மடை திறந்து… (35)

என்னப்பா, விடுமுறை ஆரம்பமாயிடுச்சே… என்னைப் போல எல்லாரும் ஜாலியாதானே இருக்கீங்க?

10 நாட்கள் விடுமுறைன்னாலும் நிறைய யோசிச்சு செய்ய வேண்டிய வேலைகள் குவிஞ்சு கிடக்கு… உதவிக்கு புத்திசாலியான ‘அப்பரண்டிசுகள்’  தேவை… வேலை செய்து அனுபவமும் பணமும் ஈட்ட விரும்புபவர்கள் எனக்கு எழுதுங்கப்பா… தேவையான ஸ்கில்ஸ்:

Graphic designing
ASP programming
Html
Researching
Project management

இதுல எந்த ஸ்கில் உங்ககிட்டே இருந்தாலும் எங்களைத் தொடர்பு கொள்ளுங்க:

https://www.nilacharal.com/bus/freelance.html

அப்துல் கலாம் அவர்களை நாம எப்படி எல்லாம் கொண்டாடி இருக்கோம்! அவர் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதுன்னு சொன்ன உடனே அவரை வில்லன் ரேஞ்சுக்கு நம்ம ஊடகங்கள் சித்தரிக்க ஆரம்பிச்சது ரொம்ப வருத்தமான விஷயம். ஒரு அறிவியலாளரா, அணுமின் வல்லுனரா அவர் தன் கருத்தைச் சொல்றார்… அதை நம்மால புரிஞ்சிக்க/ ஏத்துக்க முடியலைன்னா புறக்கணிக்க வேண்டியதுதானே? ஏன் அவரை ஏளனம் செய்யணும்? பிடிச்சதுன்னா உச்சத்துக்குத் தூக்கிட்டுப் போறதும் பிடிக்கலைன்னா அங்கே இருந்து தபால்னு தள்ளி விடறதும் ஏன்? ஏன் நம்ம கிட்ட ஒரு சமநிலை இருக்க மாட்டேங்குது? சட்டுச் சட்டுன்னு தீர்ப்பிடறதுக்கு நாம யார்?

இதை எழுதும்போது எனக்குள்ள ஏறபடற எரிச்சல் கூட இந்த நாட்டமைத்தனத்திலருந்துதான் வருதுங்கறதும் எனக்குத் தெரியுது… தலைக்குள்ளே இருக்கற இந்த நாட்டாமை கூட சண்டை போட்டு பிரயோஜனமே இல்லைங்கறார் டோலே… சண்டை போட்டா நம்மோட பலமெல்லாம் அவருக்குத்தான் போகும். இவரை சலனமில்லாம நாம பார்க்க ஆரம்பிச்சாலே அமைதி ஆயிடுவார்.

இதுக்கு முதல்ல நமக்குள்ள ஒரு நாட்டாமை இருக்காருங்கறதை உணரணும். ஆரம்பத்தில நாட்டமைங்கற கான்செப்டே நமக்குப் புரியாது. புரிஞ்சாலும் நாட்டாமை நமக்குள்ளேயும் இருக்காருங்கறதே தெரியாது. ஆனா அடுத்தவங்ககிட்டே இருக்கறது தெரிய ஆரம்பிக்கும். பின்னே நம்ம நாட்டாமையோட இருப்பை கொஞ்சம் கொஞ்சமா உணர்வோம். ஒரு நிகழ்வு நடந்து முடிஞ்சு ரொம்ப நாட்கள் கழிச்சு இவர் போட்ட ஆட்டத்தை உணர்வோம். அப்படி உணர ஆரம்பிக்க ஆரம்பிக்க, அவர் பண்றதெல்லாம் உடனுக்குடன் வெளிப்பட ஆரம்பிக்கும். பின்னே அவரோட ஆட்டம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா அடங்கும். அவர் மௌனமாகும் போது நாம ஞானி ஆயிடுவோம். என்னோட நாட்டாமை இப்பதான் கொஞ்சம் அடங்க ஆரம்பிச்சிருக்கார்… நாம ஞானி ஆகிறதுக்கு இன்னும் நிறைய தூரம் இருக்குங்கோ… ஏன்னா என்னோட நாட்டாமை சரத்குமார், விஜயகுமார் எல்லாத்தையும் போல பத்து மடங்கு ஸ்ட்ராங்… ஹும்… சலனமில்லாம இவரைப் பார்க்க முயற்சிக்கறேன்.

எங்க அலுவலகத்தில நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு நிறைய குழந்தைகள் வந்திருந்தாங்க… அவங்களைப் பார்க்கறதே ஒரு சந்தோஷம்தான்… அதுவும் இரண்டு வயசுக்குட்பட்ட குழந்தைகள்கிட்டே இருக்கற பரிசுத்தமும் சந்தோஷமும் எல்லையில்லா இந்தப் பிரபஞ்சத்தை பிரதிபலிக்கறதாவே எனக்குத் தோணும். அந்த புனிதத்துவத்திலருந்து இந்த நாட்டமைத்தனத்துக்கு மாறுறதுக்கு ஒரு தனி திறமை வேணும்… அது நம்மகிட்டே ஏராளமா இருக்கு.

எனக்கு சின்ன வயசிலருந்தே குழந்தைகள்னா ரொம்பப் பிரியம். அவங்க பின்னாடியே ஓடிட்டிருப்பேன். இன்னைக்கு வரைக்கும் அது மட்டும் என்கிட்டே மாறவே இல்லை. அதே சமயம், எனக்குக் குழந்தை இல்லை என்கிற வருத்தம் எனக்கில்லை. இதை பல பேரால புரிஞ்சுக்க முடியமாட்டேங்குது. ‘அதெப்படி வருத்தமில்லாம இருக்கும்? உள்ளுக்குள்ள வருத்தத்தை வச்சிட்டு காட்டிக்க மாட்டேங்கறா’ன்னு பல பேர் பேசறாங்க. ஏன் வருத்தம் இருக்கணும்? ‘இருந்தா ஒரு குழந்தை… இல்லைன்னா எல்லா குழந்தைகளும் என் குழந்தைங்க’ங்கறதுதான் என்னோட இப்போதைய மனப்பான்மை… ஆனா பொதுவா குழந்தை இல்லாதவங்களை குறைபாடுள்ளவங்களா பார்க்கறதும் அவங்க செயல்களையெல்லாம் இதோடு சம்பந்தப்படுத்தியே பார்க்கறதும் நம்ம சமூகத்தில ரொம்ப பரவலா இருக்கு… சமீபத்தில நான் இந்தியா வந்திருந்தப்போ ‘எங்களை விட நீங்க இன்னொரு குடும்பத்தோட பாசமா இருக்கறதுக்குக் காரணம் அவங்க ரெண்டு குழந்தைகள் வச்சிருக்காங்கறதுதானே’ன்னு ஒரு தோழி கேட்டாங்க. ‘இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா’ன்னு எனக்குத் தோணிச்சு…

மேலை நாடுகள்ல குழந்தை பெற்றுக்கறது ஒரு தெரிவு (சாய்ஸ்). குழந்தை வேண்டாம்னு தீர்மானம் செய்து இருக்கறவங்க எத்தனையோ பேர். நம்ம சமூகம் இப்படி தீர்மானம் செய்ய அனுமதிக்குமாங்கறது பெரிய கேள்விக்குறி. குழந்தை இல்லைன்னு மன அழுத்தத்திலர்ந்த ஒரு இந்தியப் பெண் என்கிட்டே சிகிச்சைக்கு வந்தாங்க. இரண்டு வருடத்தில 2-3 முறை சிகிச்சைக்கு வந்திருப்பாங்க. போன முறை சொன்னாங்க, ‘சுகம் பெற்றதுல உண்மையாவே எனக்குக் குழந்தை இல்லைங்கற வருத்தம் போயிடுச்சு. ஆனா இதை வெளில சொன்னா எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை’… நாம ஒவ்வொருத்தரும் சேர்ந்ததுதான் சமூகம்கறதுனால நாம எப்படி இந்தப் பிரச்சினையைப் பார்க்கறோம்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… சரியா?
இந்தக் கருவை அடிப்படையா வச்சு ஒரு கதை எழுதணும்கறது என்னோட நீண்ட நாள் விருப்பம்… (கதை எழுதி கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆகிப் போச்சுப்பா…).. இந்த விடுமுறையில நான் பிரபஞ்சத்துக்கிட்டே அடிக்கடி கேட்கப் போற கேள்வி, ‘என்னோட வாழ்கையை ஆனந்தமா வாழ என் திறமைகளை பயன்படுத்தறதெப்படி?’

‘இயற்கையத்தான் பிரபஞ்சம்னு சொல்றீங்களா?’ ன்னு கீதா கேட்டிருந்தாங்க… (இந்தக் கேள்விக்கும் ரெண்டு வாரம் முன்னால பதில் சொல்லிருந்தேன். பதில் தெரிஞ்சவங்க அடுத்த பத்தியைத் தாவிக் குதிச்சிருங்க.)

பூவை விரியவைக்கிற, கோள்களை ஒரு குறிப்பிட்ட பாதையில சுழல வைக்கிற, சுவாசத்தை இயங்க வைக்கிற ஏதோ ஒரு மகாசக்தி இருக்கில்லையா… அந்த சக்தியை எந்த வரையறையில கொண்டு வந்தாலும் அதைக் குறுக்கத்தான் செய்வோம். அதனால எந்த வரையறையும் இல்லாத, அதே சமயம் எல்லா வரையறையையும் உள்ளடக்கிய, இந்த எல்லையற்ற பிரபஞ்சம் முழுவதையும் இயக்கற அந்த சக்தியைத்தான் நான் பிரபஞ்சம்னு குறிப்பிடறேன்.

கையெழுத்தை வச்சு ஒருத்தரோட குணநலத்தைக் கணிக்கற க்ரஃபாலஜி எனக்குத் தெரியும்கறது உங்கள்ல நிறையப் பேருக்குத் தெரிஞ்சிருக்காது. ‘கையெழுத்தும் தலை எழுத்தும்’னு பல வருடங்களுக்கு முன்னால ஒரு குறுந்தொடர் எழுதிருக்கேன் நிலாச்சாரல்ல. நான் பயன்படுத்தற பல சுகமளிக்கும் உத்திகள்ல கிட்டத்தட்ட 100% வெற்றி தர்றது கையெழுத்துப் பயிற்சிதான். நான் இதை பயன்படுத்தின எல்லாருமே நல்ல மாற்றங்களை வாழ்க்கையில அடைஞ்சிருக்காங்க (நான் உட்பட). நம்மைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் நாம வச்சிருக்கற நம்பிக்கைகளை அப்பட்டமா நம்மோட கையெழுத்து வெளிப்படுத்தும். இந்த குறுக்கும் நம்பிக்கைகளை இரண்டு வழிகள்ல மாற்றலாம்.

முதலாவது கையெழுத்தை (Signature) மாற்றுவது. ரெண்டாவது சில எழுத்து வடிவங்களை (Handwriting) மட்டும் மாற்றி அதன் மூலம் ஆழ்மன நம்பிக்கைகளை மாற்றுவது. ரெண்டுமே ரொம்ப நல்லா எனக்கு வேலை செய்திருக்கு.

ஆனா எந்த உத்தியை பயன்படுத்தினாலும் சுகம் பெறுவதுங்கறது உங்க ஒவ்வொருத்தரோட தெரிவுதான். சுகவர்கள் உங்களுக்கு சுகம் பெற ஏதுவான சூழலை உருவாக்கித் தரலாம். சுகத்தைப் பெற்றுக் கொள்வது உங்களோட கையிலதானிருக்கு. வாழ்க்கையை ஆனந்தமா வாழறது நம்ம ஒவ்வொருத்தரோட உரிமை. ஆனா அந்த உரிமையை பயன்படுத்திக்கறது நம்மோட தெரிவு.

சரிப்பா… மற்ற கடமைகள் அழைக்கின்றன… முடிக்கறதுக்கு முன்னால உங்க எல்லாருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட நல்வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.

கீழ்க்கண்ட வழிகள்ல என்னைத் தொடர்பு கொள்ளலாம்னு உங்களுக்குத் தெரியும்தானே?

நிலா.எல்எல்ஜே@ஜிமெயில்.காம்

http://www.facebook.com/profile.php?id=720120663#!/profile.php?id=720120663

http://groups.google.com/group/neyam

எல்லாத்துக்கும் தனித்தனியா பதில் எழுத முடிலைன்னாலும் இங்கே எழுதுவேன்…

அடுத்த வாரம் பார்க்கற வரைக்கும ஆனந்தமா இருங்க….

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

2 Comments

  1. suganthe

    குழந்தை என்பது அவசியமானது என்ற நிலை இருந்தாலும் கூட குழந்தை இருந்தால் திறமைகளை பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.பொதுவாகப் பெண்களுக்கு குழந்தை உடன் கூடிய நேரம் செலவிட வேண்டிய கடமையும் உண்டு.அன்னை திரெசா கூட குழந்தை இல்லாததால் தான் மற்ற குழந்தைகளுக்கு அன்பு காட்ட முடிந்தது.

  2. Appavi

    //சட்டுச் சட்டுன்னு தீர்ப்பிடறதுக்கு நாம யார்?//
    இப்படி நினைத்துதான் போபாலில் நடந்து விபத்து என்று சொல்லப்படும் ஒரு கொடூர சம்பவத்திற்கு நீதிபதிகள் தீர்ப்பெழுதினார்கள் போலிருக்கிறது ஆற அமர யோசித்து!!! அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. அணு உலையினால் விபத்து ஏற்பட்டு பெரும்சேதம் ஏற்படும்பட்சத்தில் அந்த அணு உலையில் ஈடுபடப்போகும் கம்பெனிகள் நிவாரணம் வழங்கத் தேவையில்லை என்று மன்மோகன்சிங் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளார். இது நியாயமா? ஊடகங்கள் குதிப்பது சரியானதுதானே?

Comments are closed.