பாண்டிச்சேரி போனது தற்செயல்தான். சில தற்செயல்கள் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்து விடுகின்றன.
நண்பர்கள் ஒவ்வொருவராய்த் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் ஒரு குறுஞ்சிரிப்புடன், "அரவிந்தா, நீ எப்போது கல்யாணச் சாப்பாடு போடப்போறே?" என்று கேட்டபடி பத்திரிகை தந்துவிட்டுப் போகிறார்கள்.
"அதெல்லாம் மனசுல தோணணும்டா… கல்யாணம்ன்ற தேவை வரும்போது மனசும் உடலும் தானே பரபரக்கும். உள்ளே பட்சி சொல்லும். அப்பப் பாத்துக்கலாம்" என்றேன்.
"உன் கல்யாணம் எங்கடா?" என்று சிரித்தபடி கணபதியின் பத்திரிகையை வாங்கிக் கொள்கிறேன்.
"பாண்டிச்சேரில…"
"அடடே! அப்ப கண்டிப்பா வருவேன். அழகான ஊராச்சே…" என்றேன்.
"அடேய்! அப்ப ஊருக்காக வரியா? என் கல்யாணத்துக்காக வர்லியா?"
"அப்டின்னில்ல. கல்யாணத்தன்னிக்கு உன்கூட நாங்க பேசிச் சிரிச்சிட்டிருக்க முடியுமா? இப்ப நீ பேசறே… கல்யாணப் பந்தல்ல, பொண்ணு முகத்தைப் பார்க்கவும், சிலிர்க்கவும், அவகிட்ட பேசவும், குலாவவுமே உனக்கு நேரம் சரியா இருக்குமே? எங்களுக்கு போரடிக்காதா மாப்ளேய்?" என்றேன் புன்னகைத்தபடி. "அது சரி" என்று அசடு வழிந்தான்.
எளிய திருமணம். அதிகாலை முகூர்த்தம். நாலரை மணிக்கே மேளம் கொட்டியது. முகத்தில் மழை கொட்டினாற்போல… என் நண்பர்கள் இரவுப் பறவைகள். பிற்பகல் பணி, இரவுப்பணி என்று பின் தூங்கி, பின் எழுகிறவர்கள். அவர்களுக்கு மழையாக அல்ல, மேளச்சத்தம் தேள் கொட்டினாப் போல. வாரிச் சுருட்டிக்கொண்டு, பதறி எழுந்து, அவசரமாய்க் குளித்து, கண் சிவக்கக் கல்யாணப் பந்தலில் உட்கார்ந்திருந்தார்கள்.
நான் முன்னெழுந்து பழகியவன். என் அப்பாவின் வளர்ப்பு அது.
எத்தனை வேலை இருந்தாலும், இரவுப்பணி முடித்துத் தூங்கப்போகத் தாமதமாகி விட்டாலும், அதிகாலை நேரத்தில் எழுந்து கொள்வேன். அப்பாவுக்கு நன்றி!
முகூர்த்தம் முடிந்து நாங்கள் தனித்து விடப்பட்டோம். உண்மையில், தவில் சத்தம் என்பது மழைக்கொட்டுதான். முகூர்த்தம் முடிய, தவில் அடங்க, அப்பாடா என்றிருக்கிறது. இறுக்கத்தில் இருந்து விடுபட்ட ஆசுவாசம். அம்மி மிதித்து அருந்ததி பார்த்த மாப்பிள்ளை இப்போது மணப்பெண்ணின் முகத்தையே பார்த்துப் பார்த்துப் பூரித்துக் கிடந்தான்.
நாங்கள் சில நண்பர்களாக ஊர் சுற்றக் கிளம்புகிறோம். காலை சீக்கிரமே சிற்றுண்டி கழித்து விட்டோம். மதிய உணவு தயாராய் இருந்தது. கல்யாணத்துக்கு வந்துவிட்டு நேரடியாக அலுவலகம் போகிறவர்கள் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்.
எங்களுக்குப் பசியும் இல்லை. அலுவலக அவசரமும் இல்லை. உபரி நேரமோ கொள்ளையாய்க் கிடந்தது.
"பாண்டிச்சேரில எந்தெந்த இடம்லாம் பாக்கலாம்டா?" என்கிறான் ரமேஷ்.
பாண்டிச்சேரியின் அழகுமிகு கடற்கரை. அதன் பாறைகளில் அமர்ந்து முரட்டு அலைத் தழுவலை ரசிக்கலாம் என்பது பெருவாரியான நண்பர்களின் தேர்வாகிறது.
"அடேய்! அரவிந்தன்னு பேர் வெச்சிக்கிட்டு, அரவிந்தர் ஆசிரமம் தெரியாம இருக்கியே?" என்கிறான் கணபதி.
நான் மெல்லத் தனிவழி பிரிந்து ஆசிரமம் செல்கிறேன். நண்பர்கள் என்னைத் தாண்டிக் கொண்டு கடற்கரை நோக்கிச் செல்கிறார்கள். ஓர் அலையைப்போல அவர்களது உற்சாகக் கும்மாளம்… என வேடிக்கையாய்க் குறித்துக் கொள்கிறது மனம்.
வளாக எல்லையை நெருங்கும்போதே எனக்கு அது ஒரு பரிச்சயப்பட்ட காற்றாக இருக்கிறது. முற்றிலும் விநோதமான ஓர் உணர்வு அது. சட்டென்று ஓர் அமைதியும் குளுமையும் உள்ளே அமர்கிறது. வாசலில் வியாபாரிகள்முன் குவிந்து கிடக்கிற பூக்குவியலின் உள்ளே புகுந்து புறப்பட்ட காற்றின் குளுமை ஆளைத் தழுவிக் குளிப்பாட்டுகிறது. இத்தனை தாமரை மொட்டுக்கள் கொட்டிக் குவித்து, புதுப் புது மலர்கள் நிறைந்த அந்தக் கூட்டு வாசனையே, காட்சியே எனக்குப் புதிதல்லவா?
மலர்களை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறேன். அடாடா, எப்பேர்ப்பட்ட உலகம் அது! வெளியே சிறு உலகமாகவும், உள்ளே பேருலகமாகவும் ஒரு வேடிக்கையான உணர்வு என்னுள். என்ன அபத்தம், என அதை ஒதுக்க முடியாத அளவு, ஒரு கவிதைத் திகட்டல். மனக் கிளர்ச்சி.
உள்ளே அரவிந்தரின், அன்னையின் சந்நிதி வளாகம். மிகப் பெரும் அமைதி சூழ்ந்த – அசிரத்தையாய் நுழைகிறவர்களை எச்சரிக்க சேவகர்கள் இருக்கிறார்கள். அத்தனைபேர் இருந்தாலும் அந்த ஸ்தாபிக்கப்பட்ட அமைதி, ஆசிர்வதிக்கப்பட்ட அமைதி எல்லாரையும் நிறைவித்துத் தளும்புகிறது. நரம்புகள் அந்த சூளுரையைப் பந்தல்கால்கள்போல ஏந்திக் கொள்கின்றன. வான வளாகம் ஓர் ஆலமரம்… அதன் வேர்களே என் நரம்பு மண்டலம்!
உள்ளே ஈரம் சுரந்த கணங்கள் அவை. அதை விவரிக்கத் தெரியவில்லை. எனக்குள் ஏதோ நிகழ்கிறது. ஆ, நிகழப் போகிறது… மனம் அதைக் குறித்துக் கொள்ளத் தயாராகிறது. நான் ஓர் எழுத்தாளன். உள்ளுணர்வும் சூட்சுமமும் மிக்கவன். மனம் தன்னியல்பாய் ஒரு ‘பெற்றுக்கொள்ளும் நிலை’க்குத் தயாராகிறது.
ஆ, நான் கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவன். பரவச உணர்வுகளைப் புறக்கணித்தவன். நடக்கும் அனுபவங்கள் எனக்குப் புதியவை. இந்தக் காற்றும் இந்த அமைதியுமே எனக்குப் புதியவைதாம். அந்தப் பிரார்த்தனை பூமியில் மனித மனங்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அது தெரிகிறது. வெறும் துன்ப அலைகளில் தவித்தவர்களுக்கு, கரையொதுக்கும், தலை துவட்டும் சந்நிதி மாத்திரம் அல்ல அது. அறிவுத்தினவு வாய்த்தவருக்கு அதற்கும் அப்பால் என்னென்னவோ பரிமாறப்படக் காத்திருக்கின்றன.
நான் இதுவரை அங்கே வந்ததில்லை. எட்டிக்கூடப் பார்த்ததில்லை. என்றாலும், எவ்வாறோ என்னுள் எப்படி இப்படியோர் நெருக்க உணர்வினை, மதிப்பீடுகளை அதையிட்டு என்னால் முன்வைக்க முடிகிறது? ஆச்சரியம்தான்!
எல்லோரையும் பார்த்துவிட்டு நானும் மலர்களை அந்த சந்நிதியில் சமர்ப்பிக்கிறேன். அநேகர் என்னுடன் அந்த சந்நிதியை வளைய வருகிறார்கள். கூப்பிய கரங்களுக்குள் அவர்கள் அன்னையை, பகவான் அரவிந்தரை ஏந்திக் கொண்டு உற்சவம் வருகிறாப் போல ஒரு சிந்தனைத் தித்திப்பு என்னுள்!
அது மனித சராசரி வளாகம் அல்ல. அதி உன்னதங்களின் உச்ச நிலை அது. மனிதனைத் தூக்கி உயர்த்திப் பிடித்த ஸ்தலம். மனம் சுத்திகரிக்கப்பட்ட பூமி. மனிதன் தன் உட்கிடக்கையை அறியக் கிடைத்த சூழல் அது… நான் என்ன, கல்யாணத்துக்கு வந்தவன் இப்படி இங்கே வந்து, இதையெல்லாம் என் மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்?
இந்த உணர்வுகளையெல்லாம் சரியாக நான் அவதானிக்கிறேனா என்பதே தெரியவில்லை… என்றாலும் மனம் மெல்ல நீரூறி நிரம்பி வழிகிறாப் போல முழுக் கவனத்தையும் ஆக்கிரமித்துக் கவிகிறது.
சந்நிதியில் வணக்கம் செலுத்திவிட்டு எல்லாரும் ஒரு மோன நிலையில் ஆளுக்கோர் இடத்தில் அமர்கிறார்கள். நான் அவர்களைப் பார்க்கிறேன். சுற்றி என் கண் விரியப் பார்க்கிறேன்.
சுற்றிலும் பக்தர்கள், அன்னையின் விதவித வண்ணப் பூக்கள் போல, பிரசாத மலர்கள்…
என் நண்பர்களோ ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளில் கால் நனைக்கப் போயிருக்கிறார்கள். நான் அமைதியில் திளைப்பதே ஒரு விநோதமான முரண் அல்லவா, என நினைக்க ஒரு புன்னகை வருகிறது. ஒரு பக்கம் கடல்வெளி அருகே, மிக அருகே ஒரு மௌனத்தடாகம்!…
அப்போதுதான் அவளைப் பார்த்தேன். சற்று முன் வரிசையில் பத்தாவது பதினொன்றாவது நபராக அவள். பார்த்த கணம் மனசெங்கும் ஒரு சிலிர்ப்பு ஊடுருவுகிறது. எனக்கு அவளைத் தெரியும் என்கிறாப்போல ஒரு கவனம் மயில் சிறகாய் என்னை வருடுகிறது. அந்த உணர்வுதான் எத்தனை இதமாய் இருக்கிறது!…
அட, என்ன இது? எனக்கு என்ன நிகழ்கிறது? நான் இங்கே இப்படியெல்லாம் நினைக்கலாமா?… என்னுள் சிறு வெட்கம் மனசு தன் மொட்டைத் திறந்து மடல் விரித்த நிலை அது. அருகே முக ஜாடையில் அவளது தந்தையை எனக்குத் தெரிகிறது.
மெல்ல அவர்களைப் பின்பற்றி நான் நடப்பதை அவர் உட்குறிப்பால் அவதானித்து, என்னை நோக்கித் திரும்பிப் பார்க்கிறார், புன்னகைக்கிறார் நட்புடன்.
"ஐயா! வணக்கம். நான் அரவிந்தன்."
‘ஆகா’ என்று அந்தப் பெண் திரும்பிப் பார்த்தாள்.
"நான் குமரேசன். இது என் பெண் சைதன்யா…"
சைதன்யா, சைதன்யா. சைதன்யா, சைதன்யா… என என்னுள் ஓர் ஒலியலை.
"நான் ஒரு மத்திய அரசு ஊழியன். அதிகாரி நிலையில் சென்னையில் வேலை பார்க்கிறேன். சென்னைவாசி. தவிர முக்கியமாய் நான் ஓர் எழுத்தாளன். எழுத்து என் பொழுதுபோக்கு."
மிக இயல்பாகவும் எளிமையாகவும் வாய்த்தது அந்த நட்பு. அவளருகே எனக்கு நடக்க வாய்த்தபோது குளுமையான நிழலடியில் போல அமைந்திருந்தது. யார் இந்தப் பெண்? எத்தனை சுலபமாகவும், கீற்றானதொரு புன்னகைப் பரிமாறலுடனும் இவள் என்னிடம் பன்னெடுங்காலப் பழக்கம் போல நெருக்கத்தை உருவாக்கி விட்டாள்! வாழ்வின் சில விநோதங்களுக்கு விளக்கமே இல்லை.
நான் மதுரைக்காரன். அவள் திருச்சி. பள்ளி ஆசிரியை. சைதன்யா என்ற பெயரே அற்புதமாய் இருந்தது. நண்பர்கள் கேள்விப்பட்டால் கிண்டலடிப்பார்கள். "உங்களுக்குக் கல்யாணச் சாப்பாடு வேணுமா, வேணாமா?" என்றால் வாயை மூடிக் கொள்வார்களாய் இருக்கும்… என நினைத்து என்னையே ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொள்கிறேன்… அதற்குள் மனம் என்னென்னவோ கணக்குகள் போட்டு விட்டதே!
அவை கணக்குகள் அல்ல. விடைகள்… கணக்குகள் முன்பே என்னிடம் இருந்திருக்கின்றன.
சற்று மௌனமாக நான் நடந்து வந்தாலும் என் மனசினைப் படிக்க முடியாதவர்கள் அல்ல அவர்கள். என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சுருக்கிலும், நான் தொடர்ந்து அவர்களோடு உரையாட விரும்புகிற தன்மையிலும் அவர்களும் தம் குடும்பம் பற்றிய விவரக் குறிப்புகளை அறியத் தந்தது… எல்லாமே வெகு இயல்பு.
சற்று பின் தங்கி நான் நடைபோட்டாலும் அவளது முதுகுப்பக்கம் என் பார்வையால் அவளைக் குறுகுறுக்க வைத்திருக்கிறேன்.
நீளக்கை ரவிக்கை. முன்மயிர்க் கற்றையில் ஒன்று ரிப்பனுக்குக் கட்டுப்படாமல் தொங்கும் அழகு. திரும்பி என்னைத் தற்செயலாகப் பார்ப்பதுபோல் புன்னகைக் கிரணத்தை வீசினாள்.
"ஐயா! நான் உங்கள் பெண்ணை மணந்துகொள்ள விரும்புகிறேன்."
அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். ஓரளவு அதை அவர் எதிர்பார்த்திருக்கவும் கூடும். இதற்கு பதில் சொல்வது தன் வேலையல்ல, என்கிறாப்போல சைதன்யாவைப் பார்த்தார்.
அந்த முகத்தில் தாமரையின் செம்மை பூசியது அதிகாலை வெயிலில் பார்க்க சுகமாய் இருந்தது. "அது அன்னையின் சித்தமானால் நான் கட்டுப்பட்டுதானே ஆக வேண்டும்?" என்று மெல்ல நகைக்கிறாள் அவள்.
"பிரார்த்தனை – கூட்டுப் பிரார்த்தனை… இவற்றில் நம்பிக்கை கொண்டவரா நீங்கள்?"
"ஏன்?" என்கிறேன் ஆச்சரியமாய்.
"பதில் சொல்ல விரும்பவில்லை என்றால் சரி" என்றாள் அவள் முக வாட்டத்துடன்.
எனக்குப் பதறிப்போனது. அவள் முகவாடலே என்னை இத்தனை காயப்படுத்துகிறதே…
"அப்படியல்ல நாங்கள் எழுத்தாளர்கள். பிரார்த்தனை, தியானம் என்கிற மனப் பயிற்சிகள் இயல்பாகவே எங்களுக்கு உண்டு. மன அமைதி கிடைத்தேதான் நான் எழுதப் புக முடியும்."
"நான் உங்களுடன் சேர்ந்தமர்ந்து பிரார்த்தனை செய்ய விரும்புகிறேன்."
அவளை வியப்புடன் பார்த்தார் குமரேசன். அவர் எதிர்பாராதது இது. பெண் பார்க்கும் படலத்தில், இது புதிதாய் இருந்தது அவருக்கு. எனக்கும்தான்…
"சரி" என நான் ஒத்துக் கொண்டேன். "நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?"
"இதோ பக்கத்தில்தான். வாருங்களேன்!" என்றார் குமரேசன்.
கூட்டுப் பிரார்த்தனை என்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் கருத்துக்கள் இருந்தன. யாரிடமாவது நான் கட்டாயம் அது பற்றிக் கேட்டுக்கொள்ள விரும்பினேன்.
பொதுவாக, இதுபோன்ற ஆன்மிக வளாகங்களில் கூடுகிறவர்கள், வெவ்வேறு தளங்களில் இருந்து, அதற்கான முன் தயாரிப்புடன் வருகிறார்கள். தவிரவும் பொருளாதார வசதியும், ஆரோக்கியமும், ஆ… குறிப்பாக கலவிரீதியான உடல் சிறு தேவைகளின் மேம்பட்டவர்கள்…
அதாவது, இவர்கள் வாழ்க்கை பொதுவாக சிறு ஓய்வினை, தம்மைத் தாமே சீர்திருத்திக் கொள்ளும் பொறுமையினை முன்னேயே வழங்கி விடுகிறது…
"ஆனால் இவர்களால், உதாரணமாக ஒரு போக்குவரத்து நிறுத்தத்தில், பச்சை காணும் வரை பொறுமை காக்க முடியவில்லை அல்லவா?" என நகைக்கிறாள் அவள்.
"மனிதன் யாரிடமாவது கட்டுப்பட விரும்புகிறான். நிழல்பட விரும்புதல்… அது மானுட இயல்பு. அன்னையால் அது முடிகிறது. அன்னையின் சேவகர்கள் அதை முன்னிறுத்தி பக்கத்து வீட்டாருடன், சுற்றுப்புற வளாகத்திலும் புன்னகைப் பரிமாறலுடன், நல்லன பேசி… சூழலில் அன்னையின் மணத்தைப் பரப்ப வல்லவர்கள்…"
"அது சரிதான். பொதுச் சிந்தனை என்கிறதோர் அம்சம் காரல் மார்க்சிடம் ஒருவிதமாய் ஒளிப்பட்டது போலவே அன்னையிடம் வேறுவிதமாய் உள்வாங்கப்படுகிறது!"
ஆகா! சமதையான சில உயரங்களை அன்னை எனக்கு எட்டத் தருவாள் போலிருக்கிறதே!…
"அதுதான் முக்கியம். அன்னை எந்தத் தனி மதத்தையும் வலியுறுத்தித் தத்துவங்கள் புனையவில்லை. உண்மையில் அவளது அணுகுமுறை எளியது. கைக்கொள்ளக் கூடியது"… சைதன்யா இத்தனை இயல்பாய்ப் பேசுவது எனக்குப் பிடித்திருந்தது.
தியானம் என்ற முறையில் யாருடனும் அருகமர்ந்து கண்மூடி நான் மனத்தை ஒடுக்கப் பயிற்சி கொண்டதேயில்லை. இதோ இந்தப் புதுப்பெண் தவிர, வேறு யார் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தாலும், நான் ஒருவேளை மறுத்திருப்பேன்.
நாங்கள் எழுத்தாளர்கள். மனம் ஒன்றில் குவிதல் எழுத முக்கியமான அம்சங்களில் ஒன்றுதானே? இதில் தியானம் எனத் தனியே என்ன? எழுத்தே தியானம்தானே?… என்றது மனது. ஆயினும் நான் அவளுக்குக் கட்டுப்பட்டேன். வேடிக்கை! அங்குசம் அவள். நான் யானை… அல்ல, நான் வாரணம்; அவள் பிடி (பெண் யானை). கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும்!
பெண் பார்க்கும் படலம், என இது ஒரு புது அனுபவம் அல்லவா? மௌனத்தை எடைபோட்டு, வாழ்வின் துணைதேடல்… ஆயினும் எத்தனை முக்கியமானது இது. மனம் இணக்கம் காணாத ஆத்மாவின் அருகில் மனம் தியானப்படக் கட்டுப்படுமா?
தியானம் மூச்சைச் சீராக்குகிறது. மனதை இளக வைக்கிறது. காய்ந்த பூமியை ஈரப்படுத்திப் பண்படுத்துவது போல… பிரச்சினைகள் சார்ந்த உள் கலவரங்களை, உள் கொதிப்புகளை அடக்குகிறது. விடைகள் பற்றிய சிந்தனையைத் தெளிவான கதிர்வீச்சுடன் அணுக அப்போது வாய்க்கிறது.
என் மனம் என்னென்னவோ உள் வட்டம் அடிக்கிறது.
இருப்பினும் ஸ்தாபிக்கப்பட்ட நல்லமைதி அது. அருகே அவள் அமர்ந்திருக்கிற குளுமை என்னுள் இதமாய்ப் பரவுவதை உணர முடிகிறது. எத்தனை புத்திசாலி இவள்! வாழ்க்கையை எத்தனை எளிமையாய்க் கொண்டாடுகிறாள்!…
எளிமை. சிக்கலற்ற தன்மை. வாழ்க்கையில் அது அத்தனை லேசில் வாய்த்து விடுமா என்ன? எவ்வளவு நேரம் அந்த மௌனத்தின் சிந்தனாலயத்தில் நாங்கள் கட்டுப்பட்டிருந்தோம், தெரியவில்லை. கண்விழித்துப் பார்த்தபோது அவளது புன்னகைத்த முகம் பெரும் ஆதுரத்துடன் என்னைப் பார்த்தது…
மனைவி என்பவள் தாயா? சிநேகிதியா? காதலியா? குருவா?
யாதுமாகி நிற்கிறாள் அவள்.