"என்னால நம்ப முடியலே…." என்றேன் உரக்க. கையிலிருந்த ஆங்கில பெண்கள் இருவார இதழைக் கீழே வீசினேன். மஞ்சுளா தண்ணீர்ச் சொம்பை அதன் இடத்தில் வைத்து விட்டு என் அருகில் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.
"எதை நம்ப முடியலே."
"உள்ளே பிரிச்சுப் பாரு….பர்சனல்னு ஒரு பகுதி வருதில்லே….வாசகர்கள் தங்கள் பிரச்னையைச் சொன்னா, பத்திரிகைகாரங்க
பதில் தராங்களே…"
"அதுல என்னவாம்?"
"ஒருத்தி எழுதியிருக்கா…..ஆங்…..இதுதான்…இதைப்படி"
மனசுக்குள் படித்தாள் மஞ்சுளா.
கணவன் அப்பெண் மேல் உயிரையே வைத்திருக்கிறான். இரண்டு குழந்தைகளும் இருக்கிறது. ஆனால், இவளுக்கு இன்னொரு நபர் மேல் காதலாம், மறக்க முடியவில்லையாம். ஒரு வாசகி தன் பிரச்னையை எழுதி இருந்தாள்.
"இதுக்கு என்ன?"
"என்ன அநியாயம்..இந்த மாதிரி நல்ல குடும்பம் அமைஞ்சும்….ஒருத்தி வேறொரு நபரை லவ் பண்றதா….ஷிட்…."
"தப்புதான்"
"உதைக்கணும்……கட்டிவச்சு தோலை உரிக்கணும். நடுரோட்டுல நாயா சுடணும்."
"ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க." என்றாள் கேலியாக.
"நெஜம்மாவே எனக்கு எரிச்சலா இருக்கு.."
"சாரிங்க….ஆனா ஒரு விசயம், இதுல முழு விவரமும் இருக்கிறதா எனக்குத் தோணலே.’
"என்ன சொல்றே." என்றேன் புரியாமல்.
"கணவர் அன்பாவே நடக்கட்டும். ஆனா, அந்தப் பெண்ணுக்கு சில ரசனைகள் இருக்கலாம்….சில திறமைகள் இருக்கலாம்..அதை ரசிக்கிற …வளர்க்கிற குணம் அவருக்கு இல்லாமே அதனாலே உள் மனசு ஏங்கி வேறொரு ரசனையான நபரகிடைச்சதும் அன்பாயிருச்சோ என்னவோ.."
"அடி செருப்பாலே…இப்படி ஒவ்வொரு விசயத்துக்கும் ஒவ்வொரு ஆளா வச்சுக்க முடியுமா? பொதுவா புருசன் நல்லவனா…அன்பானவனா இருக்கானான்னு பார்த்தா… போதாதா…"
"அப்படி இருக்கலாமோன்னு நான் நினைச்சதைச் சொன்னேன். ஆனா, நீங்க சொல்ற மாதிரி இது தப்புத்தான்…" என்றாள் மெல்ல.
என் மனதைப் பேய் பிடித்துக் கொண்டது.
அருகில் படுத்து நிச்சிந்தையாய் உறங்கிப் போனவளை சந்தேகமாய் உற்றுப்பார்த்தேன். நானும் கூட நல்லவனாக…அன்பானவனாக மட்டுமே இருக்கிறேன். இவளுடைய ரசனைகளைப் புகழ்வதில்…வளர்ப்பதில் ஏதாவது அக்கறை காட்டி இருப்பேனா…
ஒருவேளை அது எல்லாம் இவள் மனசையும் பாதித்திருக்குமோ…
இவளும்…அந்தப் பத்திரிகை வாசகி மாதிரி வேறு ரசனையான நபரை…ச்சே….என்ன மனசு இது!…அபத்தமாய்க் கற்பனை செய்துகொண்டு…
தூக்கம் வராமல் புரண்டேன்.
காலையில் கண்கள் ‘ஜிவ்’வென்று இருந்தன. இரவில் சாரியான தூக்கமில்லை. தேவையில்லாத மனசுக் குழப்பம்தாம். ஆனாலும் ஆட்டி வைக்கிறதே…
"என்னங்க, இன்னைக்குத்தானே உங்க நண்பரும் அவர் மனைவியும் நம்ம வீட்டுக்கு சாப்பிட வர்றாங்க…"
தலை குளித்திருந்தாள். ஈர முடியை நுனியில் முடிச்சிட்டு…..புசு புசுவென்றிருந்த லெமன் கலர் காட்டன் சாரியில்….வாவ்!…என்ன அழகு..!.
"இங்கே வாயேன்!"
"ம்ஹூம். நேரமில்லை…மணி ஏழரை…இப்பவே சமையல் ஆரம்பிச்சாதான் ஒன்பது மணிக்குள்ள முடிச்சிட்டு மகாபாரதம் பார்க்கலாம்.."
"புருசனைக் காட்டிலும் டிவிதான் முக்கியமா…"
"உளறாதீங்க, சமைக்க வேணாமா…அவங்களும் ஒன்பது மணிக்கே வந்திருவாங்களே…"
தன்னுடைய மனைவியுடன் இன்று வருகிறான் மணி. ரொம்ப நெருங்கிய நண்பன். போன மாதம்தான் திருமணம் ஆனவன்.
அவசரமாய் ஷேவிங் செய்து….குளித்து….ரெடியானதும்….மணியும், மணியின் மனைவியும் வரவும்…சரியாக இருந்தது.
"வாங்க……வாங்க…" இருவரும் வரவேற்றோம்.
சம்பிரதாய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்….டிவியில் பாரதம் பார்த்துவிட்டு சாப்பிட அமர்ந்தோம்.
"சமையல் பிரமாதம். இவளும் இருக்காளே" என்றான் மணி.
அவன் மனைவி முகம் சட்டென்று சுருங்கியது.
சாதாரணமாகவே பளிச்சென்று பேசிவிடுவான் மணி. மற்றவர்களிடமாவது தொலைகிறது…தாலிகட்டி ஒரே மாதத்திலா…மனைவிக்கும் விமர்சனம்….எனக்கே என்னவோ போலிருந்தது.
ஏதோ பேச்சை திசை திருப்பி…சாப்பாடு ஆனதும் கொஞ்ச நேரம் பேசி ….அவர்களை வழி அனுப்பினோம்.
"ரொம்ப பெருமையா இருக்குமே இப்ப உனக்கு. உன் சமையலை ஆகா ஓகோன்னு புகழ்ந்துட்டு போனானே…"
"இல்லீங்க…" என்றாள் மெதுவாக.
"என்ன?"
"சமையல்..மத்த விசயம் எல்லாம் அப்பப்ப தேவையைப் பொறுத்துதாங்க…
ஆனா….தாலி கட்டின மனைவியும் ஒரு மனுஷிதான்! ரத்தமும், சதையும் கூடவே மனசும்….உணர்ச்சியுமா இருக்கிற ஜீவன்தான். அவ மனசு புண் படற மாதிரி பேசக் கூடாதுன்னு ஒரு அடிப்படை ஞானம் வேணாமா ஒரு மனிதருக்கு….அது புரியாத ஆளை என்னன்னு சொல்றது….
அந்த விசயத்துல நான் ரொம்ப கொடுத்து வச்சவ….என்னை எப்பவுமே நீங்க விட்டுக் கொடுத்து பேசினதில்லே…என் மனசு வருத்தப்படற மாதிரி நடந்ததில்லே…."
என்றாள் கண்களில் உண்மை பளிச்சிட.
பளீரென்று மனசுக்குள் மேகம் விலக….இழுத்து அணைத்துக் கொண்டேன்.
யதார்த்தமான, உண்மையான உணர்வுகள்! நல்லவேளையாக சந்தேகப்பேயிடம் அடிமைப்பட்டுப் போய்விடவில்லை!
மிக சரியான கருத்து. உண்மை