இந்தக் கட்டுரையைப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன் நீங்கள் உணர வேண்டிய சில நிஜங்கள் – அமெரிக்காவில் அமர்ந்து கொண்டு இதை நான் எழுதி, லண்டனில் இருக்கும் நிலாச்சாரலின் தலைமையகத்திற்கு இதை அனுப்புகிறேன். அங்கிருந்து இது எப்படியோ நீங்கள் இருக்குமிடம் தேடி உங்கள் வீட்டை வந்தடைகிறது. என்னைப் போன்ற எத்தனையோ நபர்கள் எங்கிருந்தெல்லாமோ தங்கள் படைப்புகளை அனுப்புகிறார்கள். இருந்தும் உங்களால் வீட்டில் அமர்ந்தவாறு இவற்றைப் படிக்க முடிகின்றது. அசத்தலான தொலைத் தொடர்பு வளர்ச்சிக்கு இதை விட ஒரு சான்று அவசியமா?
கடந்த இரண்டு வாரங்களாக என் கணினிக்கு சற்றே காய்ச்சல் – பொட்டலம் கட்டி தயாரித்தோரிடம் அனுப்பி வைத்து விட்டேன். இருந்தும் என்னால் இணையதளம் மூலமாக நிலாச்சாரலைத் தொடர்பு கொள்ள முடிந்தது. உபயம் – சில மாதங்களுக்கு முன் “ஆப்பிள்” அறிமுகப்படுத்திய புது ஐ-ஃபோன்! இதில் செய்யமுடியாது என்றொன்று உண்டோ!! அப்பப்பா!!
ஒருவர் மற்றவரை தொடர்பு கொள்வது சுலபமாகிவிட்டது மட்டுமல்ல, ஒரு விஷயத்தை உலக மக்களிடம் பரப்புதலும் எளிதாகிவிட்டது! ஃபோன் மூலம் எல்லாமே சாதித்து விடுகிற காலம் இது. ஆனால், இந்த நிலையை அடைவதற்கு மனிதனுக்கு கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.
ஆயிரத்து நானூறுகளில் குடென்பர்க் என்பவர் அச்சிடும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அந்நாட்கள் வரை மக்கள் தொடர்பு என்றொன்று கிடையாது. (ராஜா காலங்களில், தெருத்தெருவாக ஒருவர் வந்து சொல்ல வேண்டிய செய்தியை கூவி விட்டுப் போவார்!) புத்தகங்கள் பிறந்தது அப்பொழுதுதான்! பின்னர் பத்திரிகைகள் வந்தன.
இரண்டாவது முன்னேற்றம் வந்தது நூறு வருடங்களுக்கு முன்தான். ஒலிப்பதிவும் ஒளிப்பதிவும் சாத்தியமானது.
மூன்றாவதாக, ஆயிரத்து தொள்ளாயிரத்து பத்தில், சினிமா எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் பத்து வருடங்கள் கழித்து, நான்காம் முன்னேற்றமாக வானொலி வந்தது.
ஐம்பதுகளில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தினார்கள். சில வருடங்களுக்கு முன்தான் ஆறாவதாக இணையம் வந்தது. சீக்கிரம் கைத்தொலைபேசியையும் கண்டுபிடித்தார்கள். இன்னும் சில மாதங்களில், கைத்தொலைபேசிகளை நாம் உபயோகிக்க ஆரம்பித்து பத்து வருடங்கள் ஆகிவிடும்.
சரி, அலைபேசியை மற்ற கருவிகளுடன் ஒப்புவித்துப் பார்க்கலாம். உலகில் கிட்டத்தட்ட 1,50,00,00,000 தொலைக்காட்சி கருவிகள், 90,00,00,000 கணினிகள் இருக்கின்றனவாம். 1,30,00,00,000 இணையதள உபயோகிப்பாளர்கள் உள்ளனராம். சரி, எத்தனை பேரிடம் அலைபேசி உண்டு? கிட்டத்தட்ட 3,30,00,00,000 (ITU கணக்கெடுப்பு). அதிலும், “எஸ்.எம்.எஸ்” அனுப்புவர்களின் கணக்கெடுப்பு தலையைச் சுற்ற வைக்கிறது.
எத்தனையோ வருடங்களாக இருக்கும் மற்ற கருவிகளை இந்த அலைபேசி எப்படி அவ்வளவு சுலபமாக வென்றுவிட்டது? மற்ற ஆறு கருவிகளில் இல்லாத சில குணங்கள் தெளிவாக இதில் உள்ளன!!
கைத்தொலைப்பேசி என்பது ஒருவருக்கு மட்டுமே சொந்தமான ஒரு பொருள். வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சிதான் இருக்கும், ஓரிரண்டு கணினிகள்தான் இருக்கும். ஆனால், வீட்டின் ஒவ்வொருவரிடமும் ஒரு அலைபேசி இக்காலத்தில் உண்டு. (ஏன், சில சமயங்களில் இரண்டு கூட உண்டு.)
நம்மில் எத்தனை பேர் இருபத்தி நாலு மணி நேரமும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? எத்தனை பேர் முப்பொழுதும் பத்திரிகை படித்த வண்ணமாய் இருக்கிறோம் (“எதிர் நீச்சல்” வி.எஸ்.ராகவன் தவிர்த்து)? பதிலை விரல் விட்டு எண்ணிவிடலாம். எத்தனை பேர் எப்பொழுதும் அலைபேசியைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறோம்? அனைவரும்தானே? எத்தனையோ பேர் தூங்கும் பொழுதும் அதைக் கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அனைவரும் அவரவர் அலைபேசிகளை எப்பொழுதும் இயக்கத்திலேயே வைத்திருக்கிறார்கள். இதனால் எவரையும் நினைத்த பொழுதில் தொடர்பு கொள்வது சுலபமாகிறது. தூக்கத்தை சிலர் கெடுக்கிறார்கள் என்பது வேறு!
நாம் உபயோகிக்கும் கருவிகளுக்கு கட்டணம் கட்டுவதற்கு எங்காவது செல்லவேண்டும்? இணையம் என்றால், ஐ.எஸ்.பியிடம் (Internet Service Provider) தொடர்பு கொள்ளல் அவசியம். அலைபேசியென்றால், அதன் மூலமாகவே கட்டணத்தைச் செலுத்திவிடலாம்.
ஃபோன் மூலம், நாமும் நம் எண்ணங்களை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு, இந்த முழு கட்டுரையை என்னால் என் ஃபோன் மூலமே தட்டச்சு செய்து, ஃபோன் மூலமாகவே நிலாச்சாரலுக்கு அனுப்ப முடியும். நீங்களும் உங்கள் தொலைபேசி மூலமாகவே இதைப் படிக்கலாம் என்று ஏற்கனவே சொல்லியாகிவிட்டது.
இவ்வளவு நற்குணங்களைக் கொண்ட இந்தக் கைத்தொலைபேசி அல்லது அலைபேசி வென்றதில் ஆச்சரியம் என்ன!! இந்தத் தொலைபேசிகளால் பாதகங்கள் ஏதும் இல்லை என்று சொல்வதற்கில்லை. சொல்லப்போனால், அவை ஏராளம். இருந்தும், பயன்படுத்த வேண்டிய முறையில் பயன்படுத்தினால், அது மனிதத்தின் வளர்ச்சியையே காட்டும், கூட்டும்!
எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல, மனதில் நினைக்கும் வரிகளை தானாகவே தட்டச்சு செய்யும் இயந்திரம் தொலைவில் இல்லை!! அதுதான் எட்டாவதோ?