போர்க் குழந்தைகள்

"பூகம்பத்தை எப்படி வெல்ல முடியாதோ அப்படி போரையும் வெல்ல முடியாது" என்று ஒரு பொன்மொழி உண்டு. போரினால் ஏற்படும் உடனடி பொருள், உயிர் இழப்புகளைத் தாண்டி மனித மனங்களில் ஏற்படும் சேதங்களுக்கு பெரிதான முக்கியத்துவம் ஒரு போதும் இருந்ததில்லை. போர்களினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிக ஆழமானவை எனினும் அவை அநேகமாக வெளியே தெரியாத காயங்களாக கவனிக்கப்படாமலேயே போய்விடுகின்றன. ஆனால் இப்படிப்பட்ட காயங்களின் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும் தொடர்வதாக ஆராய்ச்சிகள் தெரிவித்த வண்ணமே இருக்கின்றன. இதனை நினைவுபடுத்தும் வகையில், ஆபரேஷன் பைட் பைப்பர் (Pied Piper) என்று அழைக்கப்பட்ட நிகழ்வின் 60ஆம் ஆண்டு நிறைவு அமைந்தது.

இரண்டாம் உலகப் போரிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுமுகமாக பிரிட்டன் அரசு ஆபரேஷன் பைட் பைப்பர் என்ற பெயரில் 1939-ஆம் ஆண்டு சுமார் 15 இலட்சம் குழந்தைகளை நகர்ப்புறங்களிலிருந்து கிராமப் புறங்களுக்குத் தற்காலிகமாகக் குடியேற்றியது. இப்படி குடியேற்றப்பட்ட அந்நாள் குழந்தைகள், 60 ஆண்டுகள் கழித்து தங்களைப் போலவே ஜெர்மன் விமானத் தாக்குதலிலிருந்து தப்பித்து தலை நிமிர்ந்து நிற்கும் இலண்டன் செயின்ட் பால் தேவாலயத்தில் சந்தித்துக் கொண்டனர். "இடமாற்றம் செய்யப்பட்ட குழந்தைகள் அனைவருமே நல்ல விதத்தில் நடத்தப்பட்டார்கள் என்ற மாயையைக் களைய வேண்டியது அவசியம்" என்றார் அந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த மனிதர்.

1939 செப்டம்பர் 1ம் தேதி இந்தக் தற்காலிக இடமாற்றம் ஆரம்பமான போது குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், யாருடன் தங்கப்போகிறார்கள் போன்ற எந்த விபரமும் அவர்களுக்கோ அல்லது அவர்களது பெற்றோருக்கோ தெரியாது. குழந்தைகள் அவர்களுக்குத் தேவையான உணவு, உடைகளோடு இரயிலில் ஏற்றப்பட்டு கிராமப்புறங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். பெரும்பாலும் இந்த இடமாற்றம் பள்ளி வாரியாகவே நடந்தது. தேவையான உபகரணங்கள், ஆசிரியர்களோடு மொத்த மாணவர்களும் ஒரே கிராமத்தில் குடியேற்றப்பட்டார்கள்.

அவர்கள் சென்று சேர்ந்த கிராமங்களின் உள்ளூராட்சி அமைப்புகள் அவர்களின் உறைவிடத்துக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டன. ஊரிலிருந்த ஒவ்வொரு வீட்டின் இட வசதியையும் அந்த வீட்டில் குடியிருந்தவர்களின் எண்ணிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு குடும்பமும் எத்தனை உறுப்பினர்களை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று உள்ளூராட்சிகள் நிர்ணயித்திருந்தன. இட வசதிக்கும் உணவுக்கும் அரசு ஈட்டுத் தொகை வழங்கினாலும் கூட பெரும்பாலான குடும்பங்கள் இந்த ஏற்பாட்டை சுமையாகவே கருதின. எனினும் இந்த ஏற்பாடு கட்டாயமாக்கப்பட்டிருந்ததால் வேறு வழியின்றி அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டி இருந்தது.

கழிவறை வசதியேதுமில்லாத இரயிலில் குழந்தைகள் பயணம் செய்ய வேண்டி இருந்ததால், அவர்கள் கிராமப்புறங்களை அடைந்த போது அசுத்தமாகக் காட்சியளிக்க நேரிட்டது. ஏற்கெனவே அவர்களை விரும்பாத கிராமத்தினருக்கு அவர்களின் நிலை மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. தவிர, நகர்ப்புறங்களின் கீழ்த்தட்டுப் பகுதிகளில் வசித்த குழந்தைகளின் சுகாதாரமும் பழக்க வழக்கங்களும் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. பல பெற்றோர், இந்தக் குழந்தைகளை தமது சொந்தக் குழந்தைகளிடமிருந்து பிரித்தே வைத்திருந்திருக்கிறார்கள்.

பல கிராமங்களில் முன்னேற்பாடுகள் சரியாக இல்லாத காரணத்தால், குழந்தைகள் அனவரையும் வரிசையாய் நிற்க வைத்து, கிராம மக்கள், குழந்தைகளின் தோற்றத்தின் அடிப்படையில் தங்களுக்கு விருப்பமானவர்களை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். குழந்தைகளின் மனதில் இது ஆழமான காயத்தை ஏற்படுத்தியதாக இப்போது தெரியவந்திருக்கிறது. தவிர, ஒரு குடும்பத்திலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் செல்லும் போது அவர்களனைவரும் ஒரே வீட்டில் தங்கவே விருப்பப்பட்டாலும் எல்லா நேரங்களிலும் இது சாத்தியமாகவில்லை. சாத்தியமான சமயங்களில், குடும்பத்தின் மூத்த குழந்தைக்கு – அது எத்தனை சிறிய வயதுடையதாக இருந்த போதிலும், தனது சகோதர, சகோதரிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நகர்ப்புறங்களிலிருந்த நீர் மற்றும் கழிவறை வசதிகள் கிராமப் புறங்களில் கிடைக்காதது இந்தக் குழந்தைகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், முன்பின் தெரியாத குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அவர்கள் தங்கியிருந்த குடும்பங்கள் சிறிதும் விரும்பவில்லை என்பது வெளிப்படையாகவே காட்டிக் கொள்ளப்பட்டதால் பெரும்பாலான குழந்தைகளுக்கு தாம் ஒரு சுமையாக இருக்கிறோம் என்பது மிகவும் தெளிவாகத் தெரிந்தே இருந்தது.

"ஒரு வீட்டில் தங்கி இருந்தபோது, ஒரு பூனையும் எனது படுக்கையில் உறங்கியதால் எனக்கு தோல் வியாதி ஏற்பட்டது. அந்த வீட்டுப் பெண்மணியிடம் இது பற்றிக் கூறிய போது, அது பூனையின் வீடேயன்றி எனதல்ல என்பதை மிகத் தெளிவாகக் கூறிவிட்டார்" என்கிறார் ஹேசல்.

யூத குலத்தைச் சேர்ந்த குழந்தை என்று தெரிந்ததுமே இரவோடு இரவாய் விரட்டியடிக்கப்பட்ட கொடுமை பமீலாவுக்கு நடந்திருக்கிறது. உள்ளூர்க் குழந்தைகள் நகர்ப்புறக் குழந்தைகளின் மேல் வெறுப்பை உமிழ்ந்து அடித்துத் துன்புறுத்தியதும் சகஜமாகவே இருந்திருக்கிறது. போர்க்காலத்தில் குழந்தைகள் ஐந்தாறு முறை கூட சிலபல காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

"ஒரு நாள் போர் முடியும்; என் வீட்டுக்குச் செல்வேன் எனக் காத்திருந்தேன். அந்த நாள் வந்த போது ஆவலாய் இலண்டனில் எனது வீட்டைத் தேடிச் சென்றேன். ஆனால் என் வீடு இருந்ததற்கான அறிகுறியே இல்லை. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. இன்று நான் ஒரு அற்புதமான வீட்டில் வசிக்கிறேன். இதற்கு முன்னும் எத்தனையோ வீடுகளில் வசித்துவிட்டேன். ஆனால் நான் இன்னும் என் வீடு திரும்பும் நாளை எதிர்நோக்கியே இருக்கிறேன்" என்கிறார் ஒரு முதியவர். இப்படி மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் அதிகம். இவர்களில் பெரும்பாலோருக்கு பயணமும் பிரிவும் வாழ்க்கை முழுவதுமே பெரும் வேதனையளிக்கும் நிகழ்வுகளாகவே இருந்திருக்கின்றன. உறவுகளைப் பராமரிப்பதில் பெரும் சிக்கல்களையும் இவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.

இந்த இடமாற்றத் திட்டத்தை செயல்படுத்திய நிர்வாகத்தின் மீதும் முறையான செயல்திட்டமின்மை, மனிதாபிமானமற்ற செயல்பாடு, குழந்தைகளின் பாதுகாப்பின் மேல் கவனமின்மை போன்ற பல குற்றச்சாட்டுகள் உண்டு. இருப்பினும், 43000 பேரைக் கொன்ற நாசி விமானத் தாக்குதலிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றியது, எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்த போதும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்ட விதம் போன்றவற்றை நன்றியோடு நினைவு கூறுபவர்கள் பலர்.

"இடமாற்றம் என்னை தன்னம்பிக்கையும் தன்னிறைவும் கொண்ட மனிதனாக மாற்றியது. கிராமப்புறத்தில் வளர்ந்ததில் விவசாயம், இயற்கை, பருவம் போன்றவை பற்றி எவ்வளவோ கற்றுக் கொண்டேன். வேதனையான சம்பவங்கள் இருந்தாலும் அவை என்னை மேலும் பலப்படுத்தவே செய்தன" என்கிறார் டெனிஸ். டெனிஸைப் போல பலருக்கு இந்த இடமாற்றம் வாழ்க்கையையே மாற்றியமைத்த, மனதை விசாலப்படுத்திய நிகழ்வாக இருந்தாலும் அதில் ஒரு சோகம் கலந்திருக்கவே செய்கிறது. போர்க் குழந்தைகள் என்று அழைக்கப்படும் இவர்களை இணைக்கும் அமைப்பு ஒன்று இவர்களது அனுபவங்களைப் பதிவு செய்து இந்த இடமாற்றத் திட்டத்தின் நீண்ட நாள் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிக்கு உதவி வருகிறது. இனி இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தீர்மானங்கள் எடுக்கவும் திட்டமிடவும் இந்த ஆராய்ச்சி உதவியாக இருக்கும் என்பது எண்ணம்.

போர்முனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தனது நாட்டிலேயே குடியமர்த்தப்பட்ட இந்தக் குழந்தைகளுக்கே 50 -60 வருடங்களுக்கும் மேலாய் பாதிப்பு நீங்காத போது தாக்குதல்களை அன்றாட வாழ்க்கையின் அம்சமாய்க் கொண்டுவிட்ட, அகதிகளாய் வேறு நாட்டில் வாடுகிற குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எண்ணுகையில் மனம் பதைக்கிறது.

நன்றி
புதிய பார்வை

About The Author