மனிதரில் எத்தனை நிறங்கள்! (32)

If you have tears, prepare to shed them now.
-William Shakespeare

பஞ்சவர்ணம் மூர்த்தி வரும் வரை நிலை கொள்ளாமல் காத்துக் கொண்டு இருந்தாள். "என்ன வேலை இது? இன்னும் வரலை. என் திட்டம் கை கூடினா இந்த பாழாப் போன வேலைக்கெல்லாம் இவன் போக வேண்டி இருக்காது. ஆயிரக்கணக்கானவங்களை வேலை வாங்கிகிட்டு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து அதிகாரம் செஞ்சுகிட்டு இருக்கலாம்…. இவன் வந்தவுடனேயே அந்த மூணு பேரு கிட்டயும் போய் பேச வைக்கணும். அந்தக் கிழவி மனசுல இருக்கற சந்தேகத்தை முழுசா நீக்கிடணும். ….. அந்தக் கிழவி என்னமா என்னையே மிரட்டிட்டுப் போறா. சரியான ராங்கிக்காரி. அது தான் அப்படியே அவ மகளுக்கும் வந்திருந்தது. அவளும் ஒரு காலத்துல என்னமா ஆடுனா…"

மூர்த்தி அன்று ஒரு மணி நேரம் தாமதமாக வந்தான்.

"ஏண்டா லேட்?"

"வேலை இன்னைக்கு ஜாஸ்தி"

"எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். அது வரைக்கும் பொறுத்துக்கோடா மூர்த்தி. என் திட்டப்படி நீ அந்த ஆர்த்தி கழுத்தில ஒரு தாலியைக் கட்டிட்டா அப்புறம் நாம வச்சது தான் சட்டம்…. அதை விடு. இப்ப முக்கியமான ஒரு கட்டத்துல நாம் இருக்கோம். அந்தக் கிழவி கிட்டத்தட்ட நம்ம திட்டத்தைக் கண்டு பிடிக்கற அளவுக்கு வந்துட்டா. அப்புறம் நான் அந்தக் கிழவியோட சந்தேகத்தைக் குறைக்க சமாளிக்க வேண்டியதாப் போச்சு. நீ இப்ப என்ன செய்யறேன்னா…" – பேரன் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்தாள்.

மூர்த்தி தன் பாட்டி சொன்னதைக் கவனமாகக் கேட்டு விட்டுக் கிளம்பினான். ஆர்த்தியின் அறையில் எட்டிப் பர்த்தான். அங்கு அவள் இல்லை. பாட்டி தாத்தாவுடன் தான் இருப்பாள் என்று நினைத்தவனாக பக்கத்து அறையை எட்டிப் பார்த்தான். ஆகாஷ் தன் கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தான். இன்னேரம் அவன் சோகக்கடலில் மூழ்கி இருந்தால் மூர்த்திக்கு ஆனந்தமாக இருந்திருக்கும். ஆனால் சிவகாமியின் மகன் எதுவுமே நடக்காதது போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தது மூர்த்தியை மிகவும் பாதித்தது. சரியான அழுத்தக்காரன்….

மூர்த்தி சோகத்தை முகத்திலும், லேசாகக் கண்ணீரை கண்களிலும் தேக்கிக் கொண்டு நீலகண்டன் தம்பதிக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்குள் நுழைந்தான். நேராக நீலகண்டன் காலில் சென்று விழுந்தான். "என்னை மன்னிச்சுடுங்க"

நீலகண்டன் பதற்றத்துடன் அவனை எழுப்ப முயன்றார். "ஐயோ என்ன தம்பி இதெல்லாம்… முதல்ல எழுந்திரு"

"முதல்ல மன்னிச்சேன்னு சொல்லுங்க"

"சரி… மன்னிச்சேன்… எழுந்திரு"

கண்களில் நீர் மல்க அவர்கள் மூவரையும் பார்த்தான். "சத்தியமா நான் என்னோட கட்டுப்பாட்டுல இன்னைக்குக் காலைல இருக்கலை. காரணம் எனக்கு சின்னதுல இருந்தே அநியாயத்தை எங்கே பார்த்தாலும் சகிச்சுக்க முடிஞ்சதில்லை. சின்னதுலயே அப்பா அம்மாவை விபத்துல இழந்துட்டேன். அது விதி. ஆனா ஆர்த்தி தன்னோட அம்மாவை இழந்ததுக்கு விதி காரணம் இல்லை. ஒருத்தியோட சதி தான் காரணம். அதுவும் உங்களால கடைசியில் செத்துப்போன அவங்க முகத்தைக் கூட பார்க்க முடியலைங்கறதைக் கேட்டதும் ரத்தம் கொதிச்சுடுச்சு. அந்தம்மா கிட்ட போய் கேட்க முடியலை. என்ன செய்யறதுன்னு தெரியாம ஆகாஷ் கிட்ட போய் கேட்டேன். "உங்கம்மா இந்த மாதிரி செஞ்சுட்டாங்களே இது நியாயமான்னு நீயே சொல்லு"ன்னு. ஆனா எங்க பாட்டி திட்டினப்ப தான் எனக்கு என்னோட தப்பு உறைச்சுது….. நீங்க எங்களோட நோக்கத்தையே சந்தேகப்படறீங்கன்னு தெரிஞ்சப்ப என்னை வெட்டிப் போட்ட மாதிரி இருந்துச்சு. என் முட்டாள்தனத்துக்கு நீங்க என்ன தண்டனை தந்தாலும் ஏத்துக்கறேன்…."

அவன் தலை குனிந்து நின்றான். அவன் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது.

நீலகண்டனும் ஆர்த்தியும் அவனைக் கண்டு மனம் இளகினார்கள். உணர்ச்சியால் உந்தப்பட்டு ஒரு முட்டாள்தனமான செயல் செய்த பாவப்பட்ட நல்ல மனதுடைய இளைஞனாக அவன் அவர்களுக்குத் தெரிந்தான். பார்வதி மட்டும் சந்தேகக் கண்ணோடு அவனைப் பார்த்தாள்.

"தண்டனை எல்லாம் வேண்டாம். இனியொரு தடவை இந்த மாதிரி யார் கிட்டயும் சொல்லாமல் இரு போதும்"

பார்வதியின் பக்கம் திரும்பிய மூர்த்தி கைகள் கூப்பி சொன்னான். "வாயே திறக்க மாட்டேன். இப்ப வேணும்னா போய் ஆகாஷ் கிட்ட இதெல்லாம் அவங்க சொன்னதில்லை, நானா ஜோடிச்சு சொன்னதுன்னு சொல்லவும் தயாராய் இருக்கேன். நீங்க வேணும்னா என் கூட வாங்க. உங்க முன்னாடியே நான் சொல்றேன்"

கொஞ்ச நஞ்ச சந்தேகம் இருந்திருக்குமானால் அதையும் நீலகண்டன், ஆர்த்தி மனதிலிருந்து மூர்த்தி நீக்கி விட்டான். பார்வதியின் சந்தேகம் ஓரளவு குறைந்தது. "அதெல்லாம் வேண்டாம்" என்றாள். அதனால் ஒரு பயனும் இல்லை என்று அவளுக்குத் தெரியும்.

மூர்த்தி ஆர்த்தி பக்கம் திரும்பினான். இன்னொரு முறை "சாரி ஆர்த்தி. உன்னோட இப்போதைய நிலைமை தெரியாமல் இப்படி ஒரு முட்டாள் தனம் செஞ்சுட்டேன்."

ஆர்த்தி பரவாயில்லை என்று தலையசைத்தாள். மூர்த்தி குரல் கரகரக்க சொன்னான். "இன்னொரு தடவை நீங்க என்னைப் பார்க்கிறப்ப சகஜமாய் பழகணும். அது தான் நீங்க என்னை மன்னிச்சுட்டதுக்கு அடையாளம்னு நான் நினைப்பேன்". சொல்லி விட்டுப் போய் விட்டான்.

நீலகண்டன் மனைவியைக் கடிந்து கொண்டார். "இவ்வளவு நேரம் அவனைக் கரிச்சுக் கொட்டிகிட்டு இருந்தியே. இப்ப புரியுதா அந்தப் பையன் கிட்ட அப்படித் தப்பு எண்ணம் இல்லைன்னு"

பார்வதி யோசனையுடன் சொன்னாள். "எனக்கு இப்பவும் முழு சந்தேகமும் போயிடலை. அழற ஆம்பிளையை எப்பவுமே நம்பக்கூடாது…."

*******

சிவகாமி அந்த இரண்டு டைரிகளையும் திறக்காமல் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனந்தியின் பீரோவில் இருந்து எடுத்து வந்த அந்த டைரிகளைப் படிக்க மனம் வரவில்லை. என்ன எழுதி இருப்பாள் என்று தெரியும். அறை மூலையில் குளிரைத் தணிக்க எரிந்து கொண்டிருந்த நெருப்பைப் பார்க்க ஆரம்பித்தாள். மனம் ஆனந்தியைச் சுற்றியே வட்டமிட்டது….

பல ஆண்டுகளுக்கு முன் சிவகாமி ஆனந்தியிடம் கேட்டிருக்கிறாள். "நீ ஏன் விடாமல் டைரி எழுதிகிட்டு வர்றே"

"அந்தந்த சமயங்கள்ல எப்படி ஃபீல் செய்கிறோம்கிறது நமக்கே நிறைய காலம் கழிச்சு ஞாபகம் முழுசா இருக்கிறது இல்லைக்கா. சம்பவம் நினைவுக்கு வரும், ஒட்டு மொத்தமாய் அதை நாம் நினைச்ச விதம் ஞாபகம் வரும். இப்படி எழுதி வச்சா படிக்கறப்ப நாம அந்த நாள் வாழ்க்கையை இன்னொரு தடவை வாழ்கிற மாதிரி தோணும். அதனால தான் எழுதறேன்…."

"சந்தோஷமான சமயங்கள் சரி. துக்கமானதைக் கூட எழுதுவியா?"

"ஆமாக்கா. அதை எழுதறது பின்னால் படிக்கறதுக்கல்ல. அதை எழுதியவுடனேயே மனசு பாரம் குறைஞ்சு லேசாயிடும். அதுக்காகத் தான் நான் அதையும் எழுதறது"

எல்லாவற்றையும் அவள் இதில் எழுதி இருப்பாள் என்பதில் சிவகாமிக்கு சந்தேகம் இல்லை. இதை எல்லாம் யாரும் இன்னொரு முறை படிக்கத் தேவையில்லை என்று சிவகாமி எண்ணினாள். ஏனென்றால் எழுதிய ஆனந்தியே கூட மனதின் பாரம் குறைய தான் இதை எழுதினாளே ஒழிய பின்னால் இன்னொரு முறை படிப்பதற்கல்ல. நிதானமாக சிவகாமி அந்த இரண்டு டைரிகளையும் எடுத்து அறையின் மூலையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டாள். ஆனந்தியின் எழுத்துகள் எரிந்து சாம்பலாக ஆரம்பித்தன. இனி யாரும் அதைப் படிக்கப் போவதில்லை.

(தொடரும்)

About The Author