மனம்போல வாழ்வு, தம்பீ! (1)

(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுட‎ன் "வெற்றிக்கு முதல் படி" நூலிலிருந்து)

கடலிலே காற்று ஒரு பக்கமாக வீசிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் ஒரு பாய்மரக் கப்பல் – காற்றுவாக்கில் கிழக்கே போய்க் கொண்டிருக்கிறது. மற்றொன்று மேற்கே போய்க் கொண்டிருக்கிறது; அதாவது, எதிர் திசையில்.

காற்று ஒரு பக்கமாக வீசினாலும், எப்படி கப்பலை எதிர் எதிர் திசைகளில் செலுத்துகிறார்கள்? பாய்மரத் துணியை எப்படி அமைத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் நாம் திரும்பும் திசையில் கப்பலைச் செலுத்தலாம்.

இதே அதிசயம்தான் நம் மனதிலும் நிகழ்கிறது. வெளி உலக நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. நீங்கள் அதைப் பார்த்து "என்ன செய்வேன்" என்று பயந்து இடிந்து போய் உட்காரலாம். மாறாக, மேற்கு திசையில் போகும் கப்பல் போல "என்னால் சாமர்த்தியமாக எதிர் நீச்சல் போய முடியும்" என்றும் சொல்லலாம்.

நிகழ்ச்சிகளை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் விசை இருக்கிறது. வெற்றியும் தோல்வியும் நமது மனோபாவத்தைப் பொறுத்திருக்கிறது. வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை வெற்றியைத் தருகிறது. "தோல்வியை அடைவேனோ?" என்கிற பயம், தோல்வியைப் பற்றிய கற்பனைகளையும், அதன் விளைவுகளையும், மனதில் எழுப்புகிறது. அதுவே தோல்வியை அடையக் காரணமாகவும் அமைகிறது. இதைத்தான் "மனம் போல வாழ்வு" என்கிறார்கள்.

காலில் கட்டு

நம் காலிலே ஒரு காயம். கட்டுப்போடுகிறோம். காலில் இடித்து விடுவோமோ என்று பயந்துகொண்டே நடக்கிறோம். அதே காலில் இடிக்கிறது. ஏன்? நாம் எதிர்பார்க்கிறோம். அதுவே நிகழ்கிறது. அதனால்தான் ஒரு தமிழ்ப் பழமொழி சொல்கிறது. "பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்" என்று.

"காயம் பட்டு, கட்டுப் போடுகிறோம்" என்று பயந்து அதன் நினைவாகவே நடந்தால் அதுதான் நிகழ்கிறது. அதுபோல, மனம் எதை எதிர்பார்க்கிறதோ. அதை அடைகிறது. "மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" என்பதும் இதைத்தான்.

அதுபோல, சில பணக்காரக் குடும்பங்கள் சில நேரம் சரிவதை – அழிந்து போவதைப் பார்க்கிறோம். முதலில் ஒரு தோல்வி வருகிறது; ஒரு நஷ்டம் – கஷ்டம் வருகிறது.

"ஐயோ! எனக்கு கெட்ட காலம் வந்துவிட்டது. ஏழரைநாட்டு சனி பிடித்துவிட்டது. இனி நான் தொட்டது துலங்காது; வைத்தது விளங்காது" என்று தோல்வி மனப்பான்மை கொள்ளுகிறார்கள். முன்னேறப் பயப்படுகிறார்கள் மீணடும் நஷ்டம் வருமோ என்ற கற்பனை செய்து நடுங்குகிறார்கள். கஷ்டத்தைக் கண்டு நடுங்க நடுங்க, அதுதான் வந்து சேரும். மேலும் கஷ்ட நஷ்டங்கள் வந்து சேர, "கெட்ட குடியே கெடும்" என்கிறோம்.

கஷ்டம், நஷ்டம் ஏற்படும்போது அதன் விளைவுகள் நம்மைப் பாதிக்கும்தான். ஆனால், நாம் கஷ்டத்தையும் நஷ்டத்தையுமே மீண்டும் மீண்டும் எண்ணி, ஆலாபனை செய்யாமல், அழுது கொண்டிராமல் ‘இதிலிருந்து மீள்வேன்’ என்று சொல்லிக் கொண்டு அதற்கான வழிமுறைகளில் இறங்க வேண்டும். அப்போதுதான் தோல்விப் பாதையிலிருந்து – துன்பங்களின் தொடர்ச்சியிலிருந்து நாம் மீள முடியும்.

பெரிய உண்மை

இன்றைய மனவியல் அறிஞர்கள் சொல்கிற ஒரு பெரிய உண்மை – நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய உண்மை – இதுதான்.

ஒரு தோல்வி ஏற்படும்போது "அடடா! இப்படித்தான் முன்பு ஏற்பட்டது. இப்போதும் அதேபோல நடக்கிறது. எல்லாம் என் கஷ்ட காலம். என் ஜாதகம் இப்படித்தான்!" என்று பழைய கேள்விகளை எல்லாம் வரிசைப்படுத்தி "நான் எப்போதுமே துரதிஷ்டக்காரன்" என்று நமக்கு நாமே முத்திரை குத்த முயல்கிறது, மனம். அப்படிப்பட்ட சிந்தனைகளில் நாம் மூழ்கிவிடுகிறோம். அது தவறு. இது ஒரு மன நோய் என்று கூட சொல்லுகிறார்கள்.

"ஏதோ இந்த முறை தவறிவிட்டேன். பரவாயில்லை" என்று எடுத்துக்கொள்ள வேண்டும். "தோல்வியின் காரணத்தைப் புரிந்து கொண்டுவிட்டேன்! இனி என்னால் சமாளிக்க முடியவம்" என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்.

வள்ளுவர் ஒரு காட்சியைக் காட்டுகிறார். ஒரு மாட்டு வணடி. அது சேற்றில் சிக்கிக்கொள்கிறது. அப்பொழுது மாடு என்ன செய்கிறது? மண்டியிட்டு, முழுமூச்சுடன் முயன்று வண்டியை இழுத்துச் செல்கிறது. அந்த மாடு போன்ற முயற்சி உடையவர்கள், தோல்வியை வெற்றியாகக் காண்பார்களாம். (குறள் 624)

(மீதி அடுத்த இதழில்)

About The Author

7 Comments

  1. P.Nagarajan

    கட்டுரை மிக சிரப்பாக இருன்தது. ஏப்பொடுமே திரு ஊதயமுர்தியின் கட்டுரைகலைப் படிக்கும் போது நம் மனதில் ஒரு புத்துன்னர்சி எர்படுகிரது.இதுபோன்ர கட்டுரைகலை மென்மேலும் பதிப்பிக்க வேன்டும். ணன்ரி. வனக்கம்.

  2. A.M.BADRI NARAYANAN.

    மனவோட்டமே! மனிதனை வழி நடத்துகிறது. நல்லவைகள் நடக்க, நல்லவைகளை மனதிலே நிறுத்தி, தீர்மானமாய் நடந்தால், அனைத்தும் வெற்றியாகவே முடியும். நம்புங்கள் நம்மால் முடியும்.

    -தவப்புதல்வன்.

  3. ruthraa

    நிலாச்சாரல்
    நனைய ஆசை.
    மொட்டை மாடியில்
    புரண்டு கிடந்த‌ போது
    உருண்டு திர‌ண்டு
    வ‌ந்த‌ ஒரு மேக‌ம்
    இருட்டாய் ஆக்கிய‌து.

    இத‌ய‌த்துள்
    நிலா செய்து
    நனைந்து கிட‌ந்தேன்

    இர‌வு முழுவ‌தும்.
    எந்த‌ அறையில்
    அவ‌ள் இருந்தாள்?
    தெரிய‌வில்லை.

    ஆரிக்கிளில் அவ‌ள்
    வ‌ளைய‌ல் ஓசை.
    வெண்டிரிக்கிளில் அவ‌ள்
    வெள்ளிக்கொலுசுகள்.
    விடிய‌ விடிய‌
    அர‌ங்கேற்ற‌ம்
    ============================================ருத்ரா

    (ருத்ராவின் க‌விதைக‌ள்)

Comments are closed.