மடை திறந்து… (34)

என்னப்பா, நலம்தானே? இங்கே எல்லாம் அமோகம்…

இந்த வாரம் ரொம்ப அழகா பூப்பூவா பனி விழுந்தது. ஆனா குளிர் ஊசி மாதிரி எலும்பு வரைக்கும் இறங்குதுப்பா… தினம் அலுவலகம் போயிட்டு வரதுக்கு கொஞ்சம் சிரமமா இருந்தாலும் பிரபஞ்சம் என்னை நல்லாவே கவனிச்சுக்கறதுனால எவ்வளவோ பரவாயில்லை. ஒவ்வொரு விஷயம் செய்யறதுக்கு முன்னாலேயும் ‘இது எப்படி எனக்கு இலகுவா கிடைக்கும்?’னு ஒரு கேள்வி கேட்பேன் பிரபஞ்சத்துகிட்டே. காரியம் சுமுகமா முடியும். இரயில்ல ஒரே ஒரு சீட் இருக்கும் எனக்குன்னே ரிசர்வ் செஞ்சது போல. உதாரணத்துக்கு ஒரு சம்பவம் பாருங்களேன்… அலுவலகத்துல எனக்கு ஒரு கத்தரிக்கோல் தேவை இருந்தது. எங்களோட பணிக்கும் கத்தரிக்கோலுக்கும் சம்பந்தமே இல்லாததனால எங்கே போய் இதைத் தேடறதுன்னு யோசிச்சிட்டே என்னோட இருக்கையை விட்டு எழுந்தேன். சும்மா ஒரு பேச்சுக்கு எதிரே வந்த ஒரு நண்பர்கிட்டே ‘கத்தரிக்கோல் இருக்கா உங்ககிட்டே?’ன்னு கேட்டேன். அவர் உடனே, "ஓ இதோ…" அப்படின்னு கையில கொடுத்தார். அசந்துட்டேன்.

அதனால கஷ்டமே வரலைன்னு அர்த்தமில்லை. முன்னால மகா கஷ்டமா தெரியற சூழல் கூட இப்போ இலகுவா சகிச்சிக்கற மாதிரி தெரியுது. நான் முனனமே சொன்னது போல ‘வெளிலே எதுவுமே மாறலை. ஆனா உள்ளே நிறைய மாறி இருக்கு’. அதுதான் இதுக்கெல்லாம் காரணம். செல்ல பிரபஞ்சத்துக்கு நன்றியோ நன்றி…

சில வாரத்துக்கு முன்னால நான் கேட்டிருந்தேனில்லையா உங்க வாழ்க்கை எவ்வளவு இலகுவா இருக்குன்னு? பதில் தெரிஞ்சதா? சிரமமா தெரிஞ்சதுன்னா மாற்றணும்னு விருப்பமிருக்கா? இருக்கா இல்லையாங்கறது முக்கியமில்லை. இது போன்ற கேள்விகள் நமக்கு பல வாயில்களைத் திறந்துவிடுதுங்கறதை நீங்க கவனிச்சீங்களாங்கறது முக்கியம்.

வாழ்க்கையை இலகுவாக்கிக்க ஒரு எளிமையான வழி, வாழ்க்கைக்கு எந்த எதிர்ப்பும் காட்டாம இருக்கறதுதான். ‘எதிர்க்கறது நிலைக்கும்’ங்கறது ஒரு ஆன்மீகப் பொன்மொழி. வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை நிலையா நின்னுச்சின்னா சில கேள்விகளைக் கேளுங்க…பதில் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்லை…:

‘நான் இந்தப் பிரச்சினை என் வாழ்க்கையிலிருக்க அனுமதிக்கிறேனா?’
‘ஏன் என்னால் அனுமதிக்க முடியவில்லை?’
‘நான் இந்தப் பிரச்சினையை வாழ்க்கையில் முழுமையாக அனுமதிக்க என்ன செய்யவேண்டும்?’

பிரச்சினையைத் தீர்க்க வழி சொல்வீங்கன்னு பார்த்தா, பிரச்சினையை அனுமதிங்கன்னு சொல்றீங்களேன்னுதானே நினைக்கிறீங்க?

சில சமயம் பிரச்சினையைக் களைய நாம பகீரத பிரயத்தனம் செய்யவோம். ஆனா ஒண்ணுமே நடக்காது. அதை எப்போ அனுமதிக்கறதுன்னு முடிவு செய்துட்டோமோ, அப்போ அது பளிச்சுன்னு மறைஞ்சு போயிடும். முயற்சி செய்து பார்த்துட்டு முடிவெடுங்க நண்பர்களே!

தற்செயலா நித்யானந்தாவோட பழைய சொற்பொழிவு ஒண்ணு கேட்க நேர்ந்தது. இறைவனை வணங்கறதுக்கான அடிப்படை நோக்கம் நாமும் இறை நிலையை அடையணும்கறதுதான்னு அவர் சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா யதார்த்த வாழ்க்கையில இதை உணர்றோமான்னு எனக்குத் தெரியலை. எத்தனை பேர் நாம இறை நிலை அடைய முடியும்னு முதல்ல நம்பறோம்? பெரும்பாலும் ‘அது வேணும், இது நடக்கணும்’னு கேட்கத்தான் கடவுளை வணங்குகிறோமோ? இதில தப்பொண்ணுமில்லை… ஆனா இது எல்லாமும் கிடைச்ச பின்னாலும் ஏதோ ஒண்ணைத் தேடுவோமே அதுதான் இறை நிலைன்னு புரிஞ்சுக்கிட்டோம்னா சரிதான்.

இங்கே மடை திறந்து நீங்க யாரும் இங்கே பேசறதில்லைன்னாலும் தனி மெயில்லேயும் முகநூல் வழியாவும் செய்திகள் அனுப்புறீங்கங்கறது மகிழ்ச்சியான விஷயம். இலங்கையிலிருந்து ஒரு வாசகி அனுப்பியிருந்த செய்தி, ‘போன ஞாயிறு நானும் மகிழ்ச்சியாயிருந்தேன். சுத்தப்படுத்திக் கொணடே இருந்தேன் ஏனென்று தெரியாமலேயே. திங்களன்று உங்கள் கட்டுரை படித்ததும் காரணம் புரிந்தது’….. நாம எல்லாருடைய வாழ்க்கையும் வலைபோல பின்னிப் பிணைஞ்சிருக்குங்கறதுக்கு இது ஒரு சின்ன உதாரணமே! இப்படியான சின்னச் சின்ன சம்பவங்கள் மூலமாத்தான் வாழ்க்கையைப் பற்றின நம்மோட நம்பிக்கைகள் உருவாகுது. இதைப் பகிர்ந்துக்கிட்டது மூலமா ஒரு நல்ல நம்பிக்கை உருவாகக் காரணமா இருந்த அந்த வாசகிக்கு நன்றி தெரிவிச்சுக்கலாம்.

வாசகிகள் சில பேர் சுகவராவது எப்படின்னு கேட்டிருந்தாங்க. இதுக்கும் நான் முன்னாலேயே பதில் சொல்லிருந்தாலும் திரும்ப கொஞ்சம் விரிவாவே சொல்றேன்…

முதல்ல ஏன் சுகவராகணும்னு உங்களை நீங்க கேட்டுக்கங்க… ‘மற்றவங்களுக்கு உதவி செய்யணும்’ங்கறதுதான் பலர் சொல்ற பதிலா இருக்கும். ஆனா இது மேலோட்டமான பதில்னு சொன்னா உங்களுக்குக் கோபம் வரலாம். இருந்தும் தொடர்ந்து சில கேள்விகளைக் கேட்டுப் பாருங்க:

மற்றவங்களுக்கு நான் ஏன் உதவி செய்யணும்?
அதனால எனக்கு என்ன கிடைக்குது?
இதை நான் செய்யலைன்னா என்ன நடக்கும்?

இந்தக் கேள்விகள் உங்களது உண்மையான விருப்பம் என்னன்னு தெரிஞ்சுக்க உதவும். உதாரணத்துக்கு சில பதில்கள் கீழே:

ஏதோ ஒரு விதத்தில என்னோட வாழ்க்கை பயனுள்ளதா இருக்கும்
நிறைவு கிடைக்கும்
என் வாழ்க்கை வீணாப் போகும்

இந்த டம்மி பதில்களின் அடிப்படையில பார்த்தா நமக்குள்ளே இருக்கற ஒரு வெற்றிடத்தை நிரப்பத்தான் நாம சுகவராக விரும்பறோம்கறது புரியும். அப்போ, உண்மையிலே இது நமக்காக நாம செய்ய விரும்பறது. அடுத்தவங்களுக்கு உதவறதுக்காக இல்லை. இந்த மாதிரி பல உண்மைகளை நாம உணரும்போது, ‘அடுத்தவங்களுக்கு நான் உதவறேன்’ங்கற அகங்காரம் வராது.

அடுத்து, உங்களுக்கு எந்த மாதிரியான சுகமளித்தல் உகந்ததுன்னு தெரிஞ்சுக்கணும். அதுக்கு நீங்க நிறைய செயல்முறைகள்/உத்திகள் பத்தி படிக்கணும்/கேட்கணும். தமிழ்ல இதுக்கு நூல்கள் நிறைய இருக்கறது போல எனக்குத் தெரியலை. (இருந்தா பகிர்ந்துக்குங்க) மடைதிறந்துல பல உத்திகள் பற்றி பகிர்ந்துக்கிட்டிருக்கோம். தேவைப்பட்டா, திரும்ப முதல் அத்தியாயத்திலருந்து படிச்சு குறிப்பெடுக்கலாம். இது சமுத்திரத்தில ஒரு துளி போலத்தான். இணையம் வந்த பிறகு தகவல் தெரிஞ்சுக்கறது ஒண்ணும் கஷ்டமில்லை. அதனால தேடுங்க… கிடைக்கும். கீழே கொடுக்கப்பட்டிருக்கற சுட்டில நிறைய இலவச வகுப்புகள் நடக்குது:

http://www.facebook.com/profile.php?id=720120663#!/groups/LightworkerOasis/

ஓரளவு தெரிஞ்சிக்கிட்ட பிறகு உங்களுக்கே ஒரு தெளிவு வரும் எது உங்களுக்கு உகந்ததுன்னு. அதுல பயிற்சி எடுங்க.

உங்களால தேடிக்க முடியலை, மேலும் மேலும் குழப்பம்தான் வருதுன்னா என் கூட ஒரு அரை மணி நேரம் அப்பாயின்மென்ட் புக் பண்ணுங்க. மேலே இருக்கற பெரியவங்க உதவியாலேயும் சில உத்திகளை பயன்படுத்தியும் உங்களோட வாழ்க்கைப் பாதையைப் பற்றி இலகுவா தெரிஞ்சிக்கலாம். இந்த சேவை இலவசமல்ல… எனக்கோ நிலாச்சாரலுக்கோ அல்லது ஒரு சேவை நிறுவனத்துக்கோ நீங்க ஏதாவது செய்ய வேண்டி இருக்கும் – பொருள்/பணம்/நேரம்… இப்படி ஏதாவது.

இலவசமா செய்யும்போது மக்களுக்கு அதனோட மதிப்பு தெரியறதில்லைங்கறது நான் கத்துக்கிட்ட பாடங்கள்ல ஒண்ணு. முன்னெல்லாம் கஷ்டப்படற நண்பர்களுக்கு வலிஞ்சு நானே முன்வந்து தனி கவனம் கொடுத்து சுகமளிச்சிருக்கேன். இது கூட ஈகோவோட ஒரு நாடகம்னு புரிஞ்சிக்கிட்டேன் – ‘என்னால உன்னை குணப்படுத்த முடியும்னு உனக்குக் காட்டறேன்’ங்கற அகங்காரம். அதனால இனி கேட்கறங்களுக்கும் கொடுக்கறவங்களுக்கும்தான் முன்னிலை. என்னால சுகம் கொடுக்க முடியும்னா உங்களால நேரமோ பணமோ கொடுக்கமுடியும்னு நீங்களும் உணரணுமே! இங்கே யாரும் ஒருத்தரை விட ஒருத்தர் உசந்தவங்க இல்லைங்கறதை நானும் நீங்களும் உணரத்தான் இந்த ஏற்பாடு. அதே சமயம், உண்மையாகவே ஏதும் கொடுக்க முடியாத நிலையில இருக்கறவங்களுக்கு இலவச சேவை எப்போவும் உண்டு.

வேற கேள்விகள் ஏதாவது இருந்தா கீழ்க்கண்ட வழிகள்ல என்னைத் தொடர்பு கொள்ளலாம்:

நிலா.எல்எல்ஜே@ஜிமெயில்.காம்
http://www.facebook.com/profile.php?id=720120663#!/profile.php?id=720120663
http://groups.google.com/group/neyam

எல்லாத்துக்கும் தனித்தனியா பதில் எழுத முடிலைன்னாலும் இங்கே எழுதுவேன்…

அடுத்த வாரம் பார்க்கற வரைக்கும் ‘வாழ்க்கை நாம எல்லாருக்கும் எப்படி இலகுவா இருக்க முடியும்’’ பிரபஞ்சத்தைக் கேட்டுக்கறேன்….

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

2 Comments

  1. Geetha Ramkumar

    Iraivan endru naangal solvadhai neengal Prabanjam endru solgireergala….alladhu iyarkaiyaiya……ungalin kelvi ketu seyyum murai nandraaga ulladhu…naanga pudusa veedu shift panninom….adhula kichen konjam vasadiyaayilladha maadiri irundhadhu…naan ungala maadiri manasukulla kelvi ketunden…idha enaku mattumillama ellarukum pidicha maadiri eppadi set pannuvadhunu….konja nerathula….romba azhaga ellar kitaayum paaratu vaangara maadiri set panna mudinjadhu….manasukkulla ennai ariyaamal oru ookam….pudiyadhaaga unarndhen….beautiful feeling….romba nandri Nila….nalla alaigalai enakum anupavum…..anaivarum VAAZHGA VALAMUDAN

  2. Hema

    சில சமயம் பிரச்சினையைக் களைய நாம பகீரத பிரயத்தனம் செய்யவோம். ஆனா ஒண்ணுமே நடக்காது. அதை எப்போ அனுமதிக்கறதுன்னு முடிவு செய்துட்டோமோ, அப்போ அது பளிச்சுன்னு மறைஞ்சு போயிடும்.It is very true…really working….thanks a lot Nila….

Comments are closed.