When you have eliminated the impossible, that which remains, however improbable, must be the truth.
– Sherlock Holmes, "The Sign of Four"
கணவனின் துக்கத்தைப் பார்க்க சகிக்காமல் பார்வதி பேத்தி பக்கம் திரும்பினாள். "ஆர்த்தி, ஆனந்தி வேற என்ன எல்லாம் எழுதியிருக்காள்"
"நான் தொடர்ச்சியாய் படிக்கலை பாட்டி. மேலோட்டமாய் அங்கொன்னும், இங்கொன்னுமாய் தான் படிச்சிகிட்டிருக்கேன்….. அப்புறம் ஒரு டைரியில் கொஞ்சம் பக்கம் கிழிஞ்சிருந்துது. அம்மாவே எழுதி கிழிச்சிருப்பாங்களோ"
"அவ அப்படி கிழிச்சிருக்க மாட்டா, வேற யாராவது தான் கிழிச்சிருக்கணும்…."
நீலகண்டன் கண்களைத் துடைத்துக் கொண்டு பேத்தியிடம் கேட்டார். "எந்த வருஷத்து டைரியில் கிழிச்சு இருந்தது?"
"அவங்க கல்யாணம் முடிஞ்சவுடனே சில பக்கங்கள்…."
சில நிமிடங்கள் மூவரும் மௌனமாய் இருந்தார்கள். கிழிந்த பக்கங்களில் ஆனந்தி என்ன எழுதியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவர்கள் மனதை நெருடியது.
ஆர்த்தி அப்போது தான் நினைவு வந்து சொன்னாள். "எனக்கு ப்ரசன்னான்னு ஒரு டாக்டரை தேர்ந்தெடுத்து அவர் கிட்ட அடுத்த வாரம் அப்பாயின்மென்ட் வாங்கியிருக்காங்க. அவர் ஆகாஷோட ஃப்ரண்டாம். ஆகாஷையே என்னைக் கூட்டிகிட்டு போக அத்தை சொல்லியிருக்காங்க".
பார்வதிக்கு அவள் சொன்ன தகவல் திருப்தியைத் தந்தது. ஆர்த்தி ஆகாஷுடன் போவது சிறிதாவது அவன் கோபத்தைத் தணிக்க உதவும் என்று அவள் நினைத்தாள். ஆனால் நீலகண்டனை அந்த தகவல் சந்தேகப்பட வைத்தது. அவரைப் பொறுத்த வரை அவர் மகள் மரணத்தில் சிவகாமிக்கு பங்கு இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. அதனால் அவள் தேர்ந்தெடுத்த டாக்டரிடம் அவள் மகன் ஆகாஷ் ஆர்த்தியை அழைத்துக் கொண்டு போவது என்பது அவருக்கு சரியாகப்படவில்லை.
"ஏன் உங்கப்பா கூட்டிகிட்டு போக மாட்டாராக்கும்" என்று அவர் பேத்தியைக் கேட்டார்.
"தெரியலை" என்ற ஆர்த்தி தனதறைக்குக் கிளம்பினாள். அம்மாவின் டைரியை மேலும் படிக்கும் ஆர்வத்தில் மகள் இருந்தாள். "தாத்தா பாட்டி நீங்களும் அந்த டைரிகளைப் படிக்க வர்றீங்களா?"
பார்வதி சோகமாகச் சொன்னாள். "சின்ன வயசுல இருந்தே அவள் டைரியை நாங்க படிக்கறது அவளுக்குப் பிடிக்காது. அதனால் நாங்க படிக்க வரலை."
ஆர்த்திக்கு ஒரு மாதிரியாக இருந்தது. தாயாக இருந்தாலும் அவள் டைரியைத் தான் படிக்கிறதும் தவறோ? அவள் முகம் மாறியதைக் கண்ட பார்வதி அவசரமாகச் சொன்னாள் "அசடு. நீ படிக்கறது வேற விஷயம். உனக்கு அவள் எப்படிப்பட்டவள், அவள் சிந்தனைகள் எந்த மாதிரி இருந்தது, உலகத்தை அவள் எப்படிப் பார்த்தாள்னு எல்லாம் தெரிஞ்சுக்க அது உதவும்….."
நீலகண்டன் அழுத்தமாகச் சொன்னார். "நீ கண்டிப்பாய் படிக்கணும். அவள் கொலை செய்யப்பட்டது எதனால்ங்கறதுக்கு ஏதாவது துப்பு அந்த டைரியில் எங்கேயாவது ஒரு மூலையில் இருக்கலாம். அதைக் கண்டுபிடி…"
பார்வதி விரக்தியுடன் சொன்னாள். "அந்தக் கடைசி ரெண்டு வருஷத்து டைரியும் காணோம். ஏதாவது எழுதியிருந்தா அந்த ரெண்டு டைரியில தான் எழுதி இருக்கணும். அதுவும் நடந்து முடிஞ்சதை மாத்தற சக்தி நமக்கு இல்லைங்கறப்ப அந்த நினைவுகளோட போராடி என்ன பிரயோஜனம்? கண்டு பிடிச்சு என்ன செய்யறதா உத்தேசம்? பழி வாங்கவாவது உடம்புல தெம்பு இருக்கா? இல்லை வயசு தான் இருக்கா?…."
நீலகண்டன் மனைவியை முறைக்க ஆர்த்தி புன்னகையுடன் எழுந்தாள். ‘அடுத்த வாக்குவாதம் ஆரம்பிக்கப் போகிறது.’
மறுபடி ஆனந்தியின் டைரியைப் புரட்டினாள். டேவிட்- மேரி தம்பதியரைப் பற்றி அன்போடு எழுதி இருந்தாள். மேரியிடம் ஒரு நல்ல சிநேகிதியைக் கண்டதாய் எழுதி இருந்தாள். சிவகாமியின் அழகான குழந்தையைப் பற்றி எழுதி இருந்தாள்.
"… கொழு கொழுன்னு அழகாய் குழந்தை ஆகாஷ் இருந்தான். பொழுது போகாத நேரங்களில் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டு விளையாடினால் நேரம் போவதே தெரியவில்லை. அக்காவிடம் பேசும் போது ஆகாஷ் என்ற பெயர் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் சொன்னார். "எனக்கு எல்லைகள் என்பதே அலர்ஜி ஆனந்தி. எல்லைகள் இருந்தால் சிறைபட்டுப் போகிற மாதிரி, சிறுத்துப் போகிற மாதிரி தோன்றுகிறது. அதனால் தான் என் மகனுக்கு எல்லைகள் இல்லாத ஆகாயத்தோட பெயர் வைத்தேன்." அக்காவின் அந்தப் பெயர்க் காரணம் எனக்குப் பிடித்திருந்தது."
"அந்தக் குழந்தையை நான் கொஞ்சி விளையாடிய அளவிற்கு அவர்கள் கொஞ்சி விளையாடாதது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. அதையும் அவர்களிடம் கேட்டேன். "செல்லம் கொடுத்து அவனைக் கெடுக்க விரும்பலை. தாய் இல்லாப் பிள்ளைன்னு உன் புருஷனை செல்லம் கொடுத்து வளர்த்தி நான் படற அவஸ்தை போதும்". இதை இவரிடம் சொன்ன போது இவர் சிரித்தார். "அக்கா என் மேல் பாசமாய் இருந்தாள், வளர்த்தினாள் என்பதெல்லாம் நிஜம் தான். அவள் மேல் நான் உயிரையே வைத்திருக்கிறேன் என்பதும் நிஜம். ஆனால் செல்லம் எல்லாம் கொடுக்கலை. அக்காவுக்கு செல்லம்னா என்னன்னே தெரியாதுங்கறது தான் பெரிய நிஜம்….."
கதவை யாரோ தட்டினார்கள். ஆர்த்தி டைரியை மூடினாள். டைரிகளை எங்கேயாவது மறைத்து வத்து விட்டு கதவைத் திறக்கலாமா என்ற எண்ணம் ஒரு கணம் அவளுக்குத் தோன்றியது. ஆனால் கதவு பலமாகத் தட்டப்படவே வேறு வழியில்லாமல் உடனடியாகப் போய் கதவைத் திறந்தாள். சந்திரசேகர் நின்றிருந்தார்.
"என்ன செஞ்சுட்டு இருந்தாய்?"
கேட்டு விட்டு ஆர்த்தி பதில் சொல்வதற்கு முன் உள்ளே நுழைந்தவர் திறந்திருந்த அந்த பீரோக்களையும் கட்டிலில் வைக்கப்பட்டிருந்த டைரிகளையும் பார்த்து அதிர்ந்து போய் நின்றார். அவர் சுதாரிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது. சுதாரித்தவுடன் "சாவி…. சாவி…" என்றார்.
"பெரியத்தை தான் கொண்டு வந்து தந்தார்கள்"
சந்திரசேகர் அந்த டைரிகளை வெறித்துப் பார்த்தார். அவர் மனம் கொந்தளித்தது அவர் முகத்தில் தெரிந்தது. "ஆர்த்தி உங்கம்மா தன்னோட டைரிகளை யாரையும் படிக்க விட்டதில்லை…."
ஆர்த்தி மனதில் மறுபடியும் குற்றவுணர்ச்சி எழுந்தது. ஆனால் பாட்டி சொன்னது நினைவுக்கு வர சொன்னாள். "எனக்கு அம்மா பத்தி எதுவும் தெரியலையேப்பா. இதைப் படிக்கிறப்ப அவங்க எப்படி யோசிச்சாங்க, எப்படி வாழ்ந்தாங்கன்னு கொஞ்சம் புரிஞ்சுக்க முடியுது. அது தான் படிக்கறேன். தப்பாப்பா"
மகள் வெகுளித்தனமாகக் கேட்ட விதம் சந்திரசேகரை நெகிழ்த்தியது. "அப்படியில்லைம்மா…..படி… ஆமா எல்லா டைரியும் இதில் இருக்கா?"
"கடைசி ரெண்டு வருஷங்களோட டைரிகள் மட்டும் இல்லைப்பா"
ஒரு கணம் மனதில் ஏதோ கணக்குப் போட்டு விட்டு சந்திரசேகர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆர்த்தி தந்தையைப் புதிய கண்ணோட்டத்துடன் பார்த்தாள். அவர் நிம்மதிப் பெருமூச்சு அவளை அப்படிப் பார்க்க வைத்தது. சிவகாமி எல்லா நேரங்களிலும் ஒரே போல் இருந்ததால் அவளைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தாலும் சந்திரசேகர் மனதில் என்ன ஓடுகிறது என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
அவள் வந்ததில் இருந்து அவர் நடந்து கொண்டதை எல்லாம் நினைத்துப் பார்த்தாள். அந்த அறை அவரை நிலைகொள்ளாமல் இருக்க வைத்த விதம், அவள் கனவைப் பற்றி பார்வதி சொன்ன போது அவர் முகம் பேயறைந்தது போல் மாறிய விதம், அவர் அறையில் ஆனந்தியின் புகைப்படம் இல்லாதது, இப்போதைய அவரது நிம்மதிப் பெருமூச்சு எல்லாவற்றையும் ஒருசேர எண்ணிப் பார்க்கையில் அவளுக்குப் புதிய சந்தேகம் பிறந்தது. ஒரு வேளை குற்றவாளி சிவகாமி இல்லையோ? இவர் தானோ? இவரைக் காப்பாற்றத் தான் சிவகாமி முயற்சி செய்கிறாளோ?
(தொடரும்)“
.