் போகிறது. ஒருவருக்கொருவர் வாய் விட்டு புத்தகத்தின் சில வரிகளைப் படித்து சிலாகித்துக் கொண்டு மகிழ்ந்தார்கள். பார்வதி அமிர்தத்துடன் சேர்ந்து பேசி பொழுதைக் கழித்தாள். இருவரும் சேர்ந்து கோயிலுக்குப் போனார்கள். பேசிக் கொண்டே பூக்கள் பறித்துத் தொடுத்தார்கள். பவானியும் இப்போதெல்லாம் கூப்பிடாமல் பஞ்சவர்ணத்தைப் பார்க்க வருவதில்லை. ஆர்த்தியுடன் ஏதாவது பேசிக் கொண்டும், ஷாப்பிங் போய்க் கொண்டும் பொழுதைக் கழித்தாள். இதெல்லாம் பஞ்சவர்ணத்திற்கு பெரும் அதிருப்தியைத் தந்து கொண்டிருந்தது.
ஆர்த்தியின் ஹிப்னாடிஸ செஷன் ஆரம்பிக்கும் புதன்கிழமையோ விரைவாக நெருங்க மறுத்தது. இன்று செவ்வாய்க்கிழமை. நேரமோ மாலை. ஆமையாகத்தான் அந்த மாலையும் நகர்கிறது…..
அந்த நேரத்தில் பாட்டியின் அறைக்குள் நுழைந்த மூர்த்தி தன் பாட்டி ஜன்னல் வழியே ஆர்த்தியையும் லிஸாவையும் கவனித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தான். அவர்கள் இருவரும் அந்த அளவு நெருங்கியதை அவனாலும் ஜீரணிக்க முடியவில்லை. அவன் பாட்டியிடம் சொன்னான். "லிஸாவைப் பற்றி நான் அத்தனை சொல்லியும் இப்படி நெருக்கமாய் லிஸா கிட்ட பழகுவாள்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை பாட்டி"
பேரனைத் திரும்பிப் பார்த்த பஞ்சவர்ணம் அவனை சமாதானப்படுத்தினாள். "ஆர்த்தி நிறையவே குழம்பிப்போயிருக்கா மூர்த்தி. அதனால ஒவ்வொருத்தர் சொல்றதையும் கேட்டுக்கறா. ஆனா அதை வச்சு எந்த முடிவும் எடுக்க முடியாம தவிக்கிறா. நாம எதிர்பார்த்த மாதிரி அவள் நடந்துக்கலைங்கறது உண்மை தான். ஆனா அவள் நாம் பயப்படற அளவுக்கும் நடந்துக்கலை….."
"ஆனா அந்த பர்த்டே பார்ட்டில ஆகாஷும், அவளும் எப்படி ரீயாக்ட் பண்ணினாங்கன்னு பாத்தீங்கள்ல" அவன் குரலில் வருத்தம் இருந்தது.
"வயசுக் கோளாறுடா மூர்த்தி. அதுல அவங்க மாத்திரம் விதி விலக்கா என்ன. ஆனா அவன் சீக்கிரமே சுதாரிச்சுகிட்டு பிறகு விலகியே இருந்தான் பார்த்தியா. அவனுக்கு அவங்கம்மா மாதிரி ஆங்காரம் அதிகம்"
"ஆனால் விலகி நிக்கறது ஆர்த்தியாய் இருந்தாத் தானே நாம தைரியமா இருக்கலாம்."
"விலகி நிக்கறது யாரா இருந்தாலும் இடைவெளி ஒண்ணு தான் மூர்த்தி. அவள் கழுத்தில் தாலி கட்டப் போறவன் நீ தான். அதுக்கு என்ன செய்யணும். எப்போ, எப்படி செய்யணும்னு எனக்குத் தெரியும்டா. நீ தைரியமா இரு. அது வரைக்கும் அந்த ஆர்த்தி கிட்ட லிஸாவைப் பத்தியும், ஆகாஷைப் பத்தியும், ஏன் அந்த பார்த்தியைப் பத்தி கூட மோசமா சொல்லிகிட்டிரு. எப்பவுமே ஒண்ணு ரெண்டு உண்மையை ஆதாரமா வச்சு பொய் சொல்லணுடா. அப்படிப்பட்ட பொய்யத் தான் யாராலும் சந்தேகப்பட முடியாது. புரியுதா?"
மூர்த்தி தலையசைத்தான். பாட்டியின் தன்னம்பிக்கை மூர்த்தியை ஆச்சரியப்பட வைத்தது. மனிதர்களைப் புரிந்து கொள்வதிலும், அவர்களை உபயோகப்படுத்திக் கொள்வதிலும் அவளுடைய திறமையை அவன் பலமுறை பார்த்து வளர்ந்திருக்கிறான். பாட்டியின் திட்டம் என்னவாக இருக்கும் என்று அவனுக்குத் தெரியவில்லை. கேட்டாலும் சமயம் வராமல் அவள் அவனிடம் சொல்லப் போவதில்லை. ஆனால் அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாள் என்றால் அது நிச்சயம் சோடை போகாததாக இருக்கும் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை. ஜன்னல் வழியே தோட்டத்தைப் பார்த்தான். லிஸா ஏதோ ஆர்த்தியிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள். ‘அவள் என்ன தான் சொல்கிறாள்’
உண்மையில் ஆர்த்தியிடம் தங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றி லிஸா சொல்லிக் கொண்டிருந்தாள். "…நான், ஆகாஷ், பார்த்தி மூணு பேரும் சேர்ந்து சின்னதில் இங்கே அடிச்ச லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல ஆர்த்தி. ஆனால் அப்ப எல்லாம் நீ ஒருத்தி இருக்கிறதாகவே இங்கே யாரும் சொல்லலை. எனக்கு இந்த வீட்டுல யாரும் சொல்லாதது கூட வருத்தமில்லை. எங்கம்மா, அப்பாவும் சொல்லாதது தான் வருத்தம். நான் போன்ல நீ வந்ததா சொன்னப்பவே அம்மா கிட்ட சண்டை போட்டுட்டேன்.."
ஆர்த்தி ஆர்வமாகக் கேட்டாள். "உங்கம்மா என்ன சொன்னாங்க?"
"ஏதோ மழுப்புனாங்க. உங்கம்மாவோட மரணத்தை அவங்களால ஜீரணிக்க முடியலைன்னு மட்டும் புரிஞ்சுகிட்டேன். உன்னைப் பத்தி பேசுனா அவங்களோட நினைவும் வந்து சங்கடப்படுத்தும்னு நினைச்சு பேசாமல் விட்ட மாதிரி தோணுது"
"எங்க பாட்டியும் தாத்தாவும் அப்படியேதோ ஒரு எண்ணத்துல தான் என் கிட்ட அப்பாவைப் பத்தியும், இந்தக் குடும்பத்தைப் பத்தியும் சொல்லலை…"
"ஆனா எனக்கு இது முட்டாள்தனமா தோணுது."
ஆர்த்திக்கு லிஸாவின் வெளிப்படையான பேச்சு பிடித்திருந்தது. பிறந்த நாள் விழாவின் மறுநாளே கிளம்பத் தயாரான லிஸாவை சில நாட்கள் தங்கும்படி கேட்டுக் கொண்டதற்கு லிஸாவும் ஒத்துக் கொள்ள அவளுக்கும் ஆர்த்தியைப் பிடித்திருந்ததே காரணம். இருவருக்கும் பேசியே முடியவில்லை.
திடீரென்று முன்னறிவிப்பு இல்லாமல் லிஸா சொன்னாள்."ஆர்த்தி எங்கம்மா உன் கிட்ட ஒரு விஷயத்தைப் பத்தி பேச வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா என் கிட்ட இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் என்னான்னா எதை வேண்டாம்னு சொல்றாங்களோ அதைச் செய்யறது தான்…"
ஆர்த்தி சிரித்துக் கொண்டே சொன்னாள். "நீ எதை வேணும்னாலும் என் கிட்ட பேசலாம்"
"உன்னை ஏதோ கனவு அடிக்கடி வந்து தொந்திரவு செய்யுதுன்னும் அது சம்பந்தமா நீ டாக்டர் ப்ரசன்னா கிட்ட போகிறாய்னும் சொன்னாங்க…."
ஆர்த்தி தயக்கத்துடன் சொன்னாள். "ஆமா, அதைப்பத்தி ட்ரீட்மென்ட் முடியற வரைக்கும் பேச வேண்டாம்னு முடிவு செய்திருக்கேன் லிஸா. சாரி"
"ஓகே. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு போதும். சொல்லக்கூட வேண்டாம். ஆமா இல்லைன்னு தலையாட்டு போதும். அது உங்கம்மா சம்பந்தப்பட்டதா"
ஆர்த்தி தலையசைத்தாள். இருவரும் சிறிது நேரம் பேசாதிருந்தார்கள்.
பின் லிஸாவே மௌனத்தைக் கலைத்தாள். "உங்கம்மா இறந்த அந்த நாள் ஊட்டியில் எமனோட ராஜாங்கம் தான் நடந்ததுன்னு அப்பா சொல்வார். எத்தனை பேர் செத்தாங்கன்னு இன்னும் சரியா கணக்கு கிடைக்கலையாம். உங்கத்தையோட பவர்னால தான் உங்கம்மாவோட உடம்பைத் தேடியெடுக்க முடிஞ்சதுன்னு அப்பா சொன்னார். மூர்த்தியோட அம்மா அப்பாவோட பிணம் கூட கிடைக்கலைன்னு சொல்லிகிட்டாங்க. அந்த சூனியக்கிழவி, அதான் மூர்த்தியோட பாட்டி, மகன் மருமகளோட பிணத்தைக் கண்டுபிடிக்க ரொம்பவே பாடுபட்டு தேடியிருக்கா. மார்ச்சுவரில அழுகிப் போன பிணத்தை எல்லாம் கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் புரட்டிப் பார்த்தாளாம். அந்த மாதிரி ஒரு தைரியமான பொம்பளையை நாங்க இது வரைக்கும் பார்க்கலைன்னு மார்ச்சுவரில சில பேர் அப்பா கிட்ட சொன்னாங்களாம். பிணம் கிடைக்காததால என்னைக்காவது மகனும் மருமகளும் திடீர்னு வந்து நிப்பாங்கன்னு கிழவி ரொம்ப நாளைக்கு நம்பிகிட்டு இருந்தாளாம்…."
ஆர்த்திக்கு இந்தத் தகவல் சுவாரசியமாக இருந்தது. பஞ்சவர்ணம் அன்று ஆனந்தியின் மரணத்தைப் பற்றியே விரிவாகப் பேசி, சிவகாமி தான் கொன்றிருக்க வேண்டும் என்று பலரும் சொன்னதாகச் சொல்லி சந்தேகத்தைக் கிளப்பியதை எண்ணிப் பார்த்தாள். அத்தனை பேசியவள் அதே சமயத்தில் தன் வீட்டிலேயே இரட்டை மரணம் நிகழ்ந்திருந்தும் கூட வாயைத் திறக்காததன் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்று ஆர்த்தி யோசித்தாள். ஒன்றும் புரியவில்லை….
(தொடரும்)“