மடை திறந்து… (25)

என்னப்பா, எப்படி இருக்கீங்க எல்லாரும்?

ஒரு வாரம் தப்பிச்சிட்டீங்களா நம்மோட தத்துவ மழைலருந்து? எப்படி இருந்தது அந்த சுதந்திரம்?

எனக்கு அலுவலகத்தில ஒரே வேலை. வார நாட்கள்ல ஏற்படற அழுத்தத்திலருந்து விடுபடவே வார இறுதி சரியாயிருக்கு. அதை உணர்ந்து பிரபஞ்சத்துகிட்டே கோரிக்கை வச்சப்போ வழக்கமான பதில்தான் கிடைச்சது – ‘எல்லாமே தயாரா இருக்கு. நீதான் உன் வாழ்க்கைக்குள்ளே அதை அனுமதிக்கணும்’. அதென்ன அனுமதிக்கறது? விரும்பறதை உணர்வு பூர்வமா முழுமையா வரவேற்கும்போதுதான் அது நம்மை வந்தடையும்.

உதாரணமா எனக்கு ஓய்வு வேணும்னு வச்சுக்கங்களேன்… ஓய்வைப் பற்றி நினைக்கும்போது எனக்கு என்ன உணர்வு வருதுன்னு கவனிச்சாலே நான் அதை என் வாழ்க்கைல அனுமதிக்கறேனா இல்லையான்னு புரிஞ்சிடும். எனக்கு என்ன உணர்வு வந்திருக்கும்னு நினைக்கிறீங்க? பயம்… ஓய்வெடுக்க பயம்.

கொஞ்சம் விநோதமா இருக்கில்லையா… இருந்தாலும் அதுதான் உண்மை. நான் உங்களைப் பார்த்து பயந்தேன்னா நீங்க என்னோட வீட்டுக்கு வருவீங்களா? அதுபோலத்தான் நாம விரும்பற விஷயங்களும்.

அதனால நீங்க விரும்புறது உங்களுக்குக் கிடைக்கலைன்னா நீங்க உங்களைக் கேட்க வேண்டிய கேள்விகள்:

* என்னோட விருப்பத்தில தெளிவா இருக்கேனா?

* விரும்பறதை எனது வாழ்க்கைல நான் அனுமதிக்கறேனா?

சரி, அப்படி உங்கள் உணர்வுகள் உங்க விருப்பத்தோட ஒத்துப் போகலைன்னா என்ன செய்யணும்? ஏன் ஒத்துப் போகலைன்னு கண்டுபிடிச்சு மூலகாரணத்தை சுகப்படுத்தணும். உதாரணமா, நீங்க கார் வாங்க ஆசப்படறீங்க.. ஆனா அதைப் பற்றி நினைக்கும் போது உங்களுக்கு விரக்தி வருதுன்னு வச்சுக்கங்க… மூல காரணத்தை எப்படி கண்டுபிடிக்கறது? கேள்வி மேல கேள்வி கேக்கணும்?

ஏன் விரக்தி வருது?
எத்தனையோ தடவை தள்ளிப் போயிருச்சு.

ஏன் தள்ளிப் போச்சு?
மாத்தி மாத்தி ஏதாவதொரு பிரச்சினை

ஏன் பிரச்சினை?
என் தலைஎழுத்து

ஏன் தலைஎழுத்து அப்படி இருக்கு?
ஏதோ பாவம் பண்ணிருக்கணும்

இப்படி கேட்டுக்கிட்டே போனா பொதுவா அஞ்சுலருந்து ஏழு கேள்விகளுக்குள்ள மூல காரணத்தைக் கண்டுபிடிச்சிடலாம். இந்த உதாரணத்துல, ஏதோ பாவம் பண்ணிருக்கறதா இருக்கற நம்பிக்கைதான் மூலகாரணம். நீங்க ஒருத்தருக்குக் கார் வாங்கித்தரணும்னு விரும்பறீங்க… பாவம் பண்ணிருக்கறவருக்குத் தருவீங்களா? மாட்டீங்க இல்லையா… அப்படின்னா அந்த நம்பிக்கை உங்ககிட்டே இருக்கும்போது உங்களுக்குக் கார் கிடைக்க நீங்க எப்படி அனுமதிப்பீங்க?

இப்படியான நம்பிக்கைகள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். நம்ம பெற்றோர்கள், முன்னோர்கள்கிட்டேர்ந்து வந்திருக்கலாம்; முன் ஜென்மத்திலருந்து வந்திருக்கலாம்; சின்ன வயசு சம்பவங்கள்லருந்து வந்திருக்கலாம். எப்படி வந்திருந்தாலும் அதை சுகப்படுத்தலேன்னா திரும்பத் திரும்ப அதை மெய்ப்பிக்கறமாதிரிதான் வாழ்க்கை அமையும்.
அதேபோல, பொதுவா நம்ம வாழ்க்கைல ஏதாவது ஒரு குறை இருந்துக்கிட்டே இருக்குன்னா அதுக்கு மூல காரணம் குறைவான சுயமதிப்பாக இருக்கலாம். அடுத்தவங்க நம்மைப் பற்றி என்ன நினைக்கறாங்கங்கறதுக்கு நாம எவ்வளவு மதிப்பு கொடுக்கறோம்கறதை கவனிச்சோமானா நம்மோட சுயமதிப்பு நமக்கு அப்பட்டமா விளங்கிடும்.

மற்றவங்க சொல்றது நம்மை ஆழமா பாதிக்குதா?

மற்றவங்க நம்மை அங்கீகரிக்கறதுக்காக நமக்குப் பிடிக்காததை எல்லாம் செய்றோமா?

நாம செய்யற செயல்கள் பெரும்பாலும் மற்றவங்களோட அங்கீகாரத்தைப் பெறுவதுக்காகத்தானா?

இந்தக் கேள்விகளுக்கு ஆம்னு பதில் சொல்லிருந்தோம்னா நமக்கு நம்ம மேல பெருசா மதிப்பில்லைன்னு அர்த்தம்.
இப்படி சுயமதிப்பு இல்லாதவங்க அடுத்தவங்களுக்காகவே வாழ்வாங்க. அடுத்தவங்களோட அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில வாழ்றதில அர்த்தமே இல்லைன்னு கூட நினைப்பாங்க. வெளி அங்கீகாரத்துக்கு அடிமையாகவே ஆயிடுவாங்க. எவ்வளவு அங்கீகாரம் கிடைச்சாலும் திருப்தி இருக்காது. சில சமயம் வாழ்க்கை நரகமாத் தெரியும்.

இதை எப்படி சுகப்படுத்தறதுன்னு சொல்லித் தெரியணுமா என்ன? இருந்தாலும் சுயமதிப்பு ஏற்படுத்த மிக எளிய ஒரு புதிய உத்தியை கீழே இருக்கற சுட்டிலருந்து நீங்க கத்துக்கலாம்:

http://www.youtube.com/watch?v=_iQw4Wpx3-E

நான் ஏற்கெனவே சொல்லிருக்கறமாதிரி, நான் அறிமுகப்படுத்திருக்கற உத்திகளை எல்லாம் ஒரு சுகவர் உதவியோட செய்யும்போது பலன் அதிகமா இருக்கும். அதுக்கு ஒரு உதாரணத்தை இந்த வார அரட்டையில யஷ் கூட எழுதிருக்காங்க.
அதை அவங்க என்கிட்ட சொன்னப்போ ஏன் இப்படி பலருக்கும் பயன்படற மாதிரி கூட்டு சுக சந்திப்பு ஏற்பாடு செய்யக் கூடாதுன்னு எனக்கு தோணுச்சு. அதாவது இணையம் வழியாகவே சந்திப்பு ஏற்பாடு செய்து இந்த உத்திகள் பயன்படுத்தி கூட்டாக சுகமடையலாம்.

வஞ்சி, யஷ், கார்த்திகா, இந்த உத்திகளை பயன்படுத்தி நீங்க பலனடைஞ்சிருக்கறதால இந்த யோசனை உங்களுக்கு உசிதமா படலாம். அப்படிப் பட்டதுன்னா இதை எப்படி செயல்படுத்தறதுன்னு பார்க்க ஆரம்பிங்க.

போன வாரம் Haapy Days தெலுங்குப் படம் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சது. கல்லூரி மாணவர்களைப் பற்றிய கதையை ரொம்பப் பக்குவமா, சுவாரஸ்யமா சொல்லிருந்தார் இயக்குனர் ஷேகர். படத்தில முகம் சுளிக்கறமாதிரியான காட்சிகளோ, வசனமோ, வன்முறையோ இல்லை. ஒரு இனிமையான அனுபவமா இருந்த இந்தப்படம் என்னோட படம் எடுக்கற கனவுகளைக் கிளறி விட்டுடுச்சு (போச்சுடா!)

சரி.. தெலுங்குல இவ்வளவு அழகான படங்கள்லாம் வருதேன்னு ஆசைப்பட்டு சத்ரபதின்னு ஒரு படம் பார்த்து நொந்து போயிட்டேன். அரைச்சு வச்ச அக்மார்க் ஃபார்முலா மசாலா.

நல்ல வேற்று மொழிப் படங்கள் சப்டைட்டிலோட இருந்தா சொல்லுங்க… பார்க்கலாம்.

இந்த வார கொடைகள்:

1. தாமரைப் பெண்களுக்காக சுகந்தி பதிவு செய்து தந்த செய்தி.
2. சங்கர நேத்ரயலால பேசி தாமரைப் பெண்களுக்கு இலவச கண் பரிசோதனைக்கு பெனிட்டா செய்த ஏற்பாடு
3. செல்லக் குட்டி ருஃபீனாவை (அண்ணன் மகள்) Teen of the year ஆக அவங்க பள்ளிலருந்து நாமினேட் செய்தது
4. யஷ்ஷோட தோள்பட்டை வலி சுகமானது
5. மாக்னம் ஐஸ்க்ரீம்
6. வாத்தியார் டோலேயோட சொற்பொழிவு கேட்டு கண்ணீர் விட்டது
7. ஒரு வழியா மடை திறந்து எழுதினது…

உங்களோட கொடைகளையும் பகிர்ந்துக்குங்க… வழக்கமா பதிலெழுதற மினி, சுரேஷ், ராதா யாருமே மூச்சே காணோம்? படிக்கறதை ஒரு வேளை நிறுத்திட்டீங்களோ? ஆனா நான் எழுதறதை நிறுத்த மாட்டேனே… என்னையே கேட்டுப் பார்த்துட்டேன் – மடைதிறந்து எனக்காக எழுதறேனா மற்றவங்களுக்காகவான்னு…

வேறென்னப்பா…. எனக்குப் பிடிச்ச இந்தி பாப் பாடல் ஒண்ணை கேளுங்க:

http://www.youtube.com/watch?v=DfbIpw_Izgg&feature=related

இந்தப் பாடலுக்கான ஒரிஜினல் வீடியோல அழகான ஒரு கதை இருக்கும். அந்த வீடியோவைக் கண்டுபிடிக்க முடியலை. பரவாயில்லை… இதுவும் நலமே…

இந்த வாரம் புகைப்படம் தேடி எடுத்துப் போட பொறுமையில்ல… அடுத்த வாரம் முயற்சிக்கறேன்.

அடுத்த வாரம் பார்ப்போமா?

அபரிமிதமான அன்புடன்,
நிலா”

About The Author

1 Comment

  1. யாகவா

    அருமையான ஒரு விஷயத்தை சுருக்கமா சொல்லிட்டீங்க. நம்மள நாமே கேள்விகள் கேட்கும்போது ஏதோ ஒரு கேள்வியில் நம் மனம் உண்மையை சொல்லிவிடுகிறது. பல முறை அனுபவங்கள்தான். ஆனால் யோகத்தில் சித்தியடைந்த ஒருவர் மிக எளிதாக தன் மனவோட்டத்தை முதல் கேள்வியிலேயே ஆராய்ந்துவிடுகிறார். இதை எப்படி எளிதாக நாம் கைக்கொள்வது என்பதுதான் தெரியவில்லை…

    ஹேப்பி டேய்ஸ் சுவாரஸ்யமான படம் என்று கேள்விப்பட்டேன், ஆனால் 3-இடியட்ஸ் படமும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மிக அருமையான இன்றைய மாணவர்களின் படிப்பினையைப் பற்றித் தெளிவான திரைக்கதையுடன் சொல்லியிருக்கின்றனர். பார்க்காத புண்ணியவான்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.

    புத்தர் ஆசைபடக்கூடாது என்று சொன்னார். ஆனால் நாமளோ புத்தர் ஆசைப்பட்டார் ”ஆசைப்படக்கூடாது” என்று வியாக்யானம் பேசுகிறோம். அவர் எதர்காக அதை சொன்னார் என்ற மூலத்தை ஆராய மறுக்கிறோம்…..

Comments are closed.