என்னப்பா… எல்லாரும் நலம்தானே… இங்கே எல்லாம் சுகமே!
இந்த வாரம் ஜாலியா ஒரு விஷயம் நடந்தது. சித்தப்பா, சித்தியோட வெளில போயிருந்தப்ப ஒரு சூதாட்ட இயந்திரமிருந்த இடத்தில காத்திருக்க வேண்டி இருந்தது. ஒரு பவுண்ட் நாணயம் போட்டு விளையாட ஆரம்பிச்சோம்.
சித்தப்பா ஒரு கணக்கு ஜீனியஸ்ங்கறதனால அந்த விளையாட்டில ஜெயிக்கறதுக்கான நிகழ்தகவு (Probability) பற்றி எல்லாம் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருந்தாங்க. நான் முன்னப்பின்னே அது விளையாடினதில்லை. முதல் ஆட்டத்தில ஒரு வரிசையில பெட் கட்டி 50 பென்ஸ் தோத்துப் போயிட்டேன். அடுத்த ஆட்டத்தில இன்னொரு வரிசையைத் தேர்ந்தெடுத்து ஒரு பவுண்ட் ஜெயிச்சேன். சித்தப்பா நிகழ்தகவை விளக்கறதுக்காக மூணு வரிசையில ரெண்டு வரிசைகள்ல பணம் கட்டச் சொன்னாங்க. சொல்லிட்டு ‘உனக்கு துரதிர்ஷ்டமிருந்தா நாம கட்டாத ஒரு வரிசையிலதான் எண் விழும்’னாங்க. நான் சொன்னேன், "சித்தப்பா… எனக்கு நிறையவே அதிர்ஷ்டம் இருக்கு. இந்த பிரபஞ்சம் எனக்கு நண்பன்’னு. சொல்லி ஒரு அஞ்சு வினாடி கூட ஆகலை. இயந்திரம் சொல்லிச்சு நான் 18 பவுண்ட் ஜெயிச்சிருக்கேன்னு. நாங்க கட்டின பெட் படி ஒரு பவுண்டுக்கு 2 பவுண்டுதான் கிடைக்கணும். எப்படி 18 விழுந்துச்சின்னு சித்தப்பாவுக்கு ஒரே குழப்பம். நான் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாம குதிச்சிட்டிருந்தேன். இந்த அற்புதம் எப்படி நடந்திச்சு தெரியுமா?
எங்களையே அறியாம கைதவறி வரிசையைத் தெரிவு செய்றதுக்கு பதிலா வரிசையிலிருக்கற எண்ணைத் தெரிவு செய்திட்டோம். இயந்திரம் குலுக்கிப் போட்ட எண் சரியா அந்த எண்ணா அமைஞ்சது எப்படித் தற்செயல்னு சொல்ல முடியும்?!!! பிரபஞ்சம் என்னை எவ்வளவு செல்லமா பார்த்துக்குது பாத்தீங்களா?
நான் பிரபஞ்சத்தை எதிரியாய்ப் பார்த்த காலங்களுண்டு. என்னைப் போல துரதிர்ஷ்டசாலி உலகத்திலேயே இல்லைன்னு ஆழமான நம்பிக்கை கூட இருந்தது. அதையெல்லாம் கொஞ்ச கொஞ்சமா சுகமாக்கினேன். சுகம் செயல்முறை மற்றும் சுதந்திர உத்தி பல விதங்கள்ல என்னோட வாழ்க்கையை மாத்திருக்கு. இது ஒரு சின்ன சாம்பிள்தான். உங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது மாற்றம் தெரியுதா வாழ்க்கைல?
நான் சொன்ன சித்தப்பாதான் எங்க குடும்பத்தில முதன்முதல் வெளிநாடு போனவங்க. 1978ல இப்போ மாதிரி அடுத்த வீட்டுக்குப் போறது போல அயல்நாட்டுக்குப் போக முடியாது. அரசாங்கம் தேர்ந்தெடுத்து உதவித்தொகை கொடுத்து அனுப்பி வச்சாங்க. சித்தப்பா படிச்சது எங்க கிராமத்துப் பள்ளிலதான். மேற்கல்வி கிட்டத்தட்ட எட்டாத நிலையிலதானிருந்தது அவங்களோட பொருளாதார சூழல்ல. ஆனா சித்தப்பா ரொம்ப நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால அவங்களோட சகோதரர்கள்லாம் சேர்ந்து எப்படியோ கஷ்டப்பட்டுப் படிக்க வச்சிருக்காங்க – எம் எஸ் ஸி வரைக்கும். எம் எஸ் ஸில தங்கப் பதக்கம் வாங்கி அரசாங்க உதவித் தொகையும் பெற்று கனடா போயி முனைவர் பட்டம் வாங்கி பின்னே அமெரிக்கால செட்டில் ஆகிட்டு எம்.பி.ஏவும் முடிச்சிட்டாங்க.
சித்தி சென்னையைச் சேர்ந்த ஒரு பிரபல செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. அவங்களும் கல்யாணத்துக்கப்பறம் மேற்படிப்பு படிச்சு இன்னைக்கு வரைக்கும் வேலைக்குப் போறாங்க. ரெண்டு பேருமே ரொம்ப எளிமையானவங்க. அவங்களோட மூணு பசங்களுமே நிறைய படிச்சிருக்காங்க; நல்லா தமிழ் பேசுவாங்க; பெரியவங்களுக்கு அவ்வளவு மரியாதை தருவாங்க. யாரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கற முழு சுதந்திரம் இருந்திருந்தாலும் முதல் ரெண்டு பொண்ணுங்களும் பெத்தவங்க பார்த்த மாப்பிள்ளையத்தான் கல்யாணம் பண்ணினாங்க. கடைசித் தம்பி கல்யாணத்தைத்தான் நாங்க எல்லாருமே ஆவலா எதிர்பார்க்கிறோம். ஏன்னா சித்தப்பா வீட்டுக் கல்யாணத்துலதான் அத்தனை சொந்தத்தையும் பார்க்க முடியும். உலகத்தில இப்படிப்பட்ட குடும்பத்தைப் பார்க்கறது கஷ்டம்… அந்தக் குடும்பத்தில ஒட்டிக்கிட்டிருக்கறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கேன் போலிருக்கு…
சித்தப்பா கொடுத்த ஒரு புதிர் உங்களுக்கு: ஒரே நீளமுள்ள ஆறு குச்சிகள் வச்சு நாலு சமபக்க முக்கோணங்கள் உருவாக்கறது எப்படி? சரியா சொல்றவங்களுக்கு ஒரு மின்னூல் பரிசுண்டு.
போனவாரம் நிலாச்சாரலோட பத்தாவது பிறந்த நாளும் என்னோட பதினாறாவது பிறந்த நாளும் () அமைதியாப் போச்சு. Some surprises – ஆமா, நெருக்கமானவங்க இந்தப் பொன்னாளை மறந்துட்டாங்க . நான் இதையெல்லாம் பெரிசா கண்டுக்கமாட்டேன்னுதான் நினைச்சிட்டிருந்தேன். ஆனா அன்னைக்கு முழுசும் கடுகடுன்னே இருந்தது. என்னன்னு யோசிச்சா இதுதான் காரணமா தெரியுது… எத்தனை வளர்ந்தாலும் இன்னும் குழந்தைப்பிள்ளை மனசா இருக்கே, என்ன செய்யறது? அப்புறம் இருக்கவே இருக்கு சுகம் செயல்முறை!
முதல் வாழ்த்து ப்ரூனேலருந்து சண்முகம் அனுப்பிச்சிருந்தார். சண்முகம் எங்கிட்டே வேலை செய்யும்போது எங்களுக்குள்ள நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கு. இப்போ நினைச்சுப் பார்த்தால் நான் பக்குவமா நடந்துக்கலைன்னுதான் தோணுது. ஆனா அவர் அதையெல்லாம் மனசில வச்சிக்காம பல வருஷமா தவறாம எனக்கு வாழ்த்து அனுப்பறார். பெரிய மனசுதான். வாழ்க!
அதே காலகட்டத்தில மிக நெருக்கமா இருந்த மற்ற பல நண்பர்கள் காணாமப் போயிட்டாங்க. வாழ்க்கையோட விசித்திரம் பல சமயம் வியக்க வைக்குது…
என்னோட இரண்டாவது சிறுவர் கதைத் தொகுப்பு மாயக்குதிரைங்கற பேரில சமீபத்தில வெளியாகி இருக்கு. எழுத்தாளர் ஷங்கரநாரயணன்தான் முழு காரணம். அவருக்கு நன்றி. இது என்னோட ஆறாவது நூல். அமுதென்றும் நஞ்சென்றும் கட்டுரைத் தொடரை நூலாக்கறதுக்கு சரியான முயற்சிகளெடுக்க உத்வேகம் வரமாட்டேங்குது. கட்டுரைகள், என்னுரை எல்லாமே தயார்தான். ஆனால் தமிழ் பதிப்பாளர்களோட பேசற ஆவல் இப்போதைக்கு இல்லை. யாராவது என் சார்பா பேச விரும்பினா தாராளமா செய்ங்க. என்னோட எழுத்துக்கள்ல பல தரப்பினரையும் கவர்ந்த தொடர் இதுன்னு நினைக்கிறேன். பார்க்கலாம் எப்போ நூலா வருதுன்னு…
குயில் கூடு, வீரன் – இந்தத் தலைப்புகள்ல ரெண்டு நாவல் ஆரம்பிச்சேன் 3 வருஷம் முன்னால. ஆனா மேலே எழுத ஏனோ உத்வேகமில்லை. வேலைப் பளு அதிகமா இருக்கறது ஒரு காரணமா இருக்கலாம். தவிர, இன்னும் பல கதைகளுக்குக் குறிப்பெடுத்து வச்சிருக்கேன். பார்க்கலாம்.
எனக்குத் தெரிஞ்ச ஒரு முதியவர் வீட்டு வேலை செய்ய ரொம்ப கஷ்டப்பட்டார். வேலைக்கு ஆள் வச்சுக்கச் சொன்னா நிறைய பணம் கேக்கறதா வருத்தப்பட்டார். அவருக்குப் பணத்துக்கொண்ணும் குறைச்சலில்லை. அதனால கொடுக்க வேண்டியதுதானேன்னு கேட்டேன். அவங்க கேக்கற சம்பளம் அந்த வேலைக்கு ரொம்ப அதிகம்னார். அதாவது அவரைப் பொறுத்தவரை ‘Value for Money’ கிடைச்சே ஆகணும். எல்லா வேலையையும் தானே இழுத்துப் போட்டு செஞ்சு ரெண்டு வாரத்துக்கு உடம்பு முடியாம ரொம்பவே கஷ்டப்பட்டார். இந்த கஷ்டத்துக்கு முன்னால அந்தப் பணம் எம்மாத்திரம்? வாழ்க்கையில எது முக்கியம்னு சில சமயம் நமக்குப் புரியமாட்டேங்குது.
என்னோட தோழி ஒருத்தியோட வாழ்க்கை ஒரு மூணு வருஷம் முன்னால பார்க்கும் போது ரொம்ப கொடுமையா இருந்தது. நல்ல வேலை, நல்ல சம்பளம். ஆனா ஒழுங்கா சாப்பிட, தூங்க, குழந்தைகளைக் கவனிக்க நேரம் இல்லை. நான் மெதுவா அவ கிட்டே அதை எடுத்துச் சொல்ல ஆரம்பிச்சேன். அவளுக்கு பயங்கரமா கோபம் வந்திடுச்சு. ‘உன் வேலையைப் பாரு’ன்னு சொல்லாத குறைதான்.
அவளோட குழந்தைகளை வசதியா வளர்க்கறதுக்கு அவ கண்டிப்பா வேலைக்குப் போயே ஆகணும்கறது அவளோட வாதம். அப்படி வேலைக்குப் போனா வாழ்க்கை இப்படித்தானிருக்கும்ங்கறது அவளோட நம்பிக்கை. பிரச்சினை என்னன்னா… அந்தக் குழந்தைகளுக்கு அந்தப் பருவத்தில தேவையா இருந்ததெல்லாம் அவ சம்பாதிக்கற பணமில்லை; அவளோட அருகாமை; அவளோட கவனிப்பு. அது அவங்களுக்குக் கிடைக்கலை. அவளும் அவங்களோட குழந்தைப் பருவத்தை அனுபவிக்கலை. தவிர, வேலைக்குப் போய்க்கிட்டே இதையும் செய்ய ஏதுவான சூழலை உருவாக்க முடியும்கறதையும் அவ புரிஞ்சுக்கலை.
அடுத்த வருஷம் பார்க்கும்போது அவளே கொடுமையான நிலைமைல இருந்தா. அடிக்கடி உடம்பு சரியில்லாமப் போச்சு. பயங்கர மனக்குழப்பம், பதற்றம் எல்லாம் இருந்தது. தூங்க முடியலை. குழந்தைகள் நிலைமயோ இன்னும் பரிதாபமா இருந்தது. எனக்கு ரத்தக் கண்ணீர்தான் வரலை. நானும் விடா முயற்சியோட சுகமளிக்கும் உத்திகள் பற்றிச் சொன்னேன். அவளுக்கு சுத்தமா நம்பிக்கையில்லை. ஆனா அவ கிட்டத்தட்ட மூழ்கற நிலைமல இருந்ததால எந்தத் துரும்பு கிடைச்சாலும் பிடிச்சிக்கலாம்ங்கற நிலைமக்கு வந்துட்டா.
தியானம், சுகமளிக்கும் உத்திகளெல்லாம் சொல்லிக் கொடுத்தேன். வாழ்க்கை கொஞ்ச கொஞ்சமா மாற ஆரம்பிச்சது. இப்போ அவ புதுப்புது உத்தியெல்லாம் கத்துக்கிட்டு எங்கிட்ட பகிர்ந்துக்கறா. ரேய்கி தீட்சையும் வாங்கிட்டா. ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் அவளுக்காக மட்டுமே செலவு செய்யறா. உடம்பும் மனசும் சரியாயிடுச்சு. அதே வேலைலதானிருக்கா. ஆனா இப்போ இதுக்கெல்லாம் நேரமிருக்கு…. இதை முதல்லேயே செஞ்சிருந்தா அப்படி ஒரு ‘melt down’ வந்திருக்காதேன்னு தோணுது. வருமுன் காப்போம்னு உணர்த்தறதுக்காகத்தான் இதை இங்கே பகிர்ந்துக்கறேன்.
முன்னமே கேட்ட கேள்விதான்: உங்க வாழ்க்கையோட உங்க உறவு எவ்வளவு சௌகரியமா இருக்கு?
இந்த வாரக் கொடைகள்:
1.எதிர்பாராத விதமா பெல்ஜியம் போக நேர்ந்தது. ரொம்ப அழகான ஒரு ஓவியம் வாங்கினேன். எவ்வளவும் நுணுக்கமா வரைஞ்சிருக்காருன்னு படத்தில பாருங்க. அந்த ஓவியரைச் சந்திச்சு ஒரு படம் கூட எடுத்துக்கிட்டேன். இந்தப் படத்தை வரைய 3 வாரம் ஆச்சாம்.
2.பெல்ஜியத்திலேயும் புடவை கட்டினது
3.பயங்கர வேலைப் பளுவுக்கிடையிலேயும் மடைதிறந்து எழுத முடிஞ்சது
4.மாலிக்கோட ‘மடை திறந்தால்… வெல்லம்’ (Very creative, Maleek)
5.நல்ல மாம்பி சாப்பிட்டது (மாம்பி = மாம்பழத்துக்கு செல்லப் பெயர்)
அடுத்தவாரம் பார்க்கலாமா? அதுவரைக்கும் உங்க வெளிச்சத்தைக் கொஞ்சம் வெளில எடுத்து உடுங்க, சரியா?
அபரிமிதமான அன்புடன்,
நிலா
“
நிலா,
உங்களுடைய ஆறாவது நூல் வெளிவந்ததுக்கு என் அன்பான வாழ்த்தும் பாராட்டும். அடுத்தடுத்த முயற்சிகளும் வெற்றி பெறட்டும்.
அந்த ஓவியம் ரொம்ப அழகா இருக்கு. கொஞ்சநேரம் உத்துப் பார்த்தா நாமும் அந்த இடத்தில் இருப்பது போல் உணரவைக்குது. அந்த ஓவியருக்கும், ஓவியத்தை வாங்கி எங்கள் பார்வைக்குப் பகிர்ந்துகிட்ட உங்களுக்கும் என் பாராட்டுகள்.
சித்தப்பா குடும்பம் உண்மையிலேயே பெருமைக்குரிய குடும்பம்தான். சித்தப்பா சொன்ன புதிருக்கு விடை சொல்லவா? ஒரு முக்கோணப்பெட்டகத்தின் வடிவில் (பிரமிட் மாதிரி) ஆறு குச்சிகளையும் அடுக்கினால் நான்கு சமபக்க முக்கோணங்கள் உருவாகும்தானே? அப்போ மின்னூல் எனக்குதானே? 🙂
அன்பு நிலா,
மிக அழகான ஓவியம். மற்ற ஓவியங்களை விட இயற்கை காட்சிகள் நிறைந்த ஓவியத்தில் எனக்கு எப்போதுமே ஓர் ஈர்ப்பு உண்டு. பகிர்ந்தமைக்கு நன்றி.
ஆறாவது நூல் வெளியீட்டுக்குப் பாராட்டுக்கள். அமுதென்றும்…விரைவில் நூலாக வெளிவர என் வாழ்த்துக்கள்.