மனிதரில் எத்தனை நிறங்கள்!(42)

If you’re not confused, you’re not paying attention.
-Tom Peters

டேவிட் வீட்டுக்குச் செல்லும் போது அவர் விடாமல் பேசியதற்கு நேர் மாறாக அவர் வீட்டில் இருந்து திரும்பிப் போகையில் அர்ஜுன் மௌனம் சாதித்தான். எதுவும் பேசாமல் காரை அவன் அனாயாசமாக ஓட்டினான். அவன் பின்னால் ஒருத்தி உட்கார்ந்திருக்கிறாள் என்பதே அவன் நினைவில் உள்ளதா இல்லையா என்று ஆர்த்தி சந்தேகப்பட்டாள்.

டேவிட் வீட்டில் அவனிடம் சிவகாமி ஒருத்தி தான் முகத்தைப் பார்த்துப் பேசுவாள் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. சிவகாமியைப் போல் அந்த முகத்தைப் பார்த்து தன்னால் பேச முடியுமா என்று தன்னையே ஆர்த்தி கேட்டுக் கொண்டாள். மனமார முடியும் என்று தோன்றவில்லை. அருவறுக்கும்படியாக உள்ள அந்த முகத்தைப் பார்த்து பயப்படாமல், முகம் சுளிக்காமல் பேச முடியும் என்று அவளால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

முகத்தைப் பார்த்துப் பேசாவிட்டாலும் பின்னால் இருந்து பேசினால் என்ன என்று தோன்ற, பின் யோசிக்காமல் கேட்டாள். "எங்கம்மாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?".

நல்ல வேளையாக அவன் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் அவள் கேள்வி அவனை ஆச்சரியப்படுத்தியது போல தோன்றியது. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு சொன்னான். "உங்கம்மாவை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துட முடியாது"

அவன் குரல் கம்பீரமாக இருந்தது.

"எங்கம்மாவைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?"

இந்தக் கேள்வி அவனுக்குப் பிடிக்கவில்லை போல ஆர்த்திக்குத் தோன்றியது. இல்லை என்ன பதில் சொல்லலாம் என்று யோசிக்கிறானோ? ஒருவேளை தான் கேட்டது அவன் காதில் விழவில்லையோ என்று ஆர்த்தி சந்தேகப்பட்ட போது அவன் சொன்னான். "ரொம்ப தைரியமானவங்க. எதிலும் ஒளிவு மறைவு கிடையாது…." ஒரு கண நேர மௌனத்திற்குப் பிறகு சொன்னான். "நல்லவங்க"

சொல்லி முடித்தவுடன் காரை வேகமாக ஓட்டினான். அவள் கேள்விகளில் இருந்து தப்பிக்க எண்ணி தான் இப்படிப் பறக்கிறானோ என்று ஆர்த்தி நினைத்தாள். பிறகு அவளும் பேச முற்படவில்லை.

அதே நேரத்தில் பவானி தன் தாய் அறையினுள் நுழைந்தாள். மகளின் அலங்காரத்தைக் கண்ட பஞ்சவர்ணம் கேட்டாள். "எங்கே கிளம்பிட்டே"

"கோயமுத்தூர் போறோம். ஆர்த்திக்கு டிரஸ் எல்லாம் வாங்கணும்னார். அதான்…."

"ஏன் அந்தக் கொலைகாரியை உன் புருஷன் கூட்டிகிட்டு போகலையாக்கும்…."

"அவங்க வரலைன்னுட்டாங்க….. உங்களுக்கு சேலை ஏதாவது வாங்கணுமா?"

"நல்ல காஞ்சிபுரம் பட்டு சேலை பத்து எடு…"

அந்த அறையை விட்டு அதிகம் வெளியே வராத பஞ்சவர்ணத்திடம் விலை உயர்ந்த பட்டுசேலை குறைந்தது நூறாவது இருக்கும். தாய் இன்னும் பத்து பட்டு சேலை கேட்ட போது பவானிக்கு தர்மசங்கடமாக இருந்தது. செலவு செய்வதற்கு சந்திரசேகர் தயங்க மாட்டார் என்றாலும் பஞ்சவர்ணத்திற்கு இன்னும் பத்து சேலை என்றால் இகழ்ச்சியாகப் பார்க்காமல் இருக்க மாட்டார். அவர் அப்படி முன்பு பல முறை பார்த்திருக்கிறார். ஆரம்பத்தில் எல்லாம் பவானி கூனிக் குறுகிப் போவாள். இப்போதெல்லாம் அவர் முகத்தை இது போன்ற சந்தர்ப்பங்களில் பார்க்காமல் இருக்க பவானி பழகி விட்டாள்.

"அந்தப் பொண்ணு நம்ம மூர்த்தி பத்தி என்னடி நினைக்கிறா?"

"நல்ல அபிப்பிராயம் இருக்கற மாதிரி தான் தோணுது"

"நல்ல அபிப்பிராயம் பத்தாதுடி. அதுக்கும் மேல வரணும். அது அவங்க கல்யாணத்துல முடியணும். அவனைப் பத்தி நல்ல விதமா அவள் காதுல போட்டுகிட்டு இரு"

பவானி தலையசைத்தாள். காதில் விழும் விஷயங்களை வைத்துக் காதல் வருமென்று பஞ்சவர்ணம் நிஜமாகவே நினைக்கிறாளா?

மகள் இப்படி சந்தேகத்தோடு தலையசைத்தது பஞ்சவர்ணத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனால் மகளைத் திட்ட அவள் முற்படவில்லை. இனி மாற்ற முடியாத மனிதர்களிடம் கோபித்து என்ன பயன்?

எரிச்சலை அப்படியே அடக்கிக் கொண்டு பஞ்சவர்ணம் கேட்டாள். "ஆகாஷ், ஆர்த்தி இப்ப எப்படிப் பழகறாங்க"

"அவங்க ரெண்டு பேரும் இப்ப பேசிக்கறதில்லை"

"நல்லது…. அவன் அவங்கம்மா கிட்ட ஏதாவது கேட்டானாடி"

"தெரியலை. ஆனா மூர்த்தி என் கிட்ட வந்து கேட்டான்…"

பஞ்சவர்ணம் பதிலுக்கு எதுவும் சொல்லாமல் மகளைக் கூர்ந்து பார்த்தாள்.

பவானி தொடர்ந்து சொன்னாள். "அவங்கப்பா அம்மாவுக்கும் சிவகாமியக்காவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டான்….."

பஞ்சவர்ணம் ஒன்றும் சொல்லாமல் இறுகிய முகத்துடன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். பவானி தொடர்ந்தாள். "அவங்கப்பா, அம்மா பிணம் கூட கிடைக்கலைன்னு ஏன் தெரிவிக்கலை. சிவகாமியக்கா கொன்னுருக்கலாம்னு நீங்க நினைக்க காரணம் என்னன்னு கேட்டான். நான் ஒண்ணும் சொல்லலை…. நீங்க உங்க சந்தேகத்தை என் கிட்ட கூட இது வரைக்கும் சொன்னதில்லை. ஏம்மா?"

பஞ்சவர்ணம் மகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியத்தை அப்போதும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தன் பார்வையை மகன் மருமகள் போட்டோவின் மீது திருப்பினாள். பவானியும் அண்ணன் போட்டோவைப் பார்த்தாள். அவள் கண்களில் லேசாக நீர் திரண்டது. அவள் அண்ணன் என்றுமே அவளிடம் மிகவும் பாசமாக இருந்தான்……… மறுபடி தாயிடம் பவானி கேட்டாள். "நீங்க எதனால சந்தேகப்படறீங்க?"

பஞ்சவர்ணம் மகளைப் பார்க்காமல் பதில் சொன்னாள். "உன்னை மாதிரி ஆள்கள் எவ்வளவு கம்மியா தெரிஞ்சுக்கறீங்களோ அவ்வளவு தூரம் நிம்மதியா இருப்பீங்க. இந்தப் பேச்சை இத்தோட விட்டுடு….."

சில நிமிடங்கள் தாயை வெறித்துப் பார்த்து நின்ற பவானி பின் மௌனமாக வெளியேறினாள். மகள் போன பிறகு பஞ்சவர்ணம் பெருமூச்சு விட்டாள். மகளிடம் தன் உணர்வுகளை அவள் காண்பிக்கா விட்டாலும் அவள் மனதில் பல கேள்விகள் பிரம்மாண்டமாக எழுந்து அவள் மூளைக்கு வேலை கொடுத்தன. வருடக் கணக்கில் எழும் அந்தக் கேள்விகளுக்கு பல சாத்தியக் கூறுகள் பதில்களாக எழுந்து நின்றன என்றாலும் எது சரி எது தவறு என்று கண்டு பிடிக்க அவளால் இது வரை முடியவில்லை.

இத்தனைக்கும் பதிலை சிவகாமி தான் அறிவாள் என்பதையும், எல்லாவற்றிற்கும் சூத்திரதாரியான அவள் ஒன்றும் தெரியாதது போல நடித்துக் கொண்டு இருக்கிறாள் என்பதையும் நினைக்கையில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவளுக்குத் தெரிந்த முக்கியமான ஒன்று தனக்குத் தெரியவில்லை என்பதை பஞ்சவர்ணத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை.

விபத்து நடந்த அந்த இரவில் வேறு என்ன எல்லாம் நடந்திருக்கக் கூடும் என்பதை சலிக்காமல் மறுபடியும் பஞ்சவர்ணம் யோசிக்க ஆரம்பித்தாள். முதலில் சிவகாமி அவசர அவசரமாக அன்று இந்தியா திரும்பக் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியில் இருந்து ஆரம்பித்தாள். ஏனென்றால் சிவகாமி குறைந்தது நான்கு மாதமாவது வெளிநாட்டில் இருக்கும் திட்டத்தில் தான் போனாள் என்ற தகவல் பஞ்சவர்ணத்திற்கு முன்பே தெரிந்திருந்தது. அப்படி இருக்கையில் அவள் திடுதிப்பென்று இந்தியா வரக் காரணம் என்ன? வந்தவுடன் இங்கு நடந்ததென்ன?……

(தொடரும்)

About The Author