You may be deceived if you trust too much,
but you will live in torment if you don’t trust enough.
– Frank Crane
ஆர்த்திக்கு ஏனோ மூச்சு முட்டுவதைப் போல் இருந்தது. தாயின் மரணம் எழுப்பிய சந்தேகங்கள் இல்லாமல் இருந்திருந்தால், அவளைக் கல்லூரி விழாவில் வசீகரித்த உறவு இல்லாத சிவகாமியாக மட்டும் சிவகாமி இருந்திருந்தால் இந்நேரம் ஆனந்தம் பொங்க அவளைச் சந்திக்க விரைந்திருப்பாள். ஆனால் ஆயிரம் கேள்விகளை அவள் மனதில் கிளப்பி இருந்த சிவகாமியை சந்திப்பதில் இப்போது ஏனோ பயம் மட்டும் மிஞ்சியது.
"ஆர்த்தி" என்று அழைத்தபடி உள்ளே நுழைந்த சந்திரசேகர் ஆர்த்தியின் கூட இருந்த பார்வதியைக் கண்டு கொள்ளவில்லை.
"ஆர்த்தி, அக்கா வந்துட்டா, …. உனக்கென்ன உடம்பு சரியில்லையா"
"ஒண்ணும் இல்லைப்பா. நல்லாத்தான் இருக்கேன்…"
"சரி வா. அக்காவைப் பார்" என்று அவள் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போனார். ஏதோ கடவுளைக் காட்டுகிறேன் வா என்று கூட்டிக் கொண்டு போவது போன்ற பெரும் பரபரப்பு அவரிடம் இருந்தது. ஆர்த்தி அவருடன் போக பார்வதியும் பின் தொடர்ந்தாள்.
ஆர்த்தி மாடிப்படி இறங்கும் போது ஹாலில் அமிர்தம், பவானி, பார்த்திபன், ஒரு மூலையில் மூர்த்தி ஆகியோர் இருந்ததைக் கவனித்தாள். அவர்கள் அனைவரும் அவளைப் பார்த்த விதத்தில் இருந்தே சிவகாமியுடன் அவளது சந்திப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. ஆர்த்திக்கு நாக்கு வறண்டது.
சாதாரணமாக தன் அறையை விட்டு வராத பஞ்சவர்ணம் அன்று அறையிலிருந்து வெளியே வந்து ஆவலுடன் ஹாலில் நடப்பது நன்றாகத் தெரிகிற இடத்தில் நின்று கொண்டாள். சிவகாமி தன் மருமகளையும் அவளது பாட்டி தாத்தாவையும் எப்படி எதிர்கொள்கிறாள், அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதனை நேரில் காண்பது நல்லது என்று நினைத்தாள். பவானியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது வீண், மூர்த்தி மூலம் தெரிந்து கொண்டாலும் அவன் கண்களுக்குத் தப்பும் விஷயங்களும் உள்ளன என்பதால் இந்த முதல் சந்திப்பைத் தானே நேரில் கண்டு கணிப்பது தான் சரியாக இருக்கும் என்று எண்ணினாள்.
சிவகாமி உள்ளே நுழைந்தாள். சிவகாமியின் அழகும், கம்பீரமும், அவள் விலை உயர்ந்த காட்டன் புடவையை உடுத்திருந்த நேர்த்தியும் அந்த சூழ்நிலையிலும் ஆர்த்தியை வியக்க வைத்தது. ஓரிரு நரை முடிகள் அங்கொன்றும் இங்கொன்றும் தெரிந்தது கூட அவள் அழகைக் கூட்டியது போலத் தெரிந்தது.
உள்ளே நுழைந்த சிவகாமியின் கண்கள் ஒரு நொடியில் அங்கு கூடி இருந்தவர்களைக் கணக்கெடுத்தது. மாடியில் ஓரமாக நின்றிருந்த பஞ்சவர்ணத்தைக் கவனித்த போது அவள் முகத்தில் புன்னகை படர்ந்தது. சிவகாமியைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த ஆகாஷ் தாயை மிகுந்த ஆவலுடன் பார்த்தான். அவன் கண்கள் ஆர்த்தியையும் சிவகாமியையும் மாறி மாறி பார்த்தது. கிட்டத்தட்ட அதே ஆவலுடன் சந்திரசேகரும் அக்காவைப் பார்த்தார்.
சிவகாமி தன் தம்பியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளையும், தன் மகன் முகத்தில் தெரிந்த ஆர்வத்தையும் கவனிக்கத் தவறவில்லை. ஆகாஷின் ஆவல் அவள் புன்னகையை அதிகரித்தது என்றால் சந்திரசேகரின் ஆவல் அவள் புன்னகையை உறைய வைத்தது. ஒரு கலைஞன் தன் படைப்பை பரிசீலிக்கும் நீதிபதியைப் பார்க்கும் ஆவல் அவரிடம் இருந்தது. ‘என் மகள் எப்படி இருக்கிறாள் பார்’ என்று காட்டும் சந்தோஷம் அவரிடம் தெரிந்தது.
பல காலமாய் தம்பி எதற்காகவும் இப்படி ஒரு ஆர்வம் காண்பித்ததாய் அவளுக்கு நினைவு இல்லை. மருமகளை விட அதிகமாய் தன் தம்பியைக் கவனித்த சிவகாமி பின்பு தன் கவனத்தை ஆர்த்தி மீது திருப்பிய போது அவள் முகத்தில் மலர்ச்சி இருந்தது.
"ஆர்த்தி" என்று அழைத்தபடி வந்து அவளை ஒரு முறை அணைத்துக் கொண்ட சிவகாமி "நீ ஆனந்தி மாதிரியே இருக்கிறாய்" என்று சொன்னாள்.
ஆனந்தியின் பெயர் கேட்டவுடன் சந்திரசேகர் முகம் சிறிது களை இழந்தது.
சிவகாமி பார்வதியின் பக்கம் திரும்பினாள். "எப்படி இருக்கீங்க அத்தை? நீங்க பெருசா மாறின மாதிரி தெரியலை"
அவள் மலர்ச்சியுடன் வரவேற்றது பார்வதிக்கு இதமாக இருந்தது. வேண்டாத விருந்தாளியாக வந்து விட்டோமோ என்ற சந்தேகத்தை சந்திரசேகரின் நடவடிக்கை கிளப்பியிருந்தது.
"மாமா எங்கே?" என்று சிவகாமி கேட்ட போது நீலகண்டன் தளர்ந்த நடையுடன் எதிரே வந்து நின்றார். யார் முகத்தில் முழிக்கவே கூடாது என்று நினைத்திருந்தாரோ அவள் முன் வர வேண்டிய கட்டாயத்தை எண்ணி அவர் வருந்தினார்.
"எப்படி இருக்கீங்க மாமா?" அவள் முகத்தில் மலர்ச்சி மாறவில்லை.
"உன் தயவில் உயிரோட இருக்கேன்மா"
"கடவுள் தயவுன்னு சொல்லுங்க. உயிரோட இருக்கிறதோ போய் சேர்றதோ மனுஷங்க தயவுல இல்லை"
ஒருவிதத்தில் அந்தப் பதில் பெருந்தன்மையானதாகத் தோன்றினாலும் இன்னொரு விதத்தில் உங்கள் மகள் இறந்ததற்கும் நான் காரணம் இல்லை என்று சொல்வது போல் நீலகண்டனுக்குத் தோன்றியது.
சிவகாமி தொடர்ந்து சொன்னாள். "நான் சொன்னதை மதிச்சு ஆர்த்தி கூட வந்தீங்களே அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கு"
பார்வதி கண்களில் நீர் கோர்த்தது. இவ்வளவு பெருந்தன்மையாகப் பேசுகிறாளே என்று தோன்றியது. மேலேயிருந்து கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்த பஞ்சவர்ணம் ‘இந்தக் கிழவன் நம் பக்கம் இருப்பான் கிழவி அந்தப் பக்கம் சாய்ந்தாச்சு" என்று மனதினுள் சொல்லிக் கொண்டாள். சிவகாமியின் நடவடிக்கை அவள் எதிர்பார்த்தது தான். எந்த சந்தர்ப்பத்திலும் சிவகாமி வெகு இயல்பாக நடந்து கொள்வதில் கெட்டிக்காரி என்பதில் அவளுக்கு சந்தேகம் என்றும் இருந்ததில்லை.
அந்த சமயத்தில் தான் ஆகாஷும் ஆர்த்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்ற விதத்தை பஞ்சவர்ணம் கவனித்தாள். அதைக் காதல் என்று கண்டுபிடிப்பதில் அவளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. ஒரு கணம் தனது கனவுகள் எல்லாம் சரிவதாக உணர்ந்தாள். மறு கணம் தன் சாமர்த்தியத்தில் மீண்டும் நம்பிக்கை பெற்றாள். "எதுவும் எப்போதும் மாறலாம். மாற்றலாம்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். சந்திரசேகர் தன் மகளைப் பிடித்துக் கொண்டு நின்ற விதமும், நீலகண்டன் முகத்தில் சிவகாமி மீது தெரிந்த சந்தேகமும் அவளுக்குப் புத்துணர்ச்சி ஊட்டின.
அந்த நேரத்தில் சிவகாமியின் ப்ரீஃப் கேஸை எடுத்துக் கொண்டு திடகாத்திரமான, மிக மிக அசிங்கமான முகமுடைய ஒருவன் உள்ளே நுழைந்தான். அவன் முகமெல்லாம் சதைகள் பல மேடுபள்ளங்களுடன் காணப்பட்டன. கண்கள் அந்த சதைக் குவியலுக்குள்ளே கிட்டத்தட்ட மறைந்து போய் இருந்தன. இரு கருப்பு வட்டங்கள் மட்டுமே கண்களின் இடத்தில் காணப்பட்டன. ஆர்த்திக்கு அவனைப் பார்த்தவுடனேயே முகத்தைத் திருப்பிக் கொள்ளத் தோன்றியது. அப்படி அருவருப்பாக இருந்தது. இவன் தான் மூர்த்தி சொன்ன ஆள் என்று புரிந்தது. கஷ்டப்பட்டுப் பார்வையை அவன் மேல் நிறுத்தினாள். "இவன் தான் அம்மாவைக் கொன்றவனோ?"
வந்தவன் ஆர்த்தியைப் பார்த்தவுடன் சிலையாக நின்றான். தோற்றத்தில் ஆனந்தி போல் இருந்தது தான் காரணமாக இருக்கும் என்று ஆர்த்தி ஊகித்தாள். அவன் அடுத்ததாக சிவகாமியைப் பார்த்தான். அவன் திகைப்பைப் பார்த்த சிவகாமி மனதினுள் நினைத்துக் கொண்டாள். "இந்த ஆர்த்தி தனக்குத் தெரியாமலேயே பல பேரிடம் புதிய உணர்ச்சிகளை வரவழைத்திருக்கிறாள். சந்திரசேகரிடம் இது நாள் வரை இல்லாத பாசம், எந்தப் பெண்ணிடமும் இது வரை கவரப்படாத ஆகாஷிடம் காதல், எப்போதுமே உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத இவனிடம் திகைப்பு"
(தொடரும்)
“