மனிதனின் மூன்று முகங்கள்

பற்பல வகைகளில் குணாதிசயம், பழக்க வழக்கங்களுடைய மனிதர்களை தினந்தோறும் நாம் பார்க்கிறோம். பொதுவில், மனிதர்களுக்கு மூன்று விதமான முகங்கள் உள்ளதாக கடவுள் கூறுகிறார். அவரது கதையைக் கேட்போமா?

ஒரு நாள் கடவுள் தெருவில் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு மனிதன் கட்டிட வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்டார். அவனருகே சென்று, "என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். அவன், "பார்த்தால் தெரியவில்லையா? ஒரு செங்கல் மேல் இன்னொரு செங்கல் வைத்து அடுக்குகிறேன்" என்றான்.

தெருவில் மேலும் சிறிது தூரம் நடந்து சென்ற கடவுள் அதே வேலையைச் செய்யும் மற்றொரு மனிதனைக் கண்டார். அவனிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவன் "நான் ஒரு சுவர் எழுப்புகிறேன்" என்றான்.

மேலும் சிறிது தூரம் சென்ற அவர் அதே வேலை செய்து கொண்டிருந்த மற்றொரு மனிதனைக் கண்டு அவனிடமும் அதே கேள்வியை மீண்டுமொரு முறை கேட்டார். எழுந்து நின்ற அந்த மனிதன் புன்னகையுடன், "நோய்களுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவமனை கட்டுகிறேன். இதனால் மக்கள் அனைவரும் பயனடைவார்கள்" என்றான்.

கடவுள் சந்தித்த மூன்று நபர்களும் ஒரே மாதிரியான வேலை செய்கிறவர்கள்தான். இதில் வித்தியாசம் என்னவென்றால், முதலாமவன் சுயநலவாதி, இரண்டாமவன் நியாயவாதி, மூன்றாமவன் பொதுநலவாதி.

முதலாமவனைப் பொறுத்தவரையில் எந்த சந்தோஷமுமில்லாமல் இயந்திரத்தனமாக பணத்திற்காக மட்டுமே வேலை செய்கிறான். நிச்சயமாக அவன் ஒரு சுயநலவாதி. இதன்மூலம் அவன் அறிந்து கொள்ளப்போவதென்பது எதுவுமில்லை. பணம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அவன் ஒரு மனித இயந்திரம்தான்.

இரண்டாமவனைப்பொறுத்தவரையில் செய்யும் வேலை என்னவென்று அவனுக்குத் தெரியும். அவனால் ஒரு சிறந்த கட்டிடத்தை உருவாக்கிட முடியும். அவன் எழுப்பும் கட்டிடங்களில் மக்களால் நிம்மதியாக வாழ்ந்திட முடியும்.

மூன்றாமவன் தான், தன்னுடைய சுற்றம் என்ற வட்டத்தையும் மீறிய தொலைநோக்குப் பார்வையுடன் வாழ்பவன். அவனுடைய குடும்பத்தினர், உற்றார், உறவினர் மட்டுமல்லாது முன்பின் அறியாதவர்களும் நலமுடன் வாழவேண்டும் என்று எண்ணுகிறான். தான் செய்யும் வேலையை கடமையாக மட்டும் எண்ணாமல் சமுதாயத்தின் மீது அவன் கொண்டுள்ள பொறுப்புணர்ச்சியும் அவன் பதிலில்வெளிப்படுகிறது.

இப்போது சொல்லுங்கள், மூன்று முகங்களில் உங்களுடையது எதுவென்று? சில சமயங்களில் சுயநலவாதியாக நாம் வாழ்ந்தாலும் பல சமயங்களில் நியாயவாதியாகவே நாம் வாழ்கிறோம். ஒரு சிலரால் மட்டுமே பொதுநலவாதியாக வாழ்ந்திட முடிகிறது. அவர்களை நாம் மகாத்மாக்கள் என்கிறோம்.

பொதுவில் நியாயவாதியாக வாழும் நாம், சில சமயங்களில் சுயநலவாதியாக வாழ முடியும் போது, சில சமயங்களிலாவது பொதுநலவாதியாக வாழ முயற்சிக்கலாமே?

Sources : Web Resources”

About The Author

1 Comment

  1. guest

    என்னுடைய மனைவி என்னை நீங்கள் ஒரு சுயநலவாதி என்று சொன்னாள். என்னால் அதை தாங்க முடியவில்லை. ஏனெனில் நான் அவளிடம் அதிகமான பாசம் வைத்தது போல் அவளும் என் மீது மட்டும் அதிக பாசம் வைக்க வேண்டுமென நினைத்தேன். என்னை இதுவரை யாரும் இவ்வாறு கூறியதில்லை. நான் எப்படி எனது மனைவிக்கு புரிய வைப்பது?

Comments are closed.