என்னப்பா…. வாழ்க்கை எப்படிப் போகுது? எனக்கு வழக்கம் போல பிஸி… பிஸி… பிஸி… மேலேர்ந்து ‘கொஞ்சம் ரெஸ்ட் எடு’ அப்படின்னு செய்தி வந்திருக்கு. அதனால இந்த முறை கொஞ்சம் குறைவாத்தான் எழுதப் போறேன்… ஆகா… ஜாலின்னு சொல்றீங்களா என்ன?
(போன வாரம் குறிப்பிட்டிருந்த) சுபைதாவுக்கு உதவி செய்ய கவிதா மூலமா முன்வந்த நல்ல உள்ளத்துக்கு நன்றி. கவிதா தாமரைப் பெண்களுக்கு ஆசிரியர் வேலை வாங்கித் தரவும் முயற்சி செய்யறாங்க. வேலை தரத் தயாரா சில நல்ல மனிதர்கள் இருக்கறதாவும் மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் வேலையை எப்படி சமாளிப்பாங்கன்னும் கேட்டிருந்தாங்க. சூர்யகலாகிட்டே பேசும்போது கேட்டேன். அந்த இருபத்தி ரெண்டு வயசுப் பொண்ணுக்கு ரொம்பத் தெளிவு… நல்லா பதில் சொன்னாங்க. முதல்நாளே ஒலி வடிவிலே இருக்கற பாடத்தை நல்லா தயார் செய்துக்குவாங்களாம். மறுநாள் வகுப்பறையில நல்லா படிக்கற பசங்களை விட்டுப் படிக்க வச்சு/ எழுத வச்சு விளக்குவாங்களாம். தேர்வுத்தாளைத் திருத்த மற்ற ஆசிரியர்களும் தன்னார்வத் தொண்டர்களும் இவங்களுக்கு உதவுவாங்களாம்… மொத்தத்தில அவங்களோட வேலை செய்யறவங்களோட ஒத்துழைப்பு ரொம்ப அவசியம்… வேலை கொடுக்க முன் வர்ற நல்ல உள்ளங்கள் இந்தச் சின்னச் சின்ன சிரமங்களுக்கு வழி ஏற்படுத்தித் தரமாட்டாங்களா என்ன?
சமீபத்தில பி.எட் படிச்சு முடிச்சிருக்கற 12 பேரோட Resume கேட்டாங்க கவிதா… யாராவது ராதாகிருஷ்ணன் உதவியோட இந்த விபரங்களைத் தொகுத்துத் தந்தால் நல்லா இருக்கும். யஷ்ஷு ஓவருக்கு ஓவர் டைம் பார்க்கறதுனால அவங்களைக் கேக்கறது மகா பாவம்… அப்பாப்பா எத்தனை பேர்கிட்டே பேசி எவ்வளவு தகவல்கள் சேகரிக்கறாங்கப்ப்பா! வாழ்க!
சில வாரங்களுக்கு முன்னால சுவாதிப்ப்ரியாங்கற மாணவிக்கு இஞ்சினியரிங் படிக்க உதவி கேட்டிருந்தோமில்லையா? அவங்களுக்கு சென்னையிலேயே அவங்க விருப்பப்பட்ட மாதிரி அவங்களோட மதிப்பெண்களை அடிப்படையா வச்சே சீட் கிடைச்சிருச்சி. அவங்களுக்காக நிறைய கஷ்டப்பட்டு மேலும் சில சிறந்த வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தாங்க பல நல்ல மனிதர்கள். ஆனா சுவாதிக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ள வாய்க்கலை. குடும்பத் தலைவரைத் தவறவிட்டுட்டுத் தவிக்கிற இந்தக் குடும்பம் எடுக்கற முடிவுகள் சில வெளில இருந்து பார்க்கறவங்களுக்குத் தப்பா தோணினாலும் அவங்களோட சூழ்நிலைல, அவங்க வளர்ந்த விதத்தில, அவங்களுக்கிருக்கற உலக ஞானத்தில, மனப்பக்குவத்தில நாம இருந்தாலும் அதே முடிவைத்தான் எடுப்போமாக இருக்கும். சுவாதியை மனசார வாழ்த்தி, நல்லாப் படிச்சு வளர்ந்து இன்னும் நாலு பேருக்கு அவங்க உதவணும்னு நாம கேட்டுக்கலாம்…
‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே’ன்னு கேட்டிருக்கோமில்லையா? (வரலட்சுமியோட காந்தக் குரல்ல தேவாமிர்தமா இருக்குமே பாடல்). பிறக்கும்போது எல்லாரும் ஒரே நிலைலதான் இருப்போம் – கடவுளோட ஒரு துளியா, பரிசுத்தமா… வளர வளர நம்ம சூழல் நம்மை செதுக்குது. நம்ம பெற்றவங்ககிட்டேர்ந்து அவங்க நம்பிக்கைகளையும் எதிர்வினைகளையும் கத்துக்கறோம். அப்பறம் நமக்கு ஏற்படற அனுபவங்கள் மூலமா நாமே சில அனுமானங்களை உருவாக்கிக்கறோம். காலம் போகப்போக இதெல்லாம் சேர்ந்து நம்ம ஒவ்வொருத்தர் முன்னாலேயும் ஒரு பெரிய திரையைப் போட்டிருது. அந்தத் திரை வழியாதான் உலகத்தை, மத்தவங்களை, வாழ்க்கையைப் பார்க்கறோம். இந்தத் திரை மெல்லிய கண்ணாடிலர்ந்து தடிமனான இரும்பு வரைக்குமானதா இருக்கு – ஒவ்வொருத்தரோட சூழலையும் பொறுத்து. முதல்ல இப்படி ஒரு திரை நம்ம முன்னால இருக்குன்னு தெரிஞ்சாதான் திரையை விலக்கிட்டு உண்மையைப் பார்க்க முடியும். ஆனா நாம என்ன செய்யறோம்… ‘வாழ்க்கை இருட்டா இருக்கு’ ‘மேக மூட்டமா இருக்கு’ ‘செக்கச் செவேர்னு இருக்கு’ அப்படின்னு ஆளாளுக்குச் சொல்லிக்கிட்டு நான் சொல்றதுதான் சரின்னு பிடியா பிடிச்சு அடிச்சு மாஞ்சுக்கறோம். அடுத்தமுறை மற்றவங்க செய்யறது தப்புன்னு உங்களுக்குத் தோணுச்சின்னு வச்சிக்கங்களேன்… அவங்களுக்கு முன்னால எப்படிப்பட்ட திரை இருக்குன்னு புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க. அந்தத் திரைக்குப் பின்னால நீங்க இருந்தா என்ன செய்வீங்கன்னு யோசிச்சுப் பாருங்க… ரொம்பக் கஷ்டம்தான்… ஆனா ஒரு சின்ன விஷயத்தில ஆரம்பிச்சீங்கன்னா போகப் போக அது உங்களோட இயற்கையா ஆகிடும். அப்பறம் பாருங்களேன்… உங்களைச் சுத்தி அன்பு… அன்பு… அன்புதான்…
இன்னொரு விஷயம்… மற்றவங்களால நாம அடிக்கடி காயப்படறோம்னு வச்சுக்கங்களேன்… நம்மை நாமே கேட்டுக்க வேண்டிய முதல் கேள்வி ‘நான் ஏன் என்னை இப்படிக் காயப்படுத்திக்கறேன்?’ ஏன்னா நம்ம அனுமதி இல்லாம யாரும் நம்மைக் காயப்படுத்த முடியாது. மனசுக்குள்ள வெறுப்பு இருந்தா இந்த மாதிரி அதிகம் காயப்படுத்திக்குவோம். ஒரு நாள் தனியா உக்கார்ந்து உங்களைக் காயப்படுத்தின/ உங்களுக்குக் கசப்பை ஏற்படுத்தின அத்தனை நிகழ்வுகளையும் மனுஷங்களையும் பட்டியல் போடுங்க. அப்பறம் 1 – 10 அளவுகோல்ல இவை உங்களுக்குள்ள ஏற்படுத்தற எதிர்மறை உணர்வுகளை மதிப்பிடுங்க (இப்போ உங்க நாட்டாமைக்கு முழு சுதந்திரம் தரலாம்). எங்கே அடர்த்தி அதிகமா இருக்கோ அங்கே ஆரம்பிங்க உங்க மன்னிப்பை. வெறும் வாய் வார்த்தையால மன்னிக்கறது இல்லை நான் சொல்ற மன்னிப்பு. உணமையாவே நீங்க ஒரு நிகழ்வை/மனிதரை மன்னிக்கற பட்சத்தில அந்த நினைவு எந்த எதிர்மறை உணர்வையும் தரக்கூடாது. இதுவரைக்கும் சொல்லிக் கொடுத்திருக்கற எல்லா உத்திகளையும் பயன்படுத்த சரியான தருணம்… முயற்சி செய்துதான் பாருங்களேன்… மன்னிக்கறதுல எவ்வளவு சுதந்திரம் இருக்குன்னு…
இதெல்லாம் உங்களுக்கு டூ மச்சா தெரிஞ்சா இந்த சுட்டில இருக்கற எளிமையான பயிற்சியைச் செஞ்சு பாருங்க:
http://www.youtube.com/watch?v=xxaGMR-DPJE
வாசகர் ஒருத்தர் ‘நீங்க மார்ச் 23ம்தேதி கொடுத்திருந்த வீடியோவோட தமிழாக்கம் தாங்க’ன்னு கேட்டிருந்தார்… நேயம் குழுவில யாருக்காவது நேரமிருந்தா அந்த வீடியோவைக் கண்டு பிடிச்சு தமிழாக்கம் தந்து அவருக்கு உதவுங்க… அந்த வாசகர் நேயம்ல சேர்ந்து பயனடையலாம்:
http://groups.google.com/group/neyam
ஃபேஸ்புக்ல என்னோட நட்பு செய்ய விரும்பறவங்களுக்காக:
http://www.facebook.com/profile.php?id=720120663#!/profile.php?id=720120663
சரி, பெரியவங்க சொன்ன பேச்சைக் கேட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கப் போறேன்… உங்க அன்பையும் அன்பத்தையும் எனக்கு அனுப்பறீங்களா? என்னோட அன்பு உங்களுக்கு எப்போவும் இருக்குன்னு உங்களுக்கெல்லாம் தெரியும்தானே?
அபரிமிதமான அன்புடன்,
நிலா
“