மனிதரில் எத்தனை நிறங்கள்! (31)

Things don’t turn up in this world until somebody turns them up.—GARFIELD

பார்வதி சொன்னாள். "அப்படி இன்னொரு தடவை இந்தப் பேச்சு அடிபடாமல் நான் பார்த்துக்கறேன், ஆகாஷ்"

"எப்படி?"

"நான் பஞ்சவர்ணம் கிட்ட பேசறேன். அதைப் பத்தி நீ யோசிக்காதே. நீ மட்டும் இதைப் பத்தி அம்மா கிட்ட சொல்லாம இருந்தால் போதும்"

ஆகாஷ் அரை மனதோடு தலையசைத்தான். ஆனால் பார்வதி போய் பஞ்சவர்ணத்தின் வாயை மூட முடியும் என்று அவன் நம்பவில்லை.

"ரொம்ப நன்றிப்பா" என்று சொல்லி அவன் மனம் மாறும் முன் அங்கிருந்து கிளம்பத் தயாரானாள். போகையில் குரல் கரகரக்கச் சொன்னாள். "ஆகாஷ் ஆர்த்தியை வெறுத்துடாதேப்பா".

"வெறுப்பு கூட ஒரு பந்தம் தான் பாட்டி. அதனால் நான் அதைக் கூட உங்க பேத்தி மேல் வச்சுக்க விரும்பலை…"

வார்த்தைகள் தீப்பிழம்பாகத் தாக்க கனத்த இதயத்துடன் பார்வதி அங்கிருந்து நகர்ந்தாள். ஆனால் அவளுக்கு இப்போது வருத்தப்படக் கூட நேரம் இல்லை. ஆகாஷ் சொன்னது போல் பஞ்சவர்ணம் பேரனை விட்டு ஒவ்வொருவரிடமாக இவர்கள் சொல்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு வரலாம். அதை நிறுத்த அவள் கண்டிப்பாகப் பஞ்சவர்ணத்திடம் பேசியாக வேண்டும். பார்வதி வேகமாக பஞ்சவர்ணத்தின் அறைக்குச் சென்றாள்.

பஞ்சவர்ணம் வெடிப்பட்டாசிற்குத் தீ வைத்து விட்டு அது வெடிக்கக் காத்திருக்கும் சிறுவனைப் போல பரபரப்பாகக் காத்துக் கொண்டு இருந்தாள். ஆகாஷ் எப்போது தாயிடம் சொல்வான் சிவகாமியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும், இந்தக் குழப்பத்தில் குளிர் காய்வது எப்படி என்று யோசித்து அவ்வப்போது என்ன ஆனால் எந்த விதத்தில் அனுகூலம் என்றெல்லாம் தன் மகள் பவானியிடம் மெல்லிய குரலில் விவரித்துக் கொண்டு இருந்தாள். பவானி பள்ளி முடியப் போகும் நேரத்தில் கஷ்டமான பாடம் நடத்தத் துவங்கிய ஆசிரியையைப் பார்க்கும் மாணவி போல் தாயைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். ஒரு காலத்தில் தாயின் பரபரப்பும் ஆர்வமும் அவளையும் தொத்திக் கொண்டு இருக்கும். இப்போதெல்லாம் அவளுக்கு சலிப்பு தான் மிஞ்சுகிறது…..

பார்வதி உள்ளே நுழைந்ததைக் கண்ட பஞ்சவர்ணம் "வாங்க வாங்க" என்று வாயார வரவேற்றாள். "உட்காருங்க"

பார்வதி உட்காரவில்லை. "கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நாம பேசிகிட்டு இருந்ததை நாங்க மட்டும் சொன்னதாய் ஆகாஷ் கிட்ட உடனடியா யாரோ போய் சொல்லி இருக்கிறாங்க. அவன் கிட்ட போய் சொன்னது நாங்க இல்லை. அதனால ஒன்னு நீங்க இல்லைன்னா உங்க பேரன் தான் சொல்லி இருக்கணும். இதுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு விளங்கலை…."

பஞ்சவர்ணம் நிஜமாகவே திடுக்கிட்டாள். இந்த விஷயம் இவ்வளவு சீக்கிரம் பார்வதி காதில் எட்டியதில் கூட அவளுக்கு திகைப்பு இல்லை, அதைத் தைரியமாக உடனடியாகத் தன்னிடம் நேரடியாக வந்து கேட்கும் அளவுக்கு பார்வதி உஷாராக இருப்பாள் என்று அவள் கணித்திருக்கவில்லை. கணவனை விட மனைவி புத்திசாலி என்று மட்டுமே அவள் கணித்திருந்தாள். மனிதர்களைக் கணிப்பதில் அவள் அறிவுக்கூர்மை என்றுமே சோடை போனதில்லை என்றாலும் பார்வதியை முழுமையாக கணிக்க அவளுக்குப் போதுமான காலம் கிடைக்கவில்லை என்பதால் தான் இந்த நேரடி குற்றச்சாட்டை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட பஞ்சவர்ணம் தன் நடிப்புத் திறமையை மிக அழகாக வெளிப்படுத்தினாள். "சிவசிவா…. நீங்க என்ன சொல்றீங்கன்னே தெரியலை. நான் இந்த ரூமை விட்டு வெளியே போறதில்லைன்னு உங்களுக்கே தெரியும்"

"அப்படின்னா உங்க பேரன் சொன்னானா?" -பார்வதி விடவில்லை.

"ஒரே நிமிஷம் இருங்க. உங்க சந்தேகத்தை இப்பவே நிவர்த்தி செய்துடறேன். பவானி மூர்த்திக்கு உன் செல்லுல ஒரு போன் இப்பவே போடு"

பவானி இந்த நேரத்தில் தான் இங்கே இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்து மௌனமாக மூர்த்திக்கு செல்லில் போன் போட்டு தாயிடம் கொடுத்தாள்.

"ஏண்டா மூர்த்தி இன்னைக்குக் காலைல நாம பேசினதை நீ போய் ஆகாஷ் கிட்ட சொன்னாயா….. என்ன…. உனக்கு மனசு கொதிச்சிப் போய் தாங்காம அவன் கிட்ட போய் கேட்டுட்டியா…ஏண்டா கடவுள் உனக்கு மூளையே வைக்கலையா… நீ கிறுக்குத் தனமா இப்படி செய்யப்போய் ஆர்த்தியோட பாட்டி நாம வேணும்னே அவங்க வாயைக் கிளறி உடனடியா போய் ஆகாஷ் கிட்ட சொல்லிட்டதா சந்தேகப்படறாங்க. அவங்க மேல என்னடா தப்பு, அவங்க இடத்துல நான் இருந்திருந்தாலும் அப்படித் தான் நினைப்பேன். ஆள் வளர்ந்திருக்கியே தவிர அறிவு வளரலையே. நீ நேருல வா பேசிக்கறேன்.."

பஞ்சவர்ணம் பார்வதியிடம் உருக்கமாய் சொன்னாள். "நீங்க சொன்னது வாஸ்தவம் தான். இந்த மூர்த்தி தடியன் தான் போய் சொல்லி இருக்கிறான். அவனை சூதுவாது தெரியாமலேயே வளர்த்துட்டதோட விளைவு தான் இதெல்லாம். இங்க பேசினதை எல்லாம் கேட்டு மனசு கொதிச்சுப் போயிட்டானாம். சிவகாமி கிட்ட போய் கேட்க தைரியம் இல்லை. அதனால தன் வயசு இருக்கிற ஆகாஷ் கிட்ட போய் நியாயம் கேட்டுருக்கான். நான் சொன்னதுக்கப்புறம் தான் இப்படிப் போய் சொல்லி இருக்கக் கூடாதுன்னு ஃபீல் செய்யறான்…. அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்….."

‘திரைக்கதை, நடிப்பு, வசனம், டைரக்ஷன் எல்லாமே அம்மா தான்’ என்று இந்த இக்கட்டான சூழ்நிலையை புத்திசாலித்தனமாக சமாளித்த பஞ்சவர்ணத்தைப் பார்த்து பவானி மனதிற்குள் சபாஷ் போட்டாள்.

பார்வதிக்கும் பஞ்சவர்ணம் சொன்னது யதார்த்தமாகவே பட்டது என்றாலும் எங்கோ இடித்தது. மேற்கொண்டு அதைப் பற்றி சிந்திக்காமல் விஷயத்திற்கு வந்தாள். "மன்னிப்பு எல்லாம் வேண்டாம். ஆனா இன்னொரு தடவை உங்க பேரனை மனசு கொதிக்காம இருக்கச் சொல்லுங்க. ஆகாஷைக் கெஞ்சிக் கூத்தாடி அவங்க அம்மா கிட்ட இந்த விஷயத்தைப் பத்திப் பேசாமல் இருக்க ஒத்துக்க வச்சிருக்கேன். இன்னொரு தடவை உங்க பேரன் இதை வேற யாரு கிட்டயாவது போய் சொன்னான்னு தெரிஞ்சா நானாகவே நேரா சிவகாமி கிட்ட போய் இது நாங்க சொன்னதல்ல அவனாவே கற்பனை செஞ்சு நாங்க சொன்னதாய் சொல்லி வதந்தியைப் பரப்பிகிட்டு இருக்கிறான்னு சொல்லிடுவேன். வேணும்னா கற்பூரம் அணைச்சு சத்தியம் செய்யவும் நான் தயாராய் இருப்பேன். என் புருஷனும் பேத்தியும் நான் அந்த அளவுக்குப் போனதுக்கப்புறம் மறுத்துப் பேசவோ என்னை விட்டுக் கொடுக்கவோ மாட்டாங்க"

பவானி பார்வதியை பிரமிப்புடன் பார்த்தாள். மிகவும் பாவமாகத் தெரிந்த இந்தப் பெண்மணி இவ்வளவு ஆணித்தரமாகப் பேசி தன் தாயிற்கு செக்மேட் வைப்பாள் என்று இன்னும் அவளால் நம்ப முடியவில்லை. ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.

பஞ்சவர்ணம் கூட இதை எதிர்பார்க்காததால் அதிர்ந்து போனாள் என்றாலும் அதை வெளியில் காண்பிக்காமல் பார்வதியைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

பார்வதி தொடர்ந்தாள். "என்னடா இப்படிப் பேசறாளேன்னு நீங்க நினைக்கக் கூடாது. என் சூழ்நிலை அந்த மாதிரி. நான் இங்க சண்டை கட்டவோ, மகளைக் கொன்னது யாருன்னு தெரிஞ்சு பழி வாங்கவோ வரலை. மேலே ஒருத்தன் இருக்கான். அவன் கோர்ட்டுல இருந்து கொலை செஞ்சவங்க தப்ப முடியாது. என் இப்போதைய கவலை எல்லாம் என் பேத்தி நிம்மதியா பாதுகாப்பா இருக்கணும். அவ்வளவு தான். இந்த வீட்டுல சிவகாமியைப் பகைச்சுகிட்டு அது முடியாது. அதனால அவளை எதிர்த்துக்கற எந்த விளையாட்டுலயும் நான் இல்லை…"

பஞ்சவர்ணம் மிகவும் பரிவு காட்டி சொன்னாள். "நீங்க எங்களைத் தப்பா புரிஞ்சுகிட்டீங்கன்னு நினைக்கறேன். எல்லாம் அந்த தடியனோட முட்டாள்தனம் தான் காரணம். இனிமேல் இப்படி அவன் வாயில் இருந்து வராமல் நான் பார்த்துக்கறேன்."

பார்வதி அங்கிருந்து கிளம்பிய போது உடலில் இருந்து அத்தனை சக்தியும் வெளியேறி விட்டது போன்ற களைப்பு அவளுக்கு ஏற்பட்டது.

அவள் போன பின் பஞ்சவர்ணம் மகளிடம் சொன்னாள். "இந்தப் பாண்டிச்சேரி கிழவி இவ்வளவு ராங்கி பிடிச்சவளா இருப்பான்னு நான் நினைக்கலை. சரி பரவாயில்லை. நான் நினைச்ச மாதிரி முழுசும் நடக்காட்டியும் முக்கால் வாசி நடந்துருக்கு பவானி. ஆகாஷையும் ஆர்த்தியையும் பிரிச்சாச்சு. என் கணிப்பு சரியா இருந்தா ஆகாஷ் இந்தக் கிழவி கெஞ்சலுக்கு ஒத்துகிட்டு அம்மா கிட்ட சொல்லாம இருந்தாலும் அம்மா கிட்ட தான் கேட்கற மாதிரியாவது துருவித் துருவி அந்த ஆனந்தி கொலை பத்திக் கேட்காம இருக்க மாட்டான். அம்மான்னா தெய்வம்னு நினைச்சுகிட்டு இருந்த மகன் சந்தேகப்பட ஆரம்பிக்கறதை விட அந்த சிவகாமிக்கு தண்டனை என்னடி வேணும். இன்னைக்கு வெடிக்காட்டியும் இந்த வெடி என்னைக்காவது ஒரு நாள் வெடிக்கும்."

(தொடரும்)

About The Author