மடை திறந்து… (27)

என்னப்பா, வாழ்க்கை சுமுகமா போகுதா எல்லாருக்கும்? நமக்குக் கொஞ்சம் தகராறாதானிருக்கு. அதான் நாலு வாரமா எழுத முடியலை. ஒண்ணு மாத்தி ஒண்ணா ஏதாவது பிரச்சினை. எல்லாம் நானே ஏற்படுத்திக்கற நாடகம்னு தெரிஞ்சாலும் மாத்திக்க முடியாதுங்கற ஒரு மாயைல மாட்டிக்கிட்டு விடுபடறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிப் போச்சு.

இப்படி போராடிட்டிருந்தப்போ ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யறேனோங்கற சந்தேகம் எனக்குள்ள வர ஆரம்பிச்சிருச்சு. ஆனா நம்ப மாட்டீங்க… இந்த நேரத்தில நான் சந்திச்ச புது மனுஷங்க, அனுபவங்கள்கிட்டேர்ந்து எனக்குக் கிடைச்ச செய்திகள்லாம் ரொம்ப ஆதரவா இருந்தது. உதாரணத்துக்கு யூட்யூப்ல எப்பவோ போட்ட ஒரு சொற்பொழிவைத் தற்செயலா கேக்க நேர்ந்த போது வந்த செய்தி இது:

"சில ஒளி சேவகர்களுக்கு கஷ்டம் வரும்போது அவங்க மேலேயே அவங்களுக்கு சந்தேகம் வந்திருது. இந்தப் பணிக்கு தான் உகந்தவர்தானாங்கற கேள்வி வந்திருது. முன்னே மாதிரி ஆன்மிகவாதிகள் தங்களை ஒரு மேடையில இனி ஏத்திக்க முடியாது. புது யுகத்தில ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்கள் மூலமாதான் கத்துக் கொடுப்பாங்க. அதனால உங்களுக்கு இந்த மாதிரி சந்தேகம் வந்ததுன்னா முதல்ல உங்களை உங்க மேடையிலருந்து இறக்கிக்குங்க."

நச்சுன்னு பொட்டுல அடிச்ச மாதிரி இருந்தது. நான் என்னோட அனுபவங்களைப் பகிர்ந்துக்கறதுக்குத்தானே மடை திறந்து எழுத ஆரம்பிச்சேன்? அப்போ எனக்குக் கஷ்டம் வர்றப்ப எனக்கு எழுத தகுதியிருக்கான்னு ஏன் நான் என்னைக் கேட்டுக்கணும்? அனுபவம்கறது இன்ப துன்பம் எல்லாம் சேர்ந்ததுதானே?

ஒவ்வொரு தடவை கஷ்டம் வரும்போதும் நான் நிறைய கத்துப்பேன். இந்த முறையும் என்னோட பாடங்கள் தொடருது. ஆனா இப்படி கஷ்டப்படாமலேயே கத்துக்கலாம்னுதான் பெரியவங்க சொல்றாங்க… நாந்தான் மக்குப் பிள்ளையாச்சே… எப்போதான் இதைக் கத்துக்கப் போறேனோ!

நான் முன்னாலேயே சொல்லிருக்கேனில்லையா நான் ஏதோ ஒரு காரணத்துக்காக மற்றவங்களோட பிரச்சினைகளை என் மேலே எடுத்துக்கற கெட்ட பழக்கத்தில மாட்டிட்டிருக்கேன்னு. அதுவும் என்னோட பிரச்சினைகளுக்கு முக்கியமான காரணம். உதாரணமா சில வாரங்களுக்கு முன்னால ஒரு நாள் எனக்கு சரியாவே தூக்கம் இல்லை. காலைல மெயில் பார்த்தப்போ ஒரு வாசகி எழுதிருந்தாங்க ‘ராத்திரில்லாம் உங்ககிட்டே என்னோட பிரச்சினை பற்றி பேசிட்டே இருந்தேன். உங்களுக்குக் கேட்டதா?’ன்னு. இது ஒரு சின்ன உதாரணம்தான். யாருக்காவது தலைவலி இருந்தா அதை நான் உணர்றேன்… யாருக்காவது உறவுகள்ல பிரச்சினை இருந்தா அதே வேதனை எனக்கும்… எந்தக் காரணமும் இல்லாமலேயே…

இப்படி மற்றவங்களோட பாரங்களைத் தான் எடுத்துக்கறது பல சுகவர்கள்கிட்டே இருக்கற ஒரு கெட்ட பழக்கம். சுகமளித்தலையும் பற்றற்ற முறையில செய்யறதுதான் நல்லது. அதைத்தான் நான் கத்துக்கறதுக்கு முயற்சி செய்துட்டிருக்கேன்…

சுய சந்தேகத்தில நான் உழன்றுக்கிட்டிருந்தப்போ முகநூல்ல டேக்னிங்கற பெண்மணி எனக்கு அனுப்பிச்சிருந்த செய்தி உதவியா இருந்தது: ‘எனக்கு உங்களை அதிகம் தெரியாது. ஆனா நான் உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் – துரோணரிடம் ஏகலைவன் கற்றுக் கொண்டது போல. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்’

எனக்குப் பெரிய ஆச்சர்யம்! டேக்னிக்கு தமிழ் தெரியாது. அப்படின்னா வெறும் என்னோட முகநூல் செய்திகளை வச்சு இப்படி ஒரு செய்தி அனுப்பிச்சாங்கங்கறது பிரபஞ்சம் அனுப்பினதுக்கு இணையாத்தான் எனக்குத் தெரிஞ்சது. என்னைக் கற்பிக்கச் சொல்லி பல வருடங்களா திரும்பத் திரும்ப செய்திகள் வந்தாலும் என்றைக்கும் என்னை ஒரு நல்ல ஆசிரியராக என்னால பார்க்க முடிந்ததில்லை. (இவ்வளவுக்கும் அப்பாவும் அம்மாவும் நல்ல ஆசிரியர்கள்னு பேர் வாங்கினவங்க.) ஒரு வேளை கற்பித்தல்னா போதிக்கறதுதான்னு நான் தப்பர்த்தம் பண்ணிட்டேனோ? என்னோட அனுபவப் பகிர்வுகளே பாடங்கள்தானோ?

கோதாவரிங்கற தெலுங்குப் படம் பார்க்கற வாய்ப்பு கிடைச்சது. கோதாவரி நதில புண்ணிய யாத்திரை செய்யற மனிதர்களுக்கிருக்கிற பிரச்சினைகள், பிணைப்புகளை சுவாரஸ்யமான பாத்திரங்கள் மூலமா அழகா பின்னியிருக்கார் இயக்குனர். திரைப்பட ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய படம். Happy days எடுத்த அதே இயக்குனர்தான். Shekar Kammula நான் மதிக்கற இயக்குனர்கள்ல ஒருத்தரா ஆகிட்டார். வாழ்க! அவரோட மற்ற படங்களுக்கான டிவிடி தேடிட்டு இருக்கேன்.

இப்படி நான் பார்க்க நேர்ந்த சில நல்ல படங்கள் திரும்பவும் கதை எழுதணும்ங்கற ஆர்வத்தை கிளறி விட்டிருக்கு. ஏற்கெனவே எழுத ஆரம்பிச்சு பாதில நிக்கற ரெண்டு நாவல்கள், குறிப்பெடுத்து வச்சிருக்கற கதைக் கருக்களோட இன்னுமொரு குறிப்பும் சேர்ந்து என்னோட நேரத்துக்காக காத்திட்டிருக்கு. எப்போ வரும்?

ஒரு நண்பர் ஒருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கல்கி பகவானின் போதனைகளை எனக்கு அனுப்பிச்சிருந்தார். ஊடகச் செய்திகள், விளம்பரங்களையெல்லாம் அடிப்படையா வச்சு நமக்குள்ளேர்ந்த நாட்டாமை கல்கி பகவானைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்ததால ஒரு அசௌகர்யமான உணர்வோடதான் சுட்டியைத் திறந்தேன். ஆனா உண்மையிலேயே போதனைகள் நல்லா இருந்தது… என்ன சொல்றாங்கங்கறதை விட யார் சொல்றாங்கங்கறதுக்கு நாம அதிகமா மதிப்பு கொடுக்கறோம்கறதைப் புரிஞ்சுக்கிட்டேன்…. நீங்க விரும்பினா இந்த சுட்டில போய் கேட்கலாம்…

http://www.onenessuniversity.org/index.php/teachings

சில வருடங்களுக்கு முன்னால விஜய் டிவில கலக்கப் போவது யாரு நிகழ்ச்சித் துணுக்குகளை யூட்யூப்ல பார்த்து சிவகார்த்திகேயன் மேல நல்ல அபிப்பிராயம் வந்தது. நல்ல திறமையாளர். சமீபத்திலதான் கேள்விப்பட்டேன் அவர் விஜய் டிவில தொகுப்பாளரா கலக்கிட்டிருக்கார்னு. பி.இ, எம்பிஏ படிச்சிட்டு எல்லாரும் செயறாங்கங்கறதுக்காக கார்ப்பொரேட் பாதையில போகாம மனசுக்குப் பிடிச்ச பணியைத் தேர்ந்தெடுத்திருக்கற அந்த இளைஞரைப் பாராட்டலாம். அவர் தொகுத்து வழங்கிய ‘அது இது எது’ நிகழ்ச்சியோட சுட்டி ஒண்ணை நண்பர் ஆனந்த் அனுப்பிச்சிருந்தார். ரொம்ப ஜாலியா இருந்தது.

தாமரை இல்லத்தில இருந்து பிஏ தமிழ் இலக்கியம் முடிச்ச ரிஸ்வானா இப்போ கோயம்புத்தூர் அரசுக் கல்லூரில பி.எட் சேர்ந்திருக்காங்க. அவங்களுக்கு பாடங்களை வாசிச்சுப் பதிவு செஞ்சு தர உதவி கேட்டிருக்காங்க…. நம்ம தன்னார்வத் தொண்டர்கள்லாம் எங்கேப்பா? கார்த்திகா பிஸியா இருந்தா வேற யாராவது கொஞ்சம் முன்வந்து பொறுப்பெடுத்துச் செய்யலாமே? உங்க விருப்பத்தை நேயத்துல சொல்லுங்க:

http://groups.google.com/group/neyam?pli=1

எனக்கு உங்க அன்பு, அன்பம், பிரார்த்தனை எல்லாம் தேவைப்படுது… கொஞ்சம் அனுப்பி வைக்கிறீங்களா?

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

2 Comments

  1. Hema

    அன்பு நிலா, எப்படி இருக்கீங்க….. ரொம்ப நாளாச்சு உங்கிட்ட பேசி….இந்த வாரம் மடைதிறந்தில் உங்களையே நீங்க நிறைய கேள்வி கேட்டு பதில் சொல்லியிருக்கீங்க…ரொம்ப நல்லா இருக்கு…

    எனக்குள் நிறைய கேள்வி கேட்டு குழப்பிட்டே இருப்பேன்…ஒருதடவை பாபா கிட்டே சொன்னேன்..பாபா சொன்னங்க தேவாரம் சொல்லுது: கேள்மின், உணர்மின், ஒப்புமின், ஓம்புமின். நமக்குள் நாம கேட்கிற கேள்வி மூலம் சில விசயங்கள்ள ஒரு தெளிவு கிடைக்கத்தான் செய்யுது!

    அடுத்தவங்க கஷ்டத்த உணர்வது பெரிய விஷயம் நிலா,…அதனால அதிகம் பாதிக்க படாமல் இருக்க நீங்க நம்புற பிரபஞ்சம், நான் நம்புகிற கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்…உங்களுக்கு பேரமைதியையும், மகிழ்ச்சியும் நிச்சயம் கிடைக்கும்….டேக்னி மாதிரி எங்க நிறைய பேருக்கு நீங்க நல்ல ஆசான்…உங்க அனுபவ பகிர்வு எங்களுக்கு நிறைய கத்துக் கொடுக்குது. இன்னும் கத்துக் கொடுக்கும்…உங்க எழுத்துகளோடு நடப்பது ஒரு சுகம் நிலா….பல நேரங்கள்ள உங்க எழுத்துக்கள் எங்களுக்கு எங்களை தெரிந்து கொள்ள உதவியா இருந்திருக்கிறது..அதற்காக உங்களுக்கு நன்றி….கள்ளம் கபடமற்ற உங்கள் அழகான மகிழ்ச்சியான எழுத்து பகிர்வு தொடர அன்பு, பிரார்த்தனை, வாழ்த்துக்கள்.
    நன்றியுடன்,

  2. கலையரசி

    அன்பு நிலா,
    நாலு வாரமா மடையைத் திறக்காம நிலாச்சாரல் தண்ணியெல்லாம் பாசி புடிச்சிக் கெடந்திச்சி. இந்த வாரம் திறந்த பிறகு தான் புதுப்புனல் பாய ஆரம்பிச்சிருக்கு. தொடர்ச்சியா இந்தப் புது வெள்ளம் பாயணும்னு நான் விரும்பிக் கேட்டுக்கிறேன்.

    இன்ப துன்பம் சேர்ந்த்து தான் வாழ்க்கை. அனுபவத்தைப் பகிர்ந்துக்கும் போது ரெண்டையும் தான் நாம பகிர்ந்துக்கணும், அதுக்காக எழுதத் தகுதியில்லியோன்னு நீங்க நினைக்க வேண்டிய அவசியமில்லை.

    மத்தவ்ங்க பிரச்சினையை ஒங்கப் பிரச்சினையா நினைக்கிறதே பெரிய விஷயம். அதுக்காக அந்தப் பிரச்சினையைத் தலை மேல தூக்கிப் போட்டுட்டு ஒங்க மனசையும் ஒடம்பையும் வருத்திக்க வேண்டிய தேவையில்லை நிலா. ஒங்களால முடிஞ்ச வரைக்கும் மத்தவங்களோட பிரச்சினையை ஒரு மன நல டாக்டர் போல இருந்து தீர்த்து வைக்க உதவுங்க அது போதும்.

    எங்களோட அன்பு, அன்பம் எப்போதும் ஒங்களுக்கு உண்டு. அதை இந்தப் பின்னூட்டம் மூலமா நான் அனுப்பி வைக்கிறேன்.
    அன்புடன்,
    கலை

Comments are closed.