Since you cannot avoid forming habits, how important it is that you seek to form those that are useful and desirable. – Harry D Kitson
இரவு காரில் வீடு திரும்பிப் போகையில் டேவிட் தன் மகளிடம் கேட்டார். "ஆர்த்தியைப் பற்றி என்ன நினைக்கிறாய் லிஸா?"
"ரொம்பவே அழகாய் இருக்கிறாள். அதோடு ரொம்பவே நல்லவளாய் தெரியறாள்"
மேரி சொன்னாள். "பவானி தான் அலங்காரம் செய்ததாய் சொன்னார்கள். மேக்கப்பில் பவானி எப்பவுமே எக்ஸ்பர்ட் தான். சாதாரணமாவே அழகாய் தெரியற ஆர்த்தியை பேரழகாய் பவானி மாத்திட்டா"
"அந்த சூனியக்கிழவி அதிசயமாய் வந்து வாழ்த்திட்டுப் போனது ஆச்சரியமாய் இருந்தது. அதை வெளியில் பார்த்து பல வருஷமாச்சு. இல்லையாம்மா?"
பஞ்சவர்ணத்தை லிஸா சிறு வயது முதல் சூனியக்கிழவி என்று தான் அழைப்பது வழக்கம். ஆமாம் என்று மேரி தலையாட்ட டேவிட் வெறுப்புடன் சொன்னார். "சொத்து இப்ப யார் கன்ட்ரோல்ல இருக்குன்னு கிழவிக்குத் தெரியும். அதனால அவளோட குட் புக்ஸ்ல இருக்கணும்னு கிழவி நினைக்கிறா"
"அந்த மூர்த்தியும் ரொம்பத் தான் அவள் கிட்ட பவ்யமாய் நடக்கறான். அவனைப் பத்தி அவள் கிட்ட சொன்னேன். ஆனா அவள் நம்பின மாதிரி தெரியலை."
மேரி மகளிடம் சொன்னாள். "அவள் நிறையக் குழம்பிப் போயிருக்காள்னு நினைக்கிறேன் பாவம். யார் நடிக்கிறாங்க, யார் நிஜம்னு தெரியக் கஷ்டம் தான். அதுலயும் அந்த வீட்டில் இருக்கிற மூணு பசங்களும் அவளுக்கு முறைப்பசங்க. அழகாவும் இருக்கா, சொத்தும் இருக்குங்கறப்ப அவளோட மனசுல இடம் பிடிக்க கொஞ்சம் அதிகமாவே முயற்சி செய்வாங்க. இந்த மூர்த்தி நடிக்கிறதுல சிவாஜியை மிஞ்சிடுவான்…."
"ஆனா அவள் ஆகாஷைத் தான் காதலிக்கிற மாதிரி தெரியுது" லிஸா சொல்ல ஒரு கனத்த மௌனம் அங்கு நிலவியது.
சில நேரங்களில் மணிக்கணக்கான பேச்சை விட மௌனம் அதிகம் பேசுவது உண்டு. மேரி அந்த தர்மசங்கடமான மௌனத்தின் இரைச்சலைக் கேட்க முடியாமல் கலைத்தாள். "லிஸா…. உனக்கு இங்கு வந்தது கஷ்டமாய் இல்லையே?"
சிறிது நேரம் லிஸா ஒன்றும் சொல்லவில்லை. மகள் என்ன சொல்கிறாள் என்பதைக் கேட்க டேவிட்டும் பரபரப்பாக இருந்தார். லிஸா சொன்னாள். "கஷ்டமாயில்லைன்னு சொன்னா அது பொய் சொன்ன மாதிரி ஆயிடும்மா. ஆனா வாழ்க்கை ஒரு இடத்துல தேங்கி நின்னுட முடியாதில்லையா. நாம எல்லோருமே சில கட்டங்களைத் தாண்டி நகர்ந்து தானேம்மா ஆகணும். அதற்கு நான் தயாராயிட்டேம்மா. இங்கே வர்றதுக்கு முன்னாலேயே நான் மனசுல அந்த முடிவெடுத்துட்டுத் தான் வந்தேன். வந்ததுக்கு இப்ப வருத்தமில்லைம்மா. எனக்கு நிஜமாவே ஆர்த்தியை ரொம்பவே பிடிச்சுடுச்சு….."
அவள் பதில் பெற்றோர் இருவர் கண்களையும் லேசாக ஈரப்படுத்தியது.
*************
கிட்டத்தட்ட அறுபது வயது மதிக்கத்தக்க அந்த வட இந்திய மனிதர் அந்த வீடியோ கடைக்கு நுழையும் முன் வாய் நிறைய வைத்திருந்த வெற்றிலையை வெளியே துப்பினார். தலையில் ஒரு குல்லா, சில்க் ஜிப்பா, தொந்தி, மூக்கின் நுனியில் கண்ணாடி சகிதம் வந்த அந்த நபரை அந்த வீடியோ கடைக்காரன் இது வரை இந்தப் பகுதியில் கண்டதில்லை. "வாங்க" என்று வரவேற்றான்.
வந்த மனிதர் "ஹே ராம்" என்று சொன்னபடி அங்கிருந்த நாற்காலியில் களைப்புடன் உட்கார்ந்து ஒரு நிமிடம் கண்களை மூடி இளைப்பாறினார். கண்களைத் திறந்தவர் "ஒரு காலத்துல ஊட்டி க்ளைமேட் எப்டி இருந்துது…..இப்ப பகல்ல வெயில் தான் ஜாஸ்தி…"
வீடியோ கடைக்காரன் ஆமாமென புன்னகையுடன் தலையாட்டினான்.
"நம்ம பேரன் பர்த்டே வர்ற தர்ஸ்டே வருது. வீட்டில பார்ட்டி வெக்கிறான். வீடியோ கவரேஜ் வேணும்னு அடம் பிடிக்கறான். காசோட வேல்யூ எல்லாம் கவ்லே இல்லே. பிடிவாதம் பிடிக்கிறான்…."
வீடியோகாரன் மனதில் சொல்லிக் கொண்டான். "நாங்க எல்லாம் பிழைக்க வேண்டாமா சேட்டு". இப்போதைய நிதி நெருக்கடி காரணமாக மக்கள் தேவையற்ற செலவுகளை வேறு வழியில்லாமல் குறைக்க ஆரம்பித்து விட்டதால் அவனது வீடியோ தொழில் மிகவும் மந்தமாகி விட்டது.
"வீடு எங்கே சேட்"
சேட் தன் ஜிப்பாவின் பாக்கெட்டில் கையை விட்டு தேடினார். "அரே. இந்த சைத்தான்க நம்ம விசிட்டிங் கார்டு கூட எடுத்து விளையாடறான். அர்ஜெண்டா தேட்னா கிடைக்கிறானில்லை.. நம்ம எஸ்டேட்டும், வீடும் மஞ்சூர் போற வழியில இருக்குது. அது சரி நீங்க எத்தனே சார்ஜ் செய்யறான்….."
அவரிடம் எல்லா விவரங்களும் கேட்டு விட்டு ஒரு தொகையை வீடியோக்காரன் சொல்ல சேட் கேட்கக்கூடாத வார்த்தையை கேட்டு விட்டது போல் மிரண்டார். "அரே நான் திவால் ஆகறான்."
"இப்ப விலைவாசி எல்லாம் அந்த அளவுக்கு இருக்கு சேட். இதுல செலவு எல்லாம் போக எனக்கு பெருசா எதுவும் மிஞ்சாது. தொழில் சுத்தமா இருக்கும். ஒரு தடவை என் வேலையைப் பார்த்துட்டா நீங்களாவே சேர்த்துக் கொடுப்பீங்க"
சேட் அவன் பதிலில் சமாதானமானது போல் தெரியவில்லை. அரை மனதுடன் சொன்னார். "ஏதாவது பர்த்டே கவரேஜ் பண்ணது இருந்தா சேட் பார்த்துட்டு டிசைட் செய்யறான்"
நல்ல வேளையாக நேற்று எடுத்த பிறந்த நாள் வீடியோ தயாராக இருந்ததால் வீடியோக்காரன் உடனடியாகச் சென்று எடுத்து சேட்டுக்குப் போட்டுக் காட்டினான். அதைச் சிறிது நேரம் பார்த்த சேட் பொறுமையிழந்து சொன்னார். "இன்னாயா இது… பர்த்டேன்னா அந்த ஆளையே காமிச்சுகிட்டிருக்கான்…. தொளில் பத்தி பேசறான்… இதுவாய்யா தொளில்…"
வீடியோக்காரன் ஒருவித தர்மசங்கடத்துடன் நெளிந்தான். "சேட். அது அந்த பர்த்டே கவர் செய்ய ஏற்பாடு செய்தவங்க பிரத்தியேகமா அப்படி எடுக்கச் சொல்லி இருந்ததால தான் அப்படி எடுக்க வேண்டியதாப் போச்சு. மத்தவங்க அந்தப் பொண்ணு கிட்ட வர்றப்ப அந்த ஃப்ரேம்ல வந்தாப் போதும், மத்தபடி அந்தப் பொண்ணை மட்டும் கான்சன்ட்ரேட் செய்தாப் போதும்னு சொல்லிட்டாங்க. காசு கொடுத்து இப்படி எடுன்னா அப்படி எடுக்கறது தானே நம்ம வேலை சேட். நானா எடுத்திருந்தா அந்த தோட்டத்து பூக்கள்ல இருந்து வந்திருந்த தனித்தனி மனுஷங்க வரை வித்தியாசமா கவர் செஞ்சிருப்பேன்…."
"அந்த ஆளு மெண்டலாய்யா?"
வீடியோக்காரன் ஒரு நிமிடம் தயங்கினான். பிறகு இந்த சேட்டிடம் சொல்வதில் தவறில்லை என்று நினைத்தவனாகச் சொன்னான். "அந்த மேடத்தை மெண்டல்னு யாருமே சொல்ல முடியாது. பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தையே நடத்திட்டிருக்காங்க. அப்படிப்பட்டவங்க அப்படி சொல்றங்கன்னா ஏதாவது காரணம் இருக்கும்… சரி அவங்கள விடுங்க சேட். நீங்க எப்படி எடுக்கச் சொல்றீங்களோ அப்படி எடுக்கறேன்."
சேட் எழுந்தார். "ஓகே. நான் என் பேரனையே இங்க அனுப்பறான். அவன் இஷ்டம் மாதிரி நீங்க செய்யறான். விசிட்டிங் கார்டு குடுத்தா அவனையே நாளைக்கு அனுப்பறான்…"
வீடியோக்காரன் விசிட்டிங் கார்டு எடுத்து தந்து விட்டு சொன்னான். "உங்க அட்ரஸ் சொன்னா நானே வேணும்னா வந்து பார்க்கறேன்"
"அரே அந்த சைத்தான் தினம் ஒரு தடவே ஊட்டி பஜாருக்கு வர்றான். அவனே வந்து பேசுவான்"
சேட் கிளம்பி விட்டார். சற்று தொலைவில் நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறிய சேட் காரை சிறிது நேரம் ஓட்டிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப் புறத்தில் நிறுத்தி வேஷத்தைக் கலைத்து அசோக்காக மாறினான்.
வீடியோ எடுக்கச் சொன்னது சிவகாமி தான் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. சம்பந்தமில்லாத விஷயங்களில் துப்பறிய விரும்பாத அசோக்கிற்கு அந்த வீடியோகிராபரை ஏற்பாடு செய்தது மூர்த்தி தானோ என்கிற சந்தேகம் கூட இருந்தது. ஒரு புறம் ஆர்த்தியின் ஆழ்மனதில் புதைந்துள்ளதை அறியத் தன்னை ஏற்பாடு செய்த மூர்த்தி வேறு ஏதாவது சதித்திட்டம் தீட்டி இந்த வீடியோவுக்கு ஏற்பாடு செய்திருக்கலாமோ என்ற சந்தேகம் வந்ததால் தான் நிவர்த்தி செய்ய வீடியோக்காரனைப் பார்த்துப் பேச வந்தான். தனக்கு வேலை கொடுத்தவன் தனக்குத் தெரியாமல் இன்னொருவனுக்கு ஒரு பகுதி வேலையைத் தருகிறான் என்றால் அது அபாயத்தின் அறிகுறி என்பது அசோக்கின் அனுபவம்.
அப்படி எடுக்கச் சொன்னது மூர்த்தி அல்ல என்றாகி விட்ட பிறகு அசோக்கின் ஆர்வம் வடிந்து போயிற்று. சிவகாமி ஏன் அப்படி வீடியோ எடுக்க வீடியோக்காரனிடம் சொன்னாள் என்பது மிக மர்மமாக இருந்தாலும் அதைத் தெரிந்து தனக்கு எதுவும் ஆகப்போகிறதில்லை என்பதால் இது குறித்து மேலும் துப்பறிதல் தேவையில்லாதது என்ற முடிவுக்கு அசோக் வந்தான். ஆனாலும் அந்த ஏன் என்ற கேள்வி சிறிது நேரம் அவன் மனதில் தங்கியிருந்தது. பின் அதை மறந்து போனான்.
(தொடரும்)
“