மடை திறந்து… (17)

என்னப்பா… வாழ்க்கை எப்படிப் போகுது? இங்கே எல்லாம் நல்லாதானிருக்கு!

போன வாரம் ரொம்ப அமைதியா இருந்தீங்க எல்லாரும்… சொல்லிக்கற மாதிரி ஒண்ணும் எழுதலைன்னு சொல்லுதோ உங்க மௌனம் ? நியாயம்தான். போன வாரமும் ஊருக்குப் போனேன். எழுத முடியாதுன்னு வருத்தம் தெரிவிச்சிடலாமா அல்லது முடிஞ்ச அளவு ஏதாவது எழுதலாமாங்கற குழப்பம் வந்தப்போ இதயம் ரெண்டாவது முடிவை விரும்பினதுனால முடிஞ்ச அளவு எழுதி முற்றும் போட்டேன்  ஊர் சுற்றல்லாம் ஒரு வழியா முடிஞ்சதுன்னு நினைக்கிறேன். Back to real life! நிஜ வாழ்க்கையிலயும் இப்படி ஜாலியா ஊர் சுத்திக்கிட்டே இருக்கார் ஒரு நண்பர். ஜான் ஒரு வருஷம் நல்லா சம்பாதிப்பார். அப்பறம் சில மாசங்களுக்கு உலகம் சுற்ற கிளம்பிடுவார். திரும்ப வந்து வேலை பார்ப்பார்… பின்னே சுற்றுலா… வாழ்க்கையை நல்லா அனுபவிக்கற தைரியம் அவருக்கு இருக்கு…

நம்மால ஏன் அப்படி இருக்க முடியலைன்னு நினைச்சுப் பார்த்தா அடிப்படைக் காரணம் பயம்னுதான் தோணுது. எதிர்காலம் எப்படி இருந்தாலும் அதை எதிர்நோக்க முடியும்கற தன்னம்பிக்கை இல்லாததனாலதான் எதிர்காலத்தை பாதுகாப்பாக்கற முயற்சில நிகழ்காலத்தை இழந்துடறோம்னு தோணுது. உன்னிப்பா கவனிச்சுப் பார்த்தா எதிர்காலம் நம்ம கட்டுப்பாட்டில இருக்குங்கற பாதுகாப்பு உணர்ச்சியை ஏற்படுத்தத்தான் நம்ம நிகழ்காலத்தைப் பயன்படுத்தறோம்கறதைப் பார்க்கலாம். ஆனா அந்தப் பாதுகாப்பு உணர்ச்சியோட கோல்போஸ்ட் மாறிக்கிட்டே இருக்கும். முதல்ல ஒரு சொந்த வீடு இருந்தா பாதுகாப்பா உணர்வோம். அப்பறம் நல்ல கார். அப்பறம் பெரிய சேமிப்புத் தொகை. ஒவ்வொண்ணை அடையும்போதும் கொஞ்ச காலத்துக்கு வேணா அந்தப் பாதுகாப்பு உணர்வு இருக்கும். பின்னே எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயத்தன்மை திரும்ப பயமுறுத்த ஆரம்பிச்சிடும்.

நிச்சயத்தன்மைங்கறது விரிவடையறதுக்கான சாத்தியக் கூற்றைக் கொண்டிருக்குன்னு நம்மால பார்க்ககமுடியறதில்லை. தெரியாத எதோ ஒன்றை எதிர்கொள்றதில இருக்கற பயத்தினால வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பல சமயம் விட்டுக் கொடுத்திடறோம்.

கேள்வி: முற்றிலும் அறியாத, தெரியாத ஒரு சூழலை எதிர்கொள்ள நீங்க எவ்வளவு தயாரா இருக்கீங்க?

பயிற்சி: இந்த வாரம் வாழ்க்கையில இதுவரைக்கும் செய்திராத ஒரு செயலை – நீங்க செய்ய விரும்பறதா இருக்கணும் – செய்து பாருங்க. ச்ச்சின்னச் சின்ன செயல்களாக இருக்கலாம். எடுத்துக்காட்டா பழைய தோழமைகளைப் புதுப்பிக்கலாம்; ஒரு வேளை சமையலுக்கு லீவு விடலாம்; ஏதாவது ஒரு பொருட்காட்சிக்குத் தனியாப் போய்ப் பார்க்கலாம்; ஒரு மாறுதலுக்கு உங்க எண்ணங்களை இங்கே பகிர்ந்துக்கலாம்

இன்னொரு பயிற்சி: உங்க வாழ்க்கையை உற்றுப் பாருங்க. பாதுகாப்பு உணர்வுக்கு நீங்க எவ்வளவு முக்கியத்துவம் தர்றீங்க? உங்களோட கோல்போஸ்ட் மாறிக்கிட்டே இருக்குதா? ஈகோவோட "எதுவுமே போதாது"ங்கற மனப்பான்மை எவ்வளவு தூரம் வெளிப்படுது?

ஈகோ தன்னைத் தக்க வச்சுக்கறதுக்காகப் போடற நாடகங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டாலே நமக்குள்ளே ஒரு நிறைவு ஏற்படறதை உணர முடியும். யோசிச்சுப் பார்ப்போம் – எதை நம்மால கட்டுப்படுத்த முடியும்னு – இந்த பூமியோட சுழற்சியை? ஒரு மரம் பூக்கற பருவத்தை? சுட்டெரிக்கற சூரியனை? எல்லாம் அதது பாட்டுக்கு நடக்குது. ஆனா நாம ஏதோ நம்மாலதான் உலகமே சுழலுதுங்கற ரேஞ்சுக்கு நினைச்சுக்கிட்டு நம்ம வாழ்க்கையை நம்ம கட்டுப்பாட்டுல வச்சிருக்க அயராது உழைக்கிறோம்… பைபிள் சொல்ற மாதிரி, ‘பறவைகள் விதைப்பதும் இல்லை; அறுப்பதுமில்லை; பத்திரப்படுத்தி வைப்பதுமில்லை.’. ஆனா எத்தனை பறவைகள் பசியால சாகுது சொல்லுங்க? அடிப்படையில இந்த பிரபஞ்சத்து மேல கொஞ்சம் நம்பிக்கை இருந்தாலே வாழ்க்கை தன்னால நகரும்னு எனக்குத் தோண ஆரம்பிச்சிருச்சி.

இன்னொரு கேள்வி: நம்மோட பிரார்த்தனைல நம்பிக்கை வெளிப்படுதா? கோரிக்கை வெளிப்படுதா?

கோரிக்கை, ‘இல்லாமை’ மனப்பான்மைலருந்து வருது. ‘கடவுளே, எனக்கு இது கொடு’ன்னு கேக்கும்போது இல்லாமை அதிர்வைத்தான் பிரபஞ்சத்துக்குத் தர்றோம். "எனக்கு இதைத் தந்ததுக்காக/ தரப் போறதுக்காக நன்றி, கடவுளே"ன்னு நினைக்கும்போது ஏற்படுத்தற அதிர்வு எவ்வளவு மாறுதலை ஏற்படுத்தும்னு செஞ்சு பார்த்து உணருங்க.

‘Ask and it is given’னு ஒரு நூல் கவர்ச்சி விதியைக் கடைப்பிடிக்கறதுக்கு எளிமையான உத்திகளை விவரிக்குது. அதுல ஒண்ணு வேலைகளை பிரபஞ்சத்துக்கு ஒதுக்கறது. ரொம்ப சிம்பிள். ஒரு நோட்டுப் புத்தகத்தோட ஒரு பக்கத்தை ரெண்டு காலமா பிரிக்கணும். அதாவது பக்கத்துக்கு நடுவில மேலேருந்து கீழாக ஒரு கோடு போடணும். இடது பக்கத்தில நீங்க செய்ய வேண்டிய வேலைகளை எழுதணும். வலது பக்கம் பிரபஞ்சம் உங்களுக்காகச் செய்ய வேண்டிய வேலைகளை எழுதணும். என்ன வேலை வேணாலும் பிரபஞ்சத்துக்குத் தரலாம். செஞ்சுதான் பாருங்களேன் நடக்கற அற்புதத்தை!

அதுக்காக வீட்டை சுத்தம் செய்யணும்னு பிரபஞ்சத்துக்கு எழுதினா, விட்டலாச்சார்யா படத்தில வர்ற மாதிரி காலைல எழுந்து பார்த்த உடனே வீடு சுத்தமா இருக்கும்னு எதிர்பார்க்கக் கூடாது. அந்த வேலை நடக்கும். எப்படி நடக்கும்கறது முக்கியமில்லை. நாமே கூட அதைச் செய்யலாம். ஆனா அதைச் செய்யறதுக்கான உத்வேகம் கிடைக்கும்; அதுவும் ஒரு இனிமையான அனுபவமா அமையும். எனக்கு இந்த மாதிரி நிறையா நடந்திருக்கு. முயற்சி செய்து பாருங்க.

***

ஐபிஎல் இறுதிப் போட்டி நண்பர்களோட பார்த்தோம். தோனிக்குத் திரும்பவும் வெற்றி! என்ன ஒரு அமைதி! ஜென் தோனி வாழ்க!

‘விசிலைப் போடு’ பாட்டோ வீடியோவோ எனக்குப் பிடிக்கவே இல்லை. வேற ஏதாவது வித்தியாசமா செஞ்சிருக்கலாம். அடுத்த முறை செய்வாங்கன்னு எதிர்பார்ப்போம்…

நண்பர்கள்னு அடிக்கடி சொல்றேனில்லையா… அவங்க எங்களுக்குக் குடும்பம் மாதிரி. போன வாரம் ஆறு குடும்பமும் ஒண்ணா ஒரு கடற்கரையோர கெஸ்ட் ஹவுஸ்ல தங்கி இருந்தோம். அப்போ ஒரு சின்ன மனத்தாங்கல் ஏற்பட்டு ரொம்பப் பெரிசா ஆகிடுச்சு. சிதறிடுவோமோன்னு ஒரு சின்ன உறுத்தல் எல்லாருக்குமே இருந்தது. ஆனா பாருங்க, இந்த நிகழ்வு எங்களை இன்னும் அதிகமா பிணைச்சிருச்சி. அதுக்கு முக்கியமான காரணம் மனத்தாங்கலை எல்லாம் தாண்டி அன்பை வெளிப்படுத்தினது. ‘ஆமா இப்படி நடந்ததுதான். நான் காயப்பட்டேன்தான். தப்பும் பண்ணினேன்தான். ஆனா இதெல்லாமே ஓகேதான். ஏன்னா I love us’னு எல்லாருமே சொல்லத் துணிந்ததுதான். ஒரு நண்பர் சொன்ன மாதிரி ‘தமிழ் சீரியல் மாதிரிதான் போச்சு’. ஒரே சென்டிமென்ட்… ஆக மொத்தத்தில எல்லாம் நலமே!

இந்த மாதிரி உங்களுக்கும் யாருகிட்டேயாவது மனத்தாங்கல் இருந்தா ‘இதெல்லாமே ஒகேதான்’னு சொல்லிப் பாருங்களேன்! பனிபோல எல்லாம் சட்டுன்னு மறைஞ்சு போயிடுது. இதை நான் அலுவலகத்துல கூட பயன்படுத்தி பயனடைஞ்சிருக்கேன்.

இந்த ‘OKness’ வாழ்க்கையையே மாற்றக் கூடிய ஆற்றல் பெற்றது. கொஞ்ச வருஷம் முன்னால திடீர்னு ஒரு நாள் காலைல எனக்குத் தோணுச்சி ‘What if all this is ok?’ ‘இது சரியில்லை; அது மாறணும்; இது போதலை’ – இதெல்லாம் யாரோட அளவுகோல்ல? ஏன் இதெல்லாம் அப்படியே ஒகேயா இருக்கக் கூடாது? அந்த எண்ணங்களும் கூடத்தான்… வாழ்க்கை அப்படியே தலைகீழா மாறின மாதிரி இருந்தது. அப்படியே நீடிச்சிருந்தா நல்லாத்தானிருக்கும். நானும் ஞானியா இருந்திருப்பேன் ஆனா அடிக்கடி வீண் எதிர்நீச்சல் போடற நிலைக்குத் திரும்பத் திரும்ப வந்துக்கிட்டேதானிருக்கேன். ஆனா அதுவும் கூட ஓகேதான் அப்படின்னு தோண ஆரம்பிச்சிட்டதால… எல்லாம் நலமே!

***

க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கின ‘Invictus’ படம் பார்த்து அசந்ந்ந்து போயிட்டேன். நெல்சன் மண்டேலா அதிபரா பதவி ஏற்றபோது நிறவெறில பிளவுபட்டிருந்த நாட்டை எப்படி ரக்பி விளையாட்டு மூலம் பிணைச்சார்ங்கறதுதான் கதை. தன்னோட அருமையான இயக்கத்தினால படத்தை சுவாரஸ்யமா கொண்டு போனதோட மட்டுமில்லாம பார்த்தவங்களை இன்ஸ்பையர் பண்ணினது ஈஸ்ட்வுட்டோட மிகப் பெரிய வெற்றி. அவர் இயக்கின படங்கள் எல்லாமே வித்தியாசமானவை. ஒவ்வொரு படமும் வெவ்வேறு விதமானவை. எந்த இயக்குனரையும் கண்டு நான் இவ்வளவு வியந்ததில்லைன்னுதான் சொல்லணும்… Enormous talent!

படத்துக்கு வருவோம். இருபத்தேழு வருஷம் தன்னைச் சிறையிலடைச்ச, தன் இனத்தைக் கொடுமைப் படுத்தின வெள்ளையர்களை மண்டேலா மன்னிச்சது மட்டுமில்லாம அவங்களையே நாட்டை ஒருங்கிணைக்க எப்படி பயன்படுத்திக்கிட்டார்ங்கறதைச் சொன்ன ‘Playing the Enemy: Nelson Mandela and the Game That Changed a Nation’ என்ற நூலை அடிப்படையாக் கொண்டது இந்தப் படம். 1994ல மண்டேலா பதவி ஏற்றப்போ தென்னாப்பிரிக்காவோட ரக்பி குழுவுக்கு எதிராக விளையாடறவங்களைத்தான் அந்த ஊர் கறுப்பின மக்கள் ஆதரிப்பாங்க. ஏன்னா அந்தக் குழு அவங்களைக் கொடுமைப் படுத்தின வெள்ளையின மக்களோடதாத்தான் அவங்க பார்த்தாங்க. 1995ல நடந்த ரக்பி உலகக் கோப்பை நிகழ்வைப் பயன்படுத்தி அந்த நிலையை மாற்றினார் மண்டேலா. ரொம்ப மோசமா விளையாடிட்டிருந்த தென்னாப்பிரிக்க ரக்பி அணியை எப்படி ஊக்குவிச்சு கோப்பையை வெல்ல வச்சார், அது எப்படி பிரிவினையை ஒழிக்க உதவிச்சுங்கறது பார்க்கற எல்லாருக்குமே சமாதானத்து மேல நம்பிக்கையை ஏற்படுத்தற விதமா சொல்லப்பட்டிருக்கு.

சிறையில இருக்கும்போது தனக்கு நம்பிக்கையைத் தந்த ‘Invictus’ என்ற ஒரு கவிதையை ரக்பி குழுவின் கேப்டனுக்கு மண்டேலா தருவார். அது இங்கே:

Out of the night that covers me,
Black as the pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.

In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud.
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.

Beyond this place of wrath and tears
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds and shall find me unafraid.

It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.

-William Ernest Henley (1849–1903).

கடைசி ரெண்டு வரிகளைக் கவனிச்சீங்கன்னா ‘நானே என் வாழ்க்கையின் தலைவன்’ங்கற கருத்து எதிரொலிக்கறதைப் பார்க்கலாம். இதைப் பற்றி நிறைய பேச வேண்டி இருக்கலாம். அடுத்த வாரம் தொடருவோம். அதுக்கு விதியைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு சொன்னீங்கன்னா உதவியா இருக்கும். சொல்றீங்களா?

***

போன வாரம் சித்தப்பா வந்திருந்தப்போ அவங்களோட நண்பர் ஒருத்தரை அறிமுகப்படுத்தினாங்க. அவங்க வீட்டுக்குப் போயிருந்தோம். இலண்டனின் மே….ல் தட்டு மனிதர்கள் வாழும் பகுதியில் வீடு. வீட்டுக்குள் நீச்சல் குளம், நீராவி அறை, ஜிம் எல்லாம் உண்டு. மிக அழகாகப் பராமரிக்க வேலைக்காரர்கள். எல்லாவற்றையும் விட சிறப்பு அந்த வீட்டில் குடியிருந்த மனிதர்களின் எளிமையான மனம். ஜென்ம ஜென்மமாய்த் தெரிந்தவர்களைப் போல நடத்தினார்கள். வாழ்க!

அங்கே எடுத்ததுதான் இந்தப் படம். கட்டிருக்கும் புடவை சென்னை ஸ்ரீகிருஷ்ணாவில 200ரூபாய்க்கு வாங்கினது. ராஜு போட்டிருக்கற சட்டையும் எனக்கு ரொம்பப் பிடிச்சு வாங்கினது.

அவங்க வீட்டிலிருந்த எண்ணற்ற கலைப் பொருட்களைக் கேமராவில் சுட்டதில் ஒன்று இந்தப் படம். எவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுள்ள சிற்பம் பாருங்கள்! (நான் என்னைச் சொல்லலை )

***

கீதா, புதிருக்கான விடை சரிதான்… மின்னூல் வருகிறது. போட்டிகள்ல தன்னிகரற்ற தலைவியா இருக்கற கீதாவை அடிச்சுக்க ஆளே இல்லையா?

கீதா உங்களோட ‘நாளை என் மகனும்’ கவிதை மனதைத் தொட்டது… Very intelligent depiction.

கலையோட கிராமிய விளையாட்டுகள் பற்றிய பதிவும் நல்லா இருந்தது. இந்த மாதிரி விளையாட்டுக்களைப் பற்றி விவரணப்படம் எடுக்கணும்கற என்னோட விருப்பத்தை சில வருடங்களுக்கு முன்னால ஒரு நேர்முகத்தில சொல்லி இருந்தேன்… ஒரே அலைவரிசை பல விதங்கள்ல வெளிப்படுது, கலை.

பேசறதுக்கு நிறையா இருந்தாலும், நேரமில்லை… அடுத்த வாரம் தொடருவோம்.

அதுவரைக்கும் நீங்க எங்கிட்ட பேசுங்க…. வேறென்ன கேட்பேன் நான்?

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

4 Comments

  1. கீதா

    அன்பு நிலா,
    மின்னூல் பரிசுக்கு ரொம்ப நன்றி. கவிதைக்கானப் பாராட்டுக்கும் நிறைவான நன்றி.

    எதிர்காலம் பற்றி நமக்கிருக்கும் பயம்தான் நிகழ்காலத்தை அனுபவிக்கவிடாமல் தடுக்குதுன்னு சரியா சொல்லியிருக்கீங்க. அந்தப் பயத்தை விட்டு வெளியில் வரக்கூடிய மனப்பக்குவம் இன்னும் நமக்கு வரலையே.

    மதிப்புக்குரிய மகா மனிதர் நெல்சன் மண்டேலா பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ள படத்தை வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் பார்க்கணும்.

  2. கலையரசி

    அன்பு நிலா,

    ”முற்றிலும் அறியாத, தெரியாத ஒரு சூழலை எதிர்கொள்ள நீங்க எவ்வளவு தயாரா இருக்கீங்க”?

    வாழ்க்கை சீராக போய்க்கிட்டிருக்கும் போது தெரியாத சூழலுக்கு மாற கொஞ்சம் தயக்கமாத்தானிருக்குது. புதுச்சூழலில் செட்டில் ஆறதுக்கு முன்னாடி சில கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமே; அது தேவையா என்று யோசிக்கும் போது வேண்டாம் என்று தான் மனசு சொல்லுது. ஆனா அந்தச் சூழலுக்கு மாறித்தான் ஆகணும்னு ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா முழு மனசோட அதை எதிர்கொள்ளத் தயாராயிடுவேன்.

    இந்த வாரம் நீங்க சொன்னபடி ஒரு காரியம் செஞ்சேன். ஹிந்து யங் வேர்ல்டு பத்திரிக்கையில அட்டை பெட்டியில பறவை வீடு செய்றது பத்தி குழந்தைகளுக்காக ஒரு செய்முறை விளக்கம் கொடுத்திருந்தாங்க. வீட்டில சும்மா கிடந்த அட்டை பெட்டியை எடுத்து அவங்க சொல்லியிருந்தபடி ஒரு பறவை வீடு செஞ்சு மாடியில வைச்சேன். அதைச் செஞ்சு முடிச்சி வைச்ச பிறகு மனசு சந்தோஷமாயிருந்துது. வீட்டுல செய்ய வேண்டிய வேலைகள் ஆயிரம் இருந்தாலும் நமக்குப் புடிச்ச ஒரு வேலைக்காக நேரம் ஒதுக்கி அதைச் செய்யும் போது ஆத்ம திருப்தி ஏற்படத்தான் செய்யுது.

    கிராமிய விளையாட்டுக்கள் பற்றி நீங்க எழுதியிருந்ததைப் படிச்சி ரொம்ப சந்தோஷப்பட்டேன். ரொம்ப நன்றி நிலா. அதை எழுத முடியாம போன வாரம் முழுக்க கணவருக்காக ஆஸ்பத்திரியில இருக்க வேண்டியதாப் போச்சி. வீட்டுக்கு வந்து ஒரு நாள்ல அதை எழுதியனுப்பினேன். ஏற்கெனவே இது பற்றி விவரணப் படம் எடுக்கணும்னு நீங்க சொல்லியிருக்கீங்கன்னு படிச்சி ஆச்சரியப்பட்டேன். பல விஷயங்கள்ல நம்மோட அலைவரிசை ஒத்துப் போறதை நினைச்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
    அந்தச் சிற்பம் ரொம்ப ந்ல்லாயிருக்கு.
    நன்றி நிலா.

  3. mini

    nila, naan oru periya comment eluthinenen. kanama pochu. naan ethavathu konjam athigama eluthina athu publish aga mathenguthu. romba sogama iruku enaku.

Comments are closed.