(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுடன் ‘வெற்றிப் படிகள்’ நூலிலிருந்து)
நடைமுறை உலகில், எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி சில நுணுக்கங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் தெரிந்து கொள்வது நல்லது.
தோல்வி என்பது ஒரு விஷயத்தை மீண்டும் பரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பு. எங்கோ தவறி இருக்கிறோம் என்பதைப் புலப்படுத்தும் நமக்குத் தெளிவுபடுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பல நேரம் நாம் செல்லும் திசையைத் திருப்புவதற்காக அத்தகைய தோல்விகள் ஏற்படுவதுண்டு.
தோல்வியின் நன்மை
ஒரு இளைஞர் இருந்தார். ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு அவளுடன் தான் பழகி வருவதாகவும் அந்தப் பெண்ணுக்கும் தன்னை பிடித்திருப்பதாகவும் சொன்னார். காதல் திருமணங்கள் நல்லவைதாம். திருமண வாழ்வு என்பது, ஒத்த உள்ளத்துடன், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருவர் மற்றவருக்காக வாழும் உயர் வாழ்வு; உயர் பண்பு; உயர் நட்பு.
அந்தப்பெண் வேறு மதம்; மாறுபட்ட பழக்க வழக்கங்கள் கொண்ட குடும்பம். இளைஞர் படித்தவர். எனவே, பெண்ணின் படிப்பைப் பற்றிக் கேட்டேன். "படிக்காத பெண்" என்றார். எவ்வளவு நாள் தெரியும் என்றேன். "மூன்று மாதமாக" என்றார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் நான் திருமணத்திற்கு வந்து வாழ்த்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
வேறு வேறு பழக்கங்களையும் பண்பாடுகளையும் கொண்ட மனிதர்கள் சேர்ந்து வாழ்வது என்றால், அதிக பொறுமையும், சகிப்புத் தன்மையும் வேண்டும். அத்துடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்களின் குணங்களைப் பற்றி இருவரும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
காதலின் உந்துதல் – உடலுறவின் வேகம் – அதிகமாயிருக்கும்போது மற்றவரது குணங்களைப் பற்றி கவனிக்க மாட்டோம். அது முடிந்து, அன்றாட வாழ்வு வாழும் போதுதான் மற்றவர்களது பழக்க வழக்கங்கள் பெரிய பிரச்சனையாகத் தலைதூக்கும்.
"இன்னும் கொஞ்சநாள் பழகுங்கள். ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்ளுங்கள். அதன்பின் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று நான் யோசனை சொன்னேன். ஆனால், சில வாரங்களில் அந்தப் பெண் அந்த இளைஞரை விட்டு விட்டுப் போய்விட்டாள்!
இளைஞருக்கு காதலில் தோல்வி! மனமுடைந்து போனார். அதையே எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்தார் சில வாரம். பிறகு அந்த உண்மையை ஏற்றுக் கொண்டார்.
வாழ்வில் நமக்கு வழி காட்டவே சோதனைகளும் தோல்விகளும் வருகின்றன. சரியான திசையில் செல்லாத போது அவை வழி காட்டுகின்றன. அப்போது அந்த நேரத்தில் நமக்கு அந்தத் தோல்வியின் உண்மை புரிவதில்லை. வருந்துகிறோம். கலங்குகிறோம்!
வேலை போயிற்று! நன்மைக்கு
என் நண்பர் பேராசிரியர் பரஞ்சோதி சொன்னார். "ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். உற்சாகமில்லாத வாழ்க்கை. ‘தெண்டமே’ என்று வேலைக்குப் போய் வருவேன். ஒரு நாள் என்னை வே¨லயிலிருந்து நீக்கினார்கள். எனக்கும் உள்ளூர இந்த வேலையிலிருந்த விடுபட வேண்டும் என்பதுதான் விருப்பம். எனினும் வேலை போய்விட்டதால் குடும்பம் நடத்துவது கஷ்டமாகிவிட்டது. கவலைப்பட்டேன். பயம் பிடித்துக் கொண்டது.
மூன்று மாதம் வேலையில்லாமல் அலைந்து ஏறி இறங்கிய பிறகு, ஒரு வேலை பாதி சம்பளத்தில் கிடைத்தது. இருந்தாலும் நல்ல வேலை. பிடித்த வேலை. ஏற்றுக்கொண்டேன். இது என் வாழ்க்கையிலே மிகப்பெரிய திருப்பம். பின்னால் நான் வாழ்க்கையில் முன்னேற வழி கோலியது. அவர்கள் வேலையை விட்டு என்னை வீட்டுக்கு அனுப்பியிராவிட்டால், நான் அதிலேயே உட்கார்ந்திருப்பேன். ‘இது நல்லதுக்குத்தான் ஏற்பட்டது’ என்பதைப் புரிந்து கொள்ளவே இரண்டு ஆண்டு ஆயிற்று."
வாழ்வில் ஏற்படும் தோல்விகள் நம்மை திசை திருப்புகின்றன. நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. தோல்விகளைப் புரிந்து கெள்ளும்போது – ஏற்றுக்கொண்டு செயல்படும் போது – ஒரு புதிய உலகம் நம்மை வரவேற்கிறது.
(மீதி அடுத்த இதழில்)
“
டாக்டர் உதயமூர்த்தியின் ஒரு புரட்சி இயக்கம் மக்கள் சக்தி இயக்கம்” என்ற பெயரில் 17, ஏ, தெற்கு அவின்யூ, திருவான்மியூர், சென்னை- 41 என்ற முகவரியை தலைமையிடமாகக் கொன்டு செயல்பட்டு வருகிறது. நீங்களும் அதில் இணைய தொடர்பு கொள்ளுங்கள் டபுள்யு டபுள்யு டபுள்யு டாட் மக்கள்சக்தி டாட் ஓ ஆர் ஜி அல்லது 044 24421810 அல்லது எம் எஸ் இ 1998 ஜி மெயில் டாட் காம் என்ற இ மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்”