மனிதரில் எத்தனை நிறங்கள்! (76)

Prosperity is dependent on having more love in your life.
– Jo Stevens

ஆர்த்தியின் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடுவது என்று முடிவெடுத்திருந்தாலும் அவளுக்குப் பரிசுப் பொருள் வாங்குவதில் வீட்டார் மும்முரமாக இருந்தார்கள். சந்திரசேகர் வைரத்தில் நெக்லஸ், கம்மல், வளையல் செட் வாங்கி வைத்தார். அமிர்தம் இரண்டு தங்க வளையல்கள், சிவகாமி நெக்லஸ், பஞ்சவர்ணம் ஒரு விலை உயர்ந்த கைக்கடிகாரம் என்று வாங்கி இருந்தனர். டேவிட் மேரி தம்பதியர் பட்டுச் சேலை வாங்கி வைத்திருந்தனர்.

இப்படி மற்றவர்கள் வாங்கி வைத்த பரிசுப் பொருள்களின் விவரம் நீலகண்டன்-பார்வதி தம்பதியர் காதில் விழுந்தது. நீலகண்டன் மனைவியிடம் சொன்னார். "எல்லாரும் இப்படி வாங்கித் தர்றப்ப நாம மட்டும் விலை உயர்ந்த பொருள் ஏதாவது வாங்கித் தரலைன்னா அது நல்லா இருக்குமா பார்வதி"

"இதெல்லாம் சமுத்திரத்தில் ஒரு குடம் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டற மாதிரி. கோடிக் கணக்கில் சொத்து வந்து சேர்ந்திருக்கிற இந்த நேரத்தில் அவளுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா?"

"அதுக்கில்லை பார்வதி. எல்லாரும் என்னென்னவோ தர்றப்ப நாம குறைச்சலா தர்றது ஆர்த்திக்கு ஒரு மாதிரியா தோணாதா?"

"அது நாம வளர்த்த பொண்ணுங்க. அப்படியெல்லாம் நினைக்காது. அப்படியும் போடறதுன்னா என்னோட இந்த ரெண்டு தங்க வளையலை அழிச்சு ஏதாவது தர்றதுன்னா தரலாம். ஆனா அவள் கல்யாணத்துக்கு நாம் ஏதாவது செய்யணுமில்லையா, அதுக்கு இதை அழிக்கலாம்னு பார்க்கறேன்"

நீலகண்டன் ஒருவித இயலாமையுடன் மனைவியைப் பார்த்தார். அந்தத் தங்க வளையல்களையும் எடுத்து விட்டால் காது மூக்கில் உள்ள சில்லறைத் தங்கம் தவிர அவளிடம் வேறு தங்கம் இல்லை. எத்தனையோ விஷயங்களுக்காக அவரிடம் சண்டை போடும் பார்வதி ஒரு முறை கூட தங்கம், சேலை, பொருள்கள் வேண்டும் என்று சண்டை போட்டதில்லை. இல்லை என்று ஆதங்கப்பட்டதில்லை.

"உனக்கு நான் நகை எதுவும் செய்து தந்ததில்லை, இருக்கிறதையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிச்சுடறேனேன்னு உனக்கு என் மேல் வருத்தம் இல்லையே.." சொல்கையில் அவர் குரல் கரகரத்தது.

பார்வதிக்குக் கணவன் அப்படிக் கேட்டது மனதை நெகிழ வைத்தது. "இந்த வயசுல பூவும் பொட்டும் வச்சுக்கற பாக்கியத்தை எனக்குத் தந்திருக்கீங்க. அதுக்கும் மேலே எனக்கு என்னங்க வேணும்?"

கண்ணில் திரை போட்ட நீரை மனைவிக்குத் தெரியாமல் மறைக்க வேறு பக்கம் முகத்தைத் திருப்பி கிழவர் முயற்சி செய்தார். ஒரு நிமிடம் கழித்துக் கேட்டார். "அப்படின்னா அந்த வளையல் அவள் கல்யாணத்தப்ப அழிச்சிக்கலாம். நாளைக்கு அவள் பிறந்த நாளுக்கு என்ன தர்றது"

"ஏதாவது ஒரு சேலை வாங்கித் தரலாம். போதும். நம்ம பேத்தி நாம என்ன வாங்கித் தந்தாலும் சந்தோஷமாய் ஏத்துக்குவா"

வார்த்தையின்றி நீலகண்டன் தலையசைத்தார். இது வரை வெளியில் எங்கே போவதானாலும் அங்கிருக்கும் கார்களில் ஒன்றில் தான் போவார்கள். ஊட்டியில் பெரும்பாலான கடைக்காரர்களுக்கு சிவகாமி வீட்டுக் கார்கள் அடையாளம் தெரியும். அப்படி இருக்கையில் அவர்கள் காரில் போய் இறங்கி ஒரு ஜவுளிக்கடையில் சாதாரண சேலை எடுத்தால் அது நன்றாக இருக்காது என்று தோன்றியது. ஆயிரம் தான் சொன்னாலும் சில சந்தர்ப்பங்களில் ஏழ்மை ஒரு மனிதனை நிறையவே தர்மசங்கடப்படுத்துகிறது என்று அவர் நினைத்துக் கொண்டார். கடைசியில் வாக்கிங் போவதாய் சொல்லிப் போய் சேலை வாங்கி வருவது என்று கணவனும் மனைவியும் முடிவு செய்தார்கள்.

தே நேரத்தில் சந்திரசேகர் டேவிடிடம் சொல்லிக் கொண்டிருந்தார். "….இந்தப் பிறந்த நாள் விழாவுக்கு வெளியாள் யாரையும் கூப்பிடறதில்லை, டேவிட். நாம மட்டும் தான். உன் மகள் லிஸாவும் வந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் டேவிட். ஆர்த்திக்கு அவள் வயசுல ஒரு தோழி அமைஞ்சா கொஞ்சம் மனசு விட்டு அவள் கிட்ட பேசுவாள், சந்தோஷமாய் இருப்பாள்னு தோணுது."

டேவிட் முகம் வாடியது. "கூப்பிட்டு கூப்பிட்டு நான் சலிச்சுட்டேன் சந்துரு. இனி பிரசவத்துக்குத் தான் வருவேன்னு பிடிவாதமாய் சொல்றாள். என்ன செய்யறது?"

"நான் கூப்பிட்டுப் பேசி அவளை வரவழைக்கிறேன் பார். அக்கா ஒரு முடிவு செஞ்சுட்டா அதை சாதிக்காம விடமாட்டா. அவள் தம்பியில்லையா நான், அந்த சாமர்த்தியத்தில் எனக்குக் கொஞ்சமாவது வராமல் போகுமா என்ன?….." என்றவர் அப்போதே தன் செல் போனை எடுத்தார்.

"ஹலோ லிஸா. நான் சந்துரு பேசறேன். எப்படிம்மா இருக்கிறாய்?"

"சந்துரு அங்கிள் நான் நல்லா இருக்கேன். அதிசயமாய் போன் செஞ்சுருக்கீங்க. எல்லாம் சௌக்கியம் தானே"

"சௌக்கியம் தான். என் மகள் ஆர்த்தி வந்துருக்கா…."

"அம்மா சொன்னாங்க அங்கிள். ரொம்ப சந்தோஷமாய் இருக்கு"

"அவளுக்கு ஞாயித்துக் கிழமை பிறந்த நாள். வீட்டாள்கள் மாத்திரமா சேர்ந்து சின்னதா கொண்டாடிடலாம்னு நினைச்சிருக்கோம். நீயும் வந்தா தான் வீட்டாள்கள் எல்லாரும் சேர்ந்த மாதிரி ஆகும்…"

"அங்கிள்……சாரி…."

"உனக்கு என் மகளைப் பார்க்கணும்னு தோணலையா லிஸா"

"தோணுது அங்கிள் ஆனால்….."

"நான் காரை ஈரோடுக்கு அனுப்பறேன். அதில் நீ வந்து சேர். எப்ப அனுப்பட்டும்?"

"அங்கிள்…"

"அவளுக்கு இங்கே ஒரு தோழி கூட இல்லை லிஸா. நீ வந்து தான் அந்தக் குறையை நிவர்த்தி செய்யணும். எப்ப அனுப்பணும் காரைன்னு மட்டும் சொல்லு….இல்லை நான் அங்கே வந்து அழைக்கணுமா?"

"ஐயோ அப்படியெல்லாம் இல்லை அங்கிள்….இவர்"

"ஓ உன் புருஷன் கிட்ட பர்மிஷன் வாங்கறது தான் பிரச்சினையா. அதையேன் முதல்லயே சொல்லலை. நான் அவர் கிட்ட பேசி பர்மிஷன் வாங்கிக்கறேன். சரிதானே. கார் நாளைக்கு மதியத்துக்குள்ளே வரும். நீ சௌகரியப்பட்ட நேரத்துல கிளம்பி வா… மீதியை நேரில் பேசிக்கலாம்….வைக்கட்டுமா?"

டேவிட் தன் நண்பனை பிரமிப்புடன் பார்த்தார். "அவ ஒத்துகிட்டாளா"

"அவளை நான் பேச விடலை. முதல்ல உன் மாப்பிள்ளையோட செல் நம்பர் தா…" என்றவர் டேவிடின் மாப்பிள்ளையிடம் இரண்டு நிமிடம் பேசினார்.

அவர் லிஸாவிடம் பேச ஆரம்பித்தது முதல் அவரையே பார்த்துக் கொண்டிருந்த டேவிடிற்குத் தான் காண்பது கனவா நனவா என்று தெரியவில்லை. கம்பெனி விஷயங்களில் ஒரு சின்ன முடிவை எடுப்பதானால் கூட தமக்கையின் உதவியை நாடும் அவர், எத்தனையோ முறை அவள் திட்டினால் கூட தானாக ஒரு சிறு முயற்சி கூட எடுக்காத அவர், இன்று லிஸாவை ஒரு வார்த்தை கூட பேச விடாமல் வரவழைக்கும் அளவு சாமர்த்தியத்துடன் நடந்து கொண்ட விதம் அவரைத் திகைப்படைய வைத்தது.

டேவிட் ஆச்சரியத்துடன் கேட்டார். "நீ இப்படி பேசி நான் கேட்டதே இல்லையேடா. எதுவானாலும் அக்கா கிட்ட தான் பேசச் சொல்லுவாய். எப்படிடா இப்படி மாறினாய்?"

சந்திரசேகர் பதில் சொல்லாமல் புன்னகைத்தார். இதையெல்லாம் சற்று தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டு இருந்த மூர்த்திக்கு சந்திரசேகர் லிஸாவை வரவழைப்பது பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. லிஸாவின் வரவு ஆகாஷுக்கும் ஆர்த்திக்கும் இடையே உள்ள இடைவெளியை இன்னும் அதிகப்படுத்தும் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை.

(தொடரும்)

About The Author