"Construct your determination with Sustained Effort, Controlled Attention, and
Concentrated Energy. Oppurtunites never come to those who wait… they are
captured by those who dare to attack."
-Paul J.Meyer
…….யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது….இரண்டு பெண்கள் ஒரு அறைக்குள் ஆவேசத்துடன் பேசிக் கொள்ளும் சத்தம் கேட்கிறது…பேச்சைத் தொடர்ந்து ஒரு பெண் அமானுஷ்ய குரலில் சிரிக்கிறாள். திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது….மூடிய அறைக்குள் இருந்து கதவிடுக்கின் வழியே இரத்தம் வெளியே வருகிறது…வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது….ஒரு வினோதமான காலடி ஓசை கேட்கிறது…ஒரு பெண்ணின் அலறல் இடிச்சத்தத்தையும் மீறி அந்த பங்களா முழுவதும் எதிரொலிக்கிறது…. முகமெல்லாம் இரத்தம் வடிய ஒரு பெண் அறையிலிருந்து ஓடி வருகிறாள்….யாரோ ஈனசுரத்தில் "ஆர்த்தி" என்றழைக்கிறார்கள்…..
உடல் எல்லாம் வியர்க்க, அலற முற்பட்ட ஆர்த்தியை வேறு யாரோ உலுக்கினார்கள். "ஆர்த்தி… ஆர்த்தி… என்ன ஆச்சு?"
ஆகாஷின் குரல் தான் அது. தொலைவில் இருந்து கேட்பது போல் இருந்தது. மெல்ல ஆர்த்தி கண்களைத் திறந்தாள். ஆகாஷின் முகம் கவலையோடு அவளைப் பார்த்தது.
அவள் தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்தாலும் அவள் இதயத்துடிப்பு இயல்பு நிலைக்கு வர நிறைய நேரம் ஆயிற்று. "என்ன ஆச்சு ஆர்த்தி? கனவா?"
அவன் கனிவான குரல் கேட்டவுடன் அவள் கண்களில் நீர் பெருகியது. ஆமாம் என்று தலையாட்டினாள்.
"அது தான் கனவுன்னு தெரிஞ்சுடுச்சுல்ல. இனி என்ன?" என்றவன் அவள் தலையை சினேகத்துடன் கோதி விட்டான். தன் அறையில் கம்ப்யூட்டரில் இரவு பன்னிரண்டு வரை வேலை செய்து கொண்டு இருந்தவனுக்கு ஆர்த்தி அறையில் இருந்து லேசான முனகலுடன் வினோத சத்தங்கள் கேட்க என்ன என்று பார்க்க வந்தான். ஆர்த்தி ஏதோ பயங்கரக் கனவு கண்டு கொண்டு இருந்தாள் என்பது மட்டும் அவள் முகத்தில் தெரிந்த பீதியில் இருந்து புரிந்தது. உடனே அவளை எழுப்பினான். எழுந்த பின்னும் அவள் பயம் முழுவதும் விலகி விடவில்லை என்பது அவள் முகத்தைப் பார்க்கையில் தெரிந்தது.
"என்ன ஆர்த்தி?"
அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி அழ அவளுக்குத் தோன்றியது. ஆனாலும் சொல்ல முடியாத தவிப்பில் அழுகை மட்டும் வந்தது. ஆர்த்தியின் துக்கம் ஆகாஷை மிகவும் குழப்பியது. ‘இவள் எதையோ மறைக்கிறாள்’ என்ற எண்ணம் திரும்பவும் பலமாக அவனுள் எழுந்தது.
இதை ஜன்னல் வழியாக மூர்த்தியும் பார்த்துக் கொண்டு இருந்தான். ஆர்த்தியின் படுக்கை அருகே நின்று அவள் தலையை உரிமையோடு ஆகாஷ் கோதிக் கொண்டு நிற்பதைப் பார்க்க அவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
ஆர்த்தியின் அழுகை அதிகமாகவே ஆகாஷ் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். படுக்கையில் உட்கார்ந்து அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு அழ விட்டான். சில நேரங்களில் அழுது ஓய்வதே பெரிய ஆறுதல் என்று எங்கோ படித்த ஞாபகம் நினைவுக்கு வந்தது. சில நிமிடங்களில் அவள் அழுகை நின்றது. கண்களைத் துடைத்துக் கொண்டு "சாரி…" என்றாள்.
ஆகாஷ் கனிவாகச் சொன்னான். "இட்ஸ் ஓகே". சிறிது நேரம் அமைதியாக அவளுடன் அமர்ந்திருந்து விட்டு ஆகாஷ் எழுந்தான். "சரி நீ தூங்கு ஆர்த்தி. ஏதாவது தேவைன்னா என்னைக் கூப்பிடத் தயங்காதே".
அவள் நன்றியுடன் தலையசைத்தாள். அவன் குட் நைட் சொல்லிக் கிளம்பினான். மூர்த்தி அடுத்த நொடியில் அங்கிருந்து மாயமானான். மறு கணம் பாட்டி அறையில் இருந்தான்.
பஞ்சவர்ணம் ஆழ்ந்து தூங்குவது அபூர்வம். எனவே பேரன் உள்ளே வந்தவுடன் கண் விழித்து பேரனைக் கேள்விக்குறியோடு பார்த்தாள். தான் கண்டதை மூர்த்தி விவரமாகச் சொன்னான். எல்லாவற்றையும் விவரமாய்க் கேட்ட பஞ்சவர்ணம் சிறிது நேரம் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு தீர்மானமாகச் சொன்னாள். "ஆர்த்தியும் ஆகாஷூம் இப்படியே நெருங்கிகிட்டு வர்றது ஆபத்து. முதல்ல அவங்களப் பிரிக்கணும். அதே நேரத்துல சிவகாமியைத் திணறடிக்கணும். இதுக்கு ஒரே வழி, நான் ஆர்த்தியோட தாத்தா பாட்டியை உடனடியா சந்திக்கிறது தான். மூர்த்தி, பவானி கிட்ட காலைல முதல் வேலையா என்னை வந்து பார்க்கச் சொல்லு".
மூர்த்தி போய் விட்டான். பஞ்சவர்ணம் பிறகு தூங்கவில்லை. அவள் மனம் நாளைய நடப்புகளைத் திட்டமிட ஆரம்பித்தது.
மறுநாள் அதிகாலையில் தனது அறைக்கதவை பவானி திறந்தவுடன் மூர்த்தி வந்து பாட்டி சொன்னதைச் சொன்னான். பவானிக்கு வியப்பாக இருந்தது. ‘இவன் எத்தனை நேரமாய் இந்தக் கதவருகே நிற்கிறான். கதவைத் திறந்தவுடன் வந்து சொல்லி விட்டுப் போகிறானே’.
பவானியைக் கண்டவுடன் பஞ்சவர்ணம் எதிரே இருந்த சோபாவில் உட்காரச் சைகை செய்தாள். பவானிக்கு லேசாக வயிற்றைக் கலக்கியது. இப்படி உட்காரச் சொல்கிறாள் என்றால் ஏதோ திட்டத்தை விவரிக்கிறாள் என்று பொருள். இப்படி அதிகாலையில் தன்னை அழைத்துச் சொல்லும் திட்டம் என்னவாக இருக்கும் என்று அவளால் ஊகிக்க முடியவில்லை.
"பவானி. ஆர்த்தி ஆகாஷைக் காதலிக்கிறாள்னு தெரியுது. இதை இப்படியே விட்டால் அது அவங்க கல்யாணத்துல போய் முடியும். அப்படி ஒரு கல்யாணம் நடந்தால் சிவகாமியை இனி எப்போதும் யாரும் அசைக்க முடியாதுன்னு ஆயிடும். ஆகாஷ் ஆர்த்தி காதலை முறிக்கவும் சிவகாமியின் அஸ்திவாரத்தையே தகர்த்து எறியவும் ஒரு வழியை நான் யோசிச்சு வச்சிருக்கிறேன்….."
பஞ்சவர்ணம் தன் திட்டத்தை மகளுக்கு விளக்கினாள். "ஆர்த்தியோட பாட்டி தாத்தாவுக்கு மகள் மரணத்துல சந்தேகம் இருக்குங்கறது என்னோட அபிப்பிராயம். அந்தக் கிழவன் சிவகாமி கிட்ட நடந்துகிட்ட முறையைப் பார்த்தா அவன் சிவகாமியைத் தான் சந்தேகப்படறான்னு தெரியுது. ஆகாஷ் மேல் காதல் இருந்தாலும் ஆர்த்திக்கும் சிவகாமி மேல சந்தேகம் இருக்கிற மாதிரி தான் தெரியுது. நம்ம மூர்த்தியும் அவ கிட்ட சில சந்தேகங்களைக் கிளப்பி இருக்கிறான். இது இப்போதைக்கு நமக்கு சாதகமாய் இருக்கிற அம்சம். நீ அந்தக் கிழங்களையும் ஆர்த்தியையும் சிவகாமி ஆபிஸ் போனவுடனே என் கிட்ட கூட்டிகிட்டு வா. அதுக வாயில இருந்து சிவகாமி மேல சந்தேகம்கிறதை நான் எப்படியாவது வரவழைச்சுடறேன். இதை உடனடியா ஆகாஷ் கிட்ட மூர்த்திய விட்டு சொல்லச் சொல்றேன். "ஆர்த்திக்கும் அவங்க தாத்தா பாட்டிக்கும் ஆர்த்தியோட அம்மாவக் கொலை செஞ்சது உங்கம்மா தான்னு சந்தேகம் இருக்கு"ன்னு அவன் ஆகாஷ் கிட்ட தெரிவிக்கட்டும்."
"ஆகாஷூக்கு அவங்கம்மா தெய்வம் மாதிரி. சந்தேகப்பட்ட ஆர்த்தியை வெறுக்க ஆரம்பிச்சுடுவான். உடனடியா போய் அவங்கம்மா கிட்ட சொல்வான். ஒரு பிரளயம் இங்கே வெடிக்கும். இந்த வீட்டுல சிவகாமியை நேரடியா குற்றம் சாட்டுனா என்ன ஆகும்னு பார்க்கலாம். உன் புருஷன் யார் பக்கம் நிப்பான்னு சொல்ல முடியாது. அவன் அக்கா பக்கம் நின்னா ஆர்த்தி ஒதுக்கப்படுவா. அவன் மகள் பக்கம் நின்னா சிவகாமி ஒதுக்கப்படுவா. ரெண்டுமே நமக்கு அனுகூலமே. ஆர்த்தி ஒதுக்கப்பட்டா மூர்த்தி அவ பக்கம் சப்போர்ட்டா இருந்து அவ மனசுல இடம் பிடிக்க வசதியாய் இருக்கும். அந்தக் கிழங்கள இந்த வீட்டுல இருந்து துரத்தவும் வாய்ப்பிருக்கு. அப்படின்னாலும் அவங்களுக்கு ஒரு தனி வீடு பார்த்து சப்போர்ட் செய்தும் மூர்த்தி அவ மனசுல இடம் பிடிக்கலாம். சிவகாமியே ஒதுக்கப்பட்டா அது நமக்கு பெரிய பீடை ஒழிஞ்ச மாதிரி."
"வாழ்க்கைல சந்தர்ப்பத்துக்காக நாம காத்துகிட்டு இருந்தா பல நேரங்கள்ல அது வராது. அதை நாமளே உருவாக்கிக்கறது தான் புத்திசாலித்தனம். என்ன பிரச்சனைகள் வெடிச்சாலும் உன் புருஷன் மனநிலை எப்படி இருக்குன்னு மட்டும் கவனிச்சிகிட்டு இரு. மகள் வந்தப்புறம் மகள் மேல பாசம் அதிகமா வச்சிருக்கிற மாதிரி தான் தெரியுது. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். நீ எப்படியாவது அவங்க மூணு பேரையும் காலைலயே என் கிட்ட கூட்டிகிட்டு வந்துடு".
பவானிக்கு என்ன நடக்கும் என்ற சந்தேகம் சிறிதும் இல்லை. சிவகாமியின் அஸ்திவாரத்தை தகர்க்கும் சக்தி யாருக்கும் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. அப்படியானால் ஒதுக்கப்படப் போகும் நபர்கள் ஆர்த்தியும் அவள் தாத்தா பாட்டியும் தான். ஆர்த்திக்காக அவள் மனதில் பச்சாதாபம் தோன்றியது.
(தொடரும்)