மடை திறந்து… (32)

என்னப்பா, நல்லா இருக்கீங்கதானே எல்லாரும்? நானும் நலமே!

போன வார இறுதில ரெண்டு நாளுமே சுகவர் பயிற்சிக்குப் போயிருந்ததாலும் இந்த வாரம் களைப்பேதும் இல்லாம சுறுசுறுப்பாவே போச்சு. வார நாட்கள்ல அலுவலகம் முடிச்சு வந்து கூட செஷன்ஸ் கொடுத்திட்டுருந்தேன். ஒவ்வொரு செஷன்லயும் நானும் புதுபுதுசா ஏதாவது கத்துக்கறேன்.

புனிதான்னு ஒரு பெண்ணுக்கு சில வருடங்களா கைவலி இருந்திருக்கு. மருத்துவம் ஏதும் பலனளிக்கலை. உதவமுடியுமான்னு என்னைக் கேட்டாங்க. நான் சொன்னேன் ‘சுகம் உங்களுக்குள்ளேதானிருக்கு. அதை வெளிக்கொணர்ற முயற்சியை நான் செய்யறேன். ஆனா சுகத்தைப் பெற்றுக்கறது உங்க கையிலேதானிருக்கு. தயார்னா மேலே செவோம்’னு. அவங்க ஒத்துக்கிட்டப்பறம் ஆரம்பிச்சோம்… வலி கொஞ்சம் கொஞ்சம் குறைஞ்சது. ஆனா ஏதோ ஒண்ணு அந்த வலியைப் பிடிச்சு வச்சிட்டிருந்தது தெரிஞ்சது.

அவங்க மனசுக்குக் கட்டளைகள் கொடுக்கறதுக்கு பதிலா அவங்களை கேள்வி கேட்க வச்சேன்… ‘இந்த வலியை விடறதுக்கு நான் தயாரா?’ ‘எப்போ விடப் போறேன்?’ இப்படி கேட்ட எல்லா கேள்விகளுக்கும் டக்டக்னு பதில் வந்தது. வலியும் சட்டுன்னு குறைஞ்சு பூஜ்யம் அளவுகிட்டே வந்தது. இது ஒரு தற்காலிக நிகழ்வா அல்லது நிரந்திரமான சுகமான்னு தெரிஞ்சுக்கணும்னு அந்த வலிகிட்டேயே கேள்விகள் கேட்டோம் ‘நான் உங்கிட்டேர்ந்து என்ன தெரிஞ்சுக்கணும்?’ பதில் ‘நீ சோம்பேறியா இருக்கறது எனக்குப் பிடிக்கலை’. இந்த பதில் வந்ததும் வலி அதிகரிச்சது. இந்த வலிங்கறது வேறேதுமில்லை. அவங்க அவங்களை மழுவதுமா ஏத்துக்காததோட வெளிப்பாடு. அவ்வளவே… இதுலர்ந்து உடல் உபாதைகளுக்கும் நம்ம உணர்வுகளுக்கும் நேரடித் தொடர்பு இருக்கறது தெரியுதில்லையா… அது மட்டுமில்லாம… நமக்குத் தேவையான பதில்கள் எல்லாமே நமக்குள்ள இருக்குதுங்கறதும் புரியுதில்லையா… அதனால பதிலை எதிர்பார்க்காம கேள்விகள் மட்டும் கூட நீங்க கேட்டுப் பார்க்கலாம். பதிலை கவனிக்கற அமைதி உங்ககிட்டே இல்லைன்னா கூட பதில் உங்கள் வாழ்க்கையில வேறுவிதங்கள்ல வெளிப்படலாம்.

இந்தவாரம் ஒரு நாள் காலைல நிறைய வேலை இருக்கேன்னு பதட்டமா இருந்தது. என்னென்ன வேலை இருக்குன்னு மனசில கணக்குப் போட்டுக்கிட்டே ‘இந்த வேலை எல்லாத்தையும் எளிதா முடிக்கறது எப்படி?’ ‘இந்த பதற்றமில்லாம நிதானமா இருக்கறது எப்படி?’ இப்படி கேள்விகள் கேட்டுட்டே இருந்தேன். வேலைகளெல்லாம் மாயமா முடிஞ்சிருச்சி. நீங்களும் முயற்சி செய்து பாருங்க.

அநேகமா என்கிட்டே சுகம் பெற வர்றவங்களுக்கு நிறைய சிட்டிங் தேவைப்படறதில்லை. ஓரிரண்டு செஷன்ஸ் முடிஞ்சதும் அவங்களோட மனநிலை மாறி தானே ஒரு சுகவரா செயல்பட ஆரம்பிச்சிடறாங்க. அது எனக்கு மிகப் பெரிய மன நிறைவைத் தருது. உங்களுக்கும் சுகம் தேவைப்பட்டாலோ இல்லை உத்திகளைக் கத்துக்க விரும்பினாலோ எனக்கு எழுதுங்க: எல்எல்ஜே.நிலா அட் ஜிமெயில்.காம்.

முன்னப் போல இலவசமா நான் சேவை தர்றதில்லை. கண்டிப்பா பதிலுக்கு நீங்க ஏதாவது எனக்கோ நிலாச்சாரலுக்கோ செய்ய வேண்டி இருக்கும்.

அமானுஷ்யன் முடிஞ்சாச்சு… வாசகர்கள் பலருக்கும் வெறுமை இருக்கும்னு நினைக்கிறேன். கணேசன் பல பரிமாணங்கள்ல வளர்ந்திட்டார். நிலாச்சாரல் படத் தயாரிப்பில் இறங்கும்போது நாமே அவரோட கதைகளைப் படமா எடுப்போம், சரியா? நிலாச்சாரல் – கணேசனின் பாதைகள் மீண்டும் சந்திக்கும் வரை அவரை வாழ்த்தி அவரோட பயணத்துக்கு வழி அனுப்புவோம்.

நிலாச்சாரல் வாசகர்களை அவரோட படைப்புகள் மூலம் மகிழ்விச்சதுக்காக அவருக்கு பல நன்றிகளையும் தெரிவிச்சுக்குவோம். அவரோட மின்னூல்கள் சிலவற்றைப் பெற்றுக்கொள்ள இங்கே போங்க:

https://www.nilacharal.com/ebooks_list.asp

இன்னும் பல நூல்கள் இந்தப் பட்டியல்ல சேரப் போகுது. விலையும் ஏறப் போகுது…

யஷ் போல இன்னும் சில துடிப்பான பெண்கள் நம்ம குழுவில இணைஞ்சிருக்காங்க. அதனால நிலாச்சாரல் இன்னும் விரிவுபட வாய்ப்பிருக்கு. அவங்கள்ல ஒருத்தர் ரிஷபனோட தீவிர வாசகி. அதனால அவரோட கதைகள் அவங்க மூலமா கொஞ்சம் வெளிவர வாய்ப்பிருக்கு. உங்களுக்கு வேற என்ன வேணும்னு எழுதினீங்கன்னா தர முயற்சிக்கறோம். எல்லாமே இலவசமா கிடைக்கும்னு உறுதி தர முடியாதுன்னு இப்பவே சொல்லிக்கறேன்.

இந்த நேரத்தில நிலாச்சாரல் இவ்வளவு தூரம் வர்றதுக்கு நிறைய பங்களிப்பு செஞ்சு இப்போ சீன்ல இல்லாத நிறையப் பேரை நினைச்சுக்கறேன் – பிஎஸ் (பூங்கொடி), சுகந்தி, திருமலை, சித்ரா, சக்திதாசன், வஞ்சி, ஏகேஆர், மணிவண்ணன்… எல்லாருக்கும் நன்றிப்பா…

இந்த வாரம் தேவி ப்ரேயர்ங்கற இந்த இசையை உங்க கூட பகிர்ந்துக்க விரும்பறேன்:

http://www.youtube.com/watch?v=ClkDvNEWKu0 

கேட்கும்போது விளக்க முடியாத அமைதியை மனசில தோற்றுவிக்குது இந்த இசை…

சின்ன வயசில ஒண்ணா ஓடி விளையாண்ட சகோதரர் ஒருத்தர் சமீபத்தில அஞ்சல் அனுப்பிருந்தார். அவங்கம்மா இறந்ததைக் கூட விசாரிக்காத என் மேல வருத்தம் வச்சிக்காம எழுதிருந்தது என்னை ரொம்ப நெகிழ வச்சது. ‘ஒரு பக்குவப்பட்ட ஞானி போல எழுதறதைப் பார்க்கும்போது பெருமையா இருக்கு’ன்னு எழுதிருந்தார்… எனக்கு முதல் ஆச்சரியம் அவர் மடை திறந்து படிக்கறார்ங்கறது… ரெண்டாவது நான் எழுதறது ஞானி மாதிரியா இருக்குங்கறது… அப்படித் தெரிஞ்சா தயவு செஞ்சு மன்னிச்சுக்கங்க, மக்களே! நான் இன்னும் அலைஞ்சு திரிஞ்சிட்டிருக்கற ஒரு சராசரி மனுஷிதான்…

ஒரு நாள் எனக்குத் தெரிஞ்ச ஒரு ஞானிகிட்டே ‘நீங்க இன்னைக்கு என் கனவில வந்தா என்னை நீங்க பார்த்துக்கறீங்கன்னு அர்த்தம்’னு வேண்டிட்டு தூங்கினேன். கனவில வந்தது இன்னொரு ஞானி… வந்து என்னோட ஒரு புத்தகத்துக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு இன்னொரு புத்தகத்தை ராஜுவை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தினார். கனவில வராத ஞானியைக் கோவிச்சுக்கறதா, இல்லை எல்லா ஞானிகளும் ஒண்ணுதான்னு எனக்குப் பிரபஞ்சம் தர்ற செய்தியா இதை எடுத்துக்கறதான்னு எனக்குத் தெரியலை… பிரபஞ்சத்தோட இன்னொரு விளையாட்டுப் போலிருக்கு இது…

என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னை நிர்மலாவாத்தான் தெரியும். வாசகர்களுக்கு நிலாவா தெரியும். ஆன்மிக வட்டத்தில (யுகேல) நிமின்னு தெரியும். இந்த வருஷம் இந்த மூணு அடையாளங்களுமே மெர்ஜ் ஆகறதைப் பார்க்கறேன். அலுவலகத்தில தயங்காம என்னோட சுகவர் பணி பற்றி பேசமுடியுது… என்னோட குடும்பத்தினரும் நண்பர்களும் என்னோட படைப்புகளை, சுகமளிக்கும் பணிகளை கொஞ்சம் கொஞ்சமா அங்கீகரிக்க ஆரம்பிச்சிருக்காங்க…. எனக்கு விருப்பமான ஒரு படைப்புலகத் தோழி மட்டும் ‘இந்த ஆவி, அது இதுன்னு சொல்றதை எல்லாம் விட்டுட்டு வெளில வாங்க’ன்னு செல்லமா கோபிச்சுக்கிட்டாங்க… நான் ஒரு ஸ்மைலியோட மௌனமாகிட்டேன்… யாருக்கு எங்கே மனநிறைவு கிடைக்குதோ அதுவே சொர்க்கம்… இல்லையா…

சரிப்பா…அடுத்தவாரம் வரை என்கிட்டே எதுவும் பேசாதீங்க…(பேசுங்கன்னு கேட்டுப் பார்த்தேன் மாட்டேங்கறீங்க… அதனால…

பார்க்கலாமா?

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

1 Comment

  1. so.njaanasambanthan

    எல்லா ஞானிகளும் ஒன்றுதான் என்பதே செய்தியாகத் தோன்றுகிறது .

Comments are closed.