மனிதனின் தேவைகள் உரிமைகளாக உருப்பெறுகின்றன. அவ்வகையில் ‘உரிமை’ என்பதையும், அதன் வகைகளையும், அவற்றுள் பொருளாதார உரிமைகள் பற்றியும் சற்று ஆராய்வோம்!
உரிமை – பொருள்
"உரிமை’ என்ற அணுகுமுறை அதை எல்லாருக்கும் உரிய ஒன்றாக ஆக்குகின்றது. மக்களின் வாங்கும் சக்தி, வேலை, அந்தஸ்து, வாழிடம், மதம், சாதி, பாலினம், உடல் – உள்ளக் குறைபாடுகள் மற்றுமுள்ள பாகுபாட்டிற்கான வேறு எந்த அடிப்படையிலும் நலச்சேவைகள் யாருக்கும் மறுக்கப்படக்கூடாது என்பதை அது முன்மொழிகிறது" என்பதாக ‘நலவாழ்வு நமது உரிமை’ என்னும் நூலில் சேவியர் செயசிங் குறிப்பிடுகின்றார். இதனைக் கொண்டு பார்க்கும்போது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கப் பெறுதல்தான் உரிமை என்பது தெளிவுபடுகிறது. மேலும், "நமது இன்ப வாழ்விற்கு ஏற்றவையெல்லாம் நம் நலன்கள். அந்நலன்களிலே எவை சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றனவோ அவை மட்டுமே நம் உரிமைகள்" (சட்டத்தமிழ், மா.சுண்முகசுப்பிரமணியம், ப- 23) என்பதும் இங்கு சுட்டத்தக்கதாகும்.
மனித உரிமை – விளக்கம்
‘மனிதனின் நல்வாழ்வுக்கு மனித உரிமைகளே அடிப்படையாகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ளவும் அவ்வுரிமைகள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. இவையே மனித உரிமைகள் ஆகும். இவை காலத்திற்கேற்பவும், இடத்திற்கேற்பவும், சமுதாயத்திற்கேற்பவும் மாறுபடுகின்றன’ என்கிறார் எ.சுவாமிநாதன். "ஒருவன் மனிதனாக இருப்பதனாலேயே அவனுக்குள்ள இயற்கையான உரிமைகள் மனித உரிமைகளாகும்" (மனிதஉரிமைகள், இராஜமுத்திருளாண்டி, ப-3) என்கிறார் இராஜமுத்திருளாண்டி.
உரிமையின் வகைகள்
மக்களின் நல்வாழ்விற்குத் தேவையான ஐந்து உலக உரிமைகள் மனித உரிமைகளாகக் கொள்ளப்படுகின்றன. அவை,
1. வாழ்வியல் உரிமைகள்
2. பொருளாதார உரிமைகள்
3. அரசியல் உரிமைகள்
4. சமூக உரிமைகள்
5. பண்பாட்டு உரிமைகள் என்பனவாகும்.
இவற்றில் பொருளாதார உரிமைகள் பற்றியே நாம் இங்கு குறிப்பாகக் காண இருக்கிறோம்.
பொருளாதார உரிமைகள்
ஒருவருடைய பொருளாதாரம் மேம்பாடடைய என்னென்ன அடிப்படைத் தேவைகள் உள்ளனவோ, அவை அனைத்துமே பொருளாதார உரிமைகளாகும். பொருள் என்பது மனித வாழ்வில் முக்கிய இடம் வகிக்கின்றது. பொருளின் தேவை குறித்து வள்ளுவர் சுட்டுமிடத்து, "பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை" என்று குறிப்பிடுகின்றார். பொருளாதாரத்தைப் போற்றிக் காக்கத் தனிமனிதர் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு! தனிமனிதருக்குத் தன் உழைப்பினால் பொருள் ஈட்டவும், வேலை செய்யவும், பரம்பரைச் சொத்தைப் பாதுகாக்கவும் உரிமை உண்டு. “தனிமனிதனின் பொருளாதார உரிமைகளை வைத்துத்தான், உலக அரங்கினில் அந்நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக, எடுப்பாகப் பேசப்படுகிறது” (மனித உரிமைகள். எ.சுவாமிநாதன், ப- 67).
பொருளாதார உரிமைகளைக் கீழ்க்காணுமாறு பாகுபாடு செய்கின்றனர்.
1. வேலை செய்யும் உரிமை
2. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறும் உரிமை
3. வேலை நேர உரிமை
4. தொழிற்சாலைகளில் நலம் காக்கும் உரிமை
5. கொத்தடிமையாக வேலை செய்யாதிருக்கும் உரிமை
வேலை செய்யும் உரிமை
உலகில் பிறந்த எல்லா உயிரும் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏதேனும் ஒரு வேலையைச் செய்தாக வேண்டும். மனிதனாகப் பிறப்பெடுக்கும்போதே அவனுக்குரிய வேலைகளும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. சங்க இலக்கியப் புறநானூற்றுப் பாடல்
"ஈன்று புறம் தருதல் என்தலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே…"
என்று ஒவ்வொருவரின் வேலையையும் கடமையாகச் சுட்டுகின்றது.
ஒருவரின் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பினைத் தருதல் ஓர் அரசின் முக்கிய பணியாக இருக்கின்றது. இன்றைய காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வேலையில்லாப் பட்டதாரிகள் உருவாகி வருகின்றனர். "இந்திய அரசியலமைப்பின் 41ஆவது பிரிவு, வேலை செய்யும் உரிமையைப் பற்றிக் கூறுகிறது" (மேலது ப-69). மக்கள் தங்களின் தகுதிக்கு ஏற்ற எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதைத் தெளிவுபடுத்துவதாக அது அமைந்துள்ளது.
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறும் உரிமை
வேலை செய்வதற்கு எவ்வாறு உரிமை உள்ளதோ, அது போல உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவதிலும் உரிமை உண்டு. குறைந்தபட்ச ஊதியம் என்று ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கத்தாலே ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவரவரது கல்வி, செய்யும் பணி, உழைப்பு ஆகியவற்றிற்கேற்ப ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.
"அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் பிரிவு 23-(2), 23-(3)இல் உழைப்பிற்கேற்ற ஊதியம் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. 1976இல் இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் சம ஊதியச் சட்டம் கொண்டு வரப்பட்டது" (மேலது ப-71).
இத்தகைய ஊதிய நிர்ணயத்தால் சமூக ஏற்றத்தாழ்வு மறையும் பொருளாதார சமநீதி கிடைக்கும். பாலினப் பாகுபாடு இன்றி அனைவரும் சமமாகச் செயல்பட ஏதுவாக அமையும் என்பதை அறிய முடிகிறது.
வேலை நேர உரிமை
மனிதன் எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரங்கள் மட்டுமே அவன் வேலை செய்ய முடியும். 24 மணி நேரத்தில் வேலைக்கும், ஓய்வுக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கிச் செயல்பட்டால்தான் மனிதன் உடலும் உள்ளமும் நலமுடையவனாக வாழ முடியும்.
உழைக்கும் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஓய்வு தேவை. இதன் அடிப்படையில் "மனித உரிமைகள் அறிக்கையின் 24 ஆவது பிரிவில், பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் போதிய ஓய்வு பெற உரிமையுண்டு" (மேலது) என்பது சுட்டப்படுகிறது. அதன் காரணமாக, 24 மணி நேர உழைப்பு இன்றைய காலத்தில் பத்து மணி நேரமாகவும் எட்டு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வாரத்தின் ஒரு நாள் விடுமுறையும் அளிக்கப்பட்டு, தொழிலாளர்களின் நலன் காக்கப்படுகின்றது. இதனால் அவர்களின் உடலும் உள்ளமும் புத்துணர்வு பெற்று உழைப்பில் சிறந்து பொருளாதார மேம்பாடு அடைய வழி பிறக்கிறது.
தொழிற்சாலைகளில் நலம் காக்கும் உரிமை
தொழில் செய்யும் இடத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கும் இழப்புகளுக்கும் ஈடு செய்யும் வகையில் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. சங்கங்கள் வைத்துச் செயல்படுவதன் மூலமும் ஒப்பந்தங்கள் போட்டு வேலை செய்வதன் மூலமும் அவ்வுரிமைகள் காக்கப்படுகின்றன. “தொழிற்சங்கங்கள் அமைத்துக் கொள்ள 1926ஆம் ஆண்டு ஆங்கில அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம் அனுமதி அளித்துள்ளது” (மேலது ப-72). இச்சட்டத்தால் தொழிலாளர்களின் தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு, அவர்களின் நலன் காக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் எவ்வித மன உளைச்சலும் இன்றி நிம்மதியாக வேலை செய்து அவர்களின் பொருளாதார நிலையைச் செம்மைப்படுத்திக் கொள்ள முடிகின்றது.
கொத்தடிமையாக வேலை செய்யாதிருக்கும் உரிமை
பொருளாதாரத்தில் மிகவும் கீழ்நிலையில் உள்ள மக்கள் அடிமைகளாக வாழும் நிலை அக்காலத்தில் காணப்பட்டது. "முன்பணத்தைப் பெற்றுக் கொண்டு, தங்கள் உழைப்பை அடைமானமாக வைத்து வாழ்ந்த கொடுமை நீண்டகாலமாக இருந்தது. இத்தகைய கொடுமையை 1976இல் சட்டம் மூலமாக ஒழித்த பெருமை பிரதமர் இந்திராகாந்தியைச் சாரும்" (மேலது ப-73). கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டதோடு அவர்களுக்குப் புனர்வாழ்வு அளித்து, அவர்களையும் உரிமை பெற்ற மனிதர்களாக வாழ வழி செய்யப்பட்டது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் விடுதலை பெற்றதோடு மனித உரிமை என்ற சொல்லுக்கு அர்த்தத்தையும் உணரும் நிலை ஏற்பட்டது.
பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினால் மட்டுமே மனிதனுக்குரிய உரிமைகள் முழுமையாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் பொருளாதார உரிமைகளில் மேம்பாடு அடைவது மனித வாழ்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். தனிமனிதனாகப் பொருளாதார மேம்பாடு அடைந்து வீட்டையும் நாட்டையும் மேன்மையடையச் செய்வது அவன் கடமையாகும். தன் கடமையைச் சரியாகச் செய்து உரிமையை நிலைநாட்டி, பொருளாதார நிலையைச் சீர்தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் ஒவ்வொரு மனிதனும் இருக்கிறான். எனவே, ஒவ்வொரு மனிதனும் தன் பொருளாதார உரிமையையும் அதைக் காக்கும் இத்தகைய சட்டங்களையும் அறிந்து வைத்திருத்தல் இன்றியமையாதது.
“