டிசம்பர் 14, மாலை 6.00 மணி
திருவான்மியூரில் அமைந்திருக்கும் அபிஷேக் அடுக்கு மாடிக் கட்டிடத்தின் பத்தாவது தளத்தில் ஒரு பாசக் குடும்பத்தின் சந்திப்பு! அலை வீசுகின்ற கடலும், வண்ண விளக்குகளில் குளித்துக் கொண்டிருந்த கட்டிடங்களும் பின்னணியாக அமைய, சில்லென்ற காற்று மெல்ல வருட, நிலாக் குடும்பம் அங்கே கூடியிருந்தது. (அட! எனக்குக் கூட கவிதை வருகிறதே!)
நிலா எப்போது சென்னைக்கு வந்தாலும் நிலாக் குடும்பத்தை சந்திக்காமல் போவதில்லை. இந்த வருடமும் அப்படித்தான். ஆர்வத்தோடு கிட்டத்தட்ட 25 அங்கத்தினர்கள் நகரின் பல பாகங்களிலிருந்தும் கூடினர். குறுகிய காலத்தில் சந்திப்பு தேதி முடிவு செய்யப்பட்டதால், சென்றமுறை போலல்லாமல் இம்முறை உள்ளூர்வாசிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலாக் குடும்பம் ஒரு அதிசயமான குடும்பம். இதற்கு வயது வித்தியாசமோ, இன மத வேறுபாடுகளோ, தொழில் பாகுபாடுகளோ எதுவுமின்றி அன்பை, எதையும் எதிர்பார்க்காத அன்பையே அடித்தளமாகக் கொண்ட ஒரு இனிய குடும்பம். இதில் போட்டி, பொறாமை, மற்றவரை மனம் நோக நையாண்டி செய்தல் எதுவுமே கிடையாது! ஆனால் நகைச்சுவைக்குப் பஞ்சமே இராது.
நிலாவின் அம்மா மனம் நெகிழ்ந்து ஒரு அபரிமிதமான தாய்ப் பாசத்துடன், "எனக்குப் பின் என் மகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கவலை எனக்கு இப்போது இல்லை. நிலாக் குடும்பத்தினர் பார்த்துக் கொள்வார்கள்” என்று சொன்னார்கள் என்றால் நிலா குடும்பத்தைப் பற்றி வேறு என்ன விளக்கம் வேண்டும்? இந்தக் குடும்பத்தில் இணைவதற்கு மூன்று தகுதிகள்தான் வேண்டும் – அன்பு, நிறைய அன்பு, பிரம்மாண்டமான அன்பு!
சுமார் ஆறரை மணி அளவில் துவங்கிய இந்த குடும்பக் கூட்டத்தில் ஏழிலிருந்து எழுபதுவரை அனைத்து வயதினரும் வயது வித்தியாசம் இல்லாமல் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டு சுவையான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
65 நூல்களுக்கு மேல் எழுதியும் நிறைகுடமாக அடக்கத்துடன் அமர்ந்திருந்த திரு.ஷங்கரநாராயணன், காந்திஜியை ஆதரிசமாகக் கொண்ட சேவாலயாவில் தொண்டாற்றும் டி.எஸ்.வி, நல்ல நகைச்சுவைக்கு மறுபெயரான டி.எஸ்.பி, அவர் துணைவி, இவர்களின் சகோதரர் பாரத வங்கியின் ஓய்வு பெற்ற அலுவலர் வைத்யநாதன், ரெய்கியில் பயிற்சி பெற்ற அவர் துணைவி பத்மினி. இந்த சகோதரர்களின் மூத்தண்ணா ஜம்பு (அதுதான் அவருக்குத் தகுதி – ஆ! தன்னடக்கம்), அவருடய துணைவி (கணவனே கண் கண்ட தெய்வம்!), இலக்கியத்திலும் ஒரு ஆன்மீகத் தேடல் வேண்டுமென நம்புகிற நட்சத்ரன், சன் நியூஸ் நிருபர் சுகிதா, அவரது நண்பர் குமுதம் நிருபர் முருகேசன், சந்தியா பதிப்பகத்தின் சுவாமிநாதன், அனைவரிடமும் அன்புடன் ஒட்டிகொள்ளும் கலகல (லக லக லக இல்லை!) காயத்ரி, திரை மறைவிலிருந்தே பணிபுரியும் மங்கள ஜோதி, திங்கள் என்றால் நிலாச்சாரல் கிழமை என்கிற அளவிற்கு இதழைக் கொண்டுவருவதில் அலட்டலில்லாமல் நிலாவிற்கு உறுதுணையாக நிற்கும் கே.பி, அவரது சகோதரர் முத்துக்குமார் மற்றும் நண்பர் செந்தில்குமார், எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அந்த அன்னியோன்னியத்தில் மகிழும் கனிவு நிறைந்த நிலா – இப்படி பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்தவர்கள் கூடினால் கலகலப்பிற்கு ஏது பஞ்சம்?
குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து வந்திருந்த அன்பர் முருகேசன் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தியபோது, ஜம்பு அவர்கள், "நீங்கள் குமுதம் ரிப்போர்ட்டரா, ரிப்போர்ட்டர் ரிபோர்ட்டரா?" என வினவ, கூட்டத்தில் சிரிப்பலை.
சன் குழுமத்திலிருந்து வந்திருந்த சுகிதா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது "வேறு கேள்விகள் இருந்தால் கேளுங்கள்" என்றார் நிலா. "எங்களுக்கு சன் டி.வியில் ஒரு வாய்ப்பு வாங்கித் தருவீர்களா?" என எழுந்தது ஒரு கேள்வி.
"ரமணி அவர்கள் தனது எந்தப் படைப்பிலும் காந்தியைப் பற்றி எழுதாமல் இருக்க மாட்டார். நமீதாவைப் பற்றி எழுதினால் கூட அதில் காந்தியைக் குறிப்பிடுவார்" என்று நிலா அறிமுகப்படுத்த, பத்மநாபன் உடனே, "நமீதாவுக்கும் காந்திக்கும் ஒற்றுமை உண்டே – இருவருமே ஆடைக் குறைப்பைப் பின்பற்றுபவர்கள்தானே" என்றார். சபை கலகலத்தது.
ரிஷிகுமார் தான் எழுத ஆரம்பித்ததற்கு தூண்டுகோலாக அமைந்தவர் டி.எஸ். பி என்று கூற, "ஆமாம், இவரெல்லாம் எழுதும்போது, நாம் எழுதினால் என்ன என்பதுதான் காரணமா?" என டி.எஸ்.பி நகைத்தார்.
நட்சத்திரன் பல சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் நிலாச்சாரல் அன்பர்கள் குழு ஒரு நிலாவட்டத்தை ஏற்படுத்தி படைப்பாளர்களும், வாசகர்களும் மாதம் ஒருமுறை சந்தித்து அவர்களது படைப்புகளை விமரிசனம் செய்து ஒரு ஆரோக்கியமான இலக்கிய சூழலை ஏற்படுத்தலாம் என்று கூறினார். அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்வதாகவும் உறுதியளித்தார். அனைவரும் அவரது கருத்தை வரவேற்றனர். நட்சத்திரனின் மனைவி தான் செய்து வரும் சேவைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர்களது ஏழு வயதுப் பையன் ‘விளையும் பயிர் முளையிலே’ என்பதுபோல அத்தனை பொறுப்பாக நடந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தான்.
"பிரதிபலன் எதையும் எதிர்பாராமல் பொழியப்படும் அன்பே எனது கடவுள்" என்று நிலா கூறியது சந்திப்பின் முத்தாய்ப்பாக அமைந்தது.
கூட்ட முடிவில் அனைவருக்கும் மனதில் தோன்றிய ஒரே எண்ணம் எதுவென்றால், இப்படி உலகம் முழுவதும் – நிலாக்குடும்பம் போல – எந்தவித வேறுபாடுமின்றி – வஞ்சனையின்றி, சூதின்றி, பகையின்றி இணைந்து இசைந்து வாழ்ந்துவிட்டால் வன்முறையேது? தீவிரவாதம் ஏது? அன்பே அரசாளும் அல்லவா?”
It would be great to see if your names were mentioned on the photos as per order, still good see you all and read your experience