(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுடன் “வெற்றிக்கு முதல் படி” நூலிலிருந்து)
என் அனுபவம்
தோல்வியை சமாளித்து வெற்றி பெறும்போது அந்த வெற்றியை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்காவில் நாங்கள் இறங்கிய முதல் தொழில் உணவுப்பொருள் தயாரிப்பு. இடைவேளையில் சாப்பிடும் ‘நொறுக்குத் தீனி’ போன்ற உணவுப் பொருளை தயாரித்தோம். தரமான பொருள்; நல்ல சுவை. ஆனால் வித்தியாசமான பொருள்; எனவே மக்கள் தயக்கத்துடன் வாங்கிப் பார்த்தார்கள். விற்பனை மந்தமாகத்தான் இருந்தது.
நகரத்தின் மிகப்பெரிய அங்காடியின் நிர்வாகியை சந்தித்தோம். ‘பாக்கிங்’ செய்யப்பட்டிருக்கிற அழகைக் காட்டினோம். பிரித்தோம். அவருக்கு எடுத்து சுவை பார்க்க கொடுத்தோம். சாப்பிட்டார். மேலும் சாப்பிட்டார். ‘உம்’ என்றார். முகத்தில் மகிழ்ச்சியும் சிரிப்பும் பரவின. "எங்களுடைய எல்லாக் கடைகளிலும் கொண்டுபோய் அடுக்குங்கள்!" என்றார். நாங்கள் பூரித்துப் போனோம்!
எத்தனையோ இடங்களில் எங்களுக்கு விற்பனை இல்லை என்றாவும், இந்த வரவேற்பு எங்களை மேகக் கூட்டத்தில் மிதக்கச் செய்தது. எங்கே போனாலும் அந்தப் பெரிய கடையில் என்ன நிகழ்ந்தது என்பதைத்தான் நினைத்துக் கொள்வேன். அவர் என்ன சொன்னார் என்பதைத்தான் புதிய இடங்களில் சிரிக்கச் சிரிக்கக் கூறுவேன்! கேட்க வேண்டுமா, விற்பனைக்கு?
பாடம் என்ன?
தோல்வியிலிருந்து மீள, வெற்றி பெற நீங்கள் அனுபவித்த – உங்களுக்கு ஏற்பட்ட வெற்றியான நிகழ்ச்சிகளை நினைவில் கொள்ளுங்கள். ஒரு புது இடத்திற்குச் செல்லும்போது அதை நினைவில் கொண்டு அதே மன நிலையில் செல்லுங்கள். வெற்றி மனோபாவம் வெற்றி தருகிறது. பழைய வெற்றி ஒரு நிரூபிக்கப்பட்ட செப்பனிடப்பட்ட பாதை. அதை நினைப்பதன் மூலம் அந்தப் பாதையிலேயே சென்று அதேபோல வெற்றியடையும் ஒரு நிலையை நமது மனம் ஏற்படுத்தித் தருகிறது.
வெற்றியாளருடன் பழகுங்கள்!
வெற்றி என்பது, இராமகிருஷ்ணர் சொல்வதுபோல, ஒரு சங்கம். அதாவது "வெற்றியடைய வேண்டுமானால் நீ எப்போதும் வெற்றியாளர்களுடன் சேர்ந்திரு. வெற்றி அடைந்தவர்களுடன் உறவாடு. அவர்களுடன் பேசு, பழகு" என்பார், இராமகிருஷ்ணர்.
வெற்றியடைந்திருப்பவர்களுடன் பழக – பேச நாம் முயன்றால் அவர்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம். அப்பொழுது வெற்றியாளர்கள் எழுதிய அனுபவ நூல்களைப் படிக்கலாம். நூல்கள் நமக்காக நேரம் எடுத்துக்கொண்டு நமக்கு வேண்டியதை சொல்கின்றன; அறிவுரை தருகின்றன. வெற்றிக்கு வழிகாட்டும் நூல்கள் நமது வெற்றிப் பாதைக்குக் கைகாட்டிகளாக விளங்குகின்றன.
உலகில் இருளும் ஒளியும் இருப்பது போல, இறப்பும் பிறப்பும் இருப்பது போல, இன்பமும் துன்பமும் வெற்றியும் தோல்வியும் இருக்கின்றன. இது உலகின் மாறாத இயற்கை.
இருள் வரும்போது விளக்கை எரித்து இருளைக் குறைத்துக்கொள்வது போல, துன்பம் வரும்போது சிரித்து துன்பத்தை நாம் குறைத்துக்கொள்ள முடியும். அவ்வளவுதான் – அதுதான் நம் கையில் இருக்கிறது. அதுபோல, தோல்வி ஏற்படும்போது நாம் அதை லேசாக எடுத்துக்கொண்டு மீளும் வழிமுறைகளைக் காண முற்பட வேண்டும்.
நல்ல மனநிலை
நல்ல வளமான உடல்நிலை இருக்கும்போது தான் நாம் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளமுடியும். அதுபோல மனம் நல்ல நிலையில் இருந்தால் தான் – அமைதியான நிலையில் இருந்தால்தான் – நமக்கு உதவும். அப்படி அமைதியான நிலையைப் பெற நமது பாரங்களை எல்லாம் மனதிலிருந்து இறக்கி வைப்பது நல்லது. இறக்கி வைக்க நல்ல வழி நாம் தினந்தோறும் ‘டயரி’ எழுதுவதுதான். நமக்கேற்பட்ட கஷ்டங்களையும், மன உளைச்சல்களையும் எழுதும் போது பாரம் குறைகிறது.
நமக்கு வேண்டிய மனிதர்களிடம் – அத்தை, பாட்டி, மாமா, நண்பர் என்பவர்களிடம் நமது பிரச்சனைகளைச் சொல்லி, ஆலோசனை கேட்கும் போது, நம் பாரம் இறங்குகிறது.
மற்றோர் முறை : நமது பிரச்சனைகளையும் சங்கடங்களையும் ஆண்டவனிடம் ஒப்புவித்துவிடுவதுதான். "நீயே கதி! நீ பார்த்துக்கொள்!" என்று கேட்டுக் கொள்வதுதான். இதனால் நமது பாரம் குறைகிறது. இதை சரணாகதி தத்துவம் என்பார்கள்.
"யார்! தனக்குத்தானே உதவ முன் வருகிறானோ அவனுக்குத்தான் கடவுள் உதவுகிறார்" என்கிற பழமொழியையும் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்.
உழையுங்கள்! உற்சாகத்துடன் உழையுங்கள்! ஒரு மாபெரும் சக்தி நமக்கு துணையிருக்கிறது என்பதை உணர்ந்து உழையுங்கள். வெற்றி நிச்சயம்!
“
டாக்டர் உதயமூர்த்தியின் ஒரு புரட்சி இயக்கம் மக்கள் சக்தி இயக்கம்” என்ற பெயரில் 17, ஏ, தெற்கு அவின்யூ, திருவான்மியூர், சென்னை- 41 என்ற முகவரியை தலைமையிடமாகக் கொன்டு செயல்பட்டு வருகிறது. நீங்களும் அதில் இணைய தொடர்பு கொள்ளுங்கள் டபுள்யு டபுள்யு டபுள்யு டாட் மக்கள்சக்தி டாட் ஓ ஆர் ஜி அல்லது 044 24421810 அல்லது எம் எஸ் இ 1998 ஜி மெயில் டாட் காம் என்ற இ மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்”