(நன்றி : ஆதிபிரான்)
காந்திஜி தனது பிரார்த்தனைக் கூட்டங்களில் அனைவரும் ராம்தூன் பாட வேண்டும் என்று விரும்பினார். ஹிந்துக்கள் அல்லாதோர் எப்படி ராம வழிபாட்டில் ஈடுபட முடியும் என்ற கேள்விக்கு அவர் விரிவாக இப்படி பதில் எழுதினார்:-
"ராமர் அல்லது ராம நாமம் இசைப்பது ஹிந்துக்களுக்கு மட்டுமே உரியது; ஆகவே எப்படி முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் அதில் சேர முடியும் என்று யாரேனும் ஆட்சேபணை தெரிவிக்கும்போது எனக்கு நானே சிரிக்கிறேன். முஸ்லீம்களுக்கு ஒரு கடவுளும், இன்னொரு கடவுள் ஹிந்துக்கள், பார்ஸிக்கள் அல்லது கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிறாரா, என்ன? இல்லை! ஒரே ஒரு நிறை சக்தி, எங்கும் பரவி இருக்கின்ற கடவுள்தான் இருக்கிறார்!! அவரைப் பல்வேறு பெயரிட்டு அழைக்கிறோம். நமக்கு மிகவும் பரிச்சயமான பெயரால் அவரை நினைவில் இருத்துகிறோம்.
எனது ராமர், பிரார்த்தனையில் இடம் பெறும் ராமர், சரித்திர நாயகனான அயோத்தி மன்னன் தசரதனின் புத்திரனான ராமர் இல்லை. அவன் எப்போதும் இருப்பவன். பிறக்காதவன். இரண்டாவது இல்லாத ஒரே ஒரு கடவுள் அவனே. அவனையே நான் வழிபடுகிறேன். அவனிடமே நான் உதவி கேட்கிறேன். அப்படியேதான் நீங்களும் கேட்க வேண்டும். நம் அனைவருக்கும் சமமாக உரியவன் அவன். ஆகவே ஏன் முஸ்லீம்களோ அல்லது வேறு யாருமோ அவன் பெயரை உச்சரிக்க ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும் என்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை. அவன் ராமநாமத்தால் உணர மட்டும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனை அல்லா, குதா என்று ஒலியின் லயத்தை சேதப்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்."
காந்திஜியின் இந்த பதிலைக் கேட்ட ஒருவர் நீங்கள் ராமரைப் பற்றிக் கேட்கும் போது பிரபஞ்சத்தின் நாயகன் அவன் என்றும், தசரதனின் புத்திரன் இல்லை என்றும் கூறுகிறீர்கள். ஆனால் ராம் தூனில் நீங்கள் சீதாராமன் என்றும் ராஜாராமன் என்றும் பாடுகிறீர்கள். சீதையின் நாயகனான ராமனுக்கு ஜெயம் என்றும் கடைசியில் கூறி முடிக்கிறீர்கள்! நீங்கள் குறிப்பிடும் அந்த ராமர் தசரதனின் புத்திரன் இல்லையென்றால் அவர் யார்?" என்று கேட்டார்.
இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக காந்திஜி கூறி தனது பதிலை ஆரம்பித்தார்.-
"எனது ராம்தூனில் ராஜாராமன், சீதாராமன் ஆகியவை சந்தேகம் இல்லாமல் வருகின்றன. இந்த ராமன் தசரத புத்திரன் இல்லையா? துளஸிதாஸர் இதற்கு பதிலை அளித்துள்ளார்! ஆனால் எனது கருத்தை இங்கே தருகிறேன்.
ராமரை விட அதிகம் சக்தி வாய்ந்தது அவன் நாமம். ஹிந்து தர்மம் விலை மதிக்க முடியாத ரத்தினங்கள் அடங்கிய கரை காண முடியாத மாபெரும் கடல். அதிகமதிகம் நீங்கள் அதில் முழுக முழுக, மிக அதிகமான பொக்கிஷங்களை நீங்கள் பெற முடியும். ஹிந்து மதத்தில் கடவுள் அநேக பெயர்களால் உணரப்படுகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் ராமரையும், கிருஷ்ணரையும் சரித்திர நாயகர்களாகவே சந்தேகமில்லாமல் பார்க்கிறார்கள். நிச்சயமாகவே, தசரத புத்திரனாக ராமன் என்ற வடிவில் கடவுள் பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறார் என்று நம்புகிறார்கள். அவரை வழிபடுவதன் மூலம் முக்தியை அடைய முடியும் என்றும் அவர்கள் நிச்சயமாக நம்புகிறார்கள். இதே போலத்தான் கிருஷ்ணரும் கூட!
வரலாறு, கற்பனை, உண்மை இவை அனைத்தும் பிரிக்கமுடியாதபடி பிணைந்துள்ளன. அவற்றைத் தனித்தனியே பிரிப்பதென்பது முடியவே முடியாத விஷயம்! நான் கடவுளைக் குறிக்கும் எல்லா உருவங்களையும் வடிவங்களையும் ஒரே வடிவமில்லாத எங்கும் நிறை ராமனாக ஒப்புக் கொண்டிருக்கிறேன்.
ஆகவே, எனக்கு, சக்தி வாய்ந்த இதயத்தில் எழுதப்பட்டுள்ள எந்தச் சாறு மனோரீதியாக, நீதி போதனை ரீதியாக, உடல் ரீதியாக ஏற்படும் துன்பங்களைப் போக்க வல்லதோ அதுவே சீதாராமன் என்றும் தசரத ராமன் என்றும் அழைக்கப்படும் ஒன்றாகும்."
அகண்டகாரமான அனாதியான எங்கும் நிறை சக்தியே ராமன்; ராம நாமம்!