மதங்கள் யாவும்
பாதைகள் என்றால்
பயணங்கள் ஏன் படுகொலை
செய்யப்பட வேண்டும்?
போதை தரும்
மதுவா மதம்?
மது + அம் = மதமானதா?
மதத்தை
வளர்க்கச் சொல்லி எந்த இறைவன்
சொன்னான்? அதற்கு
மனித எலும்புகளையே
உரமாய்ப் போடச் சொல்லியிருந்தால்
இறைவனா அவன்?
மனிதமே
மனிதனுக்கு இயற்கையானது..
மதம் செயற்கை..
வீட்டுக்குள்ளே மதம்!
வெளியே மனிதம்
மனிதம் மட்டுமே!
போதியாகத்தில் – மனிதனுக்காகப்
புத்தன்
அரச போகங்களையே
ஆகுதி யாக்கினான்.
சுமந்த சிலுவையிலிருந்து
ஏசு
மனிதனுக்காகத் தனது
காயங்களையே
கனிகளாக்கி உதிர்த்தார்.
முகம்மது – தன்னைத்
தாக்கிய கற்களும் மனிதத்துக்காகப்
பூக்களைக்
கர்ப்பந்தரிக்கச் செய்தார்.
அன்று அலைந்த இராமா நுசர்
மனிதனுக்காகத்
தனது
பாதங்களையே உருக்கிப்
பாதை போட்டார்!
இன்று போதி மலர்களில் சீழ்!
கல்வாரிகளில்
கண்ணீர் அருவி!
கர்பலாக்களில் புதுப்புதுக்
காயங்கள்!
இராமா நுசர்
ஸ்ரீ பாஷ்ய வியாக்கியானத்துள்
வெப்பக் காற்று.
காணாமல் போன
மனிதனைத் தேடக்
கீதையும், குரானும், விவிலியமும்
எந்தக்
காவல் நிலையத்தில் போய்ப்
பதிவுசெய்யும்?
விளக்குகளைக் கொண்டே
வெளிச்சத்தைச் சுட்டு வீழ்த்தும்
விபரீதம்!
அலைகளைக் கொண்டே
நதிகளைத் தூக்கில் போடும் விசித்திரம்!
மதங்களிடம்,
விலகல் கடிதம் கொடுப்பது தவிர
வேறு வழியுண்டா என்று
கடவுள்
யோசிக்கிறான்!
இனங்களை, வகுப்புகளை,
சாதிகளை
ஈன்றெடுத்தவை சமயங்களெனில்,
அவற்றின்
கர்ப்பப் பைகளைக் கத்தரித்தெறிவோம்!
ஏற்றத் தாழ்வுகள்
இறைவனின்
ஏற்பாடு…
வேதங்கள் இப்படி ஓதும் எனில்
அவற்றின்
பக்கங்கள் மேல்
கட்டவிழ்த்துக் கோபங்களை
ஏவிவிடுவோம்!
மனிதனை மனிதன்
மதிக்கும் மானுட நேயம்
மலர்வதற்கு
மதங்கள் தடையெனில்
மதங்களை ஒழிப்போம்!
கட்டுகள் அற்ற
வெட்ட வெளியில் இதயங்களை
வளர்ப்போம்!
மதங்களுள்
புகுந்த
வெப்பக் காற்றை
அப்புறப்படுத்தி…
இதயங்களின்
ஈரத் தென்றலை உலாவச் செய்வோம்!
வாழ்க்கையின்
ஆன்மாவை நச்சுப் பாம்புகள்
வாயிலிருந்து மீட்போம்!
பாபர் மசூதிகளை மீண்டும்
கட்டுவதை விட
மதவெறி நிறுவனங்களுக்குச்
சமாதி கட்டுவதே முதல் தேவை!
வகுப்பு வாதங்களால்
ஏற்பட்ட
பச்சைப் புண்களுக்குச் சிகிச்சை செய்யக்
கோயில் நந்தவனங்களில்
மூலிகை கிடைக்குமா?
மதச் சார்பின்மை
மதவெறி மார்பிலா
பால்குடித்து வளரும்?
உடைந்த
சங்கீதமானான் மனிதன்
என்
பாட்டி வீணை
துக்கம் அனுசரிக்கிறது!
முன்னேறிய
மனிதனுக்கு விழா எடுக்க
விரும்பியிருந்த
வரலாறு தனக்குள் அழுகிறது!
மீண்டும்…
நம்
இரத்தம் மனிதனை
உச்சரிக்கட்டும்!
நரம்புகளில்
அன்பின் அதிர்வுகள் கிளர்ந்தெழட்டும்!
உள்ளத்தில்
உற்பத்தியாகிப்
புன்னகை
பயணம் போகும் போது
முள் வேலிகளால்
வழியை மூடாதிருப்போம்!
ஒளி
ஒரு கவிதை எழுதும்போது நாம்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு
சொல்லாவோம்!
கிழிந்துபோன ஒற்றுமையைத்
தைத்துக்
கைக் குட்டையாய்த் தருவோம்,
வரலாறு
கண்ணீரைத் துடைத்துக் கொள்ளட்டும்!
உறவுகளால்
ஒட்டிவைப்போம் மானுட சங்கீதத்தை!
பாட்டு வினைகளின்
துக்க அனுசரிப்பு ஓயட்டும்!
பகல்மேல் படிந்த
கறுமையைக் கழுவ என்
கவிதை கையில் உங்கள்
நேயம் நிரப்பிய
கிண்ணத்தைக் கொடுங்கள்!
விடுமுறையைத் தவிர்த்து விட்டு
அவசரமாய்த் திரும்பும்படி
உடனடி உத்தரவு போடுங்கள்
விளக்குகளுக்கு.
kavithai miga nandru.