மனக்குப்பை (2)

ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாத தாஸ். அவரை மனைவி சங்கீதாவுடன் ஒரு கேளிக்கைக்கூடலில் பார்த்திருக்கிறாள். ஒல்லியான ஒல்லி. சிவப்பான சிவப்பு. மூக்கு குத்தி காதில் வளையம் அணிந்ததில் ஒரு வட இந்தியச் சாயல் தெரிந்தது. யாருடனும் அதிகம் பேசவில்லை அவள். தமிழ் பேசுவாளா என்றிருந்தது. அவரும் அவளைப் பிறருக்கு அறிமுகப்படுத்தி அவளது உற்சாகத்தை ஊக்குவிக்க முனையவில்லை. கணவனுக்கு அடங்கிய மனைவி. அவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று பார்த்துப் பார்த்து தன் விஸ்தீரணங்களை வலிந்து வட்டம் சுருக்கிக் கொள்கிறவளாய், அவர்சார்ந்து உருமாறிக் கொள்கிறவளாய் இருந்தாள். மற்ற அலுவலர்களும் மனைவி, குழந்தைகள் என வந்திருந்ததில் கூடம் கலகலப்பாய் இருந்தது.

”உங்க குழந்தைகள் வர்லியா?” என்று நட்புடன் கேட்டாள் திருமதி தாசிடம்.
அவள் வெட்கத்துடன் தலையை அளைந்தபடியே ”நோ இஷ்யூஸ் யெட்” என்றாள்.
”அவசரம் ஒண்ணில்ல” என்றாள் இவள் ஆறுதலாய். அவளுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. கணவன் இதுகுறித்து லேசான வருத்தம் உடையவனாய் இருப்பதில் இவள் முகவாட்டம் கண்டிருக்கலாம். குழந்தைப்பேறு இல்லை, அதல்ல கவலை, கணவனின் அலுப்பு, அதுவே பிரச்னை என்று நினைத்தாள்.

பஃபே தயாராய் இருந்தது. ஆளுக்கொரு தட்டு எடுத்துக் கொண்டார்கள். திருமதி சங்கீதா தாஸ் கேட்ட அளவில் குறைவாக, கேட்டதற்கு பதில் என்று பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் நல்ல படிப்பு, எம்.காம். தங்கப்பதக்கம் பெற்றவள்! ஒருவேளை வசதி குறைவான இடத்தில் பிறந்து, இந்த வரனே ஓகோ என்ற மிதப்புடன் பெற்றவர்கள் அனுப்பி வைத்திருக்கலாம். அலாரம் வைத்து எழுந்துகொண்டு, பின்தூங்கி முன் எழும் இந்திய ஸ்திரீ… சங்கீதாவை அவளுக்குப் பிடித்திருந்தது. அவளைச் சிரிக்க வைக்கவும், சந்தோஷப்படுத்தவும், அவளோடு பழகவும் விரும்பினாள்.

என்னதான் பேச்சும் பதிலுமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் திருமதி தாஸ் முதுகுபின்னால் கூட கணவனின் கட்டளைக்குச் செவிதீட்டிக் காத்திருந்தாப் போலிருந்தது. இந்தக் கூடலில் அவளுக்கு அவர் வீட்டுக்குப்போய்ப் பாராட்டு வழங்கவேண்டும், அதற்கு அவள் பாடுபட வேண்டும், என மெனக்கிட்டாப் போலிருந்தது. செயல்மும்முரத்தில் இவள் பேசியபடியே மற்ற மனைவிகளுடன் கலகலப்பாய்க் கலந்து கொண்டாள்.

அடுத்தநாள் அவளை அலுவலகத்தில் உள்ளே அழைத்தார் திரு காமேஸ்வர் தாஸ். ”என்ன என் ஒய்ஃப் உங்களை ரொம்ப போரடிச்சிட்டாங்களா?” என்றார் புன்னகையுடன்.

”இல்லியே, ஏன்?”

”இல்ல, அவளுக்கு அவ்வளவா பழக்க வழக்கம் தெரியாது.”

”ஷீஸ் ஜஸ்ட் ஆல்ரைட் சார்.”

”இல்ல, வில்லேஜ் பிராட்-அப் பாத்தீங்களா?”

”தட்ஸ் ஓ.கே. அவங்க இயற்கையா எப்பிடி இருக்காங்களோ அப்பிடி இருக்கட்டுமே. நம்ம இஷ்டப்படி அவங்க இருக்கணும்னு நாம எதிர்பார்க்கறதுதான் எனக்கு சரியாப் படல…”

அவர்முகம் மாறியது. அதுவரை எதிராளி பேச சந்தர்ப்பம் அளிக்காமல் மேலடி அடிக்கிற வழக்கம் உள்ளவர். மேலதிகாரி வேறு. இவளை இப்படி அழைத்துப் பேசி, அவளிடம் பேச்சுக் கேட்கிறோமே என அவர் உள்ளுக்குள் சுருங்கியிருக்கலாம்!
மனைவி சார்ந்த அவநம்பிக்கைகளை இவர் விலக்கிக்கொண்டால் நல்லது. ஐயா நீர் அலுவலகத்தில் அதிகாரி சரி, வீட்டில் நீர் அதிகாரியும் அல்ல, அவள் தொழிலாளியும் அல்ல. நல்ல நண்பர்கள் – அதுவே நியாயம்! அவரோடு எவ்வளவு பேசலாம் தெரியவில்லை. இப்படி அவளை உள்ளே அழைத்து அவர் பேசியதே முதல்முறை. திரும்பக் கூப்பிடுவாரா என்பதே சந்தேகம்!
”வரேன் சார்” என்று புன்னகையுடன் வெளியேறினாள்.

வசதி குறைவான படித்த அடிமைகள் தேவை. அவளுக்கு வாழ்வு தந்த பெருமை அவருக்கு இருக்கலாம். தகுதிசரியான இடத்துப் பெண் அவர் கைக்குள் அடங்காது என உள்ளூற பயந்துமிருக்கலாம்… மனசின் வேடிக்கைகளுக்கு அளவேயில்லை! தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பினாள்.

பின்னாளில் திரு தாஸ் இவளிடம் சற்று இறுக்கம் தளர்த்திக் கொண்டாப் போலத்தான் இருந்தது. ஆறேழு வருடங்களாய்க் குழந்தை இல்லை என கவலை கொண்டாடினாப்போலத்தான் இருந்தது. இது ரீதியாய் மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுகிறார் என்று தெரிந்தது. சிலநாட்கள் உறக்கம் மீளாத கண்சிவப்புடன் அலுவலகம் வருவார். தொலைபேசியில் உறுமலாய் எகிறலாய்ப் பேசுவார். அன்றைக்கு வேண்டுமென்றே மனைவி கட்டித் தந்திருந்த உணவைப் புறக்கணித்து வந்திருந்தார். அதை அவள் கொடுத்தனுப்பவோ என்னவோ அலுவலகத்துக்குப் பேசியபோது ஆத்திரப்பட்டார்.

உண்மை – ஒரு குழந்தை இருவரிடையே இன்னும் உறவுகளைச் சீர்ப்படுத்தியிருக்கும் ஒருவேளை. ஆனால் புயல் மையம் பிசகிப் போகும் என்று தோன்றியது இப்போது.

திரு காமேஸ்வர் தாசின் அறை ஜன்னல் இப்போதெல்லாம் அவளைப் பார்க்கிறாப் போல ஒருக்களித்துத் திறந்திருந்தது! பிறர் அறியமுடியாவண்ணம் சற்றே காற்றுக்குப்போலத் திறந்திருந்தது. முதலில் அவள் அதை கவனிக்கவில்லை. பிறகு சட்டை பண்ணவில்லை. வேலைமும்முரத்தில் அவள் தலைநிமிர்ந்தால் ஜன்னலுக்கு அந்தப்புறம் அந்த விழிகள்… சற்று பசித்துக் கிடந்தன அவை. ஆண்களின் அந்தப் பார்வை அவள் அறிவாள்!

தூரம் வெட்கம் அறியாது போலும்!

”உங்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்…” முடிந்த இயல்புடன் காமேஸ்வர் பேசத் தலைப்பட்டார். ”சொல்லுங்க சார்” என்றாள் நேர்ப்பார்வையாய். இது அலுவலகம் அவர் தன்னிச்சையாய்ப் பேசவோ, செயல்படவோ வாய்ப்பில்லை, அவளுக்குத் தெரியும். அவருக்கும் அது தெரிந்திருந்தது.

”இசிட் ஸோ பெர்சனல் சார்?”

”அப்டின்னில்ல…” என்றவர் தயங்கி, சிறிது நிறுத்தி ”ஆமாம்” என்றார் தடுமாற்றத்தோடு. ”ரொம்ப அலுத்திருக்கிறீர்கள்,” என்று பொதுப்படையாய்ச் சொல்லிவிட்டு ”ஓய்வாய் ஒருநாள் பேசலாம் சார்” என்றபடி வெளியேறினாள்!

திருமதி தாஸ் வீட்டில் தனியாகத்தான் இருப்பாள் என்று தோன்றியது. அவள் யூகித்தது சரியே, வீட்டில் அடிக்கடி தாஸ் சண்டை வலிக்கிறவராய் இருந்தார். குழந்தைப்பேறு பூதாகரமாகி வீட்டின் சுவர்களில் முட்டிமோதித் திணறிக் கொண்டிருந்தது. விக்கித்த அழுகையோடு பயத்தோடு ஆங்கிலத்தில் அவள் பேசினாள்.

அவரது ஆஷ்ட்ரே நிரம்பி வழிந்தது. பாதி குடித்த சிகெரெட்டுகள் அழுத்தி நசுங்கிக் கிடந்தன. வீடுதிரும்ப முடியாத தத்தளிப்புடன் அவர் தனியே உள்ளே இருப்பதைப் பார்த்தாள். நேரே அவரது அறைக்குள் நுழைந்தாள். ”எஸ்?” என்றார். ”எதோ சொல்லணும்னீங்களே சார்?” – ”ம்…” அவர் பெருமூச்செறித்தார். ”வீட்ல எதும் சண்டையா சார்?” அவர் அவளைப் பார்த்தார்.

”நீங்க உங்க மனைவியை சந்தேகப்படறீங்களா?” என்றாள் நேரடியாய். அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ”இல்ல, ஏன்?” என்றார். பிறகு ”உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

”அவங்ககூட நான் பேசினேன் சார்,ஃபோன்ல…”

”நீங்க ஏன் பேசணும்?” என்றார் அவர் சிகெரெட்டை ஆஷ்ட்ரேயில் அழுத்தியபடியே. ”அவளே பேசினாளா உங்ககூட?” என்று கண் சிவக்கக் கேட்டார், அவர் தலைக்குள் ஆத்திரம் குமுறிக் கொண்டிருந்தது.

”இல்ல நாந்தான் கூப்பிட்டுப் பேசினேன்…”

”ஏன்.”

ஆண்கள். அவர் விரும்பினால் அவளைக் கூப்பிட்டுப் பேசலாம். அதில் தவறாக எதும் கிடையாது. அவர் மனைவியை நான் கூப்பிட்டுப் பேசியது அவருக்குத் தெரியாமல் போனதில் ஆத்திரம்!

”பாவம் சார். அவளை நீங்க சந்தேகப்படறது தப்பு சார்.”

”ரைட்” என்றார் அவர். ”அதெப்பிடி உனக்குத் தெரியும்?”

”ரொம்ப பயந்தவங்க அவங்க. துணிச்சலான எதிர்முடிவுகளை எடுக்கிறவங்க கிடையாது, அது உங்களுக்கே தெரியும்.”

”அவ மாமாபையன் ஒருத்தன்… இப்ப அடிக்கடி வந்துபோறாப்ல இருக்கு…” தன் சொந்த விஷயத்தைப் பட்டவர்த்தனமாய்ப் பேச வெட்கமும், அப்படி நேர்ந்ததில் ஆத்திரமும் அடைந்திருந்தார்.

”அவளை நீங்க நம்பணும். அவன் யாரா இருந்தா என்ன… உங்க மனைவியை உங்களுக்குத் தெரியாதா? அவனைப் பத்தி பயந்துகிட்டு உங்களை நீங்க காயப்படுத்திக்கறீங்க… நான் அதிகம் பேசறதா நினைக்கறீங்களா?”

இல்லை, என்கிறாப்போல லேசாய்த் தலையசைத்துவிட்டு, ”ஆமா” என்றார் அழுத்தமாய். ”நான் அவளை சந்தேகப்படறதுக்குக் காரணம்…”

”உங்களுக்கு ஒரு மொட்டைக்கடுதாசி வந்தது…”

”இவ எல்லாத்தையும் உன்கிட்டப் பேசறாளா?” அவர் உடம்பு நடுங்கியது. அவள் வார்த்தைகள் குண்டூசிகளாய் அவர் தோலைக் குத்தினாற் போல.

”குழந்தையில்லைன்னு மனைவியை ஒதுக்கிவைக்கத் தயங்காத ஆண்கள், அதேபோல அவளும் நம்மை ஒதுக்கிருவாளோன்ற நினைப்பையே தாள முடியாதவங்களா இருக்காங்க…”

அவர் முகம் இருண்டது. எதோ சொல்ல வந்தவர், அவளோடு என்ன பேச்சு என்பதுபோல அடக்கிக் கொண்டார்.

”எனக்கு அவ மாமாபையனைத் தெரியாது, ஆனா உங்களைத் தெரியும். எப்படித் தெரியும்?” என்றவள் நிறுத்தி ”இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்…” என்றாள். பின் ஒரு புன்னகையுடன் சொன்னாள் – ”அந்த மொட்டைக் கடுதாசி… அதை எழுதியது நான்தான்.” அவர்முன் அதன் ஜெராக்ஸ் பிரதியை வைத்தாள் அவள். அவரைப் பார்க்காமல் எழுந்துபோய் அந்த ஜன்னல்கதவைச் சாத்தினாள். அவளைப் பார்க்க சற்றே திறந்திருக்கும் ஜன்னல்.

திரும்பி அவரைப் பார்த்தாள் – ”கிளம்புங்க சார். மனைவி உங்களுக்காகக் காத்திருப்பாங்க…” என்றாள் அவள் புன்னகையுடன்.

(நன்றி – பெண்ணே நீ மாத இதழ்)

About The Author