மடை திறந்து… (21)

என்னப்பா, எப்படி இருக்கீங்க எல்லாரும்?

இந்த வாரம் ஒரு நாள் ஃபேஸ்புக்ல ‘இன்றைக்கு அலுவலகத்துல என்னுடைய நாள் அற்புதமா இருந்தது. பிரபஞ்சம் உண்மையாகவே நம்மை கவனிக்கிறது’ன்னு போட்டிருந்தேன்… எதிர்பாராத மக்கள்கிட்டேர்ந்து எல்லாம் கமெண்ட். ‘பிரபஞ்சம் என்னைக் கவனிக்க மாட்டேங்குது’ன்னு

நானும் இப்படித்தாங்க நினைச்சு அழுது புலம்பிட்டிருந்தேன் ஒரு காலத்தில. அப்போல்லாம் என்னை நான் ஒரு பாதிக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட ஒரு ஜென்மமாதான் பார்ப்பேன் – ஏதோ இந்த பிரபஞ்சம் என்னை வச்சு விளையாட்டுக்காட்டுதுன்னு கோபம் கூட வந்திருக்கு. முதன்முதலா ஒரு சுகவர், ‘உன் வாழ்க்கையை நீதான் தீர்மானிக்கறே’ன்னு சொன்னப்ப பயங்கர கடுப்பு. ‘அடப் போங்கப்பா… யாராவது வேணும்னே கஷ்டம் வரவச்சுப்பாங்களா… முட்டாள்தனமா இருக்கு’ன்னு அவங்களைப் பிடிச்சு கடிச்சுட்டேன். இப்போ அதையே நான் மற்றவங்களுக்குச் சொல்றேன்… யாருக்கெல்லாம் என் மேலே கோபம் வருதுன்னு கையைத் தூக்குங்க…

இதுல பிரச்சினை அந்த சுகவர் சொன்ன கூற்றில இல்லை. ‘நாம்’னு நாம எதை நினைச்சுட்டிருக்கோமோ அங்கே இருக்கு. நாம முன்னாலேயே இதைப் பற்றிப் பேசிருக்கோம் நிறைய… ‘நான் யார்?’ங்கற கேள்வி ஆற்றல் நிறைஞ்சது. கேட்டுப் பார்த்தீங்களா? என்ன பதில் கிடைச்சது? இந்தக் கேள்விக்கான பதிலை வேற யாரும் உங்களுக்குத் தர முடியாது. நீங்கதான் கண்டுபிடிக்கணும். மல்லிகை மணம் எப்படி இருக்கும்னு வேற யாரும் சொல்லி உங்களால உணரமுடியுமா? அது மாதிரிதான் இதுவும். முயற்சி செய்யுங்க… சரியா?

அந்த சுகவரைக் கோவிச்சுக்கிட்ட நான் எப்படி மாறினேன்னு தெரிஞ்சுக்க உங்களுக்கெல்லாம் ஆர்வம் இருக்கணுமே? (இருங்குங்கறீங்க????!) அந்த சுகவர் ஒரு புத்தகத்தைப் பரிந்துரைச்சாங்க. அதனோட தலைப்பு:

Ask and it is Given: Learning to Manifest Your Desires By Esther Hicks, By Jerry Hicks

படிக்க விருப்பமில்லாதவங்க, அதனோட சாரத்தை யூடியுப்ல கேக்கலாம். அது படிச்சப்போ எனக்குப் புரிஞ்சது என்னன்னா – பிரபஞ்சம் எப்பவுமே நம்மை கவனிக்குது. நாம என்ன கேட்டாலும் கொடுக்குது. ஆனா நாமதான் அதனோட மொழி புரியாம தப்புத் தப்பா கேக்கறோம். நாம பள்ளிக்கூடத்துக்கு வழி கேக்கணும்னு வச்சுக்கங்க… ‘பல்லி எங்கேருக்கு?’ன்னு கேட்டா விட்டத்தையோ கூரையையோதானே காட்டுவாங்க? அது போலத்தான் – பாஷை புரியாம கன்னா பின்னான்னு கேட்டுட்டு வழி சொன்னவங்களைத் திட்டிட்டு இருக்கோம் பல சமயம் 🙂

அந்தப் புத்தகம் எனக்குள்ள ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்திச்சு. ஆனா வாழ்க்கை என்ன விக்ரமன் படத்தில வர்றமாதிரி ஒரு பாட்டுல மாறிடுமா? நமக்குப் பரிச்சயமான திராவிட மொழிகள்ல இன்னொண்ணைக் கத்துக்கணும்னா காலம் பிடிக்குது. பிரபஞ்ச மொழி உடனே வசப்பட்டிருமா – அதுவும் என்னைப் போல மக்குப்பிள்ளைக்கு? மாற்றம் கொஞ்ச கொஞ்சமாத்தான் வந்தது -அதுவும் நான் தொடர்ந்து பயிற்சிகள் செஞ்ச பின்னேதான். ஆனா நான் பரிந்துரை செய்த சிலருக்கு உடனடியா மாற்றங்கள் வந்தது. அது அவங்கவங்களோட நிலைமையைப் பொறுத்தது – உள்ளுக்குள்ள நம்மோட கட்டமைப்பு எவ்வளவு முறிஞ்சு போயிருக்குங்கறதைப் பொறுத்தது. இது எப்படின்னா மம்சாபுரம் பள்ளிக்கூடத்தில தமிழ் மீடியம் படிச்ச பிள்ளை அண்ணா பல்கலைக் கழகம் போனதும் ஆங்கிலம் பேச கத்துக்கற மாதிரிதான்… எடுத்த உடனே சர்ச் பார்க் பசங்க மாதிரி பீட்டர் உட முடியுமா? எவ்வளவு பயிற்சி செய்யறமோ அவ்வளவு விரைவில் பழகும். தெரிவு நம்ம கையிலேதானே!

எனக்குத் தெரியுமே – அடுத்த கேள்வி ‘ஏன் நான் மம்சாபுரத்தில பிறக்கணும்?’. அப்படிப் பிறந்து அந்த அனுபவங்களைப் பெறலேன்னா இந்த மாதிரி லெக்சர் அடிக்க முடியுமா?

‘ஏன் லெக்சர் தேவை?’

‘ஆகா… என்னை மாதிரி இருக்கற மற்றவங்களுக்குப் பயன்படுமே?’

‘ஏன் என்னை மாதிரி பலர் இருக்கணும்?’

‘எதுக்கு இந்த வாழ்க்கை?’

‘ஏன் இத்தனை கஷ்டம்?’

‘கடவுள் யார்?’

கேள்விகள்… கேள்விகள்… கேள்விகள்…

இந்த மாதிரி கேள்விகள் பற்றி க்ரையான் ரொம்ப அழகா ஒரு உவமை சொல்லிருந்தார். ஒரு கிளியைக் கேள்வி கேட்கச் சொன்னா அது எது பற்றிக் கேட்கும்? அது சாப்பிடற பழத்தைப் பற்றிக் கேட்குமா இருக்கும். மிஞ்சி மிஞ்சிப் போனா பழம் காய்க்கற மரத்தைப் பற்றிக் கேட்குமா இருக்கும். அதனோட உலகம் அவ்வளவுதான். அதுகிட்டே உலக வெப்பமயமாதல் பற்றியும் அதைத் தவிர்க்கறதுல மரங்களின் பங்களிப்பு பற்றியும் பேசினா அதுக்குப் புரியுமா? அது போலத்தான் நம்மோட கேள்விகளும் நமக்குப் புரியாத பதில்களும்.

ஏன் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கணும்? இருந்தாலும் ஏன் நமக்குப் புரியணும்? ஏன் பதில் தெரிஞ்சுக்காம இருந்தா என்ன பிரச்சினை? Why can’t it be ok not knowing the answers?

சில சமயம் கேள்விகளே பதிலா அமைஞ்சிடறதுண்டு… கேட்டுப் பாருங்க உங்களையே!

போன வாரம்… இலவசமாவே எல்லாம் கிடைக்கணும்கற ஒரு மனிதரோட பேராசை எனக்கு பயங்கர எரிச்சலை ஏற்படுத்திச்சு. நானும் என்னவெல்லாமோ செஞ்சு பார்த்தேன். எரிச்சல் பெரிசா குறையவே இல்லை. அப்போ ‘சரி… இப்போ என்ன? எனக்கு எரிச்சலா இருக்கு. அவ்வளவுதானே… பரவாயில்லை. இருந்துட்டுப் போகட்டும்’ அப்படின்னு அந்த எரிச்சலை எந்த வித பற்றும் இல்லாம கவனிக்க ஆரம்பிச்சேன். சரசரசரன்னு ரெண்டு நிமிஷத்தில இறங்கிடுச்சு. அப்புறம்தான் எனக்குப் புரிஞ்சது அந்த எரிச்சல் முதல்ல குறையாததுக்குக் காரணம் அந்த உணர்ச்சியை நான் தப்புன்னு உறுதியா தீர்மானிச்சது. எப்போ தப்பு, சரின்னு தீர்ப்பிட ஆரம்பிக்கிறோமோ, அப்போ நமக்கு அது மேல ஒரு பற்று வந்திருந்து. வந்திட்டா அதை நம்மகிட்டேர்ந்து விடுவிக்கறது கஷ்டமாயிடுது.

எப்போல்லாம் அசௌகரியமான உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளுதோ அப்போல்லாம் உற்று கவனிச்சீங்கன்னா நம்மோட இந்த நாட்டாமைத்தனம் அதிலே ஒரு பெரிய பங்கு வகிக்கும். இந்த நாட்டமைத்தனம் ஈகோவோட குணம். நீங்க கவனிக்க ஆரம்பிச்சிட்டாலே மெல்ல மெல்ல கரைய ஆரம்பிச்சிடும்.

திரும்பவும் சொல்றேன் – நான் சொல்ற உத்திகள்ல எதுவுமே ஜகன்மோகினி வித்தையில்லை. பயிற்சி தேவை. தவிர, இந்த உத்திகள் எல்லாம் பொதுவானவை. பொதுவா இருமல் இருந்ததுன்னா காஃப் சிரப் குடிக்கலாம், கஷாயம் குடிக்கலாம்னு சொல்ற மாதிரிதான் நானும் இங்கே சுகமளிக்கும் உத்திகளைப் பற்றிச் சொல்றேன். அதுல எதுவுமே உங்களுக்கு வேலை செய்யலைன்னா அதுக்கு நிறைய காரணம் இருக்கலாம். ஒண்ணு நீங்க சரியான மருந்தை சரியான நேரத்துக்குக் குடிக்காம இருக்கலாம். அல்லது இருமலுக்குக் காரணம் வேற ஏதாவது பிரச்சினையா இருக்கலாம். எப்படி உங்களை மேல பரிசோதிக்காம டாக்டரால தீர்வு தரமுடியாதோ அதே போல உங்களோட உண்மையான நிலையைத் தெரிஞ்சுக்காம என்னாலயும் உங்களுக்கான தனிப்பட்ட தீர்வு தர முடியாது.

நான் முன்னாலே பல முறை சொன்னது போல சுய உதவிக்கு லிமிடேஷன் இருக்கு. அது வேலை செய்யலைன்னைன்னா தயவு செய்து ஒரு சுகவரைத் தனியா கன்சல்ட் பண்ணுங்க. எத்தனையோ விதங்கள்ல சுகம் பெறலாம். ஆனா அந்த உதவியைப் பெற நீங்கதான் முயற்சிக்கணும். பல சுகவர்கள் ஆத்ம திருப்திக்காகத்தான் அந்தப் பணியைச் செய்வாங்க. அதனால உங்களால பணம் செலவு செய்ய முடியலைன்னா காரணத்தை விளக்கிச் சொல்ற பட்சத்தில இலவசமாவே சேவை தர தயாரா இருப்பாங்க. ஆனா அவங்களோட நோக்கத்தைத் தவறா பயன்படுத்திக்க முயற்சி செய்யக் கூடாது. ஆரம்பத்தில நான் கூட சுகவர்கள் இலவசமாதான் சேவை செய்யணும்னு நினைச்சிருக்கேன். ஆனா பலமுறை பிரபஞ்சம் எனக்கு விளக்கிச் சொன்னப்பறம் தெளிவு வந்தது. சுகமளிக்கற கொடை கடவுள் கொடுத்ததுன்னே வச்சுக்கிட்டாலும் சுகவர்கள் கட்டணம் வசூலிக்கறது இந்தக் கொடைக்கு அல்ல, அவங்களோட நேரத்துக்கு. நம்மள்ல எத்தனை பேர் இலவசமா நம்ம நேரத்தை வேறை யாருக்காவது செலவு செய்வோம்?

தாமரைப் பெண்களுக்காக ஒலி நூல்கள் செய்துதர முன்வந்த எல்லா மனங்களுக்கும் நன்றி. நான் தனித்தனியா யார் என்ன செய்யலாம், எப்படி அவங்களுக்கு அனுப்பலாம்னு சொல்றதுக்கு பதிலா ஒரு டாஸ்க் ஃபோர்ஸ் ஏற்பாடு செய்தா நல்லா இருக்குமே! நேயம் மூலமா எல்லாரும் சேர்ந்து இதைச் செய்தா வசதியா இருக்குமே! என்ன சொல்றீங்க? யார் பொறுப்பெடுத்துக்கறீங்க?

http://groups.google.com/group/neyam?pli=1

எழுதறதுக்கு நிறைய்ய்ய்ய்ய்ய் இருக்கு… நேரமில்லை.

சுரேஷ், ராதா, விஜி, பாரதி எல்லாரும் நலம்தானே? கொடைகள் எழுதறீங்களா?

அடுத்த வாரம் பார்ப்போமா?

அபரிமிதமான அன்புடன்,
நிலா”

About The Author

10 Comments

  1. குமார்

    அது சர்……சுகவர்…..சுகவர்…..ன்னு. மூச்சிக்கு முன்னூறு தடவ சொல்றீங்க. ஒவ்வொரு வாரமும் சொல்றீங்க. அந்த சுகவர் யார்? எங்க இருப்பார்? அதுவும் தமிழ்நாட்ல? நானும் ஒரு சுகவர்தான்னு சொல்லிதாதீங்க. நான் இங்க தமிழ்நாட்ல இருக்குரவங்கள்ல கெட்கிறேன். அவங்களை எப்படி தெரிந்துகொள்வது?

  2. nila

    Kumar, I am using sugavar as a translation for healer. Healers are people that use (w)holistic approach to heal people. There are many healing modalities including reiki, pranic healing, spiritual healing, eft, accupressure, accupuncture, hypnotherapy, body talk, quantum healing… so many. My suggestion would be to read about different healing modalities first and then search the web for the healer who can offer the kind of healing you are looking for.

  3. nila

    Kumar, I am using sugavar as a translation for healer. Healers are people that use (w)holistic approach to heal people. There are many healing modalities including reiki, pranic healing, spiritual healing, eft, accupressure, accupuncture, hypnotherapy, body talk, quantum healing… so many. My suggestion would be to read about different healing modalities first and then search the web for the healer who can offer the kind of healing you are looking for.

  4. கீதா

    சுய அலசல் பற்றிய சிந்தனை ரொம்ப நல்லா இருக்கு நிலா. கேள்விகள் மூலமாதான் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம் என்பது எவ்வளவு உண்மை!

    உங்க உடை ரொம்ப நல்லா இருக்கு. என் மகளுக்குப் பிடித்த நிறம்.

  5. Vijaya Amarnath

    அன்பு நிலா, உங்கள் படைப்புகளை படிக்கும் பொழுது புத்துணர்ச்சி ஏற்படுகிறது சுய சிந்தனை வளர்கிறது. நன்றி நிலா.
    விஜயா

Comments are closed.