மனிதரில் எத்தனை நிறங்கள்!-79

Great thoughts, great feelings, came to them,
Like instincts, unawares.
– RICHARD MONCKTON MILNES.

சிவகாமி ஆகாஷை ஒருவித எரிச்சலுடன் பார்த்தாள். "நீ ஏன் விஷ் பண்ணப் போகாமல் உட்கார்ந்திருக்கிறாய்?"

ஆகாஷிற்கு அம்மாவிடம் என்ன சொல்வதென்று விளங்கவில்லை. அவன் பதிலுக்குக் காத்திராமல் சிவகாமி சொன்னாள். "அவளைக் கூட்டிகிட்டு வந்தப்ப அவள் கிட்ட உனக்குப் பேசி முடியலை. அவ்வளவு நெருக்கமாய் ஒருத்தி கிட்ட பழகிட்டு இப்ப எல்லாம் ஏதோ முன்பின் தெரியாதவன் மாதிரி நீ நடந்துக்கறதே எனக்கு சரின்னு படலை. சின்ன குழந்தைகள் சண்டை பிடிக்கற மாதிரி இருக்கு. அப்படி உங்களுக்குள்ள என்ன தகராறுன்னும் சொல்ல மாட்டேன்கிறாய். சரி அது உன் தனிப்பட்ட விஷயம். ஆனா இப்படி ஒரு சந்தர்ப்பத்துலயும் நீ இந்த மாதிரி இருக்கறது அநாகரிகமா தோணுது."

ஆகாஷ் ஒன்றும் சொல்லாமல் தாயைப் பார்த்தான். ஒருவேளை அம்மாவிடம் ஆர்த்தியின் சந்தேகத்தைச் சொன்னால் கூட அம்மா அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் இப்போது சொன்னதையே தான் சொல்வாள் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை.

வேறு வழி இல்லாமல் எழுந்தான். எல்லோரும் முன்பே ஒவ்வொரு பரிசுப் பொருள் வாங்கி வைத்திருந்ததால் அதைத் தந்து ஆர்த்தியை வாழ்த்துகிறார்கள். அவனோ அப்படி வாழ்த்தும் எண்ணமே இல்லாததால் வெறுங்கையுடன் வந்திருந்தான். வெகு இயல்பாக தோட்டத்தில் இருந்த ஒரு அழகான சிவப்பு ரோஜாவைக் கிள்ளி எடுத்து ஆர்த்தியை நோக்கி நடந்தான். ‘அவளுக்கு இது போதும்’.

கையில் ரோஜாவுடன் அவனைக் கண்டவுடன் ஆர்த்தியின் முகம் மலர்ந்து கண்கள் விரிந்தன. அவன் வாழ்த்த வருவான் என்ற நம்பிக்கையே அவளிடம் இருந்திருக்கவில்லை.

வாழ்த்து சொல்லி அவன் ரோஜாவை நீட்ட அவள் எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டாள். கைகுலுக்குகையில் இருவர் கண்களும் பூட்டிக் கொண்டன. மின்காந்த அதிர்வுகள் இருவர் உடல்களிலும் பரவ சில வினாடிகள் இருவரும் இடத்தையும் காலத்தையும் மறந்தார்கள். அவள் முகத்தின் பரவசத்திற்கு அவன் தன்னை மறந்து புன்னகைத்து இசைந்தான். அது வரை இருந்த இறுக்கம் சுவடில்லாமல் விலகியது.

நீலகண்டன் தந்த மலிவுப் புடவையில் மகள் மனமகிழ்ந்ததை ரசிக்காத சந்திரசேகர் ஆகாஷின் ரோஜாவில் மகள் மகிழ்ச்சியின் எல்லைக்கே போனதைக் கண்டு நிறையவே சந்தோஷப்பட்டார். என்ன இருந்தாலும் மனதைக் கவர்ந்தவன் தரும் மலருக்கு ஈடு இணை உண்டோ? அருகில் நின்றிருந்த லிஸாவும் இருவரும் மெய் மறந்து நின்றதைக் கூர்மையாகக் கவனித்தாள். ஆகாஷை அவள் சிறு வயதிலிருந்தே அறிவாள். அவன் முக பாவங்கள் அவளுக்கு அத்துப்படி. ஆர்த்தியை அன்று தான் பார்க்கிறாள் என்றாலும் அவள் முகத்தில் அவள் மனதைச் சுலபமாகப் படிக்க முடிந்தது. லிஸாவின் இதய ஆழத்தில் இருந்த ஊமைக்காயத்தில் லேசாக வலி ஆரம்பித்தது…..

ஆகாஷ் தான் இந்த இதயங்களின் லயிப்பில் இருந்து முதலில் மீண்டவன். ஏளனமாக இது போதும் இவளுக்கு என்று தர வந்தவன் அவளது மகிழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை. தானும் அப்படி மெய் மறந்து போனதை அவனால் ஒரு கணம் ஜீரணிக்க முடியவில்லை. வசியம் செய்து விடுவது என்பது இது தானோ? தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கையை விலக்கிக் கொண்டு புன்னகை மாறாமல் திரும்பினான்.

அவன் திரும்பியவுடன் அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த அந்த மின்காந்த இணைப்பு துண்டிக்கப்பட ஆர்த்தியும் சுயநினைவுக்கு வந்தாள். சில வினாடிகளில் நிகழ்ந்தது கனவு தானோ என்று அவள் சந்தேகப்படும்படி ஆகாஷ் ஒன்றுமே நடக்காதது போல் தன் தாயருகே போய் உட்கார்ந்தான்.

"என்ன சந்துரு. இவ்வளவு தானா. பிறந்தநாள்னா கொஞ்சம் பாட்டு டேண்ஸ்னு வேண்டாமா?"

"ஆர்த்தி சிம்பிளா இருக்கணும்னு ஆசைப்பட்டதால நான் வேறெந்த ஏற்பாடும் செய்யலை." சந்திரசேகர் குரலில் அவரது மனத்தாங்கல் தெரிந்தது.

சிவகாமி சொன்னாள். "அதனாலென்ன நம்ம பார்த்தியே நல்லா பாடுவான். பாடு பார்த்தி"

சிவகாமியின் அந்த வார்த்தைகள் அமிர்தத்தின் முகத்தில் மின்னல் ஒளியை வர வைத்ததை ஆர்த்தி கவனித்தாள். மகனைப் பற்றி அக்கா உயர்வாகச் சொன்னதில் அமிர்தத்திற்கு எக்கச்சக்க மகிழ்ச்சி.

"ஆகாஷ், நீயும் வயலின் வாசிச்சு எத்தனை காலமாச்சு. நீயும் பார்த்தியும் தான் இந்த சாயங்கால நேரத்தை மறக்க முடியாததாய் செய்யணும்" சந்திரசேகர் ஆர்வத்துடன் சொன்னார்.

ஆகாஷ் சிறு தயக்கத்திற்குப் பிறகு எழுந்து போய் வயலினுடன் வந்தான். பார்த்திபன் நன்றாகப் பாடுவான் என்பதும், ஆகாஷ் நன்றாக வயலின் வாசிப்பான் என்பதும் ஆர்த்தி அப்போது தான் அறியும் விஷயங்கள். ஆர்த்தி எதிர்பார்ப்புடன் அவர்கள் இருவரையும் பார்த்தாள்.

"பார்த்தி நல்ல பாட்டா பாடுப்பா" என்று சங்கரன் சொன்னார்.

ஆகாஷ் குறும்பாகத் தந்தையிடம் கேட்டான். "அப்பா, தொட்டபெட்டா ரோட்டிலொரு முட்ட பரோட்டா மாதிரி நல்ல அர்த்தமுள்ள பாட்டா பாடச்சொல்லவா?"

அங்கே ஒரு சிரிப்பலை எழ சங்கரன் சிவகாமியைப் பொய்க் கோபத்துடன் பார்த்தார். "என்ன சிவகாமி இது?"

"எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம் தான் வேறென்ன?"

பஞ்சவர்ணம் அந்தக் கலகலப்பில் கலக்காமல் எழுந்து வீட்டை நோக்கி நடந்தாள். அந்தச் சிரிப்பலை அவள் இதயத்தில் திராவகத்தை ஊற்றியது. அங்கு இருக்கப் பிடிக்காவிட்டாலும் நடக்கும் கூத்தை தனதறையில் இருந்தே பார்க்க நினைத்தாள்.

பார்த்திபன் பாட ஆரம்பிக்க ஆகாஷ் வயலின் வாசித்தான். பழைய பாடல்களையும் புதிய பாடல்களையும் மாறி மாறிப் பாடிய பார்த்திபனின் குரல் ஜேசுதாசின் குரல் போல இனிமையாக இருந்தது. ஆகாஷின் வயலின் இசையும் அருமையாய் இருக்க இசை வெள்ளத்தில் எல்லோரும் மிதக்க ஆரம்பித்தார்கள்.

மூர்த்தி வழக்கம் போல மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே அமர்ந்திருந்தான். மூர்த்தியைத் தவிர எல்லோரும் ஆகாஷையும், பார்த்திபனையும் நெருங்கி அமர்ந்து பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஆர்த்தியும் தன்னையும் தன் பிரச்சனைகளையும் மறந்து இசையில் மூழ்கிப் போனாள். ஒரு கணம் இங்கு எல்லாமே அன்பினால் இணைக்கப்பட்ட பந்தமாகத் தோன்றியது. மனம் லேசாக அவள் இசையில் மூழ்கினாள்.

அதே நேரத்தில் தொலைவில் தோட்டத்தின் விளக்குகளின் வெளிச்சம் எட்டாத இருட்டில் அசோக் என்ற பெயரால் மூர்த்திக்கு அறிமுகமானவன் மறைந்திருந்து அங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை ப்ரசன்னா என்ற டாக்டரின் க்ளினிக்கில் புதன் கிழமைக்கு மேல் தான் ஆரம்பமாகின்றது என்றாலும் சில விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்திருப்பது என்றுமே நல்லது என்பது அவனுடைய தீவிர நம்பிக்கை.

பஞ்சவர்ணம் அங்கிருந்து போகும் வரை ஒரு இடத்தில் நின்றவன் அவள் மேலே சென்று தனதறை ஜன்னல் வழியாக பிறந்த நாள் நிகழ்ச்சிகளைக் கவனிக்க ஆரம்பித்தவுடன் சத்தமில்லாமல் இடம் மாறி நின்றான். முந்தைய இடம் கூர்ந்து கவனித்தால் பஞ்சவர்ணம் கண்களில் பட்டுவிடக்கூடிய இடம்.

உன்னிப்பாக ஒவ்வொருவரையும் கவனித்து வந்த அசோக்கின் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தது வீடியோகிராபர் தான். அந்த வீடியோகிராபர் அந்த பிறந்த நாள் விழாவைப் படம் எடுக்க வந்தவனாகத் தெரியவில்லை. மாறாக ஆர்த்தியை மட்டுமே வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான். பாடும் பார்த்திபனையும், வயலின் வாசிக்கும் ஆகாஷையும் நோக்கிக் கூட வீடியோ திரும்பாதது அசோக்கிற்கு இயல்பானதாகத் தெரியவில்லை. வீடியோக்காரனின் நடவடிக்கை அவனுள் பெருத்த சந்தேகத்தைக் கிளப்ப ஆர்த்தியைக் கூர்மையாகப் பார்த்தான்.

அவள் ஆகாஷையே பார்த்தபடி இசையின் உதவியுடன் உலகையே மறந்து உட்கார்ந்திருந்தாள். அந்த வீடியோக்காரனின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையை அறியாமல் அமர்ந்திருந்த அந்த அப்பாவிப் பெண்ணைச் சுற்றி நிறைய மர்மம் சூழ்ந்திருப்பதாக அசோக்கிற்குத் தோன்றியது.

அந்த வீடியோக்காரன் யாரும் குறிப்பாகச் சொல்லியிருக்காமல் இப்படி வீடியோ எடுத்துக் கொண்டிருக்க மாட்டான் என்பதில் அசோக்கிற்கு சந்தேகமில்லை. யார் சொல்லியிருப்பார்கள் என்பதை விட ஏன் அப்படிச் சொன்னார்கள் என்பது முக்கியமானது என்று அவனுக்குத் தோன்றியது.

(தொடரும்)

About The Author