ஜனார்தன் புகையிலை பொட்டலத்தை எடுத்து தானும் கொஞ்சம் தட்டிக் கொண்டு அவனிடம் கொடுக்கிறார். பின் சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு சுண்ணாம்பு டப்பாவையும் கொடுக்கிறார். கையில் புகையிலையை வைத்து சுண்ணாம்பு சேர்த்துக் கசக்குகிறார்.
"ஹே பக்யா! சிட்டி பக்கம் போனியா, சூழ்நிலை எப்படி இருக்குடா?"
பக்யாவும் புகையிலையை கசக்கியபடி "அரே சாஹேப், அங்கெல்லாம் ஒண்ணுமில்ல. ரயில்ல குண்டு வெடிச்சதும் ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனுக்கும் இரண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்கள உட்கார வச்சு பெரிசா எதாவது பொட்டலம் கட்டிக்கிட்டுப் போறவங்களப் பிடிச்சு, அவங்க பொட்டலத்துல என்ன இருக்குன்னே பார்க்கக்கூட மாட்டாங்க, அவங்க பேரையும் இருக்கிற எடத்தையும் கேட்டு எழுதிட்டு அனுப்பிடுவாங்க. ஜாலியா வயசு பொண்ணும் பையனும் உக்காந்து உரசிக்கிட்டுருக்காங்க. அதப் பார்த்தா பேசாம போலீஸ்ல சேர்ந்திடலாமுன்னு தோணுது" என்றான் பக்யா தனது காவிப் பற்களைக் காட்டியபடி.
"டேய் அப்படியெதுவும் செஞ்சிடாதடா" என்று ஜனார்தன் புகையிலை கசக்குவதை நிறுத்திவிட்டு சொன்னார் பின் மீண்டும் கசக்கத் துவங்கினார்.
"அட நீ வேற சாஹேப். அத பார்த்தா அப்படி மூட் வரும். அவ உதட்டைப் பார்த்தா சிவப்பு அவன் வெத்திலைச்சாறா, லிப்ஸ்டிக்கான்னே கண்டுபிடிக்க முடியல. ஆனா உன்ன மாதிரி இன்னைக்கு சிட்டி பூராவும் துப்பாக்கி வச்சிக்கிட்டு நிக்றாங்களே அந்த போலீஸ்கள பார்த்தா அப்படியொரு எண்ணமே வராது" வராது என்றபடி கசக்கிய புகையிலையை உருட்டி கீழுதட்டின் அடியில் வைத்துக் கொண்டான்.
"சிட்டியில இதே மாதிரிதான் மணல் மூட்ட வச்சிருக்காங்களா? நீ பாத்தியாடா? எத்தனை இடைவெளியில வைச்சிருக்காங்க?" என்று புகையிலையை கீழுதட்டிற்குக் கீழ் அடக்கியபடி ஆர்வமுடன் கேட்டார் ஜனார்தன்.
"ஆமா சாஹேப் ! நிறைய வச்சிருக்காங்க. எல்லாம் சிங்கிள் சிங்கிளாத்தான் இருக்கு. ஏன் நீங்க அந்தப் பக்கம் போகலயா? பாவம் சாஹேப். எல்லாம் கிழவனுங்க. இந்த மாதிரி பழைய மாடல் 303 ரைபிளை வச்சிக்கிட்டு தீவிரவாதிகளுக்காக காத்திருக்காங்க. பாவம்!. டெடரிஸ்ட் உங்க முன்னால வந்தா என்ன சாஹேப் பண்ணுவீங்க?"
"டேய் என்ன கிண்டலா! சுட்டுக் கொன்னுடுவோம்டா! போடா அந்தப் பக்கம்" என்று ஜனார்தன் பொய்க் கோபம் காட்டினார். நகரம் முழுவதும் இன்னும் நிறையப் பேர் இப்படி துப்பாக்கி தூக்கிக் கொண்டு நிற்பது குறித்தும் வருத்தமும் ஆறுதலும் கொண்டார்.
"அட போ சாஹேப்! இந்த ரைபிளை வச்சுக்கிட்டு காக்கா கூட சுட முடியாது. காக்கா வந்தா கூட இந்த இந்த மணல் மூட்டைக்குப் பின்னால மறைஞ்சுக்குவீங்க அப்படித்தானே?" என்றான் பக்யா கிண்டலாக.
"ஹே! சல். நீ கிளம்பு. கிளம்புடா’" என்று விரட்டினார். ஆனால் அவன் இன்னும் கொஞ்ச நேரம் இப்படி கிண்டல் செய்து கொண்டிருந்தால் நல்லாத்தான் இருக்கும் என்று பட்டது.
"அட என்ன சாஹேப்! சும்மா பேச்சுக்குச் சொன்னேன். ஆனா ஒன்னு சாஹேப், இந்த மணல் மூட்டை காண்டிராக்ட்ல நம்ம மந்திரிமாருங்க நல்ல கமாய் பண்ணிருப்பாங்க. யார் கொடுத்த ஐடியாவோ தெரியல" என்று உதடுகளை ஒருமாதிரியாக பிதுக்கிக் கொண்டு மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான்.
"ஹே பக்யா! சல் பஸ் கர்! அதா பூட் இக்டூன்! சல்! சல் ரே! இப்ப சீனியர் சாஹேப் ரவுண்ட் வருவாரு. சல் கிளம்பு.கிளம்புடா."
ஜனார்தனுக்கு பக்யாவுடன் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பதும் பிரச்சனைதான். வேலை பார்க்காமல் இப்படி பேசிக் கொண்டிருப்பதை ரோந்து வண்டிக்காரர்கள் பார்த்து சீனியரிடம் போட்டுக் கொடுத்தால் (ஓசி வாழைப்பழமா கேக்கற நாயே வைக்கிறேண்டா வத்தி)அனாவசியமாக திட்டு வேறு கிடைக்கும் என்று பக்யாவை விரட்டினார்.
"அரே ஜாதான்ஹூன்! ஜாதாஹூன்!" என்றபடி பக்யா தனது சட்டையை பின்பக்கமாக இழுத்து விட்டபடி பாட்டொன்றைப் பாடியபடி போய்க் கொண்டிருந்தான்.
"சாலா! சும்மா வந்து தொணதொணன்னுகிட்டு" தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். பின் சற்று நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தார். எந்த யோசனையும் இல்லை, தனக்குத்தானே எதுவும் சொல்லிக் கொள்ளவுமில்லை. பின் ஒரு ஆழமான மூச்சை விட்டபடி "அவன் சொல்றதும் சரிதானே. ஏகே-47 எங்க. இந்த 303 ரைபிள் எங்க. அவன் பாம் வீசினா நான் மட்டுமில்ல அதோ அந்தப் பக்கம் இதே மாதிரி மணல் மூட்டைகளுக்குப் பின்னால நிக்கானே தன்யா அவனும் குளோஸ். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி டூட்டியோ தெரியல" என்று போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். "ஹும்! பாவம் இந்த மக்கள்! இவங்களுக்குத்தான் எங்க மேல எத்தனை நம்பிக்கை. இப்படி நகரம் முழுவதும் மணல் மூட்டைகளை வச்சு அதுக்குப் பின்னால நாங்க நிக்கிறதப் பார்த்துட்டு எவ்வளவு நிம்மதியா வருதுங்க போவுதுங்க. படுத்துத் தூங்குதுங்க. இந்த மக்களோட நம்பிக்கைக்காவது நாம இப்படி நிக்கலாம் போல"
புன்னகைத்துக் கொண்டார்.
“
முற்றிலும் புதிய கோணத்தில் சித்தரிக்கப்பட்ட அருமையான கதை!
வாழ்த்துகள்!