மணல் மூட்டைகளுக்குப் பின்னால் ஒரு மனிதன் (1)

நீண்ட அந்த வாசலுக்கு இரு பக்கங்களிலும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வலதுபுற மணல் மூட்டைக்குப் பின்னால் கான்ஸ்டபிள் ஜனார்தன் இருக்கிறார். இடதுபுறம் கான்ஸ்டபிள் யோகேஷ் இருக்கிறார். தீவிரவாத தாக்குதலுக்குப் பின் மும்பை மாநகரின் முக்கியப் பகுதிகளில், குறிப்பாக ரயில் நிலையங்களில் இவ்வாறு மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் காவலுக்கு நிறுத்தப் பட்டுள்ளனர். சிஎஸ்டி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடந்த காரணத்தால், ரயில் நிலையங்களில் இப்படியான பாதுகாப்பு அவசியம்தான்.

மணல் மூட்டைகளுக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொரு போலீஸ் கான்ஸ்டபிளும் 12 மணி நேரம் பணி செய்ய வேண்டும். உட்கார முடியாது. மணல் மூட்டைகளுக்குப் பின்னால் ஒரு ஆள் மட்டுமே நிற்கும் படியான இடமிருந்தது. கையில் ஆறு தோட்டக்கள் அடங்கிய டப்பாவும் ஒவ்வொரு தோட்டாவாகப் போட்டு சுடும் படியான துப்பாக்கியும் கொடுத்திருக்கிறார்கள். தீவிரவாதிகள் தென்பட்டால் சுட உத்தரவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

"ஹே லக்‌ஷ்மன்! ஹே லக்‌ஷ்மன் இக்கடே யே ரே!" என்று தலையை முன்னுக்கு நீட்டி ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருந்த லக்‌ஷ்மனைக் கூவி அழைத்தார் ஜனார்தன்.

தனது பெயர் சொல்லி யாரோ அழைப்பது கேட்டு திரும்பிய லக்‌ஷ்மன் "காய் மாமா, கசா ஹாக் மார்ல்யா? " என்று நின்ற இடத்திலிருந்தே சத்தமாகக் கேட்டான். பின் சற்றே தயங்கியவன் மணல் மூட்டைகளுக்குப் பின்னால் நின்ற ஜனார்தனிடம் வந்து சேர்ந்தான்.

"காலையிலேயே எங்கப்பா கிளம்பிட்ட?" ஜனார்தன் செயற்கையாக ஒரு புன்னகையை உதிர்த்தபடி கேட்டான்.

" மாமா, தம்பாக்கு ஹாய் காய்? தம்பி மங்கேஷ் பத்தாவது பாஸ் பண்ணிட்டாம்ல. தாதர்ல கான்ஸ்டபிள் பர்த்தி நடக்குதாம், அதான் சுனில் காகா கிட்ட சொல்லி எதாவது செய்யச் சொல்லணும்" என்று கையில் வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பையை கக்கத்தில் வைத்து விட்டு ஜனார்தன் கொடுத்த புகையிலையை கையில் தட்டி, சிறிய சுண்ணாம்பு டப்பியிலிருந்து சுண்ணாம்பை பிதுக்கி உள்ளங்கையில் புகையிலைக்கு மத்தியில் தடவி வலதுகை கட்டைவிரலால் இடது உள்ளங்கையில் வைத்து கசக்கத் துவங்கினான்.

" காய் ரே! வேற எதாவது வேலைக்கு டிரை பண்ண வேண்டியதுதானேப்பா. போலீஸ் வேலை எதுக்கு? அப்படியே போலீஸ் வேலைதான் வேணுமின்னாலும் எதாவது இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் இப்படி டிரை பண்ண வேண்டியதுதானே." என்று சற்றே முகம் இறுகினார் ஜனார்தன்.

புகையிலையை உருட்டி கிள்ளி வலது கையின் கட்டை மற்றும் ஆட்காட்டி விரலால் அள்ளி இடது கையிலிருந்த தூசி தட்டிவிட்டு மீண்டும் கசக்கத் துவங்கினான். "அரே மாமா. மங்கேஷ்க்கு படிப்பு சரியா வரலை. எப்படியோ கஷ்டப்பட்டு பத்தாவது பாஸ் பண்ணியிருக்கான். அவனுக்கும் மேல படிக்க இஷ்டமில்ல. இப்பவே அந்த பையாக்காரி மவள் பிந்துகூட பழகிக்கிட்டு இருக்கான். அதான் அவனை இங்க மாட்டி விட்டிறலாமுன்னு இருக்கேன். அவனும் ஜிம்கிம்முனு போய் நல்ல கும்முனுதான் இருக்கான்" என்று விளக்கம் சொன்னான்.

"நாஹி ரே! இந்த வேலையை விட வேற நிறைய நல்ல வேலைகள் இருக்குன்னு சொல்ல வந்தேன்" என்றார் ஜனார்தன் கெஞ்சல் தொனியில்.

லக்‌ஷ்மன் கையிலிருந்து சுண்ணாம்பு கலந்த புகையிலையில் ஒரு கிள்ளை தான் எடுத்துக் கொண்டு மீதியை ஜனார்தனிடம் கொடுத்தான். இருவரும் கீழுதட்டை முன்னுக்கு இழுத்து உதட்டிற்கடியில் பட்டாணி அளவிலிருந்து புகையிலை உருண்டையை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு திசையில் எச்சில் துப்பினார்கள்.

"அரே மாமா! இப்பவெல்லாம் படிக்கலைன்னா நல்ல வேலை கிடைக்காது. நம்ம தம்பிக்குத்தான் படிப்பு ஏற மாட்டேங்குதே. கம்யூட்டர் கிம்யூட்டர் எதாவது படிப்பான்னு பார்த்தேன். அதுலயும் இண்ட்ரஸ்ட் இல்லை. என்ன பண்ண. அவனுக்கு இந்த அடிதடின்னா ரொம்ப இஷ்டம். இப்ப அடிச்சா போலீஸ் பிடிக்கும். கான்ஸ்டபிளாகி அடிச்சா சம்பளம் கிடைக்கும். என்ன நான் சொல்றது? " என்று தனது பேச்சில் குறியாக இருந்தான் லக்‌ஷ்மண்.

" இல்லப்பா. இந்த வேலை அவ்வளவு நல்ல வேலை இல்ல. எதாவது கால் செண்டர்ல சேர்த்து விட வேண்டியதுதானே. இருபது முப்பது ஆயிரம் சம்பளம் கிடைக்காமே! துலா பாஹிஜே நா"

" அரே மாமா, மாலா பாஹிஜே. பன் காய் கராச்சா. மங்கேஷ்க்கு இங்கிலீஷ் சரியா வராது. அதுமட்டுமில்ல, அவனுக்கு இந்த வேலையில எல்லாம் இஷ்டம் இல்ல. மீ காய் கர்னார்? அப்பாவும் இவனை போலீஸ்ல சேர்க்கணுமுன்னு பிடிவாதமா இருக்காரு. அதான் டீக் மாமா. மீ நிக்தோ" என்று லக்‌ஷ்மன் கிளம்பினான்.

கிளம்பியவனை நிறுத்தி " தாம்ரே.. காய் இத்கியா காய் கர்தோஸ். இந்த கான்ஸ்டபிள் வேலையில ஒண்ணும் இல்லடா. எல்லாரும் போலீஸ் வேலையின்னா என்னமோ பெரிய வேலையின்னு நினைக்கிறாங்க. நாங்க படுற அவஸ்தை எங்களுக்குத்தான் தெரியும். கொஞ்சம் பெரிய அதிகாரியா இருந்தா மதிப்பாங்க. இல்ல பெரிய அதிகாரி ஆதரவு இருந்தா மதிப்பாங்க. அப்படி இல்லனா பான் பீடி கடைக்காரன்கூட மதிக்க மாட்டான். முன்னயெல்லாம் காய்கறிக் கடையில கொஞ்சம், பழக்கடையில கொஞ்சமுன்னு அள்ளிக்கலாம். காசு பணம் பெரிசா கிடைக்கலனாலும், சில்லரைச் செலவு கழிஞ்சிடும். ஆனா இப்ப அதுவும் கிடைக்கிறதில்லை"

"அரே மாமா, உங்களுக்கு பொளைக்கத் தெரியலன்னு சொல்லிட்டுப் போங்க" என்று சொல்லிபடி வேகமாகச் சாலையில் இறங்கி நடந்தான். லக்ஷ்மன் போனபின் ஜனார்தனுக்கு மனது தாங்கவில்லை. அவர் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தார். சமீபமாக இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். தன்னிடம் தானே பேசிக் கொண்டிருக்கிறோம் என்று உணரும் போதெல்லாம் அக்கம் பக்கம் பார்த்து புன்னகைத்துக் கொள்வார்.

(தொடரும்)

About The Author