இரவு அஹமத் பாயின் வீட்டுக்குச் சென்று தன் குழப்பத்தைத் தெரிவித்த போது அஹமத் பாய் சந்தோஷத்துடன் அவனை அணைத்துக் கொண்டான்.
"இது பெரிய அதிர்ஷ்டம்தான் ராம்சிங் தாதா. இதை நழுவவிடக் கூடாது. கடன் நா வாங்கித்தரேன். ஜோராக ஆளுக்கு இரண்டு உடுப்புத் தெச்சுக்கிட்டுப் போங்க" என்றான்.
எத்தனைத் தொலைவு போக வேண்டும் என்று புரியவில்லை. மீரா முதலில் குழம்பினாள். பிறகு மற்றவர்கள் காட்டிய உற்சாகம் அவளைத் தொற்றிக் கொண்டது. பொம்மைகளின் உடைகளைப் பார்த்துப் பார்த்து சரி செய்தாள். "வெளிநாடு போறிங்களா?" என்று கொஞ்சினாள்.
அஹமத் பாய் ஐநூறு ரூபாய்க்கு ஏற்பாடு செய்து கொடுத்துக் கடைக்கும் அழைத்துப்போய் இரண்டு பேருக்கும் உடுப்புக்கள் வாங்கிக் கொடுத்தான்.
ராம்ஸிங் தாதா அமெரிக்கா போகிறான் என்று தெருவே திமிலோகப்பட்டது. இது நல்லதிற்கா கெடுதலுக்கா என்று புரியாத திகைப்பில் அவன் இருந்தது போலவே மீராவும் இருப்பதாகத் தோன்றிற்று.
பிறகு நடந்தது எல்லாமே கனவுதான். எப்படி விமானத்தில் ஏறினோம், எப்படி இந்த இந்திரபுரிக்கு வந்து சேர்ந்தோம், என்ற திகைப்பு இரண்டு நாட்களுக்கு இருந்தது. பிறகு புதிய புதிய அனுபவங்கள் புதிய புதிய திகைப்பை ஏற்படுத்தின. தில்லியைவிடப் பெரிய நகரம் இது. வானைத் தொட்டுக் கொண்டு நின்ற கட்டிடங்களை அண்ணாந்து பார்ப்பதே சிரமமாக இருந்தது. மிகப் பெரிய வளாகத்தில் கூடாரங்கள் கட்டிக் கொடுத்திருந்தார்கள். இரவில் குளிர் நடுக்கிற்று. டோலக்கைத் தட்டி கம்பீரமாகப் பாடும் மீராவுக்கு இரண்டாம் நாளே குரல் கட்டிக் கொண்டது. நவீன கழிவறைகள் பழக்கமில்லாததால் அவனைப் போல இன்னும் பல பேர் இரவில் வெட்ட வெளியில் எங்காவது மலம் கழித்துத் திருட்டுத்தனமாக கூடாரத்துக்குள் பதுங்கிக் கொண்டார்கள். மறுநாள் எல்லாரும் பொதுவாக இந்திய அதிகாரிகளிடமிருந்து திட்டு வாங்கினார்கள். கண்ட கண்ட வேளையில் தூக்கம் வந்தது. வந்த போது தூங்க முடியாமல் ராம கதை சொல்லும் போது அசத்திற்று.
சாரி சாரியாக வெள்ளைக்காரர்கள் போட்டோ பிடித்தார்கள். திரும்பிய இடமெல்லாம், இந்தியர்கள் காரணம் போட்டார்கள், கரகம் ஆடினார்கள், கழைக்கூத்தாடினாரகள், சிலம்பம் ஆடினார்கள், குரங்கு குட்டிக்கரணம் போட்டது. வெள்ளைக்காரக் குழந்தைகள் கைக்கொட்டிச் சிரித்தார்கள்.
ராம கதையின் விளக்கம் கேட்டார்கள். இந்திய அதிகாரி விளக்கிக் கொண்டு போனார். ராம்சிங்கின் கற்பனை தடைபட்டது. சீதையும் ராமனும் சோர்ந்து நின்றார்கள். மீராவின் டோலக்கிலும் ஏதும் உற்சாகத்தைக் காணோம்.
"என்ன ஆயிட்டது உனக்கு?" என்றான் அவன்.
"உனக்கு என்ன ஆச்சு?" என்று அவள் திருப்பிக் கேட்டாள். "நம்ம பாட்டு யாருக்கும் புரிஞ்சாத்தானே நமக்கு உற்சாகம் வரும்?"
கூட்டம் தொடர்ந்து நின்று பார்க்கவில்லை. ராவணன் தூக்கிக் கொண்டு போன சீதை திரும்பி வந்தாளா என்று யாரும் கவலைப்படவில்லை. ஒவ்வொன்றுக்கும் இத்தனை நிமிஷம் என்று ஒதுக்கி வைத்தாற் போல் நகர்ந்தார்கள்.
"அந்தக் குரங்கைப் பார்க்கிற மாதிரி தான் நம்ம பொம்மைகளையும் பார்க்கிறாங்க" என்றாள் மீரா.
"நாம போடறதும் குரங்காட்டம் தான்" என்றான் அவன். வெள்ளைத் தோலைப் பார்த்து அவனுக்கு அலுத்து விட்டது.
கிளம்புவதற்கு முன் சக்கரையாகப் பேசிய அதிகாரிகள் இங்கு விடுவிடுவென்றார்கள். காண்பிக்கும் நிகழ்ச்சிக்கெல்லாம் யாரும் காசு ஒன்றும் கொடுத்துவிடவில்லை.
அதிகாரிகள் தான் வெள்ளையர்களுடன் உற்சாகமாக வளைய வந்தார்கள். ‘இதைப் பாருங்கள் அதைப் பாருங்கள்’ என்று சுட்டிக் காட்டினார்கள். ராம கதை நடக்கும்போது, ‘அரிசந்திரன் போடு’ என்பார்கள். ‘எப்படி சாப்?’ என்றால் ‘அடப் போடு, இவங்களுக்கு இப்ப அது வேணும்’ என்றார்கள். அவனுக்கு எரிச்சல் வந்தது. தில்லியாக இருந்தால் ‘உங்க இஷ்டப்படி என்னாலே ஆட முடியாது சாப்’ என்று கும்பிடு போட்டு மூட்டையைக் கட்டியிருக்கலாம். பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு மாதத்தைக் கழிப்பதற்குள் மீராவுக்குக் குளிர் தாங்காமல் இருமல் பிடித்துக் கொண்டது.
போகும் போது கூடவந்த அதிகாரிகள் திரும்பும் போது காணோம். இப்பொது வந்தவர்கள் யாரோ புதிது. ஊரை நோக்கிப் பயணம் துவங்கியதுமே ராம்சிங்கிற்குப் புதிய கவலைப் பிடித்துக் கொண்டது. ஐநூறு ரூபாய் கடனை எப்படி அடைக்கப் போகிறோம்? யாரிடமும் எதுவும் கேட்கவே பயமாக இருந்தது. அதிகாரிகள் எல்லாரிடமும் நன்றியை எதிர்பார்த்த மாதிரி இருந்தது. எதற்கு நன்றி என்று அவன் குழம்பினாள்.
விமானம் நள்ளிரவில் வந்து, சந்தைக் கூட்டமாய் இறங்கி, அவர்கள் வீட்டிற்குப் போய் சேரும்போது வானத்தில் சாம்பல் பூத்திருந்தது.
வீட்டைப் பார்த்ததும் சற்றும் எதிர்பாராமல் மீரா அழ ஆரம்பித்தாள். அவனுக்கும் அழ வேண்டும் போல் இருந்தது. “போயிட்டுப் போறது அழாதே” என்றான் அவன் சமாதானமாக.
"எப்படி இருந்தது எப்படி இருந்தது" என்ற கேள்விக்குச் சட்டென்று பதில் சொல்லத் தெரியாமல் திகைப்பு ஏற்பட்டது. "ஒண்ணும் சொகமில்லே" என்று அவன் தலையை அசைத்ததும் எல்லாரும் வினோதமாகப் பார்த்தார்கள்.
"எத்தனைக்காசு சம்பாதிச்சே தாதா?" என்றார்கள்.
"ஒண்ணுமேயில்லே" என்று அவன் கையை விரித்தபோது அவர்கள் கண்ணில் சந்தேகம் நிழலாடுவதைக் கண்டு அவனுக்கு வேதனையாக இருந்தது. அஹமது பாயைப் பார்க்கவே கூச்சமாக இருந்தது.
"எங்கிட்ட நிச்சயமா காசு இல்லே அஹமத் பாய். நா எப்படிக் கடனைத் திருப்பப் போறேன்?"
அஹமத் பாய் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.
"நாளைக்கு அந்த ஆபீஸரையே போய் கேட்போம், ஏதாவது வழி செய்யுங்கன்னு" என்றான்.
மறுநாள் காலை இருவரும் கிளம்பி அலுவகத்தை அடையும் போது உச்சி வெயில் ஏறிவிட்டது. எந்த ஆபீசரையும் காணோம்.
வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு குமாஸ்தா நிதானமாக பதில் சொன்னார்.
"இரண்டு ஆபீசர் லீவு இன்னிக்கு. உங்களுக்கு என்ன வேணும்?"
அஹமத் பாய், ராம்சிங் தாதாவுக்கு இருக்கும் கடனைப் பற்றிச் சொன்னான்.
"அதுக்கு அரசு என்ன பண்ணணும்னு எதிர்பார்க்கறீங்க?"
அவனே அரசு என்று பட்டது.
"சன்மானம்னு ஏதாவது கிடைச்சா ஈடுகட்டலாம்!"
"சரிதான். உங்களுக்கெல்லாம் இடத்தைக் குடுத்தா மடத்தைப் புடுங்குவீங்க!" என்றார் குமஸ்தா.
"ஏன்யா இத்தனை செலவழிச்சு உன்னையும் உன் பெண் ஜாதியையும் அரசாங்கம் வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கு, ஒரு மாசம் சாப்பாடு போட்டிருக்கு! அவனவன் வெளிநாட்டுக்குப் போகணும்னு ஆலாய் பறக்கான். நீ நினைச்சுப் பார்க்காமலே அது கிடைச்சுதா இல்லையா? அதுக்கு நன்றி வேணாம்?"
ராம்சிங் தாதா குழப்பத்துடன் நின்றான். நிஜமாகவே தான் ரொம்பவும் அல்பமாகிப் போனதுபோல் இருந்தது.
"அதெல்லாம் சரிதான்" என்றான் அஹமது பாய்.
"இவருடைய பொம்மலாட்ட ஷோவை எங்கேயாவது ஏற்பாடு பண்ணி காசு கொடுத்தாங்கன்னா கடனை சமாளிக்கலாம்."
"ஏன்யா, உன்னை மாதிரி எத்தனை ஆள் வருவான்! எல்லாத்தையும் அரசாங்கம் சமாளிக்க முடியுமா? உன் சொந்தக் கடனை நீயே அடைச்சுக்க வேண்டியதுதான்."
என்ன விஷயம் என்று இன்னொரு குமாஸ்தா கேட்டார்.
ராம்சிங்கும் அஹமத் பாயும் வெளியே நடந்தார்கள்.
"இவங்க பேராசையைப் பார்த்தியோ" என்று குமாஸ்தா சொல்வது கேட்டது.
ராம்சிங்கும் அஹமத் பாயும் வெகு நேரம் தங்களுக்குள் மூழ்கிய யோசனையுடன் நடந்தார்கள்.
"கடனை எப்படித் தீர்க்கப் போறேன் அஹமத் பாய்?"
"அதுக்கு ஒரு வழி இருக்கு."
"என்ன வழி?"
"அதைப் பத்தி நினைக்கவே கூடாது."
"கடன்காரன் மறப்பானா?"
"மறக்கல்லேன்னா அவனாலே என்ன தான் செய்ய முடியும் சொல்லு? தொந்திரவு செய்தான்னா நீ போற ஏதாவது ஒரு கிராமத்திலே டேரா போட்டுடு அவ்வளவுதான். இப்போதைக்குக் கடனை மறந்துரு. இன்னிக்கு ராத்திரி உன் வீட்டுக்கு வந்து கஜல் பாடறேன்!"
ராம்சிங் அவனை நிமிர்ந்து பார்த்தான். அஹமத் பாய் இரவு வேளையில் கஜல் பாடுவது இதற்குத்தான் என்று புரிந்தது. தனக்கும் அவனுக்கும் இடையே இப்பொழுது ஒரு புதிய உறவு வலுப்பட்டிருப்பது போல் தோன்றிற்று.
(வாஸந்தி சிறுகதைகள் தொகுப்பில் இருந்து)