‘நேர் வழி என் வழி’ என்று சொல்லிக் கொள்ள இன்று பலரும் விரும்புவதில்லை. காரணம், குறுக்கு வழியில் வெகு வேகமாகப் பணம் பார்த்து விடலாம் என்று நினைக்கத் தலைப்பட்டிருப்பதால். இன்றைய வாழ்வில் குறுக்கு வழி வருமானம் என்பது பெரிதாகவே வாழ்வில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. உடலை வருத்தி, சிரமப்பட்டு உழைப்பதை விட இந்தக் குறுக்கு வழியில் வரும் தொகை மிகப் பெரிதாக இருப்பது பலரை மயக்க நிலையிலும் ஆழ்த்தியுள்ளது.
கடத்தல் ஒரு களைகட்டும் வியாபாரம். அதிலும், பல ஆயிரம் டாலர்கள் புரளும் போதைப் பொருள் கடத்தல், கத்தை கத்தையாக நோட்டுக்களை அள்ளித் தருவது. இது இன்றைய உலகில் பலரைக் கவர்ந்திழுத்து வருகின்றது.
போதைப் பொருளைக் கடத்த எத்தனை எத்தனை வழிகளையெல்லாம் கையாண்டு வருகின்றார்கள் என்று பார்த்தால் மலைப்பு ஏற்படும்.
அண்மையில், 18, 28 வயதுடைய போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் கைதாகி இருக்கின்றார்கள். கொக்கெயின் என்கிற போதைப் பொருளைக் கடத்த முற்பட்டதற்காக.
பிரேசில் நாட்டிலிருந்து விமான மார்க்கமாக வந்தவர்கள், விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின்போது அகப்பட்டுள்ளார்கள்.
அகப்பட்ட இடம் மட்ரிட் விமானநிலையம்.
கொக்கெயின் ஒளித்து வைக்கப்பட்டிருந்த இடம் தலைமுடி!
ஒவ்வொரு பெண்ணிடமும் 1.2 கிலோ எடையுடைய கொக்கெயின் இருந்துள்ளது. சுருள் சுருளாக இருந்த தமது பொய்த் தலைமுடிக்குள் கொக்கெயின் நிரம்பிய 6 பிளாஸ்டிக் பைகளை இவர்கள் ஒளித்து வைத்திருந்திருக்கின்றார்கள்.
இப்படி, மிகச் சாதுர்யமாகத் தலைமுடிக்குள் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்தமை, கடத்தல் யுக்தியில் புதியதென்று காவல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இலத்தீன் அமெரிக்காவுடன் ஸ்பெயின் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால், ஐரோப்பாவுக்குக் கடத்தப்படும் கொக்கெயின் ஸ்பெயின் வழியாகவே சென்றடைகின்றது.
2012ஆம் ஆண்டில் மட்டும் 20 டன் கொக்கெயின் தூள் ஸ்பானிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐரோப்பாவில் கைப்பற்றப்பட்ட முழுத் தொகையில் 41 விழுக்காடு ஸ்பெயினில் கைப்பற்றப்பட்டுள்ளது!
கடத்தல்காரர்கள், ஒவ்வொரு தடவையும் புதுப்புது வழிகளைக் கையாண்டு கடத்தலைச் செய்து வருகின்றார்கள். அண்மைக் காலமாக, பிளாஸ்டிக் வாழைப்பழங்களில் போதைப் பொடியை வைத்தும் கடத்தல் செய்திருக்கின்றார்கள். ரோஜாப் பூக்களோடு பூக்களாக கொக்கெயின் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு தடவை, பொய்க் கால் ஒன்றிற்குள் போதைப் பொருளை வைத்துக் கடத்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
கடந்த மாதம், கால்நடை மருத்துவர் ஒருவர் புதுவிதமான கடத்தலை மேற்கொண்டபோது அதிகாரிகளால் மடக்கப்பட்டுள்ளார். இவர் கொலம்பியா நாட்டவர். இவர் தன்னோடு கொண்டு வந்த இரு நாய்க்குட்டிகளின் வயிற்றுக்குள் ஹெராயினை வைத்துத் தைத்து விமானமேறி இருக்கிறார். படித்தவர்களுக்கும் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஆசை அதிகம் என்பதற்கு இந்த நிகழ்வை விட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?
பிரித்தானியாவின் வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான கொக்கெயின் கடத்தலைச் செய்ததாகக் கருதப்படும் கடத்தல் கும்பலுக்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடத்தல் கும்பலின் தலைவர் எனக் கருதப்படும் 55 வயதான மைக்கல் ரிறெல் (பிறப்பால் மேற்கிந்திய தீவு) 26 ஆண்டுச் சிறைத் தண்டனை பெற்றிருக்கின்றார். இந்தக் கும்பல் 90 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கொக்கெயினை பிரிட்டனுக்குள் விநியோகிக்கக் கடத்தி வந்திருந்தார்கள். 14 ஆண்டுகளுக்கு முன்பு சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையாகக் கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இவர்களிடம் கைப்பற்றிய கொக்கெயினின் எடை 396 கிலோ. பிரித்தானியாவில் இப்படியொரு தொகையை எந்த அதிகாரியுமே இதுவரையில் கைப்பற்றியதில்லை. அதாவது, அந்நாட்டுக் கடத்தல் தொழிலில் ஒரு புது வரலாறு!
இவரது வலது கை போலச் செயல்பட்ட இவர் கூட்டாளிக்கு 24 ஆண்டுச் சிறை.
ஏறத்தாழ ஒரு டன் எடையுடைய, அதாவது 900 கிலோ எடையுடைய கொக்கெயின் ஸ்பானிய அதிகாரிகளால் சமீபத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. தண்ணீரில் மிதக்கும் பைகளில் கொக்கெயின் நிரப்பப்பட்டு, செயற்கைக்கோள் வழியாக இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டு, கடத்தல்காரர்களால் இந்தப் பைகள் கடலுள் விடப்பட்டுள்ளன. வலன்சியா என்ற இத்தாலிய நகரக் கடற்கரையோரப் பகுதியில், ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட நிலையில், இந்த 37 பைகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளார்கள். கடந்த மே மாதத்திலிருந்து இந்தக் கடத்தலைக் கண்காணித்து, கடத்தல் சம்பந்தமாக ஐந்து ஸ்பானியர்களை நகரில் கைது செய்துள்ள அதிகாரிகள் 72,000 யூரோ பணம், 3 வாகனங்கள், ஒரு படகு ஆகியவற்றுடன் ஆபரணங்கள், ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், கணினிகள், கைப்பேசிகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளார்கள்.
கடத்துபவன் கடத்திக் கொண்டேயிருக்க, மாட்டிக் கொள்பவன் மாட்டிக் கொண்டேயிருக்கிறான். காலங்காலமாகத் தொடரும் இந்தக் கடத்தல் சங்கதி, விடாக்கண்டன் கொடாக்கண்டனாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும் போலும்!