(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுடன் ‘வெற்றிப் படிகள்’ நூலிலிருந்து)
தோல்வியைத் தோண்டாதே! திசை திரும்பு
அமெரிக்காவில் நாங்கள் இருந்த ஊருக்கு அருகில் – பதினைந்து மைலில் – ஒரு கிராமம் இருந்தது. அங்கே வயல் முழுவதும் எண்ணெய் கிணறுகள். அதிலிருந்து எண்ணெய் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதன் சொந்தக்காரனை நான் சந்தித்து "எப்படி இவ்வளவு பெரிய பணக்காரன் ஆனாய்? இவ்வளவு பெரிய எண்ணெய் வயலை உண்டு பண்ணினாய்?" என்று கேட்டேன்.
வால்டர் சொன்னார் – "ஐயா! நீங்கள் இருக்கும் ஊரில்தான் நானும் குடி இருந்தேன். எண்ணெய் கிணறு தோண்டுவதுதான் என் தொழில். ஓரிடத்தில் நிபுணர்கள் எண்ணெய் கிடைக்கும் என்றார்கள். நிலத்தை வாங்கினேன். தோண்டினேன். இரண்டாயிரம் அடியில் எண்ணெய் கிடைக்கவில்லை. ‘எண்ணெய் கொஞ்சம் ஆழத்தில் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தோண்டுங்கள்’ என்றார், நிபுணர். இரண்டாயிரம், மூவாயிரம் என்று பத்தாயிரம் அடிவரை போனோம். எண்ணெய் ஏதும் கிடைக்கவில்லை; காசுதான் போயிற்று.
யோசனை செய்தேன். "இங்கில்லாவிட்டால் சரி விடு. வேறிடத்தில் தோண்டு என்று. தோண்டியிருந்தேனானால், ஐந்து புதிய இடங்களில் தோண்டி இருப்பேன். ஏதாவது ஓரிடத்தில் எண்ணெய் கிடைத்திருக்கும். இருப்பதையே வைத்துக்கொண்டு அதிலேயே ஈடுபட்டு தோல்வியை மேலும் மேலும் சரிப்படுத்த முயல்வது முட்டாள்தனம் என்று கண்டுகொண்டேண். இந்த ஊருக்கு வந்து, புதிய இடத்தில் தோண்டினேன்; எண்ணெய் கிடைத்தது!" என்றார்.
தோல்வியை சரிப்படுத்த முயல்வதைவிட வேறு திசையில் அணுகுவது நல்லது.
"வெற்றி என்பது எப்போது நிலையாக இருக்கும்?" என்று கேட்டுவிட்டு தத்துவஞானி ஜேம்ஸ் ஆலன் பதில் கூறுகிறார்.
“வெற்றியடைந்ததும், வெற்றி பெற்றுவிட்டோம்.. இனி கவலைப்பட வேண்டியதில்லை. எல்லாம் தானே ஓடும்! என்ற இறுமாப்பு வராமல் சதாசர்வ நேரமும் ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று கவனமுடன் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். இல்லாவிடில் வீழ்ச்சியின் வித்து அங்கே முளைவிடுகிறது" என்கிறார்.
வெற்றி என்பது ஒரு மன நிலை. முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மனநிலை. கர்வமும், தற்பெருமையும் கொண்டவர்கள் பொது வாழ்வில் எப்படி மக்கள் அபிமானத்தை இழக்கிறார்கள் என்பதை நாம் திரும்பத் திரும்பப் பார்க்கிறோம்.
சார்ந்து நிற்காதீர்கள் – வயோதிகம் தோல்வியல்ல
நமக்கு இரண்டு கால்கள் இருக்கின்றன. நாம் நேரே நிற்கலாம். ஏன் சுவர் மீது தேவை இல்லாமல் சார்ந்து நிற்க வேண்டும்? சாய்ந்து நிற்கும்போது நமக்கு என்ன நேரிடுகிறது? நமது நேரான கம்பீரமான தோற்றம் பாழ்பட்டு விடுகிறது. குழந்தை அம்மாவைத் தான் சார்ந்து நிற்கிறது. வளரும் வரை. ஆனால் நாம் வளர்ந்தவர்கள். இனியும் குழந்தை அல்ல.
திருமண வீட்டிற்கு வாழ்த்துக் கூற மூத்த நண்பர் ஒருவர் வந்திருந்தார். வயது 78. எனவே மேடை மீது அழைத்துச் செல்ல நான் அவர் கையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு நடந்தேன். அவர் என் கையை உதறி தள்ளினார். "என்னால் தனியே நடக்க முடியும்!" என்றார். அவரது சார்ந்து நிற்க விரும்பாத குணத்திற்கு தலை வணங்கினேன். வயோதிக காலத்திலும் உதவியை நாட விரும்பாத உள்ளம்! எப்பேர்ப்பட்ட உள்ளம்!
ஊனம் தோல்வியல்ல!
சமீபத்தில் பார்வையிழந்த ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியைப் படித்தேன். அந்தப் பெண் தனக்குப் பார்வை இல்லை என்பதை ஒரு குறையாகவே கருதவில்லை. இயல்பாக எல்லோரையும் போல் நடந்து கொள்கிறாள். பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் அவருக்காக பரிதாபப்பட்டு அவரது ஊனத்தை அவருக்கு சதா நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்? சார்ந்து நிற்க அவர் விரும்பவில்லை. மன ஊனம் அவருக்கில்லை. எப்போதும் எதற்கும் நாம் பிறரை சார்ந்து நின்றோமானால் நாம் நம் தனித்தன்மையையும் கம்பீரத்தையும் இழந்துவிடுவோம்.
ஒரு துன்பம் வந்த நேரத்தில் யாராவது நண்பர்களிடம் சென்று மனச்சுமையை இறக்கி வைக்க முயன்றோமானால், அவர்கள் கேட்பதை எல்லாம் கேட்டுவிட்டு, பிறகு நம்மையே குற்றம் சாட்டுவார்கள். கேவலப்படுத்துவார்கள்.
நாம் அனுதாபத்திற்காக செல்கிறோம். கிடைப்பதோ கேவலம், இழிவு, குற்றச்சாட்டு, கண்டனம்.
இது ஏற்படக் காரணம் நமது சார்ந்து நிற்கிற குணத்தினால்தான். நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். உதவ முன் வருபவர்களது உதவியைப் பெற்றுக்கொள்வது வேறு; மாறாக அவர்களைச் சார்ந்து நிற்பது வேறு.
நாம் மிடுக்கான மனிதர்கள். அந்த மிடுக்குடன் வாழ்நாள் முழுக்க உலாவுவோமாக!
“